Saturday, June 24, 2017

ஓரிதழ்ப்பூ அத்தியாயம் பத்தொன்பது


சாமிநாதனின் தினசரி மீண்டும் ஒழுங்கிற்கு வந்தது. கரும்பலகையால் துர்க்கை ஜோதிட நிலையம் என்றெழுதி வீட்டு வாசலில் திண்ணையை ஒட்டி இருந்த தூணில் மாட்டினான். சாமியாரிடம் இருந்து கொண்டு வந்திருந்த சில ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் பஞ்சாங்கங்களை வருவோர் பார்வையில் படுமாறு வைத்தான். வீட்டின் இரு புறமும் இருந்த மண் திண்ணைகள் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு திண்ணை அமர்ந்து கொண்டு ஜோசியம் பார்க்கவும்  இன்னொரு திண்ணை வருவோர் அமர வசதியாகவும் இருந்தது. துர்க்கா காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அதிகாலையில் எழுந்து வயலுக்குப் போன தந்தைக்கு காலை உணவை எடுத்துக் கொண்டுச் சென்றுவிடுவாள். சாமிநாதன் திண்ணையில் இடுப்பில் கட்டிய காவி வேட்டி துண்டு சகிதமாய் அமர்வான். பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள். அப்படியே வருபவர்கள் "நல்ல நாள் பார்த்து சொல்லுபா" என தெருவில் நின்று கேட்டபடியே சென்று விடுவார்கள். கொடுக்க அவர்களிடமும் ஒன்றும் இல்லை. சாமிநாதனுக்கு அலுப்பாகத்தான் இருக்கும் ஆனால் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டான். ஏதாவது ஒன்று நிகழ்ந்தால்தான் அவனை ஊருக்குத் தெரியும். அந்த சம்பவத்திற்காக வெறுமனே காத்துக் கொண்டிருந்தான்.

துர்க்காவின் தந்தைக்கு மூன்று ஏக்கர் நிலமிருந்தாலும் மானம் பார்த்த பூமி தான். ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. அவரும் துர்க்காவும் கடுமையாக உழைத்தார்கள். ஒரு சம்சாரியைத்தான் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைத்திருந்தார். ஆனால் நடக்கவில்லை. சாமிநாதன் அன்னக்காவடியாக இருந்தாலும் வீட்டோடு ஒருவன் கிடைத்தானே என்கிற நிம்மதி இருந்தது. நாள் முழுக்க வயலில் பாடுபட்டுக் கிடந்தே அவர் வாழ்நாள் கழிந்ததால் ஊரில் நல்லது கெட்டது எதிலேயும் அவர் தலையிட்டுக் கொண்டது கிடையாது. சாமிநாதன் இந்த இடைவெளியை நிரப்ப முயன்றான். மாலைவேளைகளில் அந்த ஊரில் இருந்த பஜனை கோவிலுக்குப் போய் அமர்ந்து கொள்வான். சும்மா வருவோர் போவோரைப் பார்த்து ஏதாவது சொல்வான். முகத்தைப் பார்த்தே எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாக சொல்லுவான். எளிய அம்மனிதர்கள் வாய்பிளந்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஊர் எல்லையில் மாரியம்மன் கோவில் ஒன்று இருந்தது அங்கும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் போய் சத்தமாக அம்மனுக்கு சொல்லும் மந்திரங்களை சப்தமாய் உச்சரிப்பான். பெரும்பாலும் அங்கு வரும் பெண்கள் வாய் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் அவனிடம் போய் விபூதி பூசிக் கொள்வார்கள். இப்படியாக மெல்ல மெல்ல சாமிநாதன் அந்த ஊரில் தன் பெயரை வளர்த்து வந்தான். ஆனாலும் மிக முக்கியமான சம்பவமென ஒன்றும் நிகழவில்லை. பத்து பைசா கூட வருமானமென இல்லை.

