Thursday, May 11, 2017

காற்று வெளியிடை - மணிரத்னத்தின் Fringe Elements


மணிரத்னத்தின் காதற் படங்களின் மீது எனக்கொரு வாஞ்சை உண்டு. ஓ காதல் கண்மணி வரை அவரின் படங்களை - குறிப்பாய் காதல் படங்களை திரையில் காண்பதே வழக்கம். காற்று வெளியிடையைக் காணப் போகவில்லை. மணி - ரகுமான் கூட்டணியின்  முதல் தூண்டிலான பாடல்கள் இதில் சுமார்தான். ட்ரைலர், மீசையில்லாத கார்த்தி என அரங்கிற்கு போகத் தூண்டும் மணியின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் எதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூடுதலாய் ஃபேஸ்புக் அறிஞர்கள் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே கழுவி ஊற்ற ஆரம்பித்திருந்தார்கள். இக்காரணங்களால் திரையரங்கிற்கு செல்லும் ஆர்வம் விட்டுப் போனது. நேற்று நல்ல பிரிண்டில் படம் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தம் மணியின் படங்களில் யதார்த்தம் அல்லது உண்மையைத் தேடிக் கொண்டிருப்பது. இவர் படங்களைக் குறித்து  ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமெனில் ’ஒரு பணக்காரப் பகல் கனவு’ அவ்வளவுதான். இரண்டரை மணி நேரம் பணக்காரனாக வாழ யாருக்கு ஆசை இருக்கிறதோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு இருக்கிறது.

முதலில் படத்தின் நிறைகளைப் பார்த்துவிடலாம். வழக்கமான நிறைகளான  இசை, தேர்ந்த ஒலியமைப்பு, கண்களில் ஒற்றிக் கொள்ளும் போட்டாக்ராபி, நடனம், சிறந்த எடிட்டிங், அழகான பாடல் காட்சிகள் என எல்லா புற அழகு விஷயங்களும் கச்சிதம். நாயகி டாக்டர் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார். சாய் பல்லவி இல்லாமல் போன குறை தெரியவில்லை. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் உலகத்தரம். ஆங்கிலப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு படம் நெடுகிலும் இருந்தது.   குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் படத்தில் அலையலையாய் எழுந்து அடங்கும் ஊடலும் கூடலுமான காதல். அந்தக் காதலுணர்வு மணி படங்களில் தொன்று தொட்டு வரும் அபாரமான விஷயம். மணிக்கு புதிதாக சொல்ல எதுவும் தெரியாது என்பதுதான் அவர் காதற் படங்களின் விசேஷம். காதல் புதுப்பித்துக் கொள்கிற வஸ்து கிடையாது. அது எப்போதும் நினைவுகளில் தோய்ந்திருப்பது.

ஒரு க்ரியேட்டராக மணியின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் குறைவு. இக்குழுவினரின் முக முக்கியமான தவறு கார்த்தியை மிகத் தவறாகப் பயன்படுத்தியதுதான்.  கார்த்தியை அப்படியே விட்டிருக்கலாம். இதுதான் கதாபாத்திரம் நடித்துக் கொள் என விட்டிருந்தால் சரியாகச் செய்திருப்பார்.  சூர்யாவைக் காட்டிலும் கார்த்தி சிறப்பான நடிகர். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மெட்ராஸ் என மூன்று உதாரணங்கள் நம் முன் உள்ளன. கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை கார்த்திக்கு உண்டு. அவரைப்போய் வித்தியாசமாக நடிக்க வைக்கிறோம் என கண்களை உருட்டி உருட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்த முட்டாள்தனமான எக்ஸ்பிரஷன் யாருடைய ஐடியா எனத் தெரியவில்லை. கதாநாயகன் லேசாய் ’சைக்கோ’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டு ஆண்கள் நூறு சதவிகிதம் ஆணாதிக்கமும் ஈகோவும் ஆம்பள பொம்பள பாகுபாடும் கொண்டவர்கள்தாம். அவர்கள் சாதாரணமாகத்தான் இருப்பார்கள். முழியைப் பிதுக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த எளிய உண்மையை மணி புரிந்து கொண்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.


பலமுறை குறிப்பிட்டதுதான் மணி அடிப்படையில் படைப்பாளுமை கொண்டவர் அல்ல. சிறந்த தொழில்நுட்பவாதியும் மற்றவர்களிடமிருந்து தனக்கு வேண்டியதை சரியாகப் பெற்றுக் கொள்ளும் மேலாண்மை ஆற்றலும் மிக்கவர்.  எனவே இவரின் படங்களுக்கு இருக்கும் வெளிப்புற அழகியல் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பாளியின் மிக முக்கிய பங்களிப்பான உட்புற ஆழம் உள்ளீடற்றதாக இருக்கிறது. எளிமையான தமிழில் சொல்ல வேண்டுமெனில் வாசனை மட்டும் உள்ள காலிப் பெருங்காய டப்பா அவ்வளவுதான்.

 கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக  அவர் பின்பற்றும் திரைக்கதை முறமைகள் சிலவற்றைக்
குறிப்பிடுகிறேன்.

1. பார்த்த உடன் காதல்
2. திமிர் பிடித்த ஆம்பள கதாநாயகன்
3. அழகான நல்ல கதாநாயகி  - உடனடியாக காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பது
4.  சிறு பிரிவு
5. நாயகனோ நாயகியோ ஒருவர் இன்னொருவரைத் தேடி பயணிப்பது
6. பயணத்தின் முடிவில் நீல்லனா செத்திருவேன் என இணைவது
7. திருமணம் அ சேர்ந்து வாழ்வது
8. ஈகோ  ஊடல் அ பிரிவு
9. ஒரு சம்பவம் - இழப்பு - துயர்
10. மனந்திருந்தி இணைதல்
11. தேசம் - ராணுவம் போன்ற எக்ஸ்ட்ரா பிட்டுகள்


92 ரோஜாவிற்கு முன்பான மணிக்கு - இந்த பத்து நிகழ்வுகள் நடைபெறும் இடப் பின்னணியாக ஃப்ரிஞ் எலிமெண்டான தமிழ்நாடு இருந்தது. ரோஜாவிற்குப் பிறகு பின்னணியாக இந்தி பேசும் இந்தியா இருக்கிறது.  அவ்வளவுதான்.  இன்றளவும் 92க்குப் பிறகான மணியின் காதல் படங்களில் எனக்குப் பிடித்தது அலைபாயுதேதான்.  அதைத்தான் அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார். ஷாலினியைத் தேடி மாதவன் கேரளா போகும் காட்சியையும் பின்னனியில் ஒலிக்கும் எவனோ ஒருவனையும் அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவையும்  எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாது. அதைத்தான் காற்று வெளியிடைக் காதலாக மணி ரீக்ரியேட் செய்திருக்கிறார்.

மற்றபடி படத்தில் வரும் ராணுவம், போர், பாகிஸ்தான் பார்டர், பாக். ஜெயில், அங்கிருந்து தப்பித்து ஆப்கன் போவது, அந்த மலை சேஸிங்க் இதெல்லாமே மிகப் பெரிய ஜோக்.No comments:

Featured Post

கோவேறு கழுதைகள்

இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை   நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இ ப்போது வாசி...