Thursday, May 25, 2017

தினசரிகளின் துல்லியம் - முரகாமியின் ஸ்லீப்

இரண்டு நாட்களாக ஹருகி முரகாமியின் ’ஸ்லீப்’ என்கிற கதை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது. ஸ்லீப் கதையின் நாயகிக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். ஆனால் அது ’இன்சோம்னியா’ அல்ல. தூக்கம் வராது அதனால் தூங்காமல் இருப்பாள் . பதினேழு நாட்களாக தூங்கியிராத அந்தப் பெண் கதாபாத்திரத்தை எவ்வளவு முயன்றும் நினைவில் இருந்து துரத்த முடியவில்லை.  கணவனும் மகனும் தூங்கிய இரவில் வரவேற்பறையில்  அமர்ந்து கொண்டு  ரெமி மார்டின் சகிதமாய் அவள் வாசிக்கும் அன்னா கரீனா நாவலை மனம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்கிறது. நான் அன்னா கரீனாவை வாசித்ததில்லை. இச்சிறுகதைக்குப் பிறகு அன்னா கரீனாவை வாசிக்கும் ஆவல் எழுந்திருக்கிறது.

’ஸ்லீப்’ எனும் இச்சிறுகதை முரகாமியின் ’The Elephant Vanishes’ தொகுப்பில் இருக்கிறது. 1989 இல் எழுதப்பட்ட சிறுகதை. ஆரம்பகால முரகாமியின் சிறுகதைகளில் தினசரிகளைக் குறித்தக் கச்சிதமானச் சித்திரம் இருக்கும்.  ஒரு கதாபாத்திரம் காலை ஆறு பதிமூன்றிற்கு எழுந்து இரவு பத்து முப்பத்தி நான்கிற்குத் தூங்கப் போவது வரைக்குமான சம்பவங்களை நிகழ்வுகளை அல்லது எதுவுமே நிகழாதத் தன்மைகளையும் மிகத் துல்லியமாக விவரிப்பது முரகாமியின் கதை சொல்லும் முறை. ஒரே ஒரு அசைவைக் கூட விடாமல் சொல்லிவிடுவதுதான் இவர் தனித் தன்மை. சில கதைகளில் அலுப்பூட்டும் அளவிற்கு தினசரிகளின் துல்லியம் வந்து விழுந்து கொண்டே இருக்கும். வரிசைக் கிரமம் மாறாத முறைமைகளைக் கொண்டிருக்கும் இவர் கதாபாத்திரங்கள் ஒருபோதும் தினசரிகளில் அலுப்படைவதில்லை. மேலும் அத் தினசரிகளில் ஆழமாய் ஊன்றிப் போக முயலுகின்றன.

முரகாமியின் கதைகள், கதை மாந்தர்கள் என்னுடைய தினசரிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செய்யும் எந்த ஒன்றிலும் கவனம் அல்லது நுணுக்கம் குறித்தான பிரக்ஞையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நல்ல எழுத்தும் இலக்கியமும் மனதை விசாலப்படுத்தும் என அறிந்திருக்கிறோம் ஆனால் செயலின் ஒவ்வொரு தன்மையையும் கச்சிதப்படுத்தும் வாழ்வு முறை எனக்கு முரகாமியின் வழியாகத்தான் வந்தது.

ஸ்லீப் கதையின் நாயகிக்கு முப்பது வயது. ஆரம்பப் பள்ளிக்கு செல்லும் ஒரு மகன். கணவன் பல் மருத்துவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பவர். நண்பர்களோ குடிப்பழக்கமோ கொண்டாட்டங்களோ இல்லாதவர். படுத்த உடன் தூங்கிவிடுபவர். மகனுக்கும் அவரின் அத்தனை சாயல்களும் இருக்கும். இவளுக்கு வாழ்வின் மீது பெரிதாய் புகார்கள் கிடையாது. எல்லாமும் சரியாக இருக்கும். காலை எழுந்து சிற்றுண்டி தயாரித்து கணவனையும் மகனையும் காலை எட்டு பதினைந்திற்கு ஒரே மாதிரி பத்திரம் எனச் சொல்லி வழியனுப்புவாள். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி தலையசைத்து ’டோன் வொர்ரி’ எனச் சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்கள் சென்ற பிறகு இவள் கடைக்குப் போய் தேவையானதை வாங்கிவருவாள். இவளிடம் ஒரு பழைய ஹோண்டா சிவிக் இருக்கிறது. வீட்டிற்கு வந்ததும் வீட்டைத் துடைப்பது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவாள். பதினோரு மணி ஆனதும் மதிய உணவைத் தயாரிப்பாள். கணவன் மதிய உணவு அருந்த வருவான். சேர்ந்து சாப்பிடுவார்கள். திருமணம் ஆன புதிதில் மதிய உணவிற்குப் பிறகு அவன் நெடுநேரம் வீட்டில் அவளோடு இருப்பான். அவை மகிழ்ச்சியும் இளமையும் நிரம்பிய காலங்கள். இப்போது அப்படியல்ல ஓரு மணி நேரத்திற்குள் திரும்ப மருத்துவமனை சென்றுவிடுவான். அவன் போன பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் ’ஹெல்த் க்ளப்’ பிற்குப் போய் நீச்சலடிப்பாள். அழகு குறித்தும் ஆரோக்கியம் குறித்துமான கவனம் அவளுக்கு உண்டு. பின் மதியத்தை வாசிப்பது, ரேடியோ கேட்பது, ’விண்டோ ஷாப்பிங்’ செய்வது போன்ற வெவ்வேறு வகையில் செலவிடுவாள். மாலையானதும் மகன் வருவான். அவனுக்கு நொறுக்குத் தீனி கொடுத்துவிட்டு  விளையாட அனுப்புவாள். இரவுணவைத் தயாரிப்பாள். ஆறு மணிக்கு விளையாடிவிட்டு திரும்பும் சிறுவன் வீட்டுப் பாடங்கள் செய்வான் அல்லது கார்டூன் பார்ப்பான். கணவன் வந்ததும் இரவுணவு.  எட்டரை மணிக்கு மகன் தூங்கப் போவான். பிறகு இருவரும் மொசார்ட் அல்லது ஹேடனைக் கேட்பார்கள். இவளுக்கு இருவரின் இசைக்குமான வித்தியாசம் எப்போதும் பிடிபட்டதில்லை. அவன் இசை கேட்டுக்கொண்டே செய்தித்தாள் வாசிப்பான். பிறகு தூக்கம். அவ்வளவுதான். இந்த வரிசைக் கிரமம் எந்த வகையிலும் மாறாது. மாறாமல் இருக்க அனைவரும் மெனக்கெடுவார்கள்.

