Wednesday, September 20, 2017

துப்பறிவாளனும் தமிழ் சினிமாவும்


துப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம் செய்திருந்தால் இது ஒரு  தமிழ்ப்படமாகி இருக்கும் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட ஞானத் தெறிப்புகள் கிடைத்தன.

1. விஷால் காஸ்ட்யூம் சரியில்லை. யுத்தம் செய் சேரனைப் போல துப்பறிவாளன் விஷாலையும் சாதாரண பேண்ட் சட்டை செருப்பில் காண்பித்திருக்கலாம். டைரடக்கருக்கு கருப்பு கண்ணாடி பிடித்தால் ஹீரோவும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன? ஸ்கார்ஃபும் கருப்பு கண்ணாடியும் தமிழ் சினிமாவுக்கு அந்நியமானது. முதல் காட்சியிலேயே இது நமது சினிமா இல்லை என்பது தெளிவாகிறது.

2. விஷால் வீட்டு ஹால் முழுக்க இங்கீலீஷ் புத்தகங்கள். பெயிண்டர்கள் பயன்படுத்தும் குதிரை மாதிரி ஒரு உயரமான ஸ்டூல், இதெல்லாம் யார் வீட்டில் இருக்கிறது. மேலும் தமிழில் படமெடுக்கும் மிஷ்கினுக்கு ஒரே ஒரு தமிழ் புத்தகத்தைக் கூட அந்த ஷெல்பில் வைக்க வேண்டும் எனத் தோணவில்லையே, இது நம்மை அவமானப்படுத்தும் செயல். தமிழ்ப்பட துப்பறிவாளன் வீட்டு ஹாலில் கண்ணாடி ஷோ கேஸ் இருக்க வேண்டும். அதில் சில பல விருதுகள், கோப்பைகள், விளையாட்டுகளில் ஜெயித்த பதக்கங்கள் மினுங்க வேண்டும். மேலும்  சுவரில் ரஜினி அஜித் போன்ற பிரபலங்களுடன் விஷால் நின்று கொண்டிருப்பதைப்போல புகைப்படம் எடுத்து  மாட்டி இருக்க வேண்டும். இதுவே தமிழ் சினிமா தோற்றத்தைக் கொண்டு வர உதவும்.

3. கதாநாயகியிடம் துடைப்பத்தைக் கொடுப்பது ஆணாதிக்க தடித்தனம். ஏன் வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து சிம்பாலிக்காக லவ்வை சொல்லி இருக்கலாமே?

4. ஒவ்வொரு கொலையும் விபத்தைப் போல இருக்க வேண்டும் அவ்வளவுதானே, மிக எளிது மண்பாடி லாரியை விட்டு அவர்களை மோதிவிட வேண்டியதுதான். தமிழில் இதுவே மரபு.  இதற்குப்போய் செயற்கை மின்னல், விஷ ரெசின், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என அடித்து விடுகிறார்கள். முடியல. வெளிநாட்டுப்படங்களைப் பாருங்கள் தப்பில்லை. ஆனால் அதை தமிழுக்கு ஏற்றார்ப்போல் மாற்றுங்கள் அப்போதுதான் நீங்கள் இயக்குனர்.

5. ஒரு வில்லன் மொட்டையை போலிசார் சூழ்ந்து கொள்கிறார்கள். மொத்த போலிஸார் முன்னிலையில் அந்த மொட்டை நடு ரோட்டில் மண்டி போட்டு உட்கார்ந்து கத்தியால் வயிறை அறுத்துக் கொள்கிறான். அடப்பாவிகளா இது ஹரகிரி. ஜப்பானிய மறவர்கள் தங்களை மாய்த்துக் கொள்ளும் முறை. இதைப் போய் திருடனுக்கு கொடுத்து அந்தக் கலாசாரத்தை இழிந்ததோடு மட்டுமில்லாமல் அட்டைக் காப்பியையும் அடித்திருக்கிறார்கள். அநியாயம். வெட்கம். வில்லன் கழுத்தில் சயனைட் குப்பி இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் பாலபாடம். பிடிபட்டால் எடுத்துக் கடித்து விட வேண்டும். இதுகூடவா இயக்குனருக்குத் தெரியாது. அட ஜெராக்ஸ் மிஷ்கினே.

6. பிரிட்ஜில் பீர்தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு பிணம் இருக்கிறது. பாத்ரூமில் நடிகையின் குளிசீன் வைக்கலாம் இவர்களோ பிணத்தை துண்டு துண்டாக அறுக்கிறார்கள். வில்லன் அத்தனை முட்டையையும் உடைத்து ஆஃப்பாயில் போட்டு எடுத்து வீசுகிறான். கோபம் வந்தால் முட்டையை எடுத்து நேரடியாக வீசலாமே ஏன் ஆஃப் பாயில் போட்டு வீசுகிறான்? அட ஆஃப் பாயில்களா. வெளிநாட்டுப் படங்களில் வன்முறையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் நாஜிக்களால் துன்பபட்டு மனதளவில் வன்முறையாய் இறுகி இருக்கிறார்கள். எனவே வன்முறையை அப்பட்டமாய் காண்பிக்கிறார்கள். தமிழர்களாகிய நீங்கள் தமிழ்நாடு எனும் சொர்கத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்கு என்ன போய் வன்முறை? நீங்கள் கூடி கும்மிதான் அடிக்க வேண்டும். கொலை பண்ணக் கூடாது.

7. விஷால் பெட்டிக் கடையில் போய் மார்ல்ப்ரோ கேட்கிறார். மிஷ்கின் ப்ரோ, வெளிநாட்டு பொட்டிக் கடைகளில்தான் மார்ல்ப்ரோ. நம்ம ஊர் பெட்டிக் கடைகளில் ஒரு கிங்க்ஸ் கொடுங்க என்றுதான் கேட்கவேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தட்டச்ச கை வலிக்கிறது. இறுதியாக சுரேஷ் கண்ணன் பாணியில் ஒரு பஞ்ச்

”பிட்சாவுக்கு தொட்டுக்க சாஸ் கொடுங்க மிஷ்கின், சாம்பார் கொடுக்காதீங்க ப்ளீஸ்”


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...