Thursday, January 30, 2020

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை


தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் கூட மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் நுண்மக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத என்ன இருக்கிறது என்கிற வியப்பும் சோர்வும் ஒரு சேர எழும்போதெல்லாம் நான் சிறுகதை எழுதுவதை தள்ளிப்போடுவேன்.

அதே நேரத்தில் இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற எண்ணமும் தோன்றும். அது வலுவடைந்து என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசகர் தீர்மானிக்க வேண்டியவை.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் போதுமான அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் வாழ்வை ரத்தமும் சதையுமாகப் பதிவிக்கிறேன் என்கிற பெயரில் யதார்த்தத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுதவும் முயலவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான்.

சொந்த அறிதலைப் பொதுவுக்குக் கடத்துவதே கலை என்பார்கள். என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். இது பொதுவுக்கு கடத்தப்பட்டிருக்கிறதா என்பதை வாசிப்பவர்கள் அறியத் தந்தால் மகிழ்வேன்.

முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் தொடர்ந்து அறிவியல் புனைவுத் தொடர்களைப் பார்த்தும், கதைகளை வாசித்தும் உருவான மன நிலையில் எழுதிப் பார்த்தவை. இன்னொரு கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது.

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள்.

கினோகுனியா, நீலகண்டப் பறவை ஆகிய இரண்டும் நான் வாழும் இந்த நிலப்பரப்பு எனக்குத் தந்தவை.

இப்படியாக வெவ்வேறு தருணத்தில், காலங்களில், மனநிலையில் எழுதிப் பார்த்த இக் கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலை மிகத் தரமாய் கொண்டு வரும் ஜீரோ டிகிரியின் எழுத்துப் பிரசுரத்துக்கு என் நன்றி.

இந்நாட்களில் என் இயங்கு சக்தியாக இருக்கும் சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. சாருவின் முன்னுரை இந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. இந்தத் தொகுப்புக்காக மட்டும் நான்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு சொல்லாய் வாசித்து மொத்தக் கதைகளையும் மெருகூட்டிய சாருவின் அன்பு நெகிழ வைக்கிறது. பதிலுக்கு இன்னும் அதிக அன்பை சாருவுக்குத் தர முயல்வேன் .

மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
துபாய், டிசம்ப ர் 06, 2019


Sunday, January 19, 2020

முள்ளம்பன்றிகளின் விடுதி
சென்னை புத்தகத் திருவிழா -2020 வில் முள்ளம்பன்றிகளின் விடுதி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. வெளிவந்த முதல் நாளிலிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு திகைப்பையும் மகிழ்ச்சியையும் சேர்த்துத் தருவதாக இருக்கிறது. அனைவருக்கும் அன்பு. புத்தகத் திருவிழாவில் ஜீரோ டிகிரி அரங்கு எண் 376 மற்றும் 377 இல் முள்ளம்பன்றிகளின் விடுதி நூல் கிடைக்கும். உடன் ஹிப்பியும் தனியறை மீன்களும் அரங்கில் கிடைக்கும்.Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...