Wednesday, June 15, 2022

புல்டோசர் ஜனநாயகம்த்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்தபோது அக்கட்சியின் தொண்டர்கள் புல்டோசர்கள் சகிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது குழப்பமாக இருந்ததுஎதற்காக இந்தக் கூட்டம் புல்டோசரோடு சுற்றுகிறது என நினைத்துக்கொண்டேன்

சில நாட்களுக்கு முன்பு அஃப்ரீன் பாத்திமாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டபோதுதான் இந்தக் கும்பலின் புல்டோசர் பின்னணி புரிய வந்தது.  மிக வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் இந்திய இறையாண்மைத் தத்துவத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கும் வேலையை ஆதித்யநாத் உள்ளிட்டோர் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த புல்டோசர் அபாயம் மிக வேகமாகப் பரவியும் வருகிறது.

இந்தியாவின் அடிப்படைக் கட்டுமாணம், நீதித்துறை, சட்டம், ஒழுங்கு என சகலத்தையும் இந்த மதவெறி பிடித்த கூட்டம் புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்குவதை ஒட்டு மொத்த இந்தியாவும் வேடிக்கை பார்க்கிறது. பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றன. 

அஃப்ரீன் பாத்திமாவின் குடும்பத்துக்கு நிகழ்ந்த அநீதியைக் குறித்து யாராவது எழுதியிருக்கிறார்களா என்பதைத் தேடிப் பார்த்தேன். தமிழ் இந்து போலிஸ் தரப்பை எழுதி வைத்திருக்கிறது. பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் காத்ரி வீடுகள் இடிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து அறிவிப்பு வெளியிடுகிறது. இது அநீதி என்றோ, சிறுபான்மையினரின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் என்றோ தமிழ் இந்து கட்டுரையில் ஒரு வரியும் இல்லை.போலவேஎதிர்கட்சிகள் தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமான கண்டனமும் வந்ததாகத் தெரியவில்லை

ராகுல் காந்தியும் சோனியாவும் நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் பிஸியாக இருக்கிறார்கள்காங்கிரஸ் என்றொரு கட்சி இனிமேலும் உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கையும் செத்தே போனது.

கஞ்சா வழக்குகள், குண்டர் சட்டங்கள், லாக் அப் மரணங்கள், என்கவுண்ட்டர்கள் என நாம் அறிந்த அரச வன்முறையின் புதிய முகமாக இந்த புல்டோசர் இடிப்பு வந்து சேர்ந்திருக்கின்றது. இன்னும் என்னவெல்லாம் வரும் என்பதும் தெரியவில்லை. கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் நிகழ்ந்தப்படும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவு இந்த நூற்றாண்டில் இல்லை போல. 

நீதி மன்றங்கள் தாமாக முன் வந்து புல்டோசர் பயங்கரங்களை விசாரிக்க வேண்டும். இந்தியக் குடிமக்களுக்கு நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீதுமிருக்கும் சொற்ப நம்பிக்கைகளை காக்க வேண்டியதும் நீதியரசர்களின் கடமைதான்.

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...