ஒருநாள் இவளுக்கு தூக்கம் வராமல் போய் விடுகிறது. தூங்காமல் இருப்பதால் ஏற்படும் எந்த அசெளகரியங்களும் இருக்காது. வழக்கம்போலவே இருப்பாள். ஆனால் தூங்க மாட்டாள். கல்லூரி காலத்திலும் ஒரு மாதம் இப்படித் தூங்காமல் இருந்தாள். தூக்க மாத்திரை, குடி என எதைப் பயன்படுத்தினாலும் தூக்கம் வராது. உடலும் மனமும் அவ்வளவு விழிப்பாகவும் புகை மூட்டமாகவும் இருக்கும். தனக்கு இருந்த சிக்கலை அவள் யாரிடமும்  - இப்போதுபோலவே - சொல்லவில்லை. ஒரு நாள் அந்தத் தூக்கமின்மை போய்விடும். தொடர்ச்சியாக இருபத்தேழு மணி நேரம் தூங்கி எழுந்து சரியாகிவிடுவாள். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை இப்போது வந்திருக்கிறது.

இந்தத் தூக்கமின்மை வருவதற்கு முன்னால் அவளுக்கு பயங்கரமான கனவு ஒன்று வரும். இம்முறை ஒரு வயோதிகன் அவள் காலின் மீது நீரைக் கொண்டிக் கொண்டிருப்பதாய் கனவு வந்தது. ஒரு ஜாரில் நீரை நிரப்பி அவள் பாதங்களின் மீது நிறுத்தாமல் கொட்டிக் கொண்டிருக்கிறான். அவளால் கத்தவோ அல்லது எழுந்து ஓடவோ முடிவதில்லை. தன் கால்கள் விரைத்து நகரமுடியாமல் போய்விடுவோமோ என பயந்து அலறி அக்கனவில் இருந்து விழிக்கிறாள். அவ்வளவுதான். தூக்கமின்மைக்கு வந்து விட்டாள். எழுந்து வியர்வையால் நனைந்த தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலிற்கு வருகிறாள். ஒரு முழுக் கோப்பை பிராந்தியைக் குடிக்கிறாள்.  திருமணத்திற்கு முன்பு நன்கு குடிப்பாள். கணவனுக்கு  குடிப்பழக்கம் இல்லாததால் அது நின்று போயிருக்கும். எப்போதோ பரிசாய் கிடைத்த ஒரு ரெமி மார்டின் பாட்டில் வீட்டில் இருக்கும்   கனவு தந்த பயத்திலிருந்து விடுபட நரம்புகளை சாந்தப்படுத்த குடிப்பாள். மேலும் ஒரு கோப்பை குடித்ததும் அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் அன்னா கரீனா புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பாள். அவ்வளவுதான் அந்த உலகத்திற்குள் விழுந்துவிடுவாள். அவளுடைய பழைய இளம் உலகம் விழித்துக் கொள்ளும். முடிவு என்ன என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கதையை வாசித்து முடித்ததும் ஓர் அபரிதமான புத்துணர்விற்குள் தள்ளப்பட்டேன். என்னைச் செயலின்மைக்கு நகர்த்தியவையும் புத்தகங்கள்தாம். இப்போது அதே புத்தகங்களே செயலூக்கியாக இருக்கும் முரணை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

முரகாமியின் The Elephant Vanishes  தொகுப்பு  1980 லிருந்து 1991 வரைக்குமாய் அவர் எழுதிய சிறுகதைகளை உள்ளடக்கியது. மொத்தம் பதினேழுச் சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மன உணர்வுகளைத் தூண்டிப்பார்க்கும். இத்தொகுப்பின் முதல் சிறுகதையான The Wind-up Bird and Tuesday's Women பின்னாளில் ’வைண்ட் அப் பேர்ட் க்ரோனிகள்’ நாவலின் முதல் அத்தியாயமாகவும் இடம் பெற்றது. இச்சிறுகதையின் தொடர்ச்சியாக ’வைண்ட் அப் பேர்ட்’ நாவலை எழுதியிருப்பார். வேலை இல்லாத ஒரு  மத்திம வயது ஆண் கதாபாத்திரத்தின் தினசரி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும்.  The Dancing Dwarf, Lederhosen போன்ற பிற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தன. லெடர்ஹோசன் என்கிற ஜெர்மானிய உடை ஒரு பெண்ணின் அத்தனை வருட வழமையை உடைத்துப் போடும் விநோதமான கதை. விநோதங்களின் அரசனான முரகாமி தினசரிகளில்  இருந்து அதைக் கண்டெடுக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்.

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...