Wednesday, May 17, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினாறு


ரமா கிளம்பிப் போனபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றுமில்லாத அமைதி வாய்த்திருந்தது. இது அபூர்வம்தான். இயலாமையின் பரிதவிப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.  மனதைப் பிசைந்து பிசைந்து பைத்தியமாக்கிக் கொண்டிருந்த குழப்பமான எண்ணங்கள் யாவும் சடுதியில் காணாமற் போனது போலிருந்தது. மனம் தெள்ளத் தெளிவாகியிருந்தது. குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். குடியை நினைத்தாலே அருவெருப்பாக இருந்தது. எவ்வளவு இழிவான பிறவி நான் என்கிற சுய பச்சாதாபம் மேலெழுந்தது. அதை மேலும் வளரவிடாமல் மீண்டும் இரமணாசிரமத்திற்குத் திரும்பினேன்.  பிரதான தியான ஹாலை விடுத்து கிணற்றடியை ஒட்டிய சிறிய தியான அறையில் போய் அமர்ந்து கொண்டேன். அந்த மென்னிருளும் அமைதியும் பாதி இருளில் கரைந்து அறிய முடியா ரகசியத்தைப் போல  வீற்றிருக்கும் ரமணரின் சிலையும் என்னை மேலும் சாந்தப் படுத்தியது. ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த சிறு தரைவிரிப்பில் அமர்ந்து கொண்டேன். கண்களை மூடப் பயமாக இருந்தது. அப்படியே அமர்ந்திருந்தேன்.  தலைக்குள் ஏராளமான சப்தங்கள். காதுகளில் குரல்கள் திம் திம் என அலறின.  சுவற்றில் அடித்த பந்தாய் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்த சொற்களைக் கதறலை மனம் மெல்ல உள்வாங்கிக் கொண்டது. மெது மெதுவாய் மனம் அமைதியடையத் துவங்கியது.

சாந்தமே கூட ஒரு கட்டத்தில் மூச்சு முட்ட ஆரம்பித்தது.  உடன் அமர்ந்திருப்போரைச் சலனப்படுத்தாமல் மிக மெதுவாய் எழுந்து வெளியே வந்தேன்.  வெயில் உச்சிக்கு வந்து விட்டிருந்தது. வீட்டிற்குப் போகலாமா என்ற எண்ணம் தோன்றியது. வேண்டாம். அவள் கேட்டால் தேவையில்லாத பொய் சொல்ல வேண்டியிருக்கும். இப்படியே மலையேறி ஸ்கந்தாசிரமம் வரை போய்வர முடிவு செய்தேன்.

நானும் ரமாவும் அமர்ந்திருந்த இடத்தில் இப்போது வேறு யாரோ ஜோடியாய் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிற்குச் சமீபமாகத்தான் திருமணமாகியிருக்க வேண்டும். அந்தப் பெண் அணிந்திருந்த தாலிக்கயிறின் மஞ்சள் புத்தம் புதிதாக இருந்தது. மனதில் காமம் மின்னலாய் தோன்றி மறைந்தது. புதுத்தாலியைப் பார்த்த உடன், ஏன்  மனம்  காமத்தோடு ஒன்றுகிறது?

எல்லாவற்றையுமே கோணலாகப் பார்க்கும் மனம் உலகத்திலேயே எனக்கு மட்டும்தான் வாய்த்திருக்கும் போல. அதற்கு மேலும் பார்வையை அங்கு நகர்த்தாமல், ஒற்றைக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு மலை மீது ஏறத் துவங்கினேன். வெயில் முற்றியிருந்தது. அனல் இல்லை. போலவே காற்றும் அத்தனைச் சூடாக இல்லை. படிக்கட்டுக்கள் செங்குத்தாக இருந்தன. பத்துப் படிக்கட்டிலேயே மூச்சு வாங்கியது. படியைத் தவிர்த்துவிட்டு பாறையில் நடக்க ஆரம்பித்தேன். முடியவில்லை. இரண்டு பக்கமும் அடர்ந்த மரநிழலும், உட்கார வாகாய் ஒரு கற்திண்டும் நடைபாதைக்குச் சமீபமாய் இருந்தது. அதில் அமர்ந்து கொண்டேன். வானம் தெள்ளத் தெளிவாய் இருந்தது. பஞ்சுப் பொதி மேகங்கள் சின்னச் சின்னதாய் சிதறிக் கிடந்தன. பகலில் ஆகாயம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. பெருமூச்சு விட்டேன்.

