Thursday, June 29, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி மூன்று

யாகத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டது. ஊரே சாமிநாதனை மெச்சியது. சர்வ சக்தியையும் அடக்கி ஆளும் ஆற்றல் அவனுக்கு உண்டு எனப் பேசிக் கொண்டனர். சாமி போதையில் மிதந்தான். வீட்டில் ஒரு முழுக் கிடாயை நேற்றிலிருந்து துர்க்கா வறுத்தும் அரைத்துமாய் வாசனையைப் படறவிட்டுக் கொண்டிருந்தாள். குடித்தே இராத தன் மாமனாருக்கு எவர்சில்வர் டம்பளரில் சரக்கை ஊற்றிக் கொடுத்தான். சமைத்துக் கொண்டிருந்த துர்க்காவைப் பிடித்து இழுத்து அவள் வாயிலும் சீமச்சரக்குடி குடிச்சிப் பாரு எனப் புகட்டினான். மடக் மடக் கென முழுங்கியவள் அந்த எரிச்சலுக்கும் போதைக்கும் தன்னை ஒப்புக் கொடுத்தாள். சாமியின் ஆட்டம் அரைப்புட்டியில் அடங்கியது. அவன் ஒரு மூலையிலும் அப்பன் ஒரு மூலையிலும் மடங்கினார்கள்.

சமைத்து முடித்திருந்த துர்க்கா மெல்ல எழுந்து போய் அந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து ஒரு டம்பளர் நிறைய ஊற்றிக் கொண்டாள். ஒரு வாய் குடித்துவிட்டு கறியை எடுத்துக் கடித்தாள். மிதமான போதையோடு முழு டம்ளரையும் குடித்தாள். சாமிக்கு வாயில் எச்சில் ஒழுகிக் கிடந்தது. ஏனோ அவனை மிகக் கேவலமாகப் பார்த்தாள். இந்த ஈனப்பயல் என்றாவது மாட்டுவான் என நினைத்தாள். டம்பளர் காலியானதும் அதைத் தூக்கி எறிந்துவிட்டு பாட்டிலை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டாள். மழை விட்டிருந்த இரவு கூதலாய் இருந்தது. அந்தக் குளிருக்கு விஸ்கி மிகக் கதகதப்பாக இருந்தது. துர்க்கா ஏனோ அச்சமயத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ள விரும்பினாள். கையகலக் கண்ணாடி ஒன்று எரவாணத்தில் சொருகி வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. தேடி எடுத்தாள். குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் பாதி மட்டுமே தெரிந்த அவள் முகம் தகித்தது. கண்ணாடியால் அவள் முழுமுகத்தையும் பார்க்க முடியவில்லை. ஒரு ஆளுயரக் கண்ணாடிஇருந்தால் நன்றாக இருக்குமென நினைத்துக் கொண்டாள். தன் உருவம் முழுக்கத் தெரியும் கண்ணாடியை நாளையே வாங்க வேண்டுமெனவும் உறுதி பூண்டாள். சாமிநாதனிடம் பணம் விளையாடியது. பூஜை முடித்து விட்டு வந்தவன் மிக கவனமாய் வெள்ளைத் துணியில் சுற்றிய நூறு ரூபாய் தாள்களைச்  அடுக்குப் பானையில் வைத்துவிட்டுத்தான் பாட்டிலைத் திறந்தான். துர்க்கா அதைப் பார்க்காதது மாதிரி இருந்து கொண்டாள். இந்தக் கண்ணாடி வாங்கும் உந்துதல் எழுந்ததும் அவள் எழுந்து போய் பானைகளை இறக்கி அத் துணியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் கவனமாய் மூடினாள். தலை கிறுகிறுத்து வந்தது. பணத்தை ஜாக்கெட்டில் சொருகிக் கொண்டு புடவையை அவிழ்ந்து மூலையில் எறிந்து விட்டு, பாயை உதறிப் போட்டுப் படுத்துக் கொண்டாள்.காலை எழுந்ததும் முதல் வேலையாய் சங்கராவரம் போய் கண்ணாடி வாங்க வேண்டும். இனி வயலுக்குப் போகக்கூடாது எனவும் தீர்மானித்தாள். இனி ஒழச்சு ஓடப்போவமாட்டண்டா தேவ்டியாப்பசங்களா என உரக்கக் கத்தினாள். வாய் உரக்ககெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தபடியே தூங்கிப் போனாள்.

 அடுத்த நாள் காலை சாமிநாதனுக்கு ஆச்சரியமாய் விடிந்தது. பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டின் முன் குழுமியிருந்தனர். மாமனார் காலையில் வழக்கம் போல் எழுந்து வயலுக்குப் போய் விட்டிருந்தார். தள்ளாட்டமாய் எழுந்தவன் சமயலறைக்குப் போனான். துர்க்கா அப்படி ஒரு தூக்கத்தில் இருந்தாள். சேலை காணாமல் போய் இருந்தது. உடல் கோணி தூங்கிக் கொண்டிருந்தவளை தட்டி எழுப்பினான். பின் வாசலுக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். ஏற்கனவே அவனைச் சாமி என்றழைக்க ஆரம்பித்திருந்தனர்.

 யார் மொதல்ல வந்தது? வந்து உட்கார்.

எனத் தோரணையாய் அமர்ந்தான். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

ஒரு டீ போடு என உள்ளே கழுத்தைத் திருப்பிக் கத்தினான்.

என்னா பிரச்சின? என முன்னால் அமர்ந்தவரிடம் கேட்டான்.

