Monday, July 10, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது

சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்க ஆரம்பித்தான். ரமணாசிரம நூலகத்தை ஒட்டியுள்ள இறக்கமான சாலை  நடக்க ஏதுவாக இருந்தது. இந்தச் சாலையில் மட்டும் இன்னும் மரங்கள் இருக்கின்றன. காலை வெயில் தெரியாத அளவிற்கு மரங்கள் அச்சாலையை மூடியிருந்தன.  மயிலின் அகவலோசை அந்த அமைதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது.  தாமரை நகர் வேலைக்குச் செல்லும் மனிதர்களால் அடர்ந்திருந்தது. இருசக்கர வாகனங்களின் ஓசை சாலையை நிறைத்தது. வெயில் முகத்தில் வந்து இறங்க சாமி மிக சோர்வாய் உணர்ந்தான்.

நேற்று சாயந்திரம்  ரவியின் வீட்டிலிருந்து மிதமாய் இறங்கினான். நடந்து நடந்து மலை சுற்றும் பாதையிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்காய் வந்தான்.  அங்கு எந்தக் காலத்திலும் காற்று அவ்வளவு குளுமையாய் இருக்கும். கிளை விரித்துப் படர்ந்திருந்த  கல்யாண முருங்கை மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துவிட்டான். சாமி இந்த நகரை நடந்து நடந்தே தேய்த்தான். அவனால் அரை மணி நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கிட்டத்தட்ட உயிருக்குப் பயந்துதான் திருவண்ணாமலைக்கு வந்தான். அன்று அதிகாலை சங்கராபுரத்திலிருந்து இவர்களைச் சுமந்து வந்த லாரி தேனிமலையில் இறக்கிவிட்டது. அவன் ஆயா வீடு நினைவிற்கு வரவே துர்க்காவுடன் முதலில் அங்குதான் போனான்.அங்கு அவனை உட்காரச் சொல்லக் கூட யாருமில்லை. துர்க்கா அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளாக அக்கம் பக்கம் விசாரித்து காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாள். கழுத்தில் போட்டிருந்த தாலி மட்டும்தான் தங்கம். அதை யோசிக்காமல் போய் விற்றுவந்தாள். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையையும் செய்தாள். ஒரு கடை வைத்து உட்கார்ந்த பிறகுதான் வாழ்வு நிமிர்ந்தது. சாமி அப்போதும் ஊரைச் சுற்றி வந்தான். இதோ இன்றளவும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

முகத்திலறையும் சூரியனை ஒரு கையால் மறைத்துக் கொள்ள முயன்றபடியே வேக வேகமாய் நடந்து வீட்டை நெருங்கினான்.  கதவு சாத்தியிருந்தது. வாசல் கூட்டவில்லை. வெளியூர் எங்காவது போய்விட்டாளா என யோசனையாய் அருகில் வந்தவன் கதவில் பூட்டு இல்லை என்பதை கவனித்தான். துர்க்கா துர்க்கா என அழைத்தபடியே கதவை வேகமாய் தட்டினான். உள்ளே அவள் வரேன் என மெல்ல முனகும் ஓசை கேட்டது.

“இன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லயா, கதவ தெற மே”

 கதவு திறந்தது

துர்க்கா சிவந்த விழிகளுடன் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

”என்னா ஒடம்புக்கு?”

”ஒண்ணுல்ல. அந்த மாடத்துல அம்பது ரூபா இருக்கு எடுத்துட்டு போ ”  எனச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

சாமி ஒரு கணம் அவமானத்தில் கூசினான். பின்பு சகஜநிலைக்குத் திரும்பி விளக்கு மாடத்தில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் அவள் மேல் பரிவு எழுந்தது. தன்னை நினைத்துக் குறுகினான்.  அதற்குள் தண்டராம்பட்டு சாலையைத் தொட்டு விட்டிருந்தான்.  சிற்றுண்டிக் கடை ஒன்றைப் பார்த்து நின்றான். உள்ளே நுழைந்து பத்து இட்லிகளையும் நான்கு வடைகளையும் கட்டிக் கொண்டான். வீட்டிற்குத் திரும்பி நடந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. துர்க்கா எழுந்துவிட்டிருந்தாள். இவன் திரும்பியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி இட்லிப் பொட்டலத்தை நீட்டினான். துர்க்கா எதுவும் பேசாமல் வாங்கி அதைப் பிரித்து ஒரு வட்டிலில் ஐந்து இட்லிகளையும் இரண்டு வடைகளையும் போட்டு அவனிடம் நீட்டினாள்.  அவளும் கீழே  உட்கார்ந்து கொண்டு அந்த இலையிலேயே சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். நேற்று மதியமும் இரவும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை.  இருவரும் எதுவும் பேசாமல் உண்டார்கள். சாப்பிட்டதும் சாமி எழுந்து கொண்டான். கட இன்னிக்கு தெறக்கலயா என மட்டும் கேட்டான். துர்க்கா இல்லை என தலையசைத்தாள்.