ஓய்விற்குப் பிறகு மனம் சிறு சாகசத்திற்கு தயாரானது. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். இந்தத் தடம் மாறவே இல்லை. முன்பு  நடைபாதை ஓரங்களில் நடப்பட்டிருந்த மரச் செடிகள்  சற்று வளர்ந்திருக்கின்றன. ஏதோ ஒரு அமைப்பைச் சேர்ந்த குழுவினர் இந்த மலையில் மரங்களை வளர்த்து வருகிறார்கள். உயரமான மஞ்சம் புற்களும், காரைச் செடிகளும், முற்செடிகளும், புதர்களும்தான் இம்மலை முழுக்க மண்டியிருக்கும். இப்போது நிறைய மரங்களைக் காண முடிகிறது.

சிறுவயதில் இரவில் எங்கள் வீட்டின் வாசலில் பாய்போட்டு படுத்துக் கொள்வது வழக்கம். புழுக்கமான வேனிற்காலங்களில் எங்கள் தெரு முழுவதுமே வாசலில்தான் படுத்திருக்கும்.  எப்போதும் பூத்திருக்கும் இந்த மலையெனும் நித்தியப்பூ எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் . இரவில் மலையில்  காய்ந்த அல்லது அறுப்பு முடிந்த மஞ்சம் புற்களை எரிவூட்டுவார்கள். அது ஆங்காங்கே திட்டுத் திட்டாய் கொழுந்து விட்டு எரியும். தரையில் படுத்துக் கொண்டே இந்த பிரம்மாண்ட மலையில் ஆங்காங்கே எரியும் தீப்பிழம்பைக் காண்பது விநோதமான சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும் . பல வருடங்கள் அந்தத் தீப் பிழம்பை கொள்ளி வாய் பிசாசு என நம்பிக் கொண்டிருந்தேன். அமுதா அக்காதான் எரிவது மஞ்சம்  புல் தான் பேயில்லை என்கிற உண்மையைச் சொன்னது.

அமுதாக்காவை நினைத்த போது உதட்டில் ஒரு புன்னகை அநிச்சையாய் வந்து போனது. இப்போது எங்கிருக்கிறாள். எப்படியிருப்பாள் என்கிற யோசனைகளும் ஓடின. நானும் ரமாவும் ஒன்றாகப் போய் அவள் முன் நின்றால் எப்படி எதிர்கொள்வாள் என்பதை யோசித்துக் கொண்டே நடந்தேன். பாதை சற்று சமதளமாக இருந்தது. அத்தனை மூச்சிரைப்பில்லை. மனம் நழுவிக் கொண்டது.

மீசை அரும்பியபின்பு கூட அமுதாக்கா பின்புதான் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னைக் கேலி பேசாதவர்கள் குறைவு. தெருப் பயல்கள் முழுக்க மரப்பேட்டும் ரப்பர் பந்துமாய் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கையில்  நான் அமுதாக்காவுடன் தாயமோ பல்லாங்குழியோ விளையாடிக் கொண்டிருப்பேன். செஸ் கேரம்போர்டு போன்றவை அவளிற்குச் சரிப்பட்டு வரவில்லை.  ஒரு காலை மடித்தும் ஒரு காலை நீட்டியுமாய்  உட்கார்ந்து, அழகாய் உருண்டையாய் என்னால் கொண்டுவரப்பட்ட கூழாங்கற்களில் அஞ்சாங்கல் விளையாடுவதுதான் அவளுக்குப் பிடித்திருந்தது. கல் விளையாட்டிலேயே பல வகை இருந்தன. ஐந்து கல், ஏழு கல், பதினாறு கல் இப்படி முப்பத்தி இரண்டு கல் வரை நீளும் விளையாட்டு அது. நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருப்போம். இடையில் சமைக்க, சாப்பிட, தூங்க மட்டுமே விலகிப் போவோம்.

