Thursday, January 4, 2018

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்


2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விரிந்த பசுஞ்சமவெளியும், மினுங்கும் பொன்னிற சூரிய ஒளிக் கதிர்களும் சதா என் நினைவில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. இவ்வருடம் முழுவதுமே   அவ்வளவு மலர்ந்திருந்தேன். யார் மீதும் கோபமில்லை. எதன் மீதும் துக்கமில்லை. முழுமையாய் விடுதலையடைந்த மன உணர்வு இருந்து கொண்டிருந்தது. எனக்குள் நுழையும் எல்லாச் சொற்களும் பொருள் பொதிந்திருந்தன அல்லது சொற்களையும் மனிதர்களையும் சம்பவங்களையும் இவ்வருடத்தில்தான்  கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். எப்போதும் மூளையின் கட்டுப்பாட்டிலிருந்த என் இயல்பு  அதன்  வறட்டுத்தனத்திலிருந்து வெளியேறியது.  பயங்களாலும் வெறுமைகளாலும் வெறுப்பினாலும்  பொறாமைகளாலும் இயலாமைகளாலும் சோம்பலாலும்  துக்கத்தினாலும் இன்ன பிற எல்லாச் சிறுமைகளாலும் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஓர் ஆன்மா விடுதலை பெற்றது. மிகையாகச் சொல்லவில்லை,  எனக்கு இது நேர்ந்தது.

ஓரிதழ்ப்பூ நாவலை எழுதி முடித்து, மெய்ப்புப் பார்த்து, திருத்தி, இறுதியை மீண்டும் மாற்றி எழுதி, மிகக் கச்சிதமான நூலாகக் கொண்டு வந்ததுதான் 2017 ஆம் வருடத்தின் சாதனை. இச்சாதனையில் சரி பங்கு ஹரன் பிரசன்னாவிற்கும் நாவலை உடனே வாசித்து அதன் நிறை குறைகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் உரித்தானது. ஓரிதழ்ப்பூவை எழுத நிறைய கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். நான்கு வருடங்கள் என்பது நூற்றைம்பது பக்க நாவலுக்கு மிக அதிகம். இடையில் நிகழ்த்திரை கட்டுரைத் தொகுப்பிற்காக ஆறு மாதங்கள் போனாலும் மூன்றரை வருடங்களை வீணடித்தேன். போகட்டும் இனி சீரான இடைவெளிகளில் திட்டமிட்டிருக்கும் படைப்புகள் வெளிவரும்.

ஓரிதழ்ப்பூவின் செழுமைக்கு உதவிய நண்பர்களை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் பின் வருமாறு:

போதிராஜா o ஜெயமோகன் o ஜீ.முருகன் o ராஜசுந்தரராஜன் o உமாகதிர் o ச.கனியமுது o ரமேஷ் விஸ்வநாதன் o கல்பனா o மோகனவள்ளி o ஜெ.தீபலக்‌ஷ்மி o அசோக் o பினு பாஸ்கர் o மாரி விஸ்வலிங்கம் o முபாரக் o ஆபிதின் o தமிழ்நதி o பெருந்தேவி o லதாமகன் o எம்.மணி o லாவண்யா o தளபதி முஸ்தபா o கென் o சதீஷ்குமார் ராஜா o சக்ரா அருண் o ஹரன் பிரசன்னா மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்

ஓரிதழ்ப்பூ அத்தியாயங்களாக தனிமையின் இசை பக்கத்தில் வெளியானபோது ஒவ்வொரு அத்தியாயத்தையும் நானூறிலிருந்து ஐநூறு பேர்  வரை வாசித்தார்கள். இந்த எண்ணிக்கை தந்த மலைப்பும் உற்சாகமும்தான் கிட்டத்தட்டக் காணாமலே போன என்னை மீட்க உதவியது. வெறும் எண்களாக மட்டுமே அறிமுகமாகி என்னை மீட்டுக் கொண்டு வந்தவர்களுக்கும் இந் நாவல் சமர்ப்பணம்.

0

2017 ஆம் வருடத்தின் துவக்கத்திலிருந்தே துபாயிலிருக்கும் தமிழ் வானொலியான 89.4 FM ல் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். நண்பர் நாகா நடத்தும் வானவில் நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசியது ஒரு புது அனுபவம். நேரிடையாக வெகு சன ஊடகத்தில் பேசுவது ஆரம்பத்தில் சிறு தயக்கத்தைத் தந்தாலும் பேசப் பேச உற்சாகமாக இருந்தது.  உலக இலக்கியம், புது சித்தாந்தங்கள், சம கால சிந்தனைப் போக்குகள், நாவல்கள், எழுத்தாளர்கள் என எல்லா தரப்பு விஷயங்களையும் பேசுகிறேன். இது உரையாடலாக அமைவது இன்னும் சிறப்பு. இதன் மூலம் புது நண்பர்களைப் பெற்றேன். வானொலி நேயர்களுக்கு அறிந்தவனானேன். வெகு சன ஊடகத்தில் அதன் இயல்பானக் கேளிக்கைகளை மீறி இலக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்தை செலுத்தும் நாகாவின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவருக்கு என் நன்றி.

