Thursday, June 16, 2022

திரையே நிகழாக- தொடர்கள்நெஃபிலிக்ஸில் Ozark தொடரின் நான்காம் பாகத்தை ஆரம்பித்து நிறுத்தினேன்.  முதல் மூன்று பாகங்கள் சுவாரசியமாகப் போயின. பின்பு அந்த பேட்டர்ன் அலுக்க ஆரம்பித்ததால் நிறுத்தி விட்டேன். ஒரே ஒரு breaking bad தான் இருக்க முடியும். அதே தோசையை திரும்பவும் சுட்டு வைக்கும்போது அலுப்பு வந்து விடுகிறது. இருப்பினும் சுவாரசியமான கதைப் பின்னல்கள், கதாபாத்திரங்கள், மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்காக ஒரு மாதத்தை இந்தத் தொடருக்குத் தந்தேன். அதுவே போதுமானது.

கொஞ்சம் நிதானமான தொடர்கள் எதையாவது பார்ப்போம் என்றெண்ணி அமேசான் ப்ரைமில் பஞ்சாயத்து சீசன் இரண்டை ஒரே அமர்வில் பார்த்து முடித்தேன். பஞ்சாயத்து முதல் சீசன் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. இதுபோன்ற ஆளரவம் குறைவான கிராம வாழ்க்கை மீதும்  வெள்ளந்தியான  மனிதர்கள் குறித்த கற்பனைகளும் மிருகங்கள் வாழும் நகரங்களில் உழலும் நம் அனைவருக்குமே உண்டு. நம்மிடம் இருக்கும் இந்த நாஸ்டால்ஜி வகை மென் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு தொடர்தான் இது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிராமத்தில் உயர் சாதியினரை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா என்பது போன்ற சலிப்பும் உடன் எழுந்தது. குப்தாக்களும், பாண்டேக்களும் , திரிபாதிகளும் சேர்ந்து நடித்த மற்றும் எடுத்த அவர்களைப் பற்றிய தொடர் போல. மாற்று ஆட்களோ பார்வைகளோ எதுவும் கிடையாது. மிக செளகர்யமாக, மனதை அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற தொடர்களை எடுக்கலாம், பார்க்கலாம், மூடி வைக்கலாம். அவ்வளவுதான். 

Dark தொடருக்குப் பிறகு அறிவியலின் பக்கம் போகாததால் கொஞ்சம் அறிவியல் புனைவின் பக்கம் ஒதுங்கலாம் என்றெண்ணி Outer Range தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்பேன்.

இந்த நாட்டு நெட்ஃபிலிக்ஸ் Peaky Blinders தொடர் நம்பர் ஒன் இடத்தில் காண்பித்துக் கொண்டிருந்ததால் பார்க்கலாமே என்றெண்னி ஆரம்பித்தேன். அப்படியே இழுத்துக் கொண்டது. முதல் பாகத்தைப் பார்த்து முடித்தேன். சுவாரசியமான தொடர். காலகட்டத்தைக் கொண்டுவந்த மெனக்கெடலும் - வரலாறைப் புனைவோடு இணைத்த அபாரமான திரைக்கதையும் ஊன்றிப் பார்க்க வைத்திருக்கிறது. மொத்த பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

கூடவே Apple tv யில் Physical தொடரையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். கதாநாயகியை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் மன ஓட்டங்களை அல்லது மைண்ட் வாய்ஸை இடை இடையே இணைத்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  பல இடங்களில் என் குணாதிசயத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நம்மால் சகித்துக் கொள்ளவே இயலாத பல இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கடமைக்காக அமர்ந்திருப்போம் இல்லையா – நாயகி அதைப் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்.

இவற்றுக்கிடையில் நல்ல விமர்சனங்கள் வருவதைப் பார்த்து பிபிசி தயாரிப்பில் வந்திருக்கும் This Is Going to Hurt தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் டெலிக்ராம் வழி பார்த்து - மிரண்டு இது நமக்கானதில்லை என மூடி வைத்தேன். மருத்துவமனைகள் குறிப்பாக பிரசவ விடுதிகளின் மீது எனக்கு ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது தொடர்பான எதையும் தவிர்க்கவே முயல்வேன். இது ஒரு ஃபோபியாதான் – இன்னொரு சமயம் இதைக் குறித்து எழுதுகிறேன்.

ஒரு மலையாள சினிமா கதை விவாதத்தில் பங்கு கொள்ள முடிந்தது. கேரளாவையே மிரட்டிய  இன்னும் முடியாத ஒரு கொலை வழக்கை திரைக்கதையாக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதையே நாவலாக்கினால் என்ன என்கிற எண்ணமும் எழுந்திருக்கிறது. மதுரை நாவலை எழுதும் கையோடு இந்தக் கொலைக் கதையையும் எழுதிவிடலாம்தான்.  அதற்கு இந்த ஒட்டு மொத்த சினிமா மற்றும் தொடர் அடிக்‌ஷனை நிறுத்த வேண்டும். புதிதாக எதையும் ஆரம்பிக்காமல் Peaky Blinders மற்றும் Physical தொடர்களை மட்டும் பார்த்து முடித்துவிட்டு நாவல்களுக்குத் திரும்ப வேண்டும்.No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...