துர்க்காவிற்கு இது ஒரு பொருட்டாக இல்லை. அவள் நாள் முழுக்க உழைத்தாள். தந்தை தூங்கியது உறுதியானதும் இரவில் சப்தமெழுப்பாமல் அவனோடு உறவு கொண்டாள். மீண்டும் காலையில் தன் வேலைகளில் மூழ்கிவிடுவாள். சாமிக்கு இந்த இருள் சம்போகம் மெல்ல அலுக்கத் துவங்கியது. மதியம் வீட்டிற்கு வரச் சொல்லி அவளை நச்சரிப்பான். அவளோ உறுதியாய் அதை மறுத்துவிடுவாள். சாமிநாதனுக்கு மதியப் பொழுதைத் தள்ளுவதுதான் சாதனையாக இருந்தது. நாய்கள் கூட மதியம் நடமாடாத தெருவது. பக்கத்திலிருக்கும் பெரிய ஊரான சங்கராவரத்துக்குப் போய்வரும் ஆசை இருந்தாலும் காசிருக்காது. தூங்கியோ அல்லது புரட்டிப் புரட்டி நைந்து போன பஞ்சாங்கத்தை மீண்டும் நைய வைத்துக் கொண்டிருப்பான். ஆறு மாதம் இப்படியே ஓடியது.

மழைக்காலம் ஆரம்பித்தது. மழையென்றால் அப்படி ஒரு மழை. இடைவிடாத மழை. வெளியில் மக்கள் தலைகாட்ட முடியவில்லை. வயல் வேலைகள் முடங்கின. ஊரே வெள்ளக்காடானாது. அந்தத் தெருவில் இருந்த பெரும்பாலான வீடுகள் மண்வீடுகள்தாம். எல்லாமும் மழையில் ஊறி சரிந்தன. இருந்த சொற்ப பொருட்களையும் இழந்த மக்கள். பஜனைக் கோவிலில் தஞ்சமடைந்தனர். அங்கும் இடமில்லாமல் பெரியசாமி கவுண்டர் வீட்டு முற்றம் உட்பட ஊரில் இருந்த ஓடுவேய்ந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். என்னசெய்வதென்று மக்கள் திகைத்தபோது ஊரின் பெரிய தலைக்கட்டுகளுக்கு சாமிநாதனின் இருப்பு நினைவிற்கு வந்தது.

"ஊர்ல ஒரு ஜோசியன் இருக்கானே அவன கூட்டி வாங்கய்யா" என்றனர்.

அந்த மழை நாளில் துர்க்கா கொடையாய் மாற்றித் தந்த  ஒரு கோணிப்பையை தலையில் மாட்டிக் கொண்டு கவுண்டர் வீட்டிற்குப் போனான். நல்ல அகலமான திண்ணைகள் வைத்து மிக உயரமாய் சுவரெழுப்பி கட்டப்பட்டிருந்த வீடது. முற்றத்தில் மட்டுமே ஐம்பது பேர் அமரலாம். ஊரில் இருந்த சம்சாரிகள் அனைவரும் அங்கு ஒண்டிக் கொண்டிருந்தனர். சாமி  சம்பவம் என்ன என்பதைப் புரிந்து கொண்டான். தன் குரலைத் திடமாக்கிக் கொண்டான். ஊர் பெரியவரான பெரியசாமி கவுண்டரின் தந்தைப் பேச்சைத் துவங்கினார்.

" ஜோசியர் தம்பி இந்த மழைய நிறுத்த வழி இருந்தா சொல்லு. மக்க இவ்ளோ கஷ்டப்படுதுங்க நாலு விஷயம் தெரிஞ்சவன் நீ நல்லது கெட்டதுக்கு முன்னாடி வர வேணாமா? "

"சர்தாங்கய்யா. சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது. நான் போவாத ஊர் கிடையாது பாக்காத மக்க மனுசங்க கிடையாது. ஆனா இந்த ஊரும் ஆளுங்களும் அப்படி இல்லிங்களே அதனாலதான் நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன். தல ஆடினாதானய்யா வாலும் ஆடும்"

"என்னப்பா சொல்ற?"

