Sunday, April 16, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினொன்று


ங்கையற்கன்னி ரவியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்அறைக்குள் சங்கோஜமாய் உள்ளே நுழைந்தவன் அந்தப் பார்வையை எதிர்கொள்ளத் தடுமாறினான்தலையைக் குனிந்துகொண்டே கட்டிலின் விளிம்பில்  அமர்ந்தான். அவள் கட்டில் நடுவில் சம்மணமிட்டு அமர்ந்து அவனின் நரிமுகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்தாக்கப்பட்டவனாய் தலை நிமிர்ந்தவன் அவள் மீது பாய்ந்தான்அவளின் வாசனை கிறுகிறுப்பை உண்டாக்கியது அவளின் திண்மமும் குளிர்ச்சியும் வெடவெடக்க வைத்தது. பயத்தை மீறிப் புடவையை விலக்கினான். மென்னிருளில் இரு தாமரை மலர்கள் குப்பென அவள் மார்பில் பூத்தன. வெருண்டவன் பின் வாங்கினான். அவசரமாய் அவளின் பாவாடையை சுருட்டி மேலேற்றினான். கண்களை மூடிக் கொண்டான். அவன் கற்பனை மிகுந்தது. அவள் கால்களை விரித்து உள்நுழையப் போனவனை ஏதோ தடுத்தது. கண் விழித்தால் அவள் யோனியிலிருந்து ஓரே இதழைக் கொண்ட மாமலர் ஒன்று மேலெழுந்து நின்றது. ரவி மிரண்டான். கட்டிலில் இருந்து கீழே விழுந்து, தட்டுத் தடுமாறி எழுந்து கதவைத் திறந்து கொண்டு ஓடினான். அங்கையற்கன்னி எதுவுமே நடவாதது போல் தன் உடைகளை சரிசெய்து கொண்டு சரியாய் படுத்துக் கொண்டாள். உடனடியாய் கனவு அவளைத் தழுவியது. புள்ளி மானுடல் கொண்ட மனிதனை அவள் மார்புறத் தழுவிக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்து அவள் அந்த வீட்டுடன் தன்னைப் பொருத்திக் கொண்டாள். அவள் பிறந்த வீட்டை விட விசாலமாகவும் துப்புரவாகவும் இருந்தது. வீட்டிற்குப் பின்னால் சிறிய தோட்டமிருந்தது. நிறைய மரங்களும் செடிகளும் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன. வீட்டு வேலைகள் என்று பெரிதாய் எதுவும் இருக்கவில்லை. காலைச் சமையல் முடித்துக் குளித்துவிட்டு ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நாள் முழுக்க மாமரத்தடியிலும் சீதாப்பழ மரத்தடியிலும் உட்கார்ந்திருந்தாள். மாலையானதும் வீட்டு முற்றத்தில் ஏற்றி விடப்பட்டிருக்கும் முல்லைக்கொடியில் பூத்து மணந்த மலர்களை பறித்து, மாலை கட்டி எடுத்துக் கொண்டு சேஷாத்ரி ஆசிரமத்திற்குப் போய் அவளின் புள்ளிமான்குட்டியைப் பார்த்து வந்தாள். அவளின் நாள் அவளின் நாளாகவே இருந்தது.

ஒவ்வொரு முறையும் ரவி அவளை நெருங்கிப் பின் இயலாமல் ஓடுவதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருவகையில் நிம்மதியாக இருந்தாள். மேலும் அந்த மானுடலோனின் விளையாட்டுக்கள் இவையென நம்பினாள். இன்னும் இன்னும் அப்புள்ளி மானுடலானை நினைத்து மருகினாள். நினைவில் அவன் முகம் கிடைத்துவிட மெனக்கெட்டாள். ஒரு தருணத்திலாவது கனவில் வரும் அம்முகத்தை நேரில் பார்த்துவிடமாட்டோமா எனக் கிடந்து ஏங்கினாள்.

பூங்காவனத்தம்மாளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ரவியை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள வைத்தது தவறோ என வருந்த ஆரம்பித்தாள். ரவியும் அங்கையற்கன்னியும் சிரித்துப் பேசி அவள் பார்த்ததே இல்லை. அவர்கள் ஒன்றாக படுப்பதில்லை என்பதும் அவளைப் பெரிதும் வாட்டியது. அங்கையற்கன்னி அழுத்தக்காரி, ஒரு வார்த்தையைக் கூட அவளிடமிருந்து பிடுங்க முடியவில்லை. ரவியைப் பார்ப்பதே பெரும்பாடாக இருந்தது. அதிகம் குடிக்கிறான் இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புகிறான் என்பதும் அவளை என்னவோ செய்தது. இருவரையும் சில நாட்கள் தனியாக விட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றவே புதுவையில் இருக்கும் அண்ணன் வீட்டிற்குப் போய் பத்து நாள் தங்கிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.

