Thursday, March 30, 2017

முதல் சினிமாசினிமா எழுத்தாளனாய் என்னுடைய முதல் அறிமுகம் மலையாளத்தில் இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லைதாம். ஆனால் அது நிகழ்ந்தே விட்டது. நண்பன் பினு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோட்டையம் என்கிற மலையாளப் படத்திற்கு எழுதியிருக்கிறேன். கனடாவில் வசிக்கும் சஜித் தயாரிக்கும் படமிது. 'என்ஆர்ஐ ப்ரடியூசர்' என்கிற பதமெல்லாம் சஜித்திற்கு பொருந்தாது. அவரும் என்னைப் போல மாத சம்பளத்திற்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர். சினிமா மீதிருக்கும் ஆர்வம் மற்றும் பினு மீதிருக்கும் நம்பிக்கை NITEVOX எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கக் காரணமாக இருக்கலாம். இந்நிறுவனத்தில் நானும் ஒரு அங்கம். 

எங்களின் முதல் படம் 30 நிமிடக் குறும்படமான Road Song. இதில் வரும் தமிழ் பகுதியை நான் எழுதினேன். போர்ச்சுகல் நாட்டிலிருந்து பினுவும், கனடாவிலிருந்து சஜித்தும், துபாயிலிருந்து நானுமாய் மூன்று தேசங்களிலிருந்தபடியே இந்தப் படத்தை உருவாக்கினோம். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ரோட் சாங்' தந்த நம்பிக்கையில் என்னுடைய இருபது வெள்ளைக்காரர்கள் குறு நாவலை திரைக்கதையாக எழுதினோம். பினுவிற்கு இந்த நாவலின் மீதும் அதன் உலகளாவியக் கட்டமைப்பின் மீதும் பைத்தியம் இருந்தது. எப்படியாவது திரையில் இருபது வெள்ளைக்காரர்களைக் கொண்டு வந்துவிட வேண்டுமென இரண்டு வருடங்கள் அலைந்தான். பணம் இருபது வெள்ளைக்காரர்களை காத்திருக்க வைத்திருக்கிறது. கோட்டையம் எங்களைக் கரைசேர்த்தால் அடுத்த படம் இருபது வெள்ளைக்காரர்கள்தாம்.

 கோட்டையத்தின் மூலக் கதை கஃபூரினுடையது. சஜித்தும் பினுவும் ஒருவருடமாக இக்கதையை வேறு வேறு வடிவில் எழுதிப்பார்த்து, பணம் கிடைக்கும் நேரத்தில் காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இறுதி வடிவத்திற்கும் முழுமை செய்வதற்குமாய் என்னை அழைத்தார்கள். நானும் பினுவும் சஜித்தும் சேர்ந்து இத் திரைக்கதையை முழுமை செய்தோம். பத்து இரவுகளை இத்திரைப்படத்திற்காய் அர்ப்பணித்தேன். நிச்சயம் புது அனுபவம்தான். சினிமா வேலை ஒன்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தது போல அத்தனை ஆடம்பரமானதில்லை. முதல் மூன்று நாட்களிலேயே விழி பிதுங்கியது. மிக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் உழைக்க முடியவில்லை. இரவு முழுக்க தூங்காமல் கதையிலோ எழுத்திலோ விழுந்து கிடக்க முடியவில்லை. நான்கு நாட்கள் குருவாயூரில் இருக்கும் பினுவின் புராதன வீட்டிலும், நான்கு நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலும், இரண்டு நாட்கள் பினுவின் குடிலிலுமாய் அமர்ந்து எழுதி முடித்தோம்.

எங்கள் மூவருக்குமிடையே இருக்கும் அலைவரிசை ஒற்றுமையால் கறாராய் கருத்துகளை முன் வைக்கவும், நிறைய விஷயங்களை களையவும் முடிந்தது. மிக சுதந்திரமாய் இயங்கினேன். இதுவரைக்கும் ஒரு படத்திற்கு மூன்று மொழிகளில் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படத்திற்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்தினோம். திரைப்பட உருவாக்கத்தில் வேறு சில சாகசங்களையும் செய்திருக்கிறோம் அவற்றைப் பிறகு எழுதுகிறேன். ஸ்க்ரிப்ட் அளவில் படம் பிரமாதமாய் வந்திருக்கிறது. ஒரு சினிமாவின் மற்ற அம்சங்களும் சரியாக சேர்ந்தால் நிச்சயம் கோட்டையம் வெற்றி பெறும்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றையே நம்பி அசுரத்தனமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கோட்டையம் குழுவினற்கு வாழ்த்துகள். படம் வெளிவந்த பிறகு விரிவாய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, March 29, 2017

வேசி மகன்


'Bastard son' - Game of Thrones தொடரில் புழங்கும் சொல் இது. முறையான திருமண உறவின் வழியாய் பிறக்காத குழந்தைகளை இப்படி அழைக்கிறார்கள். பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தாலும், ராஜாவின் மகன்களாக இருந்தாலும், இழிவும் புறக்கணிப்பும் அக்குழந்தைகளின் பிறப்பிலிருந்து தொடரும். தந்தையின் பெயரை முதல் பெயருடன் சேர்த்துக் கொள்ள அனுமதி கிடையாது. அரசாளும் உரிமையும் கிடையாது, அவர்களின் இலட்சினையை அணிந்து கொள்ளவும் அனுமதி கிடைக்காது.