" ஆமாங்கய்யா, ஊர்ல ஒரு கோவில் கிடையாது. பூஜை புனஸ்காரம் கிடையாது. அப்புறம் எப்படிங்க சாமி நம்ம ஊரக் காப்பாத்தும். இதெல்லாமே ஊருக்கு வரும் வினைங்க சாமின்னு ஒண்ணு இருக்கறதையே நாம மறந்திட்டா, சாமி யாருன்னு நமக்கு இப்படிக் காட்டுங்க "

"ஆமாய்யா நீ சொல்றதும் சரிதான். இத்தன வருசம் எல்லாஞ் சரியாத்தான் இருந்தது.   மாரியாத்தா கோவில் பூஜாரி போன வருசம் கோவிலுக்கு போன பொம்பளய இழுத்துட்டு வெளியூருக்கு ஓடிப்போயிட்டான். அவ புருசன் குடிச்சிட்டு வந்து இதோ இந்த வீட்டு முன்னாடி வந்து மண்ண வாரி விட்டுப் போனான்.  அதுக்குப் பிறகு நாங்களும் வெட்கப் பட்டுட்டு அந்தக் கோவில் பக்கம் போகல. அங்க பூஜ ஒண்ணும் பண்ணல. ஆனா வருசா வருசம் பஜனை கோவில்ல தெருக்கூத்து போட்டுற்றமே"

"மழ வற்றதுக்கு தெருக்கூத்து போடுறீங்க, வந்த மழைய நிறுத்த என்ன பண்றீங்க? மொத்த கும்பலும் அமைதியானது. சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க பன்னிடுவோம்."

சாமிநாதனுக்கும் உள்ளூர என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமால்

"மழயோட சாமி வருண பகவானுங்க. அது கோவமாயிட்டதாலதான் இப்படி ஒரு ஊழித் தாண்டவம் ஆடுதுங்க. வருண சாமிய அமைதிப்படுத்தனும். கூடவே சேத்து இப்படி சொழட்டி சொழட்டி அடிக்கிற காத்த நிறுத்த வாயு பகவானையும் சாந்தப்படுத்தனுங்க." என்றான்

"சரி பண்ணிடுவோம். நீங்க ஆக வேண்டிய காரியங்களை கவனிங்க"

எனப் பெரியசாமி கவுண்டர் வாய் திறந்தார்.

"ஒரு யாகம் ஒண்ணு வளக்கனும். யாகம் முடிஞ்சதும் பலி கொடுக்கனும் அவ்வளாவுதாங்க" என்றான்.
"வண்டிய எடுத்துக்கோங்க திர்ணாமல வேணும்னாலும் போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருங்க. பலிக்கு எத்தன கெடா வேணும்?"

"வருணனுக்கு ஒண்ணு, வாயுக்கு ஒண்ணு பூஜாரிக்கு ஒண்ணு ஆக மூணுங்க."

" சரி,   பண்ணிடலாம். "

மாரிமுத்து என குரல் கொடுத்தார். ஓட்டுனர் முன்னாடி வந்தார்.

"இப்பவே கெளம்பிடுங்க இருட்டறதுக்கு முன்னாடி வந்துடுங்க.ரோடுடாலாம்  ஒரே வெள்ளக்காடா இருக்கும். பாத்துப் போய்ட்டு வாங்க" என்றார்.

சாமிநாதனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது உடலில் ஒரு தோரணை கூடியது.

வீட்ல பூஜ அற எங்கைங்க என பெண்கள் இருந்த திசைக்காய் பார்த்துக் கேட்டான். ஒடிசலாய் சிவப்புப் பெண்ணொருத்தி வாங்க என அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். சாமிநாதன் முதன் முறையாய் அப்படி ஒரு வீட்டிற்குள் நுழைகிறான். மிகப் பெரிய கூடம். எங்கு பார்த்தாலும் தேக்கு மரச் சாமான்கள். நடுநாயகமாய் மரக்கதவு வைத்த பெரிய சாலிடர் டிவி. கூடத்தைக் கடந்ததும் வலது புறம் மணிக்கதவு வைத்த பூஜை அறை. சாமிநாதன் தோளிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டினான். இரண்டு பெரிய குத்து விளக்குகளை ஏற்றினான். மகமாயி மாரியாத்தா காளியாத்தா என சத்தமாய் முனகியபடியே விழுந்து வணங்கினான். உடன் வந்த ஒடிசல் பெண் கலக்கமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். எழுந்தவன். அம்மா ஒரு வாய் காபி கிடைக்குமா என்றான். இதோ சாமி என அவள் சமையலறைக்காய் ஓடினாள்.

