Wednesday, June 29, 2022

கோவேறு கழுதைகள்இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இப்போது வாசிக்கும்போதும் புதிதாக இருக்கிறது. இந்த நாவலை என்னுடைய இருபதுகளில் வாசித்தேன். நேற்றைய வாசிப்பில் முதல் வரியிலேயே அதாவது ஆரோக்கியத்தின் பெயரைப் பார்த்த உடனேயே மனம் ஆழ்மனதிலிருந்து கதையை நினைவுபடுத்திக் கொண்டது. நல்ல படைப்புகளின் தன்மை இதுவாகத்தான் இருக்க முடியும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாடத்தி வழியாக புதிரை வண்ணார்கள் என்கிற பிரிவினரைக் குறித்து அறிந்தேன். கூடவே நிழலாக இமையத்தின் நாவலும் நினைவில் வந்தது. கோவேறு கழுதைகள் நாவலும் தலித் மக்களின் துணிகளை வெளுக்கும் வண்ணார்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது. ஆனால் புதிரை வண்ணார் என்கிற சொல் நாவல் உட்பட எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. தொழில் அடிப்படையில் மாடத்தியிலும் கோவேறு கழுதைகளிலும் ஒரே பிரிவினரின் வாழ்வைத்தான் சித்தரித்திருக்கிறார்கள். இரண்டு படைப்புகளிலும் இவர்களின் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், தீண்டாமைக் கொடுமைகள் எல்லாமும் பதிவாகியிருக்கின்றன. ஒரே வித்தியாசம் மாடத்தியில் வரும் வண்ணார்கள் தலித்துகளைப் பார்க்கக் கூட தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கோவேறு கழுதைகளில் ”வண்ணாத்தி எதிரில் வந்தால் அதிர்ஷ்டம்!” என்பதாகப் பதிவாகியிருக்கும்.

நாவலை வாசித்து முடித்த உடன், மனிதன் எத்தனைக் கீழ்மையானவன் என்பதைத்தான் நினைத்துக் கொண்டேன். வாய்ப்பும் அதிகாரமும் கிடைத்தால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை நசுக்க ஒரு போதும் தயங்குவதில்லை. இவ்வளவு சாதியக் கொடுமைகளோடும், குரூரங்களோடும்தான் தமிழர் வாழ்விருந்தது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தமிழர் அல்லது முன்னோர் குறித்தப் பெருமை பேசும் ஒவ்வொருவரையும் கட்டிப் போட்டு இந்த நாவலை சப்தமாக வாசிக்க வைக்க வேண்டும். சக மனிதனின் மீது இத்தனை வன்முறைகளை நிகழ்த்திவிட்டு எங்கனம் தமிழர் என்கிற ஒரே சொல்லில் திரள முடியும் என்பதையும் கேட்க வேண்டும்.

மதம், இனம், சாதி போன்ற எந்தப் பின்னொட்டுகளோடும் கும்பல் கூடாதே என்பதுதான் என் தரப்பு. வடிவேலு துண்டால் கூட்டத்தினரின் தலையில் தட்டி விரட்டியடிப்பது போல என் சாதி, என் இனம், என் மதம் என யாராவது சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்தால் அவர்களை கவனமாக விரட்டியடிக்க வேண்டும். இந்த அறிவை வாசிப்பின் வழியாக மட்டும்தான் அடையமுடியும் என்பதால்தான் அனைத்து நிற சங்கிகளையும், தம்பிகளையும் படிங்கடா என அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

புராணங்கள் முன் வைக்கும் காவியப் பெண் பாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலைக்கு நிகரான காவியத் தன்மை கோவேறு கழுதைகளின் நாயகியான ஆரோக்கியத்திற்கும் உண்டு. ”வண்ணாத்தி வந்திருக்கேன்”, ”வண்ணாத்தி மவ வந்திருக்கேன்” என அந்தக் காலனி முழுக்கச் சுற்றிச் சுற்றி அலையும் ஆரோக்கியத்தின் கால்களையும் குரலையும் இப்போதும் கேட்க முடிகிறது.

இமையம் இந்த நாவலில் வண்ணார்கள் வாழ்வியலை விரிவாகப் பேசியதால் மட்டும் இது செவ்வியல் தன்மையை அடையவில்லை. மிக அசலான மொழியும் ஏராளமான சொலவடைகளும், பிற சமூகத்தினரின் தனித்துவங்களும் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கும். இன்றைய மொழியில் சொல்வதென்றால் அற்புதமான ’டீடெய்ல்ட் வொர்க்’. எனவேதான் இன்றும் நிற்கிறது.

மேலும் பண்பாட்டுத் தளத்திலும் இந்த நாவல் மிக முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. அறுவடைக் காலத்தின் சித்தரிப்பு மிக முக்கியமானது. தானியங்கள், உணவு, இன்று இல்லாத ஏராளமான இனக்குழுக்களின் வாழ்வியல் என மிக விரிவான சட்டகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாவலில் இருந்து சில வரிகளை கீழே தட்டச்சுகிறேன்.

”கோணி ஊசி, மணி, கொண்டை ஊசி, ரிப்பன், மை, பவுடர்களைக் கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் குறவர்கள். கூடை, முறம், புட்டி, தட்டு, சிப்புத் தட்டு, படல் செய்கிற குறவர்கள் ஊரை வளையமிட்டுக் கொண்டிருந்தனர். உரல் உலக்கை, கல்லுரல், ஆட்டுக்கல் ஆகியவற்றை கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர். கூத்தாடிகள் வீடுவீடாகப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தனர். தொம்பன்கள் மாட்டுக் கொம்பு சீவினர். இரவுகளில் ஆட்டம் போட்டனர். தை ஆரம்பித்ததிலிருந்தே தாதன் தெருத்தெருவாக சங்கு ஊதினான். வளையல் விற்கும் நாயுடுப் பெண்கள், அம்மி கொத்தும் குறவப் பெண்கள், கூடை முறம் பின்னும் குறத்திகள், பச்சைகுத்தும் பெண்கள், கைரேகை, கிளிஜோசியம் பார்ப்பவர்கள், மைவைப்பவர்கள், பூம்பூம் மாட்டுக்காரன், உப்பு வண்டிகள், ஈயம் பூசுகிறவன், கருவாடு விற்பவர்கள் என அனைவரும் வந்தனர்.”


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...