Friday, June 10, 2022

கனவு நடை

ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம். ஓரிதழ்ப்பூவை அப்போதுதான் எழுதி முடித்திருந்தேன். எனக்குப் பிடித்த எங்கள் பகுதி எழுத்தாள நண்பர் நாவலை வாசித்தும் இருந்தார்.  அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். பேச்சில் பகல் முழுக்க கழிந்தது. மதுவும் நல்ல உணவும் உடன் சேர்ந்து கொள்ள பேச்சு பறந்தது. மாலையானதும் ஜவ்வாது மலை அடிவாரத்திலிருந்த இன்னொரு நண்பரின் தங்குமிடத்திற்கு செல்ல முடிவெடுத்தோம்.  வழியில் இன்னும் மதுவும் பேச்சும் சேர்ந்து கொண்டது. அடிவாரத்தை நெருங்கும்போது இரவாகிவிட்டது.  பாறைகளும் குளங்களும் நிறைந்திருந்த ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பிரகாசமான நிலவொளியில் உணவருந்தினோம். தங்குமிடத்தை அடைந்தபோது நள்ளிரவாகிவிட்டது. போனதும் படுத்தும் விட்டோம்.

அதிகாலையில் எனக்கு விழிப்பு வந்தது. மென்னிருள் பனி போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்த அற்புதக் காலை அது. சற்றுத் தொலைவில் மலைக்காடு துவங்கியது. என் உடலின் சகல அழகியல் உணர்வுகளும் விழித்துக் கொள்ளவே நடக்க ஆரம்பித்தேன். அந்த தங்குமிடத்தின் எல்லையில் அமர்வதற்காக கல்லில் ஓர் இருக்கையை அமைத்திருந்தனர். அதில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். முதலில் சிலையாக இருக்கும் என்று நினைத்தபடியேதான் அருகில் சென்றேன். பெண் தான். என்னைப் பார்த்து எழுந்து நின்று புன்னகைத்தாள். இருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். நான் காட்டில் நடக்கச் செல்வதாகச் சொன்னதும் அவளும் இணைந்து கொண்டாள். மலையிலிருந்து வழிந்த நீர் ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. காட்டில் பறவைகள் விழித்து விட்டிருந்தன. பனி விலகிக் கொண்டிந்தது. நீரின் சப்தம் நல்லதொரு பின்னணி இசையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

 அந்தப் பெண் பறவைகள், மரங்கள், பூக்கள், தன்னுடைய வேலை மற்றும் பயணங்கள் குறித்தெல்லாம் பேசிக் கொண்டு வந்தாள். நான் இதெல்லாம் கனவில் நடக்கிறது என்பதுபோல நடந்து கொண்டிருந்தேன். பனி விலகி சூரிய வெளிச்சம் காட்டில் பரவியது. பச்சைநிறம் மினுங்கத் துவங்கியது. நடந்து நடந்து எங்கோ வந்துவிட்டோம். நான் என் கதைகளைக் குறித்துப் பேசிக் கொண்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நடந்தது போதும் என்கிற உணர்வு தோன்றியதும் நின்றுவிட்டோம். பாம்பு, மான் போன்ற எதையும் காணும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. திரும்பி வரும்போது வெயில் மேலேறியிருந்தது. எங்கள் தங்குமிடத்திற்கு செல்லும் வளைவை மறந்துவிட்டோம். ஓடை முடிந்திருந்தது. வழி மறந்தது இருவருக்குமே தெரிந்தது என்றாலும் முன்னால் நடந்து கொண்டிருந்தோம். பின்பு அந்த வனப்பாதை ஒரு கிராமத்தில் முடிந்தது. அந்தச் சிறு கிராமத்தில் பத்துப் பதினைந்து வீடுகள் இருந்திருக்கும். அடர்த்தியாக மாமரங்கள் வளர்ந்திருந்தன. அவ்வளவு பெரிய மாமரங்களை அதற்கு முன்பு நான் பார்த்ததும் இல்லை. எதிரே வந்த ஒரு பெண்ணிடம் வழி கேட்டு மீண்டும் தங்குமிடத்திற்கு சென்றோம்.

எழுத்தாள நண்பர் திரும்ப வேண்டியிருந்ததால் நானும் கிளம்பினேன். அந்தப் பெண்ணிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது இந்த நிகழ்வை எழுதட்டுமா எனக் கேட்டேன். அவள் மறுத்துவிட்டாள். சரியெனச் சொல்லியிருந்தால் இந்தக் குறிப்பையுமே கூட இடம், காலம், பெயர்கள் என இன்னும் துல்லியமாகத்தான் எழுதியிருப்பேன். மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தப் பெண் அலைபேசி எண்ணை தந்திருந்தாள்தான் என்றாலும் தினசரியின் நெருக்கடியில் மறந்தே போனேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் காமன்வெல்த்  அமைப்பு போட்டி ஒன்றை அறிவித்திருப்பதாகவும் அதற்கு ஒரு கதை எழுதும்படியும் கேட்டிருந்தார். எனக்கு உடனடியாக இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் நிஜமும் நிறையப் புனைவுமாய் ”நட்சத்திரங்களுக்குப் போகும் வழி” என்றொரு கதையை எழுதினேன். நெருக்கமான நண்பர்களுக்கும் காமன்வெல்த் போட்டிக்கும் அனுப்பிவைத்துவிட்டு அத்தோடு மறந்தும் போனேன்.

மீண்டும் சென்ற வருடம் பிஞ்ச் செயலிக்காக ஆலாவை எழுதும்போது அதன் மூன்றாவது இழையாக இந்தக் கதை  இணைந்தது. வனராஜனும் சக்தியும் ஆலா வுடன் சேர்ந்து கொண்டனர். உண்மையில் ஆலாவின் முதல் வரைவில் திருவண்ணாமலை கிடையாது. துபாயும் கேரளமும் கர்நாடகமும் சென்னையும் தான் மனதில் இருந்தது. வனராஜனும் சக்தியும் எழுத்து வாக்கில் வந்து சேர்ந்து கொண்டனர்.

நட்சத்திரங்களுக்குப் போகும் வழி ஆலாவாகி விட்டதால் அதை அப்படியே வைத்திருக்கிறேன். நாளை இங்கு வெளியிடுகிறேன்.

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...