அப்ப ரெஸ்ட் எடு எனச் சொல்லியபடி வெளியேறினான்.  நடக்கையில்  ஏதோ ஒரு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு அவனிற்குள் தோன்றி மறைந்தது.

அவன் போனதும் துர்க்கா கதவை அடைத்தாள். பாயை விரித்துப் போட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.  இப்படி ஒரு துக்க உணர்வை அவள் வாழ்நாள் முழுக்க அனுபவித்ததில்லை. தன்னை திடமானவளாக தைரியமானவளாகத்தான் நினைத்துக் கொள்வாள். அதன் படி நடந்தும் கொள்வாள். நேற்று  அகத்திய மாமுனியை ஆட்டோவில் ஏற்றிவிட்ட பிறகு ஏனோ அவள் மனம் அதற்கு முன்பில்லாத பாரத்தை உணர்ந்தது. நினைவு முழுக்க அவரோடு நடந்த முதல் காட்டுக் கலவியே நிறைந்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாய்  இதேப் பாயில் நிகழ்ந்த கலவிகளையும் நினைத்துக் கொண்டது. எவ்வளவு ஆழமான உறவது. மாமுனி அத்தனை பரிசுத்தமானவராக இருந்தார். அவரோடு முழுமையாய் முயங்கினாள். முழுமையாய் வாழ்ந்தாள். பத்து நாட்கள் இருக்குமா? தான் இழந்த எல்லாமும் தனக்குத் திரும்பி வந்து விட்டதாய் உணர்ந்தாள்.

இந்த நொடி வரை சாமிநாதனை அவள் மன்னிக்கவில்லை. அவனோடு படுக்கவும் இல்லை. அந்தத் தெருவின் எல்லா காமக் கண்களையும் அவள் அசாதாரணமாகக் கடந்தாள். அவளுக்கு யாரைப் பிடித்திருந்ததோ அவர்களோடு கூடினாள். ஆனாலும் அவர்களை தூரத்திலியே வைத்திருந்தாள். மாமுனியைத்தான் முதன் முறையாய் வீட்டிற்குள் அனுமதித்தாள். அவரின் அமைதியும் களங்கமின்மையும் அவளிற்குள்  உறைந்திருந்த ஒரு மென்மையை கண்டறிந்தது. காதலுணர்வு என்பதை முதன் முறையாய் உணர்ந்தாள். அதில் மூழ்கியும் திளைத்தாள். பத்தே நாட்களில் எல்லாம் போனது. துர்க்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருங்குரலில் உடைந்து அழுதாள். சூரிய வெப்பம் ஓடுகளில் இறங்கி அவ்வீட்டைத் தகிக்கச் செய்தது. உயிர் வாழ்வதின் மீது அவளுக்கு முதன்முறையாய் அலுப்பு தோன்றியது. அப்படியே உறங்கிப் போனாள்.

0

அங்கை கண்விழித்தபோது நேரம் உச்சியைக் கடந்திருந்தது. யாரும் அவளை எழுப்பவில்லை. நேற்று முழுக்கத் தூங்கியிருக்கிறாள். முந்தின நாள் பின்னிரவில் வீட்டிற்கு வந்து படுத்ததுதான். அப்படி ஒரு தூக்கம். நேற்று மதியம் விழிப்பு வந்ததும் எழுந்து போய் குளித்துவிட்டு லேசாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டாள். இரவு முழுக்கத் தூங்கி இதோ இன்றையப் பகல் முழுக்கத் தூங்கியும் சோர்வும் அசதியும் அவளை விட்டு நீங்கவில்லை.  வீட்டில், அமைதி இருளைப் போல நிரம்பி இருந்தது. உடல் வலி தாங்க முடியாததாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து போய் குளித்தாள். குளிர் நீர் பட்டதும் மனம் சற்று சாந்தமானது. வெகு நேரம் குளித்தாள். முந்தா நாள் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் மீண்டும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு தலையை அழுத்தின. அங்கைக்கு ஏனோ மீண்டும் சமுத்திர ஏரிக்கரைக்குப் போக வேண்டும் போலிருந்தது. அவளும் சங்கமேஸ்வரனும் கலவிய மரத்தடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். உடையணிந்து கொண்டாள். வாசல் கதவு மூடியிருந்தது. அப்பா வேலைக்குப் போய்விட்டிருப்பார். தம்பி பள்ளிக்கூடத்திற்கு. அம்மா கடைக்கு ஏதாவது போயிருக்கலாம். வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாமா என யோசித்தாள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அங்கை உள்ளே போய் தம்பியின் நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்தாள். கோவிலுக்குப் போகிறேன் என எழுதி கதவிடுக்கில் வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினாள்.