இந் நிகழ்வு  கூட்டிற்குள் புதைந்துகொண்டிருந்தவனை மீண்டும் வெளியே வரவும் மனிதர்களோடும் சமூக நிகழ்வுகளோடும் பங்கு கொள்ளவும் வைத்தது.  இவ்வருடத்தில் துபாயில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். தொடர்பே இல்லாதிருந்த பழைய நண்பர்களோடு நட்பைப் புதுப்பித்தேன். இந்த நட்பு சங்கமம் புத்தகக் கண்காட்சி, திரைப்பட விழா, நூல் வெளியீட்டு விழா எனத் தொடர்ந்தது. ஜெயமோகனைச் சந்தித்து உரையாடியது, சல்மாவைச் சந்தித்தது என இந்த வருடம் முழுக்க குறிப்பிடத்தக்க  நிகழ்வுகள் இருந்தன. வருடத்தின் இறுதியில் நண்பர் மகேந்திரன் முன்னெடுப்பில் அல் அய்ன் நகரத்தின் பூங்காவில் பத்தொன்பது நண்பர்கள் வரைச் சந்தித்தது முத்தாய்ப்பு.

விடுமுறைக்கு ஊருக்குப் போனால் எங்காவது நண்பர்களோடு கிளம்பிப் போய் குடித்துக் கும்மாளமிடுவதுதான் வழக்கம். ஆனால் இம்முறையோ குடும்பத்தோடும் உறவினர்களோடும் அதிக நேரத்தை செலவழித்தேன். ஷீரடி சாய்பாபா கோவிலுக்குப் போனேன். எப்போதும் தூறிக் கொண்டிருந்த  மழையில் நனைந்து கொண்டே ஷீரடியிலும் நாசிக்கிலும் சுற்றி வந்தது முற்றிலும் புது அனுபவம். ஓர் அதிகாலையில் வாய்த்த சாய்பாபாவின் தரிசனம் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது. 

0
2017 ஜனவரி மாதத்தில் நண்பன் பினு பாஸ்கர் தன் திரைப்பட வேலைக்காய் அழைத்திருந்தான். கிளம்பிப் போய் பத்து நாட்கள் அவனோடு திரைக்கதை வேலைகளைப் பார்த்தேன்.  ஒரு திரைக்கதையை செப்பனிடுவது அலுப்பூட்டும் வேலையாகத்தான் இருந்தது. மொத்தக் குழுவினரும் பகலில் வேலை பார்க்கமாட்டார்கள். எனக்கோ இரவு பத்து மணிக்கே கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தாக்குப் பிடித்து ஐந்து நாட்கள் கேரளாவிலும் ஐந்து நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலுமாய் அமர்ந்து கோட்டையம் திரைக்கதையை முழுமையாக்கினோம். சுதந்திரமாய் இயங்கினேன். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தன. நன்றாக வந்திருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் படம் பேசப்படும் என்றே நம்புகிறேன்.

பிப்ரவரியிலிருந்து கேம் ஆஃப் த்ரோன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட எழுபது மணி நேரம். சில பகுதிகளை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இரண்டு மாதங்களை முழுமையாய் இத்தொடருக்குத் தந்தேன். எனக்குள்ளிருந்த ஏதோ ஒரு தடையை இத் தொடர் உடைத்தது. ஓரிதழ்ப்பூவை மீண்டும் மும்முரமாக எழுத இந்த ஃபேண்டஸி உதவியது. வழக்கம்போல நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன். கணிசமான மலையாளப் படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும் தமிழ்படங்களென எதையும் தவறவிடவில்லை. இவ்வருடத்தில் கண்டடைந்த அபூர்வமாக  பின்லாந்து இயக்குனர் அகி கரிஸ்மாகியையும்   இயக்குனர் யார்கோஸ் லாந்திமோஸையும் குறிப்பிடலாம். லாந்திமோஸின்  The Killing of a Sacred Deer திரைப்படத்தை துபாய் திரைப்பட விழாவில் பார்க்க முடிந்தது இன்னும் சிறப்பு. நிறைய குறிப்பிடத் தகுந்த புத்தகங்களையும் வாசித்தேன். வாசித்த பார்த்த சிறந்தவைகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வருடத்தின் இறுதி வாக்கில் மாமல்லன் வழியாய் அமேஸான் கிண்டிலை அறிந்து கொண்டேன். இதுவரை பத்து புத்தகங்களை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். இன்னும் 3 நூல்களை  செப்பனிட வேண்டும். கிண்டிலில் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இதுவரைக்கும் விற்ற புத்தகங்கள், வாசிக்கப்பட்ட பக்கங்கள் குறித்தான புள்ளி விவரங்களைப்  பார்க்கும்போது சின்னதாய் பயம் எழுகிறது. ஏழாயிரம் பக்கங்கள் வரை வாசிக்கப்பட்டதாய் கிண்டில் சொல்கிறது. இது மிகப்பெரிய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் தந்திருக்கிறது. இன்னும் இன்னும் எழுத ஆர்வமும் மேலிடுகிறது. 2018 அதற்கான முன்னெடுப்பாய் அமையும் என்றே நம்புகிறேன்.

எப்போதும் என்னோடிருக்கும் உங்களுக்கு நன்றி.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...