Wednesday, May 17, 2017

பவா - அனந்தமூர்த்தி


கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலான பவ - வை தமிழில் வாசித்தேன். பிறப்பு என்கிறத் தலைப்பில் நஞ்சுண்டன் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. அளவில் மிகச் சிறிய நாவல்தான். இதற்குள்ளும் மூன்று பாகங்கள் உண்டு. எழுத்தாளரின் வசதிக்கேற்ப ஒரு நாவலை அத்தியாயங்களாகப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்தான். பிறப்பு நாவல்  மூன்று தலைமுறை ஆண்களின்  உறவுச் சிக்கல்களைப் பேசுவதால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம்.

சிவராம் கரெந்த வின் அழிந்த பிறகு நாவலைப் போல பிறப்பும் ரயில் பயணத்தின் வழியாய் நம்மைக் கதைக்குள் கூட்டிப் போகிறது. முதல் நான்கைந்து அத்தியாயங்கள் அசுவராசியமாய் நகர்ந்து போக, சாஸ்திரிகளின் முன்கதை முதுகுத் தண்டில் அதிர்வை ஏற்படுத்தி கதைக்குள் ஒன்ற வைத்து விடுகிறது.

சாஸ்திரமும் வேதமும் ஓதுபவர், ஹரிக் கதைகளை சொல்லும் ஒரு மடியான முதியவர் அவ்வளவு குரூரமானவராய் இருந்திருப்பார் என நம்பவே எனக்கு நேரம் பிடித்தது. மரபான பல விஷயங்களை தமிழ் நாவல்களும் வாசகரும் கடக்காமல்தான் இருக்கிறோம். பார்ப்பனர்களைக் குறித்தப்  பகடிகள்  நம்மிடையே உண்டு என்றாலும் அவர்களைக் குரூர வில்லன்களாக சித்தரித்தக் கதைகளை நான் வாசித்த நினைவே இல்லை. அதுவும் மிக ஆசாரமான ஒரு பிராமணருக்கு இவ்வளவு குரூரப் பின்புலம் உள்ளது போன்ற ஒரு படைப்பு நம் சூழலில் வெளிவந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பிறப்பு நாவல் - தினகர் மற்றும் பிரசாத் ஆகிய இருவரின் பிறப்புகளைக் குறித்த மர்மங்களைத் தகவல்களாய் தருகிறது. பின்பு திட்டவட்டமாய் எதுவும் சொல்லாமல் இந்தக் கற்பு நிலை என்பதை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கதாபாத்திரங்களின் நகர்வைக் குறித்த ஒரு சித்திரத்தோடு முடிந்து போகிறது.

தொலைக்காட்சிப் பிரபலமான தினகர் தன் மண வாழ்வில் தோல்வியுற்று - இவருக்கு ஏராளமான காதலிகள், மனைவிக்கு ஒரே ஒரு காதலன். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் ரயிலில் சாஸ்திரிகளை சந்திக்கிறார். தினகர் அணிந்திருக்கும் ஸ்ரீசக்ரத்தைப் பார்த்து அவருக்கு இவன் தன் மகனாக இருப்பானோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே ஒரு பெண்ணை சேர்த்துக் கொண்ட சாஸ்திரி வைப்பின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி அவளைச் சித்திரவதை செய்கிறார். அவளோ புதிரும் வைராக்கியமும் நிரம்பியவள். இவரை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இடையில் அவர்கள் வீட்டில் கெட்ட ஆவிகளை ஓட்ட வரும் மாந்த்ரீகனுடன் அவளுக்குப் பரிச்சயம் ஏற்படுகிறது. மாந்த்ரீகன் அவளுக்கு தம்புராவை மீட்ட சொல்லித் தருகிறான். இதனால் வெறியேறும் சாஸ்திரி மனைவியான சரோஜாவை அடித்து நொறுக்கி வீட்டின் பின்னால் புதைத்துவிட்டு வெளியேறுகிறார். அவளைக் கொன்றுவிட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார். பிறகு காதலி ராதாவின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து பிராமணர் அல்லாத இன்னொருவனுடன் ஓடிப்போகிறது..

தலை சுற்றுகிறது அல்லவா.. இப்படித்தான் போகிறது கதை.

பழமையில் ஊறி அது தரும் ஆண் சுதந்திரத்தில் திளைத்து, சாதியும் பணமும் தரும் திமிரை பெண் மீது ஏவித் திரியும் ஆண்களின் கதை இது.  கூடவே அவர்களின் திமிரை அனுமதித்தபடி தங்களின் வெளியேறல்களை மீறல்களை கட்டமைத்துக் கொள்ளும் பெண்களும் இதே கதையில் வருகிறார்கள்.  தாம் புணர்ந்த பெண்களின் கற்பு குறித்த அச்சம் கொண்ட ஆண்களான சாஸ்திரியும் நாராயணனும் மெல்ல தங்களின் நிலைப்பாட்டிலிருந்து நகர்கிறார்கள். பல பெண்களைப் புணரும் தினகர் தன் மனைவியை இன்னொருவனோடு படுக்கையில் பார்த்தவுடன் அதிர்ந்து ஓடிப்போகிறான்.

தினகர் சாஸ்திரிகளுக்குப் பிறந்தவனா அல்லது மாந்திரீகனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகத்தைப் போலவே -  பிரசாத் தினகருக்குப் பிறந்தவனா அல்லது நாராயணனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகம் சாஸ்திரியையும் நாராயணனையும் வாட்டி எடுக்கிறது. தினகரும் பிரசாத்தும் இதிலிருந்து தப்பிக்கிறார்கள். ரகசியம் அறியப்பட வேண்டாததாய் கரைந்து போகிறது.

மூன்று தலைமுறைக் கதையை வெறும் கதைச் சுருக்கமாய் தந்துவிட்ட போதாமை இந்நாவலில் உண்டு. ஆனால் இக்கதைகள் உலவும் தளம் யாரும் தொடாததாய், தொடப் பயப்படும் தளமாய் இருக்கிறது. அனந்தமூர்த்தி அநாயசமாய் மரபுகளை உடைக்கிறார். உடன் ஆன்மீக மசாலாப் பொடிகளைத் தூவி விடுகிறார். இவரை இந்தியச் சூழல் மிகைப்படுத்துகிறதா என்கிற எண்ணமும் எனக்கு வந்து போகத் தவறவில்லை.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...