சாமிக்கு அந்த உடல் மொழி புரிந்தது. மிதப்பாய் அந்த அறையை ஒரு நோட்டம் விட்டு வெளியே வந்தான். வண்டி ரெடியா என குரல் கொடுத்தான். காபி டம்பளர் முன் நீண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு காப்பியை முதன் முறையாய் குடித்தான். நல்லதும்மா என அந்தப் பெண்ணை வணங்கி வெளியே வந்தான். வெள்ளை அம்பாசிடர் தயாராக இருந்தது. பின் சீட்டில் ஏறி அமர்ந்து போலாம்பா என்றான். மழை தொடங்கியது. வண்டி மழையைக் கிழித்துக் கொண்டு சாலையில் விரைந்தது. குண்டும் குழியுமான அச்சாலையில் நிமிடத்திற்கொருமுறை சாமி இருக்கையிலிருந்து அரையடி எம்பி மீண்டும் விழுந்தான். ஒவ்வொருமுறைக்கும் பாத்துப்பா பாத்துப்பா என்றான்.

சங்கராபுரம் முழுக்கவே அடைந்து கிடந்தது. ஒரு கடை கூட இல்லை. ஒரு ஒயின் ஷாப் மட்டும் திறந்திருந்தது. சாமி அங்கு நிறுத்தச் சொன்னான்.

"மாரிமுத்து சாமிக்கு படையல்ல சாராயமும் இருக்கனும் நம்ம நல்ல சீமச்சாராயம் வச்சிட்டா ஒடனே மனங்குளுந்துரும், போய் வாங்கியாரேன்" எனச் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். காரில் வந்து இறங்கியவனுக்கு கிடைத்த மரியாதை பலமாக இருந்தது. சாமி உள்ளே போய் அமர்ந்தான். பீர் என்பதைத் தவிர அவனுக்கு வேறு பெயர் எதுவும் தெரியாது. கடை முதலாளியே அருகில் வந்தார். உங்கள பாத்ததில்லையே என தலை சொறிந்தார்.

"நமக்கு வெளியூரு. என்ன இருக்கு? என்றான்
" இங்க என்னங்க பீரும் பிராந்தியும்தான் மிராசுங்களுக்காக ஸ்காட்ச் வச்சிருப்பங்க அத தர்ட்டுங்களா" என்றார்.

"ம்ம் எடுங்க கூட ரெண்டு மூணு பார்சலும் பண்ணிடுங்க என்றதும் கடை ஓனர் மிரண்டார்.

ஓடிப்போய் ஒரு வாட் 69 எடுத்து வந்து உடைத்து க்ளாசில் ஊற்றினார். சாமிக்கு இப்போதும் உள்ளூர நடுக்க மிருந்தது. அவன் கையில் ஒன்றுமில்லை எல்லாமும் ஓட்டுனரிடம்தான் இருந்தது. மடக்கென க்ளாசில் இருந்ததை எடுத்துக் குடித்தான். தொண்டையில் ஆரம்பித்து அடிவயிறு வரை எல்லாமும் எரிந்தது. சமாளித்துக் கொண்டான். கடை ஓனர் சோடா சேக்கிறதில்லைங்கிலா என்றார். சாமி மையமாய் சிரித்தான். சோடா சேக்கனும் மனதில் குறித்துக் கொண்டான். சரி சோடா சொல்லுங்க என்று அடுத்த ரவுண்டை அவனே ஊற்றினான். இரண்டாவது ரவுண்ட் உள்ளே போனதும் சாமிக்கு உச்சத்தில் போய் அமர்ந்து கொண்டது. தலையை உதறிக்கொண்டான். சிகரெட் என்றான். உடனே வந்தது. ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். சகலமும் சுழன்று நின்றது. மிதந்தான். ஆனாலும் வந்த வேலையை மறந்து விடக் கூடாது. இதுதான் ஆரம்பம். முதலிலேயே கோணக்கூடாது. அவனுடைய சகல நரம்பும் விழிப்படைந்தது. டரைவரைக் கூப்டுங்க என குழறலைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்.