அங்கையற்கன்னி இன்னும் சுதந்திரமாக உணர்ந்தாள். ரவி காலையில் கிளம்பிப் போனால் பெரும்பாலும் நள்ளிரவு தட்டுத் தடுமாறி வருவான். எப்போதும் உடன் இருக்கும் அத்தையும் இல்லாததால் முழுமையாய் விடுபட்ட மன உணர்வில் திளைத்தாள். காலை உணவை முடித்துக் கொண்டு ஆசிரமம் போய்விடுவாள். அந்தப் புள்ளிமான் குட்டி நன்றாக வளர்ந்திருந்தது. இப்போது அது ஒரு கர்வமிக்க ஆண் மானாகத் திரிந்து கொண்டிருந்தது. அங்கைக்கு அம்மானின் மீதான வாத்சல்யம் மறைந்து காமம் கிளர்விட ஆரம்பித்திருந்தது. மானைப் பார்த்துக் கொண்டும் அதைத் தொட்டுத் தடவிக் கொண்டும் இருப்பது பெரும் கிளர்ச்சியாக இருந்தது. அம்மான் அவளோடு மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது. அவள் தூரத்தில் வரும்போதே நன்றாக வளர ஆரம்பித்திருக்கும் தன் கிளைகள் அதிர அதிர ஓடிவரும். அவளும் அதன் கழுத்தை அணைத்துக் கொள்வாள். ஆசிரமத்திற்கும் வழக்கமாய் வருவோருக்கும் அவளையும் மானையும் நன்கு பரிச்சயமாகி விட்டிருந்தது. மான் மேய்க்கும் பெண் என்கிற கிண்டல் பெயரும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது.

இன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. என்றுமில்லாத பரபரப்பு வேறு அவளைத் தொற்றிக் கொண்டது. நேற்றிரவும் ரவி அவளைத் தொட முயன்று இயலாமல் மாடியில் போய் படுத்துக் கொண்டான். போர்வையையும் தலையணையையும் கொண்டு போய் அவனை சரியாகப் படுக்க வைத்து விட்டு வந்தாள். வழக்கத்திற்கு மாறாய் அதிகாலையில் மான் எப்படி இருக்கும் எனப் பார்க்க விரும்பினாள். ஆனால் ஆசிரமத்தை திறந்திருக்க மாட்டார்கள் அங்கிருப்பவர்கள் தன்னை மேலும் ஏளனமாகப் பார்க்கக் கூடும் என்பதால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை மாற்றினாள். ஒரு பெருமூச்சோடு எழுந்து குளிக்கப் போனாள்.  குளித்து விட்டு வந்தவள் சமையலறைக்குப் போய் இட்லி ஊற்றி வைத்தாள். பொழுது பளபள வென விடிந்தது. இட்லித் தட்டை இறக்கி  இட்லிகளை எடுத்து ஹாட்பாக்ஸில் வைத்து மூடினாள். சட்னியையும் அரைத்து கிண்ணத்தில் மாற்றி டேபிளில் வைத்தாள். உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டாள். ஏழு மணி ஆனது. ரவி கீழிறங்கி வந்தான். எதுவும் பேசாது பாத்ரூமில் புகுந்து கொண்டான். இவள் பீரோவிலிருந்து நூறு ரூபாய் எடுத்து அயர்ன் பண்ணி டேபிளில் வைத்திருந்த அவன் சட்டைப் பாக்கெட்டில் வைத்தாள். ஏனோ அவன் மீது பரிதாபமாக இருந்தது. பாவம் என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். குளித்து விட்டு வந்தவன் அவசரமாக உடையணிந்து கொண்டு வெளியே கிளம்பினான். சாப்பிட்டு போங்க என மெல்லமாய் அங்கை சொன்னதை புறக்கணிக்காது பெயருக்கு டேபிளில் அமர்ந்து இரண்டு இட்லிகளைப் பிட்டு வாயில் போட்டுக் கொண்டு வெளியேறினான். அங்கை அந்நிமிடத்திற்காக காத்திருந்தாள். அவசரமாய் பூட்டை எடுத்துக் கொண்டு கதவைத் தாழிட்டு வெளியேறினாள். 

ஆசிரமத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள். என்றுமில்லாதப் பதட்டம். ஆட்டோ வந்தால் கூட ஏறிப் போய்விடலாம் எனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு நடந்தபடியே ஆசிரமம் வந்து சேர்ந்தாள். பூங்காவிற்கு இடையில் தியானம் செய்யப் போடப்பட்டிருக்கும் திண்டிற்காய் மானின் உருவம் தெரிந்தது. அருகில் செல்ல செல்ல இரண்டு மானுடல்களைப் பார்த்தாள். அவள் வாசனையை உணர்ந்த முதல் மான் திரும்பிப் பார்த்து அவளை நோக்கி ஓடிவந்து உரசியது. அதன் கழுத்தைத் தடவிக் கொண்டே இரண்டாவது மானைப் பார்த்தாள். அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அந்தப் புள்ளிமானுடலுக்கு மனித முகம். மெல்ல எழுந்து வந்து அவளைப் பார்த்து புன்னகைத்து என் பெயர் சங்கமேஸ்வரன் என்றான். அங்கையற்கன்னிக்கு உள்ளே ஏதோ உடைந்தது. அவனை ஆரத் தழுவிக் கொண்டு, கண்களில் நீர் வழியத் தேம்பியபடி ஏன் இத்தனைத் தாமதம் என்றாள்.

- மேலும்


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...