Monday, January 29, 2018

அடிப்படை நேர்மையின் முகங்கள்சில வருடங்களுக்கு முன்பு வரை  ஒழுக்க சீலர்களோடும், மிகச் சிறந்த மனிதர்களோடும் நட்பு பாராட்டத் தயக்கங்கள் இருந்தன. குறைகளற்றவனாய் ஒரு மனிதன் இருக்கவே முடியாது என்பது என் திட்டவட்டமான எண்ணம். மிகக் குறைந்த பட்சம் அவர்களிடம்  ஒரு ’கெட்ட’ பழக்கமாவது வெளிப்படையாக இருந்தால் மட்டுமே  ஆசுவாசமாகப் பழக முடியும் என்கிற நிலைப்பாட்டில்   இருந்தேன்.  இப்போதோ ஒரு மனிதன் மிக நல்லவனாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கைகள் துளிர் விட்டிருக்கின்றன. அடிப்படை நேர்மை என்பது குறித்தான கவனம் வந்திருக்கிறது. என்னால் அப்படி இருக்க முடிகிறது மேலும் எல்லாச் சூழலிலும் அப்படி இருக்க முடிந்த முயற்சிகளையும் மேற்கொள்கிறேன். அடிப்படை நேர்மை இல்லாதோரை புறக்கணிக்கவும் பழகிக் கொண்டேன். இயல்பில் நான் தனியன் என்பதை ஆழமாய் உணர்ந்திருப்பதால் மனிதர்கள் வருவது போவது குறித்த பிரக்ஞை எனக்கு சற்றுக் குறைவு. ஆகவே இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெரிதாய் புகார்கள் எதுவும் கிடையாது.   வாழ்வைக் குறித்தக் கண்ணோட்டங்கள்  ஒவ்வொரு காலகட்டத்திலேயும்  எப்படி மாறுபடுகின்றன என்பதே என் வியப்பாகவும் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் இருக்கிறது.

இந்த மன ஓட்டத்திற்கேற்பவே வாசிக்கும் புத்தகங்களும் பார்க்கும் படங்களும் அமைகின்றன. கடந்த வாரம்  பார்த்த இரண்டுத் திரைப்படக்  கதாபாத்திரங்கள் என்னை மிகவும் அசைத்துப் பார்த்தன. சத்யஜித்ரே இயக்கத்தில்  1963 ஆம் ஆண்டு வெளிவந்த மஹா நகர் திரைப்பட நாயகி ஆரத்தியும், 2017 இல் வெளியான நியூட்டன் திரைப்படத்தின் நியூட்டன் குமாரும் தான் அவர்கள். இரண்டு திரைப்படங்களையும் ஒரே நாளில் பார்த்ததாலோ என்னவோ என் அடிப்படை நேர்மை குறித்தான நம்பிக்கைகளுக்கு இருவருமே வலுவூட்டினார்கள்.  நியூட்டன் குமார் தன் வேலைக்கு நேர்மையாய் இருக்கிறான்.  ஆரத்தியோ தான் நேரடியாய் சம்பந்தப்படாவிட்டாலும் சக தோழிக்கு நிகழும் அநீதிக்காய் தன் வேலையைத் துறக்கிறாள். குமாரை விட ஆரத்தி கதாபாத்திரம் அவ்வளவு பிடித்துப் போனது.  சத்யஜித்ரே வின் மீது எனக்கிருந்த  சில விமர்சனங்களையும் மஹாநகர் திரைப்படம் அடித்து நொறுக்கியது.  ரேவின் அனைத்து படங்களையும் தூசு தட்ட ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த சில வாரங்களில் ரே வின் மொத்த படங்களையும் பார்த்துவிடுவதுதான் திட்டம்.

தமிழ் சினிமாவிலாவது அவ்வப்போது நல்ல படங்களுக்கான முயற்சிகள் நிகழ்கின்றன பாலிவுட்டோ பரிதாபம், மலிந்த ஆபாசக் குப்பைகளை திரைப்படங்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள். அமீர்கான்களோ சுயமுன்னேற்றத் திலகங்களாகி திரையில் திகிலூட்டுகிறார்கள். இந்தச் சூழலில் வந்திருக்கும் நியூட்டன் திரைப்படம் உண்மையிலேயே அபூர்வம்தான். பின்னணிக்காகவும் கதாபாத்திரங்களுக்காகவும் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரங்கள் கூட மனதில் நின்றுவிடுகின்றன. இயக்குனர் அமித் எல்லாத் தரப்பு அரசியலையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்.  அரசு வேலைக்கு வரும் முதல் தலைமுறை  எளிய குமாஸ்தாவின் பெயர் சிக்கல் முதற்கொண்டு இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகள் உட்பட சகலத்தையும் நுட்பமான கிண்டலாய் திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார். நியூட்டன் இந்திய அளவில் சிறப்பான அரசியல் படமாக வந்திருக்கிறது.

ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, சஞ்சய் மிஸ்ரா ( ஆன்கோன் தேகி என்றொரு அபாரமான திரைப்படத்தின் சாத்தியமில்லா நடிகர்) ரகுவீர் யாதவ், அஞ்சலி பாட்டீல் என கதாபாத்திரங்களுக்காகவே உருவான நடிகர்கள்- தண்டகாரண்ய வனப்பகுதி, அசலான கிராம மக்கள் இவற்றைக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் நிஜமான முகத்தை அமித் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

திரைப்படத்தின் முடிவில் வனப்பகுதிகளில் சுரங்க வேலைகள் நடைபெறுகின்றன. பங்கஜ் தன் குடும்பத்தோடு பேரங்காடியில் பொருட்களுக்கு பணம் கட்டுகிறார். கழுத்துப் பட்டையோடு ராஜ்குமார் ராவ் அஞ்சலியிடம் தனக்கு கிடைத்த நேர ஒழுங்கு சான்றிதழைக் காண்பிக்கிறார். இந்திய ஜன நாயகத்தை இயக்கும் கைகளை   நம்மால் ஒரு போதும் காணவே முடியாததைப் போலவே  திரையிலும் அவைகள் காண்பிக்கப்படுவதில்லை.

நியூட்டன் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் ஆஸ்கருக்குத் தேர்வானது. ஆனால் கடைசிச் சுற்றுக்கான ஐந்து படங்களில் இடம் பெறவில்லை.

மஹாநகர் திரைப்படம் குறித்து தனியாக எழுதுகிறேன்.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...