 மிகத் துல்லியமான விவரணைகளோடு கட்டியெழுப்பிய இன்னொரு உலகத்தில் Game of Thrones கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் Westeros என அழைக்கப்படும் ஒரு கண்டத்தில் நிகழ்கின்றன. இக் கண்டம் ’செவன் கிங்க்டம்ஸ்’ என அழைக்கப்படும் ஏழு ராஜ்ஜியங்களின் ஆளுகைக்கு உட்பட்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்கள் North, Iron Islands, Riverlands, Vale, Westerlands, Stormlands, Reach, Crownlands, and Dorne ஆகிய ஒன்பது நிலப்பிரதேசங்களைக் கொண்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்களையும் ஆளும் அரசன் அமரும் இடம் கிங்க்ஸ் லேண்டிங் . அவரது இருக்கை ஐயர்ன் த்ரோன். இந்த இரும்பு இருக்கையைக் கைப்பற்ற இந்த ஏழு ராஜ்ஜியங்களுக்கி டையே  நிகழும் போட்டியும் போர்களும்தான் பிரதானக் கதை. மற்றபடி எண்ணிடலங்காக் கிளைக் கதைகளும் உள்ளன. அவை குறித்து மெதுவாய் எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த பாஸ்டர்ட் விவகாரத்தைக் கவனிப்போம்.


 ஜான் ஸ்நோ, நெட் ஸ்டார்க் கின் பாஸ்டர்ட் மகன். அவனுடைய தாய் யார் என்பது ரகசியமாகவே இருக்கும். நார்த் பகுதியின் அடையாளம் - உறை பனி எனவே அப்பகுதியின் பாஸ்டர்ட் மகன்களுக்கு ஸ்நோ தந்தைப் பெயராக இருக்கும். இன்னொரு உதாரணம் ரூஸ் போல்டன். அவரின் பாஸ்டர்ட் மகன் பெயர் ராம்ஸி ஸ்நோ.


 காட்டுவாசிகள் மற்றும் பனிப்பேய்களிடமிருந்து நாட்டைக் காக்க - மிக உயரமான சுவர்கள் நாட்டின் எல்லையில் எழுப்பப்பட்டிருக்கும். அதைக் காக்கும் வீரர்கள் ’நைட்ஸ் வாட்ச்’ எனப்படுவர். இரவு பகலாக காவல் வேலைக்கு தன்னை அர்ப்பணிக்கும் இவ்வீரர்களை ’ப்ரதர்ஸ்’ அல்லது ’க்ரோ’ எனும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த காவல் பணிக்கு ஜான் ஸ்நோ தந்தையால் அனுப்பி வைக்கப்படுவான். தானொரு ’பாஸ்டர்ட்’ என்பதில் அவனுக்கு ஆழமான வருத்தங்களும் காயங்களும் உண்டு. நெட் ஸ்டார்க்கின் மனைவி லேடி ஸ்டார்க் ஜானை அங்கீகரிப்பதில்லை. ஆனால் ஜானின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்  அவன்  மீது அன்பு உண்டு.  நைட்ஸ் வாட்சில் பல்வேறு இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் இடையில் ஜான் தன்னுடைய வீரத்தாலும் தியாகத்தாலும் மேலெழுந்து வருகிறான். ஒரு கட்டத்தில் நைட்ஸ் வாட்சின் தலைமை பொறுப்பையும் ஏற்கிறான். இதயத்தில் அன்புமிக்க ஜான் தன் கருணையால் செத்தும் மீண்டும் பிழைக்கிறான். புறக்கணிப்பும் அவமானமும் ஒரு மனிதனை நாயகனாக மாற்றும் என்பதற்கான உதாரணம் ஜான்.


இதற்கு நேரெதிரான கதாபாத்திரம் ராம்ஸி. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட அவமானங்கள் ராம்ஸி ஸ்நோவை குரூரம் மிக்கவனாய் மாற்றியிருக்கும். ராம்ஸியின் வீரத்திற்கான பரிசாய் ரூஸ் போல்டன் அவனைத் தன்னுடைய மகனாய் அறிவிப்பார். ராம்ஸி ஸ்நோ - ராம்ஸி போல்டன் என அழைக்கப்படுவான். மேலும் துயரத்தில் அலைக்கழியும் பேரழகி சன்ஸா ஸ்டார்க்கை திருமணமும் செய்து வைப்பான். ஆனாலும் ராம்ஸியின் வெறியும் கொலைத் தாண்டவங்களும் ஒரு முடிவிற்கு வராது. ’கோல்ட் ஹார்ட்டட் பாஸ்டர்ட்’ என நம்மை முணுமுணுக்க வைக்கும் அளவிற்கு அவன் வெறியாட்டமிருக்கும். க்ரேஜாய்  , சன்ஸா ஆகியோருக்கு அவன் இழைக்கும் கொடுமைகளைப் பார்க்க முடியாது. தந்தைக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்ததால் தன் உரிமையைக் காத்துக் கொள்ள, தந்தையையும் அவரின் மனைவியையும் அப்போதுதான் பிறந்த குழந்தையையும் கொல்வான்.

 புறக்கணிப்பின் இருவேரு முகங்கள் இவை.

 இத் தொடரின் மிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டிரியன் லானிஸ்டர் எனும் குள்ளர். அபாரமான நகைச்சுவையும் ஆழமான அறிவும் கொண்டாட்டமான வாழ்க்கை முறையும் அடியாழத்தில் மிக நேர்மையும் கொண்ட ஒரு கதாபாத்திரம். அவருக்கும் ஜான் ஸ்நோவிற்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் இது.

 Tyrion Lannister: "And you, you're Ned Stark's bastard, aren't you? Did I offend you? Sorry. You are the bastard, though."

Jon Snow: "Lord Eddard Stark is my father."

Tyrion Lannister: "And Lady Stark is not your mother, making you...the bastard. Let me give you some advice, bastard. Never forget what you are. The rest of the world will not. Wear it like armor, and it can never be used to hurt you."

Jon Snow: "What the hell do you know about being a bastard?"

Tyrion Lannister: "All dwarves are bastards in their fathers' eyes."

