Tuesday, March 28, 2017

இரு வேட்டைகள்


ஆதிவாசி மற்றும் பழங்குடி மரபுகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஒட்டி சமீபமாய் இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். இரண்டின் தலைப்பும் வேட்டை தான்.

முதல் வேட்டைக் கதை மகாஸ்வேதா தேவி எழுதியது. குருடா மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஓராவ்ன் என்கிற பழங்குடி சமூகத்தின் கதை இது. உயரமும் வாளிப்பும் தனித்த அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட மேரி என்கிறப் பெண்ணைப் பற்றிய கதை. மேரி, ஓராவ்ன் தாய்க்கும் ஆஸ்திரேலியத் தகப்பனிற்கும் பிறந்தவள். சுதந்திரத்திற்கு முன்பு இம்மலைப் பிரதேசங்களில் வசித்த அந்நியர்கள், உயரமான மரங்களை வளர்த்ததோடு பழங்குடிப் பெண்களின் வயிற்றில் கருவையும் வளர்த்தார்கள். டிக்ஸனின் பங்களாவில் வேலை பார்த்து வந்த மேரியின் அம்மா இப்படித்தான் கருவுற்றாள். பிறகு அந்த பங்களாவை வாங்கிய ராஞ்சியை சேர்ந்த பிரசாத்ஜியிடம் அம்மாவும் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.

மேரி அப்பிராந்தியத்தின் பேரழகி. துடுக்கானவள். பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஆளாய் கச்சிதமாய் செய்து முடிப்பவள். அவளின் வீரமும் நறுக்குத் தெரிந்த பேச்சும் அவளின் பின்னால் சுற்றும் ஆண்களை சற்றுத் தள்ளி இருக்க வைத்தது. மேலும் அவள் உயரத்திற்கு ஓரவ்ன் சமூகத்தில் ஆண் பிள்ளைகளும் இல்லை. 

பிரஸாத்ஜி யின் தோட்டத்தில் விளையும் பழங்கள் காய்கறிகளைப் பறித்து மேரி, பக்கத்திலிருக்கும் தோக்ரி பஜாருக்கு சென்று விற்று வருவாள். அவளின் நேர்மையும் கறாரான வியாபாரமும் பிரஸாத்ஜி க்கு நிறைய பொருளீட்டித் தரும். தோக்ரி பஜாரில் மேரிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ராணியைப் போல் நடந்து கொள்வாள். அவளுக்கான டீ, வெற்றிலை, பீடி எல்லாம் மற்றவர்கள் செலவில் தூள் பறக்கும். ஆனால் ஒருவரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டாள்.மேரிக்கு ஜாலிம் என்றொரு முஸ்லீம் காதலன் இருந்தான். என்றைக்கு இருவரிடம் நூறு ரூபாய் சேர்கிறதோ அன்று திருமணம் செய்து கொள்வார்கள்.

 ஓரவ்ன் சமூகத்தினருக்கு மேரி, ஒரு முஸல்மானை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லைதான் என்றாலும் அவள் முழுமையாய் அச்சமூகத்தை சார்ந்தவள் கிடையாது. தவறான உறவில் பிறந்தவள் என்பதால் ஓரவ்ன் சமூகம் அவளைத் தன்னுடையவளாய் கருதுவதில்லை. பிரஸாத்தின் ஐம்பது ஏக்கர் நிலத்தில் சால் மரங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும். அப்பகுதியின் மர ஒப்பந்தக் காரனான தஷீல்தார் சிங் பிரசாத்தையும் அவர் மகனையும் ஏமாற்றி மிக மலிவான விலையில் அம்மரங்களை வாங்கிவிடுவான். மரங்களை வெட்டுவதற்கு மிக சல்லிசான கூலியில் ஓரவ்ன் மற்றும் முண்டா சமூகத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் வேலைக்கு அமர்த்திவிடுவான். யாராவது கேள்விகள் கேட்டால் அவர்களை சாராயத்தைக் கொடுத்து மடக்கிவிடுபவன் மேரியைப் பார்த்த உடன் காம வயப்படுகிறான்.

 ஒரு காட்டாற்றைப் போன்ற மேரி, தஷீல்தார் சிங்கை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் ஓரம் தள்ளிவிட்டு போய்கொண்டிருப்பாள். அவனின் காமம் முற்றி எல்லை மீறும்போது கத்தியைக் காட்டி மிரட்டவும் செய்வாள். இருப்பினும் அவன் விடாமல் அவளைத் தொடர்ந்து கொண்டிருப்பான். ஆதிவாசிகளின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் வேட்டை ஒரு முக்கிய அம்சம். ஈட்டி, வில் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளுக்குப் போய் வேட்டையாடி, அங்கேயே அம்மிருகங்களைத் தின்று குடித்து நடனமாடிக் களித்து மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த வேட்டை சடங்கு பனிரெண்டு வருடங்கள் ஆண்களுக்கானது, அதன் பிறகு வரும் ஒரு வருடம்தான் பெண்களுக்கு.

மொத்த பெண்கள் கூட்டமே அந்த ஒரு வருடத்திற்காக ஆவலாய் காத்திருக்கும். இம்முறை பெண்களின் வருடம். ஆண்கள் அவர்கள் முறையில் என்னவெல்லாம் செய்வார்களோ அதை பெண்களும் செய்வார்கள். கண்ணில் தென்படும் பட்சிகள், முள்ளம் பன்றிகள், முயல் என எதையும் அடித்து சுட்டுத் தின்பார்கள். மூக்கு முட்டக் குடிப்பார்கள் பின்பு மாலையில் வீடு திரும்புவார்கள். தஷீல்தாரின் தொடர்ச்சியான அலைச்சல்களுக்குப் பிறகு மேரி அவனை காட்டிற்கு வரச் சொல்வாள். வேட்டை நாளில் தன்னை அவனுக்கு விருந்தாகத் தருவதாகச் சொல்வாள். அவனும் மகிழ்ந்து போய் அவளுக்காகக் காத்திருப்பான்.

மேரி தன் கூட்டத்தினருடன் காட்டிற்குச் சென்று நன்றாகக் குடித்து நிறையத் தின்று, நடனமாடிக் களித்துவிட்டு  தஷீல்தாரை வரச் சொன்ன பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வாள். யூகித்தபடி அவனைக் கொன்றுவிட்டு தன் காதலனைத் தேடிச் செல்வாள். ஒரு பழங்குடிப் பெண் தன் நிலத்தின் ஆதாரங்களை அழிப்பவனைக் கொல்வது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தைக் கொல்வதைப் போலத்தான். என்ன இந்த ஒப்பந்தக்காரன் கொஞ்சம் பெரிய மிருகம். இவனை வேட்டையாடியதன் மூலம் மற்ற நாலு கால் மிருகங்களின் மேல் அவளுக்கிருந்த பயம் முழுமையாய் விலகிவிட்டதாய் கதை முடியும்.

 ஒரு சாகஸக் கதை போலத் தெரிந்தாலும் காட்டின் விவரணைகளும், பழங்குடியினர் வாழ்வு முறைகளும் வாசிக்கப் பரவசத்தை ஏற்படுத்தியது. காட்டின் வாழ்வு மீதும், ஜிப்சி வாழ்க்கை முறையின் மீதும் ஏற்கனவே எனக்கு ஏக்கம் இருப்பதால் இந்தக் கதை அதிகம் பிடித்துப் போனது. வங்கப் படைப்புகளுக்கே உரிய நிலக் காட்சி விவரணைகளும் இயற்கைக் குறிப்புகளாய் மஞ்சள் நிற கிஷ்கிந்தப் பூ, சிவப்புப் பலாச மரங்கள், மஹீவா மரங்கள், ஸால் மரங்கள் போன்ற புதுப் பெயர்களும் இச்சிறுகதையில் இடம்பிடித்திருந்தன.

 0


 இரண்டாவது வேட்டைக் கதை யூமா வாசுகி எழுதியது. கர்நாடகத்தின் கூர்க் சமூகத்தினரைப் பற்றிய கதை. அவர்களின் சடங்குகள், பண்பாட்டு முறைகள் குறித்து விலாவரியாய் இக் கதையில் சொல்லப்பட்டிருக்கும். எனக்கிருக்கும் தற்போதைய மனநிலையில் யாராவது கர்நாடகம், கன்னடம் எனச் சொல்ல வாயெடுத்தாலே ஆஹா எனச் சொல்லிவிடுவேன் போல. திதி படமும் வாசித்துக் கொண்டிருக்கும் கன்னடப் படைப்புகளும் அந்நிலத்தின் மேல் அப்படியொரு வாஞ்சையை உருவாக்கி விட்டிருக்கின்றன. மேலும் குடகு எனக்கு மிகவும் பிடித்த நிலப் பகுதி. கூர்க் என்னால் மறக்கவே முடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது.

ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பெண் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஏமாற்றம்தான் இக்கதை. அத்தை மகளை மணமுடிக்க இயலாமல் போனவனின் துயரமும் அவனை நேசிக்கும் தந்தையின் வெளிப்பாடும் கூர்க் பண்பாட்டுத் தளத்தின் பின்னணியில் கதையாய் எழுதப்பட்டிருக்கும். கதையை விட இதில் விவரிக்கப்பட்டிருக்கும் கூர்க் சடங்குகள் பெரும் வியப்பைத் தந்தன.

கூர்க் சமூகத்தினரின் திருமணச் சடங்குகள் மிகவும் விசேஷமானவை. பறை இசையும் பாரம்பரிய நடனமும் திருமணத்தின் முக்கிய அம்சங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து தாள கதிக்கு ஏற்றார்போல் ஆடவேண்டும். இந்த ஆட்டத்தில் தோற்பது பெரும்பாலும் ஆண் தான். தோற்ற ஆணைப் பெண்கள் கிண்டலடித்துத் துரத்துவார்கள். நிகழ்வின் அடுத்த பிரதானமான அம்சம் குடிதான். எவ்வளவு ரூபாய்க்கு மதுவகைகளை வாங்குகிறார்களோ அதை வைத்தே திருமணத்தின் பிரம்மாண்டம் அளக்கப்படும். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அந்நாளில் எல்லோரும் தவறாமல் குடிப்பார்கள். குடித்து மயங்கி விழும் சிறுவர்களை அளவாய் குடித்த அம்மாக்கள் ஓரமாய் படுக்க வைப்பார்கள்.

பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது, எல்லா மதுவகைகளையும் ஒரு பெரிய கலனில் கொட்டி காக் டெயில் தயாரிப்பது, ஒரு பாத்திரத்தில் அதை மொண்டு சகலருக்கும் ஊற்றுவது என சகலவிதமான மதுக் கொண்டாட்டங்களும் திருமணத்தில் உண்டு. மேலதிகமாய் பெண்ணை திருமண வீட்டிலிருந்து ஐம்பது அடி தள்ளி நிற்க வைத்து விடுவார்கள். மாப்பிள்ளையின் தம்பி அப் பெண்ணை வீட்டிற்குள் விடக் கூடாது. பெண்ணும் அவளது தோழியும் எப்படியாவது மாப்பிள்ளையின் தம்பியை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைய வேண்டும். மாப்பிள்ளையின்  தம்பிக்குத் துணையாய் அவன் அம்மா, பெண்ணை வீட்டிற்குள் விட்டுவிடாதே நம்மைப் பிரித்துவிடுவாள் என எச்சரித்துக் கொண்டே இருப்பாள். பெண்ணின் தாய் தந்தையரோ வழி மறிப்பவனுக்கு விதம் விதமான மதுவகைகளை புகட்டி, மது ஊற்றி அவனை மயக்கமடையச் செய்து பெண்ணை வீட்டிற்கு உள்ளே விட வேண்டும். இந்த சடங்கு கூர்க் சமூகத்தில் வெகு பிரசித்தம். கதையில் இச்சடங்கு மிகப் பிரமாதமாய் எழுதப்பட்டிருக்கும்.

 கூர்க் சமூகமும் வேட்டைச் சமூகம்தான். இடையில் கத்தி கொண்ட, கருப்பு நிற பாரம்பரிய உடையணிவார்கள். வாக்குத் தவறாமை, நேர்மை போன்றவை அவர்களின் அடிப்படை இயல்புகள்.  வளர்ந்த கூர்க் சமூகம் மெல்ல தன் பழமைகளிலிருந்து விடுபட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாய் நகரப் பொது வாழ்விற்கு தங்களை பழக்கிக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடாய் ஷகீலா,  தன் மாமன் மகனான பொனாச்சாவை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல்  தனக்குப் பிடித்த இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் அண்ணனான உஸ்மானிக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் ஷகீலாவின் பெற்றோர்கள் மீறுகிறார்கள். அந்நிகழ்விற்கு செல்லும் , தன்னை எப்போதுமே ஒரு கூர்க் ஆக மட்டுமே உணரும் உஸ்மானி என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 

நல்ல அனுபவத்திற்கு இரண்டு கதைகளும் உத்திரவாதம்.


 நன்றி :  அழியாச்சுடர்கள் தளம்.

வேட்டை கதை 

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...