Wednesday, July 5, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தைந்து


”த வந்திரு த, என்ன வுட்டன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வா த”

மாமுனியின் கால்களில் விழுந்து ஒரு பெண் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

’யார் மா நீ?  ஏன் என் கால்ல வந்து விழுற? எழுந்திரு எழுந்திரு’

மாமுனி எவ்வளவு விலக்கியும் அந்தப் பெண் அவரின் கால்களை விடாமல் கெட்டியாகப் பிடித்தபடி தரையில் புரண்டு கொண்டிருந்தாள்.

ஐயோ என்னயே யார்னு கேட்டிட்டியே என்றபடி இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாளே தவிர அவரின் கால்களை விட்டபாடில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவருக்கு அடையாளமும் பிடிபடவில்லை. திகைத்து நின்றிருந்தார்.

கட்டுவதற்கு உதிரிப் பூ அம்பாரமாய் குவிந்திருந்தது. இன்று கொஞ்சம் பிந்தி விட்டது. தாமதமாய்த்தான் வந்து கடையைத் திறந்தார்.  வழக்கம்போல் உட்கார்ந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்தார். இன்று பவுர்ணமி நாள் வேறு. காலையிலேயே மக்கள் மலை சுற்ற ஆரம்பித்திருந்தார்கள்.  காலை பத்து மணிக்கே பவுர்ணமி நேரம் துவங்கிவிடுவதால் மக்கள் நடமாட்டம் அதிகமாகியிருந்தது. இந்தப் பெண் கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, குனிந்து பூக்கட்டிக் கொண்டிருந்த மாமுனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மாமுனி அவளைப் பார்த்திருக்கவில்லை. அவசர அவசரமாக பூத் தொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒன்று உறுத்த நிமிர்ந்து பார்த்ததுதான், எதிரில் நின்று கொண்டிருந்தவள்,  ஐயோ மாமா எனக் கதற ஆரம்பித்தாள்.

“உங்களத் தேடாத ஊரில்ல, போகாத தெசையில்ல, கடேசில பக்கத்துலயே இருந்திருக்கீங்களே” என்றபடியே உள்ளே ஓடிவந்து மாமுனியைக் கட்டிக் கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள மாமுனி பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவளை உதறித் தள்ளி தூரத்தில் போய் நின்று கொண்டாலும் அவள் மீதிருந்த வாசனையை அவர் ஏற்கனவே அறிந்திருப்பதாகத் தோன்றியது. குழப்பமாய் நின்றுகொண்டிருந்தவரின் பாதங்களில் விழுந்தவள் அவற்றை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டுக் கதற ஆரம்பித்தாள்.

மாமுனி என்ன செய்வதென்றுத் தெரியாமல் நின்று கொண்டிருந்தார். நல்ல வேளையாய் துர்க்கா காலைச் சாப்பாட்டோடு கடைக்குள் நுழைந்தாள். கீழே விழுந்து கிடந்தவளை முதலில் அவள் கவனிக்கவில்லை. உள்ளே நுழைகையில் உணர்ந்து தடுமாறி நின்றாள்.

”யார் மா நீ ஏந்திரி ஏந்திரி இன்னா இங்க வந்து கெடக்குற?”

என்ற துர்க்காவின் கண்டிப்பான குரல் கேட்டவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். தலைகுனிந்தபடியே,

“நான் இவரோட சம்சாரங்க” என்றாள்.

துர்க்கா மாமுனியை கண்களால் விசாரித்தாள். மாமுனி அவசர அவசரமாக மறுத்து தலையாட்டினார்.

துர்க்கா அந்தப் பெண்ணை அங்கிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தாள். மாமுனியிடம் எதிரில் இருக்கும் கடைக்குப் போய் டீ வாங்கி வரச் சொன்னாள். அவர் அகன்றதும் கேட்டாள்.

”எந்த ஊர்மா நீ? பேரு என்ன?”

”எம் பேரு பூங்காவனங்க. சொந்த ஊர் துரிஞ்சாவரம். இவரு எம் புருசங்க. ஆறு மாசத்துக்கு முன்னால வீட்ட விட்டு ஓடியாந்துட்டாருங்க.”

”அப்படியா? ஆறு மாசமாவா காணம். ஏன் ஓடியாந்தார்?”

”ஆமாங்க இன்னியோட ஆறாவது பவுர்ணமிங்க. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அவரு கெடச்சிரனும்னு வேண்டிகிட்டுதாங்க மலை சுத்துவன். இன்னிக்குதாங்க அந்த அண்ணாமலையான் கண்ணத் தொறந்திருக்கான்.  இவருக்கு லேசா கிறுக்குங்க. படிச்ச கிறுக்கு. ஏதேதோ புக்குலாம் படிச்சி இப்படி ஆயிருச்சிங்க. நான் தான் அகத்தியரு, மகாமுனி அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிட்டே இருப்பாருங்க. சமயத்துல சொந்த நெனவே இருக்காது”

துர்க்கா அகத்தியர் என்ற சொல்லைக் கேட்டதுமே இவள் சரியானவள்தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

”அவருக்குதான் உன் நெனவே இல்லையே ஊருக்கு கூட்டிப் போய் மட்டும் என்ன செய்வ?”