மாரிமுத்து வந்து நின்றான்.

"தம்பி இதுக்கு காசு கொடுத்திரு, ஐயா கொடுக்கரத வாங்கி வண்டில வை. சாமிக்கு வைக்கறது நல்லாருக்கனும். அதான் அடிச்சி பாத்தேன். நீ வாங்கிடு "

என தள்ளாட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாது கடையில் இருந்து இறங்கிப் போனான். ஓட்டுனர் கடை முதலாளியிடம் புட்டிகளை வாங்கிக் கொண்டு வந்தான். போலாங்களா என்றதற்கு பின் சீட்டில் சரிந்திருந்த சாமி சரியென்றான். போகப்போக மழை குறைந்திருந்தது. சாமிக்கு போதையும் தெளிந்திருந்தது. ஏனோ அவனுக்கு மூங்கில் துறைப் பட்டு போகும் எண்ணம் உதித்தது. இயன்றால் தன்னை விரட்டிய அந்த சாமியையும் பார்த்து வர வேண்டும்.

மாரிமுத்துவிடம், மாரி மூங்கில் தொர பட்டுக்கு வண்டிய விடு. அங்கதான் எல்லாமும் சரியா கெடக்கும் என்றான். மாரி வண்டியைத் திருப்பினான். மூங்கில் துறைப் பட்டு பஸ் ஸ்டாண்டில் பழங்களை வாங்கிக் கொண்டான். பஜாரில் செட்டியார் கடையில் பூஜைப் பொருட்களை வாங்கினான். இனி ஏரிக்கரைக்குப் போக வேண்டும். ஆனால் கார் போகாது. சாமி காரை வயல் எல்லை வரை கொண்டு போய் நிறுத்தச் சொன்னான். மழை ஆரம்பித்திருந்தது. போதை சுத்தமாய் இறங்கி அவன் வன்மம் மெல்ல மேலெழ ஆரம்பித்திருந்தது. மாரிமுத்துவை காத்திருக்கச் சொல்லிவிட்டு வரப்பில் தெளிவாய்  நடந்து போனான். சாமியாரின் குடிசைக் கதவு சாத்தியிருந்தது. மழை மொத்த பகுதியையும் நாசமாக்கி விட்டிருந்தது. குடிசையின் கூரைக் கீற்றுக்கள் சிதறிக் கிடந்தன. கூரை திறந்திருந்தது. சாமி படலைத் திறந்து கொண்டு உள்ளே போனான். தரையில் முட்டி அளவிற்கு தண்ணீர் நின்றிருந்தது. சாமியார் இல்லை. அவன் மூளை பரபரப்பானது. அவரின் பெட்டியைத் தேடினான். அந்த ட்றங்குப் பெட்டி ஒரு மூலையில் தண்ணீரில் மூழ்கி இருந்தது. ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவ்வளவு கனமில்லை. மிகுந்த உற்சாகத்தோடு அதைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான். வரப்பில் நடந்து காரிடம் சென்றான். மாரிமுத்து ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான். வண்டியின் டிக்கியைத் திரந்து அதில் வைத்தான். சாமிக்கு வானமே வசப்பட்டதைப் போலிருந்தது. மாரி அந்த பாட்டில்ல ஒண்ண தொற என்றான். மாரி தயங்கினான்.

"மாரி இப்ப உள்ள வச்சியே அத என்னன்னு  நினைச்ச? பொக்கிஷம். அத்தனையும் பொக்கிஷம். உன்ன ஒரே நாள்ள கோடீஸ்வரனாக்கவா?" அதெல்லாமும் அதுல இருக்கு"

மாரி மிரண்டான். ஏற்கனவே திறந்திருந்த பாட்டிலை சாமியிடம் நீட்டினான். சாமி அதைப்பிடுங்கி மடக் மடக் எஎனக் குடித்தான். பின் ஆழமாய் மூச்சை இழுத்து  அந்த சிகெரெட்டை எடு என்றான்.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...