 புறக்கணிப்பை பிறப்பிலிருந்து எதிர்கொள்ளும் குள்ளர், இன்னொரு புறக்கணிப்பிற்கு ஆறுதல் கூறும் பகுதி இது. கேம் ஆப் த்ரோனின் திரையாக்கத்தை விட திரைக்கதைதான் எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. இத்தொடரின் வசனங்களை எத்தனை பேர் கொண்ட எழுதுகிறதோ எனத் தெரியவில்லை. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் அவ்வளவு ஆழத்தையும் விசாலத்தையும் கொண்டுள்ளது.

‘பாஸ்டர்ட் ‘  அவமானங்களைச் சித்தரிக்கும் இதே கதையில் இன்னொரு மீறலும் இருக்கும். டோர்ன் என அழைக்கப்படும் பகுதி நாகரீக வளர்ச்சியின் உச்சம் பெற்ற பகுதி. அங்கு இந்த பிறப்பின் அடிப்படையிலான மரியாதைகள் ஒரு பொருட்டில்லை. பாஸ்டர்களை காதலின் தீவிரத்தால் பிறந்தவர்கள் என அடையாளப்படுத்தும் போக்கும் டோர்ன் நகரத்தில் உண்டு. டோர்ன் இளவரசியான எல்லாரியா சாண்ட் ஒரு பாஸ்டர்ட். அவளுக்குப் பிறந்த எட்டு மகள்களும் பாஸ்டர்ட்கள் தாம். அந்நகரத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கும் பிறப்பு ஒரு பொருட்டு கிடையாது.

 இப்படி ஒரே கதையில் பல்வேறு திறப்புகளை நிகழ்த்துவதால் தான் கேம் ஆஃப் த்ரோன் மிக முக்கியமான தொடராகிறது. நேற்று பகிர்ந்து கொண்ட மகாஸ்வேதாதேவியின் வேட்டைக் கதையில் வரும் மேரியும் ஒரு பாஸ்டர்ட் மகள். அவளுக்கு நேரிடும் புறக்கணிப்பை வாசிக்கும் போது கேம் ஆப் த்ரோனின் வேசி மகன்/ள் புறக்கணிப்பும் நினைவிற்கு வந்ததால் இங்கே எழுதிப் பார்த்தேன்.

 சில விஷயங்கள் காலம், நிலப்பிரதேசம், நிஜம், புனைவு போன்றவற்றைக் கடந்ததாய் இருக்கின்றன.

Tuesday, March 28, 2017

இரு வேட்டைகள்


ஆதிவாசி மற்றும் பழங்குடி மரபுகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஒட்டி சமீபமாய் இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். இரண்டின் தலைப்பும் வேட்டை தான்.

முதல் வேட்டைக் கதை மகாஸ்வேதா தேவி எழுதியது. குருடா மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஓராவ்ன் என்கிற பழங்குடி சமூகத்தின் கதை இது. உயரமும் வாளிப்பும் தனித்த அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட மேரி என்கிறப் பெண்ணைப் பற்றிய கதை. மேரி, ஓராவ்ன் தாய்க்கும் ஆஸ்திரேலியத் தகப்பனிற்கும் பிறந்தவள். சுதந்திரத்திற்கு முன்பு இம்மலைப் பிரதேசங்களில் வசித்த அந்நியர்கள், உயரமான மரங்களை வளர்த்ததோடு பழங்குடிப் பெண்களின் வயிற்றில் கருவையும் வளர்த்தார்கள். டிக்ஸனின் பங்களாவில் வேலை பார்த்து வந்த மேரியின் அம்மா இப்படித்தான் கருவுற்றாள். பிறகு அந்த பங்களாவை வாங்கிய ராஞ்சியை சேர்ந்த பிரசாத்ஜியிடம் அம்மாவும் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.

மேரி அப்பிராந்தியத்தின் பேரழகி. துடுக்கானவள். பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஆளாய் கச்சிதமாய் செய்து முடிப்பவள். அவளின் வீரமும் நறுக்குத் தெரிந்த பேச்சும் அவளின் பின்னால் சுற்றும் ஆண்களை சற்றுத் தள்ளி இருக்க வைத்தது. மேலும் அவள் உயரத்திற்கு ஓரவ்ன் சமூகத்தில் ஆண் பிள்ளைகளும் இல்லை. 

பிரஸாத்ஜி யின் தோட்டத்தில் விளையும் பழங்கள் காய்கறிகளைப் பறித்து மேரி, பக்கத்திலிருக்கும் தோக்ரி பஜாருக்கு சென்று விற்று வருவாள். அவளின் நேர்மையும் கறாரான வியாபாரமும் பிரஸாத்ஜி க்கு நிறைய பொருளீட்டித் தரும். தோக்ரி பஜாரில் மேரிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ராணியைப் போல் நடந்து கொள்வாள். அவளுக்கான டீ, வெற்றிலை, பீடி எல்லாம் மற்றவர்கள் செலவில் தூள் பறக்கும். ஆனால் ஒருவரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டாள்.மேரிக்கு ஜாலிம் என்றொரு முஸ்லீம் காதலன் இருந்தான். என்றைக்கு இருவரிடம் நூறு ரூபாய் சேர்கிறதோ அன்று திருமணம் செய்து கொள்வார்கள்.