”ஐயோ அப்படியே வுட்டுப் போய்ட சொல்றீங்களா? புள்ள குட்டிலாம் இருக்குதுங்க. வூடு வாசல் நெல புலம் எல்லாம் இருக்குதுங்க.  ஒரு வருசத்துக்கு மிந்தி நல்லாத்தாம் இருந்தார். ஊர்லயே கடுமையான ஒழைப்பாளி. கூடாத ஆளுங்களோட கூடி இப்படி ஆய்டுச்சு. ஆரம்பத்துலயே பாகாயத்துக்கு ரெண்டு மூணு முற கூட்டிப் போய் வந்தம். மாத்திர சாப்டா சரியா இருப்பாருங்க. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாவும் ஆய்டுச்சி. ஆனா போவ போவ மாத்திர சாப்டா தூங்கிட்டே இருக்கம். மண்ட வலி அதிகமா இருக்குன்னு சாப்பிடுறத நிறுத்திட்டாருங்க”

துர்க்காவிற்கு துலக்கமாய் புரிந்தது. இவரை எப்படி இவளோடு அனுப்பி வைப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.

” நீ வேற ஒத்த பொம்புளயா இருக்க,  வரமாட்டேன்னு அடம் புடிச்சா எப்படி கூட்டி போவ?”

”ஏதாச்சிம் சொல்லி கூட்டிட்டு போவனுங்க. புள்ளைங்க அப்பனப் பாக்காம ஏங்கிப் போய் கெடக்குதுங்க. அவங்களப் பாத்தா இவருக்கு எல்லா ஞாபகமும் வந்துரும்.  நீங்க கொஞ்சம் தொணைக்கு வர முடியுமா?”

துர்க்கா யோசித்தாள். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. இந்த சாமிநாதனையும் காணவில்லை. கடையைப் பூட்டி விட்டு போகவும் முடியாது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே மாமுனி டீ க்ளாசுடன் வந்தார். இருவருக்கும் கொடுத்தார்.

துர்க்கா அவரைப் பார்த்து கேட்டாள்.

“நல்லா பாரு இவங்கள தெரில உனக்கு?” என்றாள்.

மாமுனி இல்லையென தலையசைத்தார். அந்தப் பெண்ணுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

இரு வரேன் என்றபடி துர்க்கா கடையை விட்டு வெளியே வந்தாள். இரமணாசிரமம் ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி நடந்தாள். ஆட்டோவின் பின் சீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த முருகனைத் தட்டி எழுப்பினாள்.

அவன் கோபத்தை மறைத்துக் கொண்டே  இன்னா யக்கா என்றபடியே எழுந்தான்.

”முருகா ஒரு உதவி, என் கடையில இருக்கும்ல ஒரு சாமி ”

”ஆமா”

”அவர் பொண்டாட்டி அவர தேடி வந்திருக்கா. ஆனா அவருக்கு அவள அடையாளம் தெரில.”

”ஐயயே நெசமாவா?”

”ஆமா நல்லா விசாரிச்சுட்டேன். இவருக்குதான் எல்லாம் மறந்து போச்சு. நீ போய் கொஞ்சம் அவங்க ஊட்ல விட்டுடேன்”

”சரிக்கா. எங்க போவனும்?”

”துரிஞ்சாவரம்”

”மல்லவாடி - துரிஞ்சாவரமா?”

”ஆமா முருகா”

”அக்கா இன்னிக்கு பவுர்ணமி. சவாரி நெறய இருக்கும்.”

”அட ஒரு மணி நேரத்துல வந்திரலாம் போ. அந்தப் பொம்பள ரொம்ப அழுவுது”

 ”செரி போறேன். துட்டு”

”வா தரேன்”

என்றபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்

வண்டியைக் கிளப்பியவன். துர்க்கா பூக் கடை முன்பு வண்டியை நிறுத்தினான்.

இறங்கியவள் பூங்காவனத்தை முதலில் ஏறச் சொன்னாள். அவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறினாள்.

துர்க்கா மாமுனியை ஏறச் சொன்னாள்.

மாமுனி அவசர அவசரமாக தலையசைத்தார். நான் அகத்தீஸ்வரம்  போகனும்.  நாளைக்கு கிளம்பிருவேன். கமண்டலம் மேல ரமணர் கிட்ட இருக்கு. இன்னிக்கு ராத்திரி அத வாங்கிட்டு கிளம்பனும்.  என நிதானமாகச் சொன்னார்

துர்க்கா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.  நீ இப்ப இவங்களோட போ. நான் ரமணர் கிட்ட கமண்டலத்த வாங்கிகிட்டு நைட்டு அங்க வரேன் என்றாள்.

மாமுனி மிரட்சியாய் போய் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார்.

”முருகா வீட்ல பத்திரமா விட்டுடு ”

என்றபடியே ஜாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுத்து நூறு ரூபாயை அவனிடம் நீட்டினாள்.

முருகன் வாங்கிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

பூங்காவனம் துர்க்காவைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மாமுனி உள்ளே போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

இவளுக்கு ஏனோ உள்ளுக்குள் உடைந்தது. சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள். குரலைக் கனைத்துக் கொண்டு பூங்காவனத்திடம் கேட்டாள்.

”இவரு பேரு என்னமா?”

அவள் சொன்னாள்

”அய்யனாருங்க”.


- மேலும்

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...