அவர் மகள் திருமணம் தள்ளிப்போகிறது என்றார். ஜாதகத்தை கொடுக்கச் சொல்லி வாங்கிப் பார்த்தான். தயாராய் கிடந்த சிலேட்டில் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தான். வாராவாரம் மாரியம்மன் கோவிலுக்குப் போய் புற்றுக்குப் பாலூற்றச் சொன்னான். ஒரு மண்டலத்தில் திருமணம் நடக்கும் என்றான். அவர் வணங்கி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனார். இப்படியாக சாமிநாதனின் பீஸ் ஐந்து ரூபாயானது. அவன் சொன்னது நடந்ததா என்பது அவனுக்கே தெரியாத அளவிற்கு ஆட்கள் அவனைச் சூழ ஆரம்பித்தனர். ட்ராக்டர் வாங்க, நாற்று நட,  பம்ப் செட் போட அவனிடம் யோசனை கேட்டார்கள். எந்த லாட்டரி சீட் வாங்க வேண்டும் எனக்கூட கேள்வி வந்தது அதையெல்லாம் ஒருவாறாக சமாளித்தான். மெல்ல அவன் புகழ் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மழ நிறுத்தின சாமி என அவனை அழைத்தார்கள். ஊரில் எல்லா பொது நிகழ்வுகளுக்கும் அவனே முன் நின்றான். அடுத்த ஆறு மாதம் உச்சத்தில் திளைத்தான். துர்க்கா வீட்டோடு நின்று கொண்டாள். வாரம் ஒரு முறை சாமி சங்கராவரம் போய் விஸ்கி பாட்டில்களைப் பிடித்து வந்தான். துர்க்காவும் அவனுமாய் குடித்து கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்க்க சகிக்காத அவன் மாமனார் வயலிலேயே தங்கிக் கொண்டார்.

சாமிநாதன் தன்னை அம்மனின் கடாட்சம் பெற்றவனாய் காட்டிக் கொண்டான். ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் அம்மனின் கடாட்சம் பெற்ற என்னால் என்பதைச் சேர்த்துக் கொண்டான். மாண்புமிகு என்பது போல அம்மனின் கடாட்சம் ஆகிவிட்டது. ஊரின் பெரிய தலைகட்டுகளுக்கு சாமிநாதன் தான் சகலமும் என்றானது. அவனைக் கேட்காமல் ஒருவரும் ஒரு வேலையையும் செய்வதில்லை. சாமிநாதனுக்கு அவன் மனைவியின் வீடு இப்போது எலிப்பொந்தாகத் தெரிந்தது. பெரியசாமி கவுண்டரின் வீட்டிற்குள் என்று நுழைந்து விட்டு வந்தானோ அன்றிலிருந்தே இந்த வீடு ஆசூசையாகப் போய்விட்டது. பெரியசாமி கவுண்டர் பயன்படுத்தாத ஓட்டு வீடு ஒன்று வெகுநாட்களாகப் பூட்டிக் கிடந்தது. சாமிக்கு அந்த வீட்டின் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. அவரிடம் பூஜை ரூம் இல்லாத வீட்டில் வசிப்பதால் சக்தி தன் மீது கோபத்தில் இருக்கிறாள் சீக்கிரத்தில் வேறு வீட்டிற்குப் போய்விட வேண்டுமெனப் பணித்திருக்கிறாள். ஆகவே நீங்கள் பயன்படுத்தாத இந்த வீட்டைத் தாருங்கள் எனக் கேட்டிருந்தான். அது அவரின் மகளிற்காய் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. அவள் படிக்கப் போன இடத்தில் இன்னொருவனைக் காதலித்து வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவார்கள் எனப் பயந்து எங்கேயோ ஓடிப்போனாள். மகளோடு அந்த வீட்டையும் பெரியசாமி தலைமுழுகினார். சாமிநாதன் கேட்டதும் முதலில் அசெளகரியமாய் உணர்ந்தவர் மீண்டும் அவன் அழுத்திக் கேட்கவும். போய் இருந்துக்கோங்க சாமி என்றுவிட்டார். அடுத்த நாளே சாமி தடபுடலாய் அந்த வீட்டிற்கு குடியேறினான்.

துர்க்காவிற்கு இதெல்லாம் ரொம்ப நாள் இல்லை என்கிற எண்ணம் மட்டும் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனாலும் மெளனமாய் அவன் இழுத்த இழுப்பிற்குப் போனாள். அந்த விஸ்தாரமான வீடு அவளுக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் சாமி சொன்னது எதுவும் நடக்கவில்லை என மக்கள் சலித்துக் கொண்டனர். பெரிய வீடுகளில் பூஜை,  புனஸ்காரம் என சாமிநாதனும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஜோசியம் கேட்க வென காலையில் மக்கள் வருவது நின்று போயிற்று. சாமிக்கு மெல்ல பயம் ஆரம்பித்தது. மிகவும் பாடுபட்டுக் கிடைத்ததை விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். மூங்கில் துறைப் பட்டிலிருந்து கொண்டு வந்த பழம் பெட்டி நினைவிற்கு வந்தது. அதிக மிதப்பில் அந்தப் பெட்டியை துர்க்கா வீட்டிலேயே போட்டுவிட்டு வந்தாயிற்று. சாமி ஆட்கள் யாரும் வராத அன்றைய காலையில் எழுந்து பழைய வீட்டிற்குப் போனான். மூலையில் கிடந்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அபூர்வமான புத்தகங்கள், ஜாதகக் கட்டுக்கள் யாவும் செல்லரித்து, மண்பிடித்துப் போய் கிடந்தன. ஒரே ஒரு ஏட்டைக் கூட அவனால் எடுக்க முடியவில்லை. ஆத்திரத்தில் பெட்டியை உதைத்துவிட்டு வெளியே வந்தான். ஏதாவது செய்ய வேண்டும் என அவன் மூளை பரபரத்தது.

- மேலும்

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...