 ஓரவ்ன் சமூகத்தினருக்கு மேரி, ஒரு முஸல்மானை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லைதான் என்றாலும் அவள் முழுமையாய் அச்சமூகத்தை சார்ந்தவள் கிடையாது. தவறான உறவில் பிறந்தவள் என்பதால் ஓரவ்ன் சமூகம் அவளைத் தன்னுடையவளாய் கருதுவதில்லை. பிரஸாத்தின் ஐம்பது ஏக்கர் நிலத்தில் சால் மரங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும். அப்பகுதியின் மர ஒப்பந்தக் காரனான தஷீல்தார் சிங் பிரசாத்தையும் அவர் மகனையும் ஏமாற்றி மிக மலிவான விலையில் அம்மரங்களை வாங்கிவிடுவான். மரங்களை வெட்டுவதற்கு மிக சல்லிசான கூலியில் ஓரவ்ன் மற்றும் முண்டா சமூகத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் வேலைக்கு அமர்த்திவிடுவான். யாராவது கேள்விகள் கேட்டால் அவர்களை சாராயத்தைக் கொடுத்து மடக்கிவிடுபவன் மேரியைப் பார்த்த உடன் காம வயப்படுகிறான்.

 ஒரு காட்டாற்றைப் போன்ற மேரி, தஷீல்தார் சிங்கை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் ஓரம் தள்ளிவிட்டு போய்கொண்டிருப்பாள். அவனின் காமம் முற்றி எல்லை மீறும்போது கத்தியைக் காட்டி மிரட்டவும் செய்வாள். இருப்பினும் அவன் விடாமல் அவளைத் தொடர்ந்து கொண்டிருப்பான். ஆதிவாசிகளின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் வேட்டை ஒரு முக்கிய அம்சம். ஈட்டி, வில் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளுக்குப் போய் வேட்டையாடி, அங்கேயே அம்மிருகங்களைத் தின்று குடித்து நடனமாடிக் களித்து மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த வேட்டை சடங்கு பனிரெண்டு வருடங்கள் ஆண்களுக்கானது, அதன் பிறகு வரும் ஒரு வருடம்தான் பெண்களுக்கு.

மொத்த பெண்கள் கூட்டமே அந்த ஒரு வருடத்திற்காக ஆவலாய் காத்திருக்கும். இம்முறை பெண்களின் வருடம். ஆண்கள் அவர்கள் முறையில் என்னவெல்லாம் செய்வார்களோ அதை பெண்களும் செய்வார்கள். கண்ணில் தென்படும் பட்சிகள், முள்ளம் பன்றிகள், முயல் என எதையும் அடித்து சுட்டுத் தின்பார்கள். மூக்கு முட்டக் குடிப்பார்கள் பின்பு மாலையில் வீடு திரும்புவார்கள். தஷீல்தாரின் தொடர்ச்சியான அலைச்சல்களுக்குப் பிறகு மேரி அவனை காட்டிற்கு வரச் சொல்வாள். வேட்டை நாளில் தன்னை அவனுக்கு விருந்தாகத் தருவதாகச் சொல்வாள். அவனும் மகிழ்ந்து போய் அவளுக்காகக் காத்திருப்பான்.

மேரி தன் கூட்டத்தினருடன் காட்டிற்குச் சென்று நன்றாகக் குடித்து நிறையத் தின்று, நடனமாடிக் களித்துவிட்டு  தஷீல்தாரை வரச் சொன்ன பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வாள். யூகித்தபடி அவனைக் கொன்றுவிட்டு தன் காதலனைத் தேடிச் செல்வாள். ஒரு பழங்குடிப் பெண் தன் நிலத்தின் ஆதாரங்களை அழிப்பவனைக் கொல்வது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தைக் கொல்வதைப் போலத்தான். என்ன இந்த ஒப்பந்தக்காரன் கொஞ்சம் பெரிய மிருகம். இவனை வேட்டையாடியதன் மூலம் மற்ற நாலு கால் மிருகங்களின் மேல் அவளுக்கிருந்த பயம் முழுமையாய் விலகிவிட்டதாய் கதை முடியும்.

 ஒரு சாகஸக் கதை போலத் தெரிந்தாலும் காட்டின் விவரணைகளும், பழங்குடியினர் வாழ்வு முறைகளும் வாசிக்கப் பரவசத்தை ஏற்படுத்தியது. காட்டின் வாழ்வு மீதும், ஜிப்சி வாழ்க்கை முறையின் மீதும் ஏற்கனவே எனக்கு ஏக்கம் இருப்பதால் இந்தக் கதை அதிகம் பிடித்துப் போனது. வங்கப் படைப்புகளுக்கே உரிய நிலக் காட்சி விவரணைகளும் இயற்கைக் குறிப்புகளாய் மஞ்சள் நிற கிஷ்கிந்தப் பூ, சிவப்புப் பலாச மரங்கள், மஹீவா மரங்கள், ஸால் மரங்கள் போன்ற புதுப் பெயர்களும் இச்சிறுகதையில் இடம்பிடித்திருந்தன.

 0


 இரண்டாவது வேட்டைக் கதை யூமா வாசுகி எழுதியது. கர்நாடகத்தின் கூர்க் சமூகத்தினரைப் பற்றிய கதை. அவர்களின் சடங்குகள், பண்பாட்டு முறைகள் குறித்து விலாவரியாய் இக் கதையில் சொல்லப்பட்டிருக்கும். எனக்கிருக்கும் தற்போதைய மனநிலையில் யாராவது கர்நாடகம், கன்னடம் எனச் சொல்ல வாயெடுத்தாலே ஆஹா எனச் சொல்லிவிடுவேன் போல. திதி படமும் வாசித்துக் கொண்டிருக்கும் கன்னடப் படைப்புகளும் அந்நிலத்தின் மேல் அப்படியொரு வாஞ்சையை உருவாக்கி விட்டிருக்கின்றன. மேலும் குடகு எனக்கு மிகவும் பிடித்த நிலப் பகுதி. கூர்க் என்னால் மறக்கவே முடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது.

ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பெண் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஏமாற்றம்தான் இக்கதை. அத்தை மகளை மணமுடிக்க இயலாமல் போனவனின் துயரமும் அவனை நேசிக்கும் தந்தையின் வெளிப்பாடும் கூர்க் பண்பாட்டுத் தளத்தின் பின்னணியில் கதையாய் எழுதப்பட்டிருக்கும். கதையை விட இதில் விவரிக்கப்பட்டிருக்கும் கூர்க் சடங்குகள் பெரும் வியப்பைத் தந்தன.

