Tuesday, July 11, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது


”அசதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
மிருத்யோர்மா அமிர்தம் கமய ”


 ”நீ சாப்ட்டு கெளம்பிடு”

நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.

எழுந்து அவள் அருகில் போனேன். அடுப்பருகில் உட்கார்ந்திருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தேன். எழுந்தவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்

”இன்னிக்கு காலைலதான் நான் புதுசா பொறந்த மாதிரி தோணுச்சி., விடிகாலைல பெஞ்ச மழையில என் துக்கம் எல்லாம் போய்டுச்சி., இனிமே எனக்கு எல்லாம் நீதான்.., உன்ன விட்டு எங்கயும் போவப்போறதில்ல”

”சொன்னா கேள் ரவி. எனக்கு நேத்து ஒரு ராத்திரி உன்னோட இருந்தது வாழ்நாள் முழுக்க போதும்.., நீ வாழ வேண்டிய பையன்.., கெளம்பு”

”நான் எங்க போவேன். எல்லாமும் அடைஞ்சு போச்சு. இனி எனக்கு வாழ ஒரு பிடிமானமும் இல்லங்கிறப்பதான் இது நடந்தது. இத விட மாட்டேன்”

எனப் பிடியை இறுக்கி முரட்டுத்தனமாய் அவளை முத்தமிட்டேன்.

என்னை விலக்கித் தள்ளி நின்று கொண்டாள்.

”நான் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை எல்லாம் பீ முத்திரத்த அள்ளி அள்ளியே போய்டுச்சி. நீ வேற புதுசா உள்ள வந்து அதே குழிக்குள்ள தள்ளாத ரவி”

”என்ன சொல்ற?”

”உனக்கு புரியலையா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை வேணாம். நல்லவேளையா குழந்தைங்க எதுவும் பொறக்கல. பொறக்கற மாதிரியும் எதுவும் நடக்கல. அப்படியே நான் போய்டுறேன்”

”எங்க போவ நீ., யார் இருக்கா உனக்கு?”

”எனக்கு நான் போதும் ரவி. காரியம் முடிஞ்சதும் இந்த வீடு, இருக்கிற கொஞ்ச நெலம் எல்லாத்தையும் வித்துட்டு எங்காய்ச்சும் போய்டுவேன்”

”எங்காச்சும்னா எங்க? ஏன் இப்படி உளற்ற., உனக்கு இந்த ஊர்ல என்னோட இருக்க கூச்சமா இருக்கும்., நாம இங்க இருந்து போய்டலாம்., கீழ்பெண்ணாத்தூர்ல ஒரு வீடு எடுத்து தங்கிக்கலாம். என் ஸ்கூல் பக்கமா., நாம ரொம்ப நல்லபடியா ஒரு வாழ்க்க வாழலாம் அமுதா.., ப்ளீஸ் ”

”போதும் ரவி. போதும். எனக்கு நானா மட்டும் வாழ ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே ரொம்ப தூரம் ரயில்ல போகனும்னு ஆச தெரியுமா? ஆனா இதுவரைக்கும் நான் ரயில்ல கால் கூட வச்சதில்ல.”

”நான் கூட்டிப் போறேன் அமுதா. உனக்கு என்னல்லாம் பிடிக்குமோ எனக்கு என்னலாம் பிடிக்குமோ எல்லாத்தையும் சேந்து பண்ணலாம்.”

”சொன்னா புரிஞ்சிக்க ரவி. நீ போய் உம் பொண்டாட்டி கால்ல விழுந்து வீட்டுக்கு கூட்டிப் போய் நல்ல படியா வச்சுக்க. அம்மாவ பத்திரமா பாத்துக்க. பத்து நிமிசம் அப்படி உக்கார். சாப்டு கெளம்பிடு”

பதிலையும் எதிர்பார்க்காமல் அமுதா அடுப்பருகில் போய் உட்கார்ந்து கொண்டு தீயை அதிகப்படுத்தினாள்.

அவள் குரலிலிருந்த உறுதி என்னை நிலை குலைய வைத்தது. எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து செருப்பைப் போட்டேன். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பினேன்

ரவி என்றபடி வெளியில் வந்தவளிடம்

சாவு வீட்டுக்கு வந்துட்டு சொல்லிட்டுப் போவ கூடாது என்றபடி அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன்.

