Thursday, January 10, 2019

Black Mirror: Bandersnatch (2018)Netflix இல் வெளிவரும் Black Mirror தொடரின் ரசிகன் நான்.  மிகச் சமீபமாய் நண்பர் பினாத்தல் சுரேஷ் பரிந்துரையின் அடிப்படையில் நான்காவது season லிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் கதையான  USS Callister தந்த வியப்பால் இதுவரை வெளிவந்த மொத்தப் பகுதிகளையும்  தொடர்ச்சியாய் பார்த்து முடித்தேன். வேறொரு உலகத்தில் மிகச் சரியாக சொல்லப்போனால் எதிர்காலத்தில் வாழ்வது போன்ற பிரம்மை உருவானது. என் ஒவ்வொரு நொடியும் யாராலோ கண்காணிக்கப்படுகிறது. என் எல்லா நகர்வுகளையும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பன போன்ற கற்பனைகள்  சூழ ஆரம்பித்தன. உண்மையில் என் பைத்தியம் முற்றிற்று. கிட்டத்தட்டக் கடவுளைப் போன்றே அறிவியலையும் காண வேண்டும். அறிவியலும் கடவுளும் ஒன்றே என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தேன்.

சதா இந்தக் கதைகளில் மூழ்கிக் கிடந்ததன் பலனாய் "முள்ளம்பன்றிகளின் விடுதி" என்றொரு கதையை எழுத முடிந்தது. (இந்தக் கதையை ஒட்டக மனிதர்கள் எனும் பெயரில் கானல் பதிப்பகம் தொகுத்த அமீரகச் சிறுகதைகள் நூலில் வாசிக்க முடியும்) ஆனாலும் இந்தத் தொடர் அடிமை மனநிலை சரியாகப் படாததால் 'நெட்ஃபிலிக்ஸை' கைவிட்டேன்.  அடுத்த Black Mirror பகுதி வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மேலதிகமாய் ஏப்ரலில் வரும் GOT . இதைத் தாண்டி வேறெந்த தொடரையும் பார்க்க கூடாது எனவும் முடிவெடுத்திருந்தேன். கடந்த வாரம் வெளியான Bandersnatch குறித்து நண்பர்கள் வியப்பாய் பேசிக் கொண்டதும்,  குறிப்புகளை வாசிக்காமல் இணையத்தில் தரவிறக்கிப் பார்க்க ஆரம்பித்தேன்.

Bandersnatch ஐ மொத்தம் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய படமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு மணி நேரங்கள் பார்த்து முடித்ததும்  பொறி தட்டியது. ஏதோ பிசகு இருப்பதைப் போல் தோன்றியது. படத்தின் புதிர் பாதைகளில் தொலைந்து போனதால் இரண்டு மணி நேரங்கள் போனதும் தெரியவில்லை. நிறுத்தி விட்டு படத்தைக் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தப் படம் ஒரு Interactive Film என தெரியவந்தது. படத்துடன் பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கும் வகையில் திரை நாயகனின் தேர்வுகளை நாமே எடுக்கலாம். கனிணி விளையாட்டப்போல ஒரு கதையை சொல்ல முடிவது அறிவியல் தந்த கொடைதாம். மீண்டும் நெட்பிலிக்ஸை உயிர்ப்பித்து Bandersnatch ஐ முதலில் இருந்து பார்த்தேன். கதை தெரிந்து விட்டதால் தேர்வுகளின் முடிவு எங்கிட்டுச் செல்லும் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சுவாரஸ்யம் குன்றவில்லை. கொடுக்கப்படும் option களை தேர்வு செய்து படம் பார்த்தால் ஒண்ணரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து இன்னொரு option ஐ தேர்வு செய்து அதே கதையை இன்னொரு வடிவில் பார்க்கலாம். இப்படியாக ஆறு மணி நேரங்கள் பார்க்க முடியும்.

இந்த வியப்பை பயல்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். முதல் காட்சியில் வரும் கெலாக்ஸ் தேர்வைப் போட்டுக் காண்பித்தேன். இருவரும் கொஞ்சம் கூட வியப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. "இதெல்லாம் ரொம்ப பழசுப்பா" என்றபடியே ரிமோட்டை வாங்கி நெட்பிலிக்ஸிலேயே இருக்கும் ஒரு இன்ட்ராக்டிவ் கார்டூனைப் போட்டுக் காண்பித்தார்கள். ஓ என்றபடியே சிரித்து வைத்தேன். "இத பாத்துதாம்பா ப்ளாக் மிர்ரர்ல காப்பி அடிச்சிருக்காங்க" என்ற கிண்டல் கமெண்ட் ஒன்றும் வந்தது.  இந்த இலக்கியச் சோம்பல் மன நிலையிலிருந்து விரைவில் வெளியே வந்தாக வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...