Monday, January 11, 2021

மொழியும் சொல்லும்

சென்ற வருடக் கடைசியில் சென்று வந்த இஸ்தான்புல் பயணம், வாழ்வின் மீதான என் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் மாற்றி அமைத்தது. என்னை நானே புதுப்பித்துக் கொண்டேன். மனிதர்கள் மீதான கவனம் துலங்கியது. என் பேச்சு, நடவடிக்கை, இயல்பு எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் வந்தது. வந்த கையோடு ஊருக்கும் போய் அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தேன். அதே திருப்தியோடு சென்னை புத்தகத் திருவிழா. எவ்வளவு வாசகர்கள், எத்தனை விதமான அக்கறை எனத் திகைப்பாக இருந்தது. எழுத்து இவ்வளவு செய்யுமா என திக்குமுக்காடியும் போனேன். ஐஐடி வளாகத்தில் தங்கியது, சில அற்புதமான மனிதர்க
ளை சந்தித்தது என 2020 எனக்கு அமோகமாக விடிந்தது. வேறெந்த வருடத்தையும் விட இந்த ஆண்டின் துவக்கம்தான் அத்தனை உற்சாகத்தையும், நம்பிக்கைகளையும் அளித்தது. நல்ல மனிதர்களை அடையாளம் கண்டேன். ஏராளமான திட்டமிடல்கள், கனவுகள், செய்யவேண்டியவை குறித்தான பட்டியல் என ஜனவரி மாதம் அவ்வளவு உயிர்ப்போடு இருந்தது. அதற்குப் பிறகு நிகழ்ந்தவைகளை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. போகட்டும். இது எனக்கு மட்டுமானது கிடையாது. உலகத் துக்கத்தில் என்னுடையதும் ஒரு துளி என்பதாக கடந்து வந்துவிட்டேன். இனி எதையும் எதிர்கொள்ளும் திடத்தை இந்தப் பூச்சி நமக்களித்திருப்பதாக நம்புகிறேன். முன்னெப்போதையும் விட இந்த வாழ்வை அவ்வளவு ஆதூரமாகத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன். பழைய நமுத்த வழமைகளை உதறித் தள்ளிவிட்டு புதிய சவால்களை புத்தம் புது வாழ்வை எதிர் கொள்ளவும் தயாராகிறேன். Ji

சில மணி நேரங்களுக்கு முன்பு வாசித்த பா.ராவின் நிலைத்தகவல் ஒன்று என்னை அவ்வளவு வெட்கமடையச் செய்தது. “ மொழியை ஒரு செல்லப் பிராணி போல வளர்த்தாலொழிய அது கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்காது.” எவ்வளவு கரிசனமான வாக்கியம் இது. எழுதுபவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயம் இதுவாகத்தான் இருக்கமுடியும். நான் மொழிக்கும் சொல்லுக்கும் நெருக்கமாக இல்லை. இருப்பினும் அது வாலைக் குழைத்துக் கொண்டு பின்னால் வருகிறது. நான் மொழியிடமிருந்து விலகி ஓடி வெறுத்து துரத்தியடித்து ஒளிந்து கொள்ள முயன்று தோற்று - பின்பு அதனிடமே வருகிறேன். மொழியும் சொல்லும்தான் என் இருப்பின் அடியாழத்தை நிறைவடைய வைக்கின்றது என்பதை இன்னும் ஆழமாக உணர்கிறேன். ஆதாலால் அதன் பாதங்களில் சரணடைகிறேன்.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...