கூர்க் சமூகத்தினரின் திருமணச் சடங்குகள் மிகவும் விசேஷமானவை. பறை இசையும் பாரம்பரிய நடனமும் திருமணத்தின் முக்கிய அம்சங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து தாள கதிக்கு ஏற்றார்போல் ஆடவேண்டும். இந்த ஆட்டத்தில் தோற்பது பெரும்பாலும் ஆண் தான். தோற்ற ஆணைப் பெண்கள் கிண்டலடித்துத் துரத்துவார்கள். நிகழ்வின் அடுத்த பிரதானமான அம்சம் குடிதான். எவ்வளவு ரூபாய்க்கு மதுவகைகளை வாங்குகிறார்களோ அதை வைத்தே திருமணத்தின் பிரம்மாண்டம் அளக்கப்படும். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அந்நாளில் எல்லோரும் தவறாமல் குடிப்பார்கள். குடித்து மயங்கி விழும் சிறுவர்களை அளவாய் குடித்த அம்மாக்கள் ஓரமாய் படுக்க வைப்பார்கள்.

பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது, எல்லா மதுவகைகளையும் ஒரு பெரிய கலனில் கொட்டி காக் டெயில் தயாரிப்பது, ஒரு பாத்திரத்தில் அதை மொண்டு சகலருக்கும் ஊற்றுவது என சகலவிதமான மதுக் கொண்டாட்டங்களும் திருமணத்தில் உண்டு. மேலதிகமாய் பெண்ணை திருமண வீட்டிலிருந்து ஐம்பது அடி தள்ளி நிற்க வைத்து விடுவார்கள். மாப்பிள்ளையின் தம்பி அப் பெண்ணை வீட்டிற்குள் விடக் கூடாது. பெண்ணும் அவளது தோழியும் எப்படியாவது மாப்பிள்ளையின் தம்பியை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைய வேண்டும். மாப்பிள்ளையின்  தம்பிக்குத் துணையாய் அவன் அம்மா, பெண்ணை வீட்டிற்குள் விட்டுவிடாதே நம்மைப் பிரித்துவிடுவாள் என எச்சரித்துக் கொண்டே இருப்பாள். பெண்ணின் தாய் தந்தையரோ வழி மறிப்பவனுக்கு விதம் விதமான மதுவகைகளை புகட்டி, மது ஊற்றி அவனை மயக்கமடையச் செய்து பெண்ணை வீட்டிற்கு உள்ளே விட வேண்டும். இந்த சடங்கு கூர்க் சமூகத்தில் வெகு பிரசித்தம். கதையில் இச்சடங்கு மிகப் பிரமாதமாய் எழுதப்பட்டிருக்கும்.

 கூர்க் சமூகமும் வேட்டைச் சமூகம்தான். இடையில் கத்தி கொண்ட, கருப்பு நிற பாரம்பரிய உடையணிவார்கள். வாக்குத் தவறாமை, நேர்மை போன்றவை அவர்களின் அடிப்படை இயல்புகள்.  வளர்ந்த கூர்க் சமூகம் மெல்ல தன் பழமைகளிலிருந்து விடுபட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாய் நகரப் பொது வாழ்விற்கு தங்களை பழக்கிக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடாய் ஷகீலா,  தன் மாமன் மகனான பொனாச்சாவை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல்  தனக்குப் பிடித்த இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் அண்ணனான உஸ்மானிக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் ஷகீலாவின் பெற்றோர்கள் மீறுகிறார்கள். அந்நிகழ்விற்கு செல்லும் , தன்னை எப்போதுமே ஒரு கூர்க் ஆக மட்டுமே உணரும் உஸ்மானி என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 

நல்ல அனுபவத்திற்கு இரண்டு கதைகளும் உத்திரவாதம்.


 நன்றி :  அழியாச்சுடர்கள் தளம்.

வேட்டை கதை 

Monday, March 27, 2017

உலகப் பெண்களின் துயர் - தண்ணீர்


என்னுடைய இருபதுகளில் தண்ணீர் நாவலை முதன்முறையாய் வாசித்தேன். பிறகு அவ்வப்போது - வேறு புத்தகங்கள் வாசிக்க கைவசம் இல்லாத பொழுது - அதன் சில பக்கங்களை வாசிப்பதுண்டு. மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட, மிக மிக சன்னமான மொழியில் சொல்லப்பட்ட இந் நாவலுக்குக் காவியத் தன்மை இருப்பதாய் எண்ணிக் கொள்வேன். நேற்று மிக நிதானமாகவும் கவனமாகவும் தண்ணீரை வாசித்துப் பார்த்தேன். இதன் கச்சிதத் தன்மை இன்னமும் அதே வியப்பைத் தருகிறது.

ஜமுனா, சாயா, டீச்சரம்மா என இந்நாவலில் வரும் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களும், நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையே கிடந்து அல்லாடுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த, சவால்கள் நிரம்பிய மாநகர வாழ்வை எதிர் கொள்ளும் இப்பெண்கள், உறவுகளாலும் குதறியெடுக்கப்படுகிறார்கள். இதே சாதாரணப் பெண்கள் அத்தனை துக்கத்தையும் அழுதுத் தீர்த்து, அழுந்தத் துடைத்து எறிந்து, நாளைப் பிரச்சினையை நாளை பார்த்துக் கொள்ளலாம் இன்றை வாழ்வோம் என இன்னும் அதிக நெஞ்சுரத்தோடு முன் நகர்கிறார்கள். எந்த மொழியில் இந் நாவலை மொழிபெயர்த்தாலும் அம் மக்களால் இது எங்களின் கதை என சுவீகரித்துக் கொள்ளப்படும். உழைக்கும் பெண்களின் துயர், உலகம் முழுக்க ஒன்றாகத்தானே இருக்கிறது.