என் வாழ்க்கை அவ்வளவுதான்  எனத் தோன்றியது. போய் மூச்சு முட்ட அந்த மூத்திர ஒயின்ஷாப்பில் குடித்து மட்டையாக வேண்டும் என்கிற வெறி வந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டிருந்தேன். அரை மணி நேரம் நின்றும் பேருந்து வரும் வழியைக் காணோம். ஒரு மண்பாடி லாரி என்னைக் கடந்தது. வெறி பிடித்தவன் போல அதன் பின்னே ஓடினேன். மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்ததை ஓட்டுனர் தாமதமாய் கவனித்து வண்டியை நிறுத்தினான். பாய்ந்து ஏறிக் கொண்டேன். இதயம் உடைந்துவிடுவது போல திம் திம் என அதிர்ந்தது. இன்னோரு கையயும் ஒட்ச்சுக்கணுமா என  அவன் என்னை திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

0

அங்கை கண்  விழித்தபோது துர்க்கா தயாராய் காபி போட்டு வைத்திருந்தாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வந்து அந்தக் காபியைக் குடித்தாள். ஒரே ஒரு அறைதான். அதை ஒட்டினார்போல் தடுப்புச் சுவர் மட்டும் வைத்த சமையலறை. வீட்டிற்குப் பின்னால் தனியாக கழிவறையும்  குளியலறையும் இருந்தன. ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த உணர்வு அங்கைக்குத் தோன்றியது. இத்தனைக்கும் நேற்று இரவு மட்டும்தான் அங்கு தங்கியிருந்தாள். சொல்ல முடியாத பிணைப்பை எப்படி முதல் சந்திப்பிலேயே சங்கமேஸ்வரனிடம் உணர்ந்தாளோ அப்படி ஒரு பிணைப்பை துர்க்காவிடமும் கண்டாள். அவளிடம் கோவில் சிலைகளின் சாயல் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சாகப்போன தன்னை காக்க வந்த தெய்வமாக அவளை நினைத்தாள். அவள் அணைப்பு அத்தனை ஆதூரமாக இருந்தது. யாரோ அருகில் வருவதை உணர்ந்துதான் நேற்று அவள் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.

 ஏரிச் சரிவிலிருந்து இறங்கி வந்த சாமி நாதன் துர்க்காவைப் பார்த்து திகைத்தான்.

” இங்க என்ன பன்ற, ஒடம்பு சரியில்லன்னு வீட்ல படுத்திருந்த”

துர்க்கா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“ ஏரில வூந்து சாவலாம்னு வந்தேன்” எனச் சொல்லி சிரித்தாள்

அங்கை  திடுக்கிட்டு நெஜமாவா எனும்படிப் பார்த்தாள்.

”நெசந்தான் நானும் இங்க சாவலாம்னுதான் வந்தேன்”

சாமி அவளைப் பார்க்காமல்  மெதுவாய் சொன்னான்.

“நீ சாகறதுக்கு முன்னாடி என்ன கொன்னுட்டு அப்புறம் சாவு. இந்த ஈனத்தனமான வாழ்க்கை  நீ  எனக்கு போட்ட பிச்சதான”

துர்க்கா எதுவும் பேசவில்லை. அங்கைக்காய் திரும்பி

இவரு என் வூட்டுக்காரு என்றாள்.

அங்கை சாமியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். சாமி அங்கையை அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.

“நீ ரவி வாத்தியார் சம்சாரந்தானே?”

அங்கை மருண்டாள்.

”உன் போட்டவ வீட்ல பாத்தனே., இங்க இன்னாமா பன்ற?”

துர்க்கா இடையிட்டாள்

”யாரு ரவி?”

”அட அன்னிக்கு உன்ன பாத்து மெரண்டு ஓடினானே”

துர்க்காவிற்கு நினைவு வந்தது.

“ஓ ராம்சாமி வாத்தியார் மொவன்”

”அவனேதான்”

”அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தன்.., இவ்ளோ லட்சணமான பொண்டாட்டிய கூட பாத்துக்காத அவன்லாம் இன்னா மனுசன்”

”அவனுக்கு ஏதோ கிறுக்கு. ஆனா சரியாய்டுவான். சரி கெளம்புங்க போலாம். இருட்டப் போவுது”

சூரியன் மேற்கில் இறங்கியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. மறுபடியும் கொண்டுபோய் ரவி யிடம் விட்டு விடுவார்களோ என அங்கைக்குப் பயமாக இருந்தது. தயக்கமாய் எழுந்து கொண்டாள்.

துர்க்கா சாமிக்காய் திரும்பி

“நாங்க வீட்டுக்கு போறோம். நீ இவங்க வீட்டுக்கு போய் அங்கை எங்களோட இருக்குன்னு சொல்லிடு. பயப்பட வேணாம்னு பாத்து பதமா சொல்லிட்டு வா”

சாமி, அங்கையிடம் அவள் வீட்டு முகவரியை வாங்கி கொண்டான். அரசு கலைக்கல்லூரி வரை ஒன்றாய் நடந்து போனார்கள். பிறகு சாமி அங்கை வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தான். இவர்கள் தேனிமலைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருட்டத் துவங்கியிருந்தது. துர்க்கா கறி சாப்பிடுவியாம்மா என்றதற்கு அங்கை தலையாட்டினாள். வழியில் கோழிக்கறி வாங்கிக் கொண்டாள்.  வீட்டை அடைந்தார்கள்.

வூடு சின்னதுதான் உனக்கு புடிக்குமோ இன்னாவோ என்றபடியே துர்க்கா பூட்டைத் திறந்தாள். அங்கை அவள் தோளில் கை போட்டு அணைத்து சிரித்தாள்.

துர்க்கா பரபர வென சமையலை ஆரம்பித்தாள். அவள் எதுவும் கேட்காமலேயே அங்கை நடந்த கதை மொத்தத்தையும் சொன்னாள்.  அவளின் சிறு பிராயம் முதல் இன்று மதியம் நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னாள். துர்க்காவிற்கு அவள் கதைகளைக் கேட்க கேட்க அழுகை முட்டியது. தன் இள நிழலாய் அவளிருந்தாள். ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு. சாப்பாடு ஆய்டுச்சி சாப்டுடலாம் என்றாள்.

கறிக்குழம்பின் மணம் அந்தச் சிறுவீட்டை நிறைத்தது. அஙகையும் துர்க்காவும் தட்டு நிறைய கறியையும் சோறையும் வாரிப்போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். அவர்களின் மொத்த துக்கமும் உணவாய் தட்டிலிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட்டார்கள். வயிறும் உள்ளமும் நிறைந்ததில் அங்கை,

என் வாழ்நாளில இப்படி ஒரு ருசியான சாப்பாட்ட சாப்டதில்ல என்றாள்.

துர்க்கா  சிரித்துக் கொண்டே அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு  பின் வாசலுக்குப் போனாள். தட்டிலிருந்த எலும்புகளை வாரி ஜீஜீஜீ என நாயைக் கூப்பிட்டு அதற்கு வைத்தாள். கையைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கை அதற்குள் பாயை விரித்திருந்தாள். இருவரும் படுத்துக் கொண்டார்கள். முன் கதவையும் பின் கதவையும் திறந்துவிட்டிருந்தார்கள். வெக்கை இல்லை. குளுமையாய் காற்று வீசியது.

“பக்கத்துல எங்கயோ மழ பெய்யுதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அங்கை.

“ம்ம் பெய்யும்”  என்றபடியே துர்க்கா உறங்கிப் போனாள்.

அங்கையும் தூக்கத்திலாழ்ந்தாள்.

காலையில் சமையல் செய்யும் ஓசைதான் அங்கையை எழுப்பியது. எழுந்து காபிக் குடித்துக் கொண்டிருக்கும்போது சாமி வந்தான். துர்க்கா அவனைப் பார்த்து

“குளிச்சிட்டு வா சாப்டுட்டு கடைய போய் தொற” என்றாள்

சாமி அவளையே பார்த்தான்.

“ஏன் அந்த சாமியாரு இல்ல?”

”அவரு வூட்டுக்கு போய்ட்டாரு”

சாமிக்கு சகலமும் புரிந்தது போலிருந்தது. வேறு எதுவும் கேட்காமல் பின் வாசலுக்குப் போய் குளித்தான். உள்ளே வந்து இட்லியையும் நேற்று மீந்திருந்த கறிக்குழம்பையும் சாப்பிட்டான். கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

துர்க்கா அவனை நிறுத்திச் சொன்னாள்,

“வாடின பூவ காளியம்மன் கோவிலுக்கு கொடுத்திரு. நான் ஜோதி மார்கெட் போய்ட்டு உதிரி வாங்கிட்டு கடைக்கு வரேன்”

சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. கடைசியில் அவள் தன்னை மன்னித்தே  விட்டாள். வெளியே வெயில் சுத்தமாய் இல்லை. மேகம் அடர்ந்திருந்தது. சாலையில் யாரோ பேசிக் கொண்டார்கள்.

“ரெயில்வே கேட்டுக்கு அந்தாண்டலாம் மழயாம்.., விடிகால்ல வேளனந்தலு, ஆவுரு கிட்ட லாம் ஊரப்பட்ட மழையாம்.., ”

இன்னொருத்தர் சொன்னார். ” அப்ப  இங்கயும் வரும். ”

சாமி உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தான்.

- மேலும்

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...