உச்சி வெயில் மண்டையில் இறங்கியது. நேற்று மதியம் லேசாய் சாப்பிட்டிருந்ததோடு சரி. வயிறு எரிந்தது. பசியிலும் சோர்விலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மயங்கி விழுந்துவிடுவோமோ எனப் பயந்தாள். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறையில் சாதம்,  ஈயக் குண்டானிலிருந்து அகலக் கிண்ணத்தில் கஞ்சி வடிந்து கொண்டிருந்தது. நிமிர்த்தினாள். சூடு ஆறியிருந்தது. அம்மா நேரத்திலேயே போய் இருக்க வேண்டும். கையினாலேயே சாதத்தை எடுத்து வடிந்திருந்த கஞ்சிப் பாத்திரத்தில் போட்டு கரைத்துக் குடித்தாள். காலி வயிறு சப்தம் எழுப்பியது. நிதானமாய் குடித்துவிட்டு சாதத்தைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முன்பு போலவே வெளியே வந்தாள். தகிக்கும் வெயிலை அவள் பொருட்படுத்தவில்லை பத்தடி நடந்ததும்தான் செருப்பு போடாமல் வந்ததை தார்ச்சாலை நினைவுபடுத்தியது. திரும்பி வீட்டிற்குப் போக அலுப்பாக இருந்தது. சாவப் போகும்போது செருப்பெதுக்கு என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். உண்மையாகவேவா சாகப் போகிறோம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். திடீரென சாவின் மீது ஆசை வந்தது. செத்துதான் போனால் என்ன?  ஒரு வேளை சங்கமேஸ்வரனும் அங்கிருப்பானோ? நேற்றுப் போனவன் இன்று வரும் என்னை ஆசையாய் கட்டிக் கொள்வானில்லையா திடீரென அவள் மனம் துள்ளியது. தானும் இதே சாலையில் வேகமாய் வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுந்து செத்து விடலாம் என முடிவு செய்தாள். ஆனால் ஆனால் அதற்கு முன்பு அந்த இடத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும். அங்கை சமுத்திர ஏரிக்கரையை நோக்கி நடந்தாள்.

0

துர்க்கா மூச்சிற்காக ஏங்கினாள். அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு மற்ற ஆண்களைப் போலவே அத்தனை ஆசையுடன் அவளை விழுங்கப் பார்த்தது. கால்களை உதறி உதறி நீரின் மேற்பரபரப்பிற்கு வந்து மீனைப் போல வாயைத் திறந்து காற்றிற்கு ஏங்கினாள். ஆனால் நொடிக்கும் குறைவாய் அவள் உடலை நீர் உள்ளே இழுத்தது. தண்ணீரை மேலும் குடித்தாள். உடல் வீங்க வீங்க மேலே வரும் வழிகளனைத்தும் அடைத்துக் கொண்டன. கடைசி சுவாசத்திற்கான வாய்ப்பு அறுபட்டபோது துர்க்காவிற்கு விழிப்பு வந்தது. அலறி எழுந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது.  அறை தகித்துக் கொண்டிருந்தது. எழுந்து போய் அடைந்திருந்த கதவுகளைத் திறந்தாள். துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டு துண்டைக் கட்டிக் கொண்டு பின் வாசலுக்குப் போய் குளித்தாள்.

என்ன மாதிரியான கனவிது. அந்த நீர்ப்பரப்பு அவ்வளவு பெரிதாய் இருந்தது. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோம். யோசிக்க யோசிக்க அது சமுத்திர ஏரி என்பது அவள் நினைவிற்கு வந்தது.  ஒரு அடர்ந்த மழைக்காலத்தில் அவள் அங்கு போயிருக்கிறாள். அந்தப் பரந்த நீர்பரப்பை லேசான பயத்தோடு பார்த்து வந்திருக்கிறாள். பூக்கடை வைத்தபிறகு அவள் உலகம் சுருங்கிப் போனது. கடையையும் வீட்டையும் தாண்டி எங்கும் போவது கிடையாது.  ஏனோ இன்று அவளுக்கு அங்கே போக வேண்டுமெனத் தோன்றியது. குளித்து விட்டு வந்ததும் உடையணிந்து கொண்டாள்.  தலைவார பொறுமையில்லாமல் கூந்தலை உதறி பெரிய கொண்டை போட்டுக் கொண்டாள். சாந்து பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கதவை சாத்தி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த செருப்பை இழுத்து கீழே போட்டு காலில் அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வெயில் உக்கிரமாய் இருந்தது.  பசி வயிற்றைக் கிள்ளியது பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள். தாமரை நகர் தாண்டி, அரசுக் கல்லூரிக்கு குறுக்கில் நடந்து சமுத்திர ஏரி செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்தாள். இடைப்படும் கிராமத்தில் நிறைய மரங்களிருந்தன. வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. ஏரிக்கரை அடிவாரப் பாதையில் அடர்ந்த மரங்கள் துவங்கும் இடத்திற்கு வந்ததும் அவள் மனம் சமாதானமாகியது. உயர்ந்த மரங்களின் குளுமையும் காற்றும் அவள் பசியை மட்டுப்படுத்தியது. மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த அரச மரமொன்று முதலில் வந்தது. இந்தச் சரிவில் ஏறிப்போய்  நீர்ப்பரப்பை வெயிலில் பார்க்க அலுப்பாய் இருந்தது. மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு மாலையானதும் ஏரி மீது ஏறலாம் என்கிற நினைப்பில் அரசமரத்தடிக்காய் சென்றாள்.

அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான பறவைகளும் கிளிகளும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எறும்பில்லாத இடமாய் பார்த்து அமர்ந்தவள் சுற்று முற்றம் பார்த்தாள். யாரும் கண்ணிற்குத் தென்படவில்லை. தொலைவில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. முந்தானையை அவிழ்த்து தரையில் போட்டுப் படுத்துக் கொண்டு கண் மூடினாள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. தூக்கத்தில் விழ இருந்தவளை வெடித்த அழுகைக் குரலொன்று அடித்து எழுப்பியது. அரண்டு எழுந்தவள் அழுகை வந்த மரத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தாள். அங்கை மண்ணில் குப்புற விழுந்திருந்தாள். அவள் துக்கம் அழுகையாய் வெடித்திருந்தது. பதறிய துர்க்கா ஓடிப்போய் அவளைத் தூக்கினாள்

யார் யார் மா நீ ? ஏன் இங்க வந்து கிடக்குற என்றவளை அங்கை நிமிர்ந்து பார்த்தாள்.  துர்க்காவின் அகலப்பொட்டும் ஆகிருதியான உடலும் அவளை என்னவோ செய்ய அம்மா எனக் கதறியபடியே அணைத்துக் கொண்டாள். துர்க்கா அவளை அணைத்தபடியே மண்ணில் அமர்ந்தாள். அவளை வாரி மடியில் போட்டுக் கொண்டு முதுகை நீவினாள். அழதாடா அழாதடா எனத் தட்டினாள். அங்கை தன் வாழ்நாளில் உணர்ந்திராத வெதுவெதுப்பை சமாதானத்தை உணர்ந்தாள். எழ மனமில்லாமல் எழுந்து அமர்ந்தாள். துர்க்கா அவள் கூந்தலைக் கோதி மண்ணைத் தட்டிவிட்டு புடவையில் ஒட்டி இருந்த மண்ணையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அங்கை மீண்டும்  அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

துர்க்காவிற்கு அந்தப் பெண் மீது அளவில்லா வாஞ்சை தோன்றியது. அடிக்கடிப் பார்த்த முகமாகத்தான் இருந்தது. அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

“உனக்கு என்னனாலும் அம்மா இருக்கண்டா.., அம்மா இருப்பண்டா எப்பவும்..”

 என்றெல்லாம் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அங்கை படாரென எழுந்தாள்.

“நான் இங்க  சாகலாம்னுதான் வந்தன்.   ஏன்னு தெரியல உங்களப் பாத்ததும் சாகிற எண்ணம் போய்டுச்சி. உங்களோடவே  வந்து இருந்துடவா?”

”வந்துடு தங்கம். சத்தியமா சொல்றேன் என்னோட வந்துடு. எனக்கும் யாருமே கெடையாது “

துர்க்காவும் உடைந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

ஏரிச்சரிவிலிருந்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கைதான் முதலில் கவனித்து யாரோ வராங்க எனச் சொல்லியபடி அணைப்பிலிருந்து விலகினாள்.

துர்க்கா திரும்பிப் பார்த்தாள். சாமிநாதன் சிவப்புத் துண்டை தலைக்கு தலைப்பாகயாய் கட்டிக் கொண்டு வெயிலில் குளித்தெழுந்து வந்து கொண்டிருந்தான்.

- மேலும்


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...