 இந்த முறை வாசிக்கும்போது வரிகளுக்கிடையில் பொதிந்து வைத்திருந்த அர்த்தம் ஒன்று புதிதாய் புலப்பட்டது. ஜமுனா, சாயாவைப் பார்க்க அவளின் விடுதிக்குச் சென்றிருப்பாள். ஆரம்பத்தில் ஜமுனாவைக் கடிந்து கொள்பவள், அவளின் மகன் முரளி பற்றிப் பேச்சு வந்ததும் உடைந்து விம்முவாள். ஆறுதலாய் ஜமுனா அவளை அணைக்க முற்படும்போது, சாயா சட்டென்று ஜமுனாவை உதறுவாள். தப்பாக எடுத்துக் கொள்ளாதே இந்த மாதிரி இடத்தில் நாம் கட்டிக் கொண்டால் கூட சிலருக்கு வேறு மாதிரிதான் தோன்றும் என்பாள். இத்தனைக்கும் அது ஒரு பெண்கள் விடுதி. இந்த வரியின் யதார்த்த குரூரம் பயங்கரமாக இருக்கிறது. எழுபதுகளில் பெண்ணும் பெண்ணும் அணைத்துக் கொள்வதைக் கூட கீழ்மையாகப் பார்க்கும் பார்வை சக பெண்களுக்கே இருந்திருக்கிறது.

 பெண்ணுடல் மீது ஆண் செலுத்தும் அதிகாரம், அரசின் மெத்தனம், கடமையைச் செய்ய மறுக்கும் அதிகாரிகள், அரசுப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்தக்காரர்களின் ஊழல் என சாமான்யர்கள் வாழ்வின் மீது நிகழும் பல் முனைத் தாக்குதல்களை இந்நாவல் விசிறலாய் சொல்கிறது. கதையின் முதல் பக்கத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்ட மிக நீண்ட தண்ணீர் பஞ்ச அலைவுகளிற்குப் பிறகு பெய்யும் மழை, அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிவாய் இருக்கும் என நாம் எண்ண ஆரம்பிக்கும்போதே எல்லா வீடுகளிலும் வரும் குடிநீரில் சாக்கடைத் தண்ணீர் கலந்திருக்கும். அந்தத் துயரத்தின் அபத்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சாயாவும் ஜமுனாவும் அடைந்திருப்பார்கள். கடவுள் குறித்த ஒரு மெல்லிய கிண்டலோடு அதைத் தாண்டிப் போவார்கள். வாசலில் பாஸ்கர் ராவ் காத்துக் கொண்டிருந்தான் என அந்த அத்தியாயம் முடியும்.

தண்ணீர், மலையாளத்திலும் மிகச் சரியான வரவேற்பைப் பெற்றது. என் மலையாள நண்பர்கள் சிலர், அசோகமித்திரன் குறித்தும் இந் நாவல் குறித்தும் மிக உயர்வாக உரையாடியிருக்கிறார்கள். தமிழ் நாட்டை நேசிக்கும் பால் சக்காரியா உட்பட பல மலையாள எழுத்தாளர்களுக்கும் அசோகமித்திரனின் தண்ணீர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளச் சூழலில் இருக்கும் ஜெயமோகனுக்கும் இது தெரிந்தே இருக்கும். ஒரு எழுத்தாளன் மிகச் சிறப்பாக எழுதினான். பரவலாய் எல்லோராலும் அறியப்பட்டான். விருதுகளைப் பெற்றான். எங்கும் எதற்கும் தன் முதுகை வளைத்துக் கொள்ள விரும்பாது, சுய எள்ளலோடும் புன்சிரிப்போடுமாய் வாழ்வாழ்ங்கு வாழ்ந்து மறைந்தான் என்பதை ஏன் இவர் இப்படித் திரித்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. போகட்டும் அது அவர் பிரச்சினை.

Sunday, March 26, 2017

இடி மின்னல் மழை


இந்நாட்டின் பருவநிலை குறித்தான என் சலிப்புகளை இதேப் பக்கங்களில் எழுதித் தீர்த்திருக்கிறேன். மழைக்கான ஏக்கம் வளைகுடாவாசிகள் அனைவருக்குமே பொதுவானது. இந்த வருடம் இந்நிலை மாறியிருக்கிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து இங்கு மழை பெய்கிறது. கடந்த மூன்று நாட்களாய் இடி மின்னலுடன் மழை சற்று பலமாகவே பெய்கிறது. வழக்கமாய் இரண்டிலிருந்து நான்கு செண்டிமீட்டர் மழை இங்கு பெய்யும். இந்த வருடமோ பத்து செமீ மழையைக் கடந்திருக்கிறோம். ஒரே குதூகலம்தான். ஆனால் இந்நகரம் மழைக்குத் தோதுபட்டதில்லை.இந்த மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. வாகன நெரிசலும் இருமடங்காகிவிடும்.

 வெள்ளிக்கிழமை காலை, தூங்கிக் கொண்டிருந்த பயல்களை எழுப்பி எங்கள் பகுதிக்கு அருகாமையிலிருந்த கார்னீஷில் போய் விளையாடி வந்தோம். நிதானமான மழைத் தூறல், ஊடுருவும் குளிர் காற்று, பாலத்திற்கு அடியில் சன்னமாய் நகரும் நதியின் தோற்றங்களை கொண்ட கார்னீஷ் என இந்நகரம் வேறொரு குளிர் ஐரோப்பிய நகரத்தின் சாயலுக்குத் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. மிக நீண்ட வெயில் காலம், குறுகிய குளிர் காலம் என இரண்டே பருவகாலங்களைக் கொண்ட இந்நாட்டிற்கு மழைக்காலம் என்கிற புதுக்காலமும் வந்தேவிட்டதா என சந்தோஷமாய் பேசிக் கொள்கிறோம். அடுத்த வருடம்தான் தெரியவரும்.