பள்ளி நாட்களில் மாலை வீட்டிற்கு வந்து பையை வைத்துவிட்டு அமுதாக்கா வீட்டிற்குப் போய் விடுவேன். அம்மா அவள் வேலை பார்க்கும் பள்ளியிலிருந்து வந்து, முகம் கழுவிக் கொண்டு என்னைத் தேடி வருவாள்.  வீட்டுப்பாடம் இருக்கிறது என இழுத்துக்கொண்டு போவாள்.  ஒம்பதாங்க்ளாஸ் வந்துட்ட இன்னும் என்னடா அவ பின்னாடியே சுத்திட்டு இருக்க என கடிந்து கொள்வாள். எனக்குத்தான் அவளைப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.
எப்போது சனிக்கிழமை வரும் என இருக்கும். சனிக்கிழமை அம்மாவிற்கு வேலை நாள். அவள் கிளம்பிய உடன் பின்னாலேயே நானும் கிளம்பி அமுதாக்கா வீட்டிற்குப் போய்விடுவேன். அவளிடம் ஓர் அபூர்வ அமைதி இருந்தது. இதுவரைக்குமே புரிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு அவளின் மேல் எனக்கு இருந்தது. அதை ஒரு போதும் என்னால் காமத்துடன் நேர் வைத்துப் பார்க்க முடியவில்லை.

பத்தாம் வகுப்பு கால் பரிட்சை சமயத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தது.  யாரோ ஒரு அரைக் கிழவனுக்கு இரண்டாந்தாரமாய் வாழ்க்கைப் பட்டு  போனாள். அந்தத் தெருவே அவள் பின்னால் அலைந்தது. அவள் நினைத்திருந்தால் யாராவது ஒரு பையனுடன் ஓடிப்போயிருக்க முடியும். ஆனால் மிகக் கறாராய் ஒருவனையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தாள். எப்போதும் அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்னை அத்தெருவின் மொத்த இளைஞர் கூட்டமும்   வெறுப்புடன் பார்த்தது. ஓரிருவர் என்னை நைச்சியப்படுத்திக்கொண்டு அமுதாக்காவிற்கு லெட்டர் கொடுக்கப் பார்த்தனர். நான் அவர்களின் முன்பே அக்கடிதங்களை கிழித்துப் போட்டு ஆணவமாய் நடந்து போவேன். இந்த அரைக்கிழ கணவனைப் பார்த்த போது அந்த ஈபி யில் வேலைக்கு சேர்ந்திருந்த அண்ணனின் கடிதத்தை கிழிக்காமல் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

அம்மா அத்தனை வற்புறுத்தியும் அவள் திருமணத்திற்குப் போக மறுத்துவிட்டேன். பரிட்சை இருக்கிறது அது இதுவென சொல்லி போகாமல் இருந்துவிட்டேன். ஏனோ அந்த ஆளோடு அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு போனவள்தான். ஓரிரு முறை வந்து போனதோடு சரி. பிறகு அவளின் குடும்பமும் அங்கிருந்து காலிசெய்து கொண்டு போய்விட்டது. என் நினைவில் இருந்தும் போய்விட்டாள். ஏனோ இத்தனை வருடங்கள் அமுதாக்கா நினைவே வரவில்லை. இன்று காலை ரமாவைப் பார்த்துப் பேசிய பின்புதான் நான் ஒரு மனிதன் என்றும் எனக்கும் முன்பொரு வாழ்விருந்தது என்றும் தெரியவந்திருக்கிறது.

முதல் குன்றைத் தாண்டி வளைவிற்கு வந்துவிட்டிருக்கிறேன்.  சற்று ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பி நடைபாதையிலிருந்து விலகி சரிவிலிருந்த உயரமான பாறையின் மீது ஏறி அமர்ந்து கொண்டேன்.
திருவண்ணாமலை நகரம் கோபுரங்கள் பிரகாசிக்க  அத்தனை அழகாய் தெரிந்தது. தொலைவில் இருந்து பார்க்க எல்லாமும் மிகச் சிறியதாக அழகாக மாறிவிடுகின்றன. அருகாமையின் பிரம்மாண்டத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

- மேலும்
No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...