 வெள்ளிக்கிழமை முன்னிரவில் இங்கு நடைபெற்ற ஒரு விழாவிற்கு நண்பர் அசோக்குடன் சென்றேன். பழைய எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவில் மின்னல்கள் பளிச்சிட்டன. மழை வருமோ எனப் பேசிக் கொண்டிருந்தபோதே பெரிய பெரிய தூறல்கள் அதிகமாகி மழை கொட்டத் துவங்கியது. அங்கிருந்து ஷேக் ஸாயித் சாலை வரும்வரை அதே வேகத்தில் மழை கொட்டியது. இவ்வளவு பெரிய மழையை இங்கு வந்து நான் பார்த்ததில்லை. ஒரே நேரத்தில் உற்சாகமும் மெல்லிய பயமும் மனதைக் கவ்வ வாகனத்தை செலுத்தி இடம் வந்து சேர்ந்தேன். நிகழ்வில் குட்டி ரேவதி யை சந்திப்பதுதான் பிரதான நோக்கம். ஆனால் அது நிறைவேறவில்லை. வழக்கமான தமிழ் நிகழ்வு. குழந்தைகளின் நடனம், பாடல்களைக் கேட்பதிலோ பார்ப்பதிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் குதறி எடுக்கும் மேக் அப் முக பெண்களின் வெறும் பாவணை நிரம்பிய அற்பப் பேச்சுகளைத்தான் சகித்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாடுகளில் நிகழும் தமிழர் நிகழ்வுகள் அத்தனையும் இப்படித்தான் இருக்கின்றன. தமிழர்களின் வெகுசன ரசனை அற்ப பாலியல் சமிக்ஞைகளைத் தாண்டி நகரவே இல்லை.

 உள்ளே போய் அமர்ந்த பதினைந்தாவது நிமிடத்தில் வெளியேறினேன். எனக்கும் முன்பு நண்பர் ஆசிப் மீரான் வெளியில் டீ குடித்துக் கொண்டிருந்தார். பார்த்ததும் உற்சாகமாகி அவரை அணைத்துக் கொண்டேன். ஆத்மார்த்தமான உரையாடல் பல வருடங்களுக்குப் பிறகு சாத்தியமானது. தொடர்ந்த நகைச்சுவைகளைக் காணும் தெம்பில்லாமல் அசோக்கும் வெளியே வர, காத்திருந்து குட்டிரேவதியை காணும் மனநிலையை இழந்தோம். ஒன்பது மணிக்கு கிளம்பிவிட்டோம். நம் சூழலில் மட்டும் ஊடக வெளிச்சம் ஏன் சரியான ஆட்களின் மீது விழுவதே இல்லை என அங்கலாய்த்தபடி திரும்பினோம்.

 சனிக்கிழமை கேம் ஆப் த்ரோனின் ஆறாவது சீசனைப் பார்க்கத் துவங்கினேன். இடையில் நிசப்தம் படம் பார்க்காமல் இருப்பது நினைவிற்கு வந்தது. மைக்கேல் அருண் எங்கள் வட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் நிசப்தம் படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். கொரியப் படத்தின் காப்பி என்கிற விமர்சனத்தைப் பார்த்துக் கசந்தேன். நம்மிடம் கதைக்கா பஞ்சம்? இத்தனைக்கும் மைக்கேலைச் சுற்றியும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஏன் கொரியா வரைப் போனார் எனத் தெரியவில்லை. எதற்கும் படத்தை பார்த்துவிடுவோம் என ஆரம்பித்தேன். அரை மணி நேரம் தாக்குப் பிடிக்க முடிந்தது. அவ்வளவுதான். நாயகனுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை. மோசமான இசை, மிகப் பழைய டயலாக்குகள். நிறுத்திவிட்டேன். கைக்காசைப் போட்டு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமா என்கிற பரிதாபம்தான் எஞ்சியது.

 யாக்கை படமும் பார்க்காமல் இருந்தது. நண்பர் லக்‌ஷ்மண் பணிபுரிந்த படம்.நிறைய குறைகள் இருந்தாலும் முழுப் படத்தையும் பார்த்து முடித்தேன். ஸ்வாதியைப் பிடித்திருந்தது. லக்‌ஷ்மணைப் பொறுத்தவரை நல்ல துவக்கம். வெற்றிகளை நோக்கி நகர வாழ்த்துகள். 

தூங்கப் போவதற்கு முன்பு அசோகமித்ரன் குறித்து ஜெயமோகன் பேசிய ஒலிக்குறிப்பைக் கேட்டேன். இழப்பின் வேதனையில் கசந்த பேச்சு என தள்ளிவிட முடியாத அளவிற்கு அப்பேச்சிருந்தது. ஏராளமான தகவல் பிழைகள். அப்பாவிற்கு கார் ஓட்டவே தெரியாது என அசோகமித்ரன் மகனும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜெயமோகனுக்கும் அஞ்சலிக் கட்டுரைகளைக்கும் ஏழாம் பொருத்தம். விஷயத்தைக் கையிலெடுத்திருப்பது மாமல்லன் என்பதால் குறைந்தது பத்து நாளிற்கு வாண வேடிக்கை நிச்சயம். அடுத்த டேப் பில் தண்ணீர் திறந்திருக்கிறது. இன்று வாசித்துவிட்டு நாளை எழுதுகிறேன்.

Friday, March 24, 2017

சாதாரணங்களின் கலைஞன்

நேற்று முன்னிரவு சுவறின் மூலைக்காய் மேக் கைத் திருப்பி வைத்துக் கொண்டு கேம் ஆஃப் த்ரோனில் ஆழ்ந்திருந்தபோது வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அசோகமித்ரனின் மரணத்தை அறிந்து கொண்டேன். வழக்கமாய் எதிர் கொள்ளும் எழுத்தாளர்களின் அகால மரணங்களைப் போல அதிர்ச்சியோ பதட்டமோ இல்லை. கல்யாணச் சாவுதானே. மிகப் பரிதாபகரமான தமிழ் சூழலில் அசோகமித்ரனின் படைப்புகள் மிகச் சரியாய் எல்லோராலும் உள்வாங்கப்பட்டன. எந்த விமர்சகராலும் அவரது படைப்பின் மேன்மை மீது சிறு கீறலைக் கூட ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சூழலில் ஒரு படைப்பாளி பரவலாய் அறியப்பட்டதும் மிகக் குறைவான எதிர்ப்புகளைப் பெற்றதும் இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு அசோகமித்ரனின் படைப்புகள் யாராலும் நெருங்க முடியாததாக இருந்தன. தனிப்பட்ட அளவில் அவர் எளிமையானவராகவும் இருந்தார். கடைசிக் காலங்களில் பிராமணர்களைக் குறித்து ஓரிரு அபிப்பிராயங்களைப் பகிர்ந்து இணையப் பரப்பில் விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டாலும் - தினம் யாரிடமாவது இரண்டு வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளாவிட்டால் அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் கிடையாது எனும் தமிழிணைய சூழலில் இந்த விமர்சனங்கள் ஒன்றுமே கிடையாது - அசோகமித்ரன் அடைந்த புகழ் மீது எந்தக் களங்கமும் ஏற்படவில்லை.

 தனிப்பட்ட முறையில் அசோகமித்ரன் எனக்குப் பிடித்தமானவர். நிறைய கதைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன் அவற்றின் கச்சிதம் குறித்தும் நுணுக்கம் குறித்தும் அறிந்து கொள்ள, ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒன்றிருக்கும். பொதுவாக எனக்கு மிகப் பிடித்த நாவல்களின் நாயக / நாயகிப் பெயர்கள் அப்படியே மனதில் தங்கிப் போகும் ஆனால் அசோகமித்ரன் படைப்புகளைப் பொறுத்தவரை தண்ணீர் நாவலின் ஜமுனா கதாபாத்திரத்தைத் தவிர வேறெந்த கதாபாத்திரப் பெயர்களும் மனதில் இல்லை. அவரின் ஒட்டு மொத்த படைப்புகளிலேயும் பெரிதான நாயக பிம்பங்கள் கிடையாது என்பதே அவரின் தனிச் சிறப்பு. அசோகமித்ரனின் படைப்புலகத்தை இப்படி ஒரு வரியில் சாதாரணங்களின் கலை என்று சொல்லி விட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை ஒரு கூற்றாக வைத்துக் கொள்ளலாம். கும்பல்களில் தனித்து தெரிவதை மட்டுமே கவனித்து வந்த நம் இலக்கிய முகத்தை சற்றே மாற்றியமைத்தவர். இந்த அம்சமே அவரது படைப்புலகத்தின் மீது உடனடியாய் கவனத்திற்கு வரும் விமர்சனம் அல்லது பாராட்டு.

 மரணத்தை தம் படைப்பால் எதிர் கொண்டவர். தமிழில் படைப்பிலக்கியம் உள்ள வரை இவரது பெயரை நீக்கிவிட்டு எவராலும் சிறு குறிப்பைக் கூட எழுதிவிட முடியாது போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளை இந் நாளில் அவசர அவசரமாய் எழுதுவது போலித்தனமானது அல்லது வெறும் மேம்போக்கானது என்பதைப் புரிந்து கொள்கிறேன். வரும் நாட்களில் அசோகமித்ரனின் கதைகளை நாவல்களை கட்டுரைகளை மீள் வாசித்து சில குறிப்புகளை இந்தப் பக்கங்களில் எழுத முயல்கிறேன். ஒரு மகத்தான தமிழ் எழுத்தாளனுக்கு, வாசகனாய் என்னால் செய்ய இயன்ற அஞ்சலி அதுவாகத்தான் இருக்க முடியும்.  

Thursday, March 23, 2017

நாய் அடிக்கிற கோல்


நேஷ்னல் புக் ட்ரஸ்ட் 1995 இல் வெளியிட்டிருந்த கன்னடச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதே தொகுப்பில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் ’க்ளிப் ஜாயிண்ட்’ என்கிற கதையை மட்டும் வாசித்து விட்டு தொகுப்பை மூடியது நினைவிற்கு வந்தது. இத் தொகுப்பின் பிற கதைகளோடு ஒப்பிடுகையில் ’க்ளிப் ஜாயிண்ட்’ சுமாரான கதைதான். பெயர் பிரபலமடைவதின் நன்மை இதுதான் போலும். பிரபலத் தன்மையில் விழாதவன் என்கிற நம்பிக்கைகள் என்னைப் பற்றி இருந்தாலும் சில விஷயங்களில் விழுந்துதான் விடுகிறேன்.

சொல்ல வந்தது பி.லங்கேஷ் என்பவர் எழுதிய ’ஓய்வு பெற்றவர்கள்’ என்கிற சிறுகதை குறித்து. ஒரே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இரண்டு முதியவர்களின் மன விகாரங்களை ஒரு எழுத்தாளன் எதிர் கொள்ள நேரிடும் சந்தர்ப்பம்தான் இச்சிறுகதை. கொஞ்சம் காட்டமாக, படாரென முகத்தில் அடிக்கும் உவமைகளோடு இக்கதை எழுதப்பட்டிருப்பதுதான் என்னை உட்கார்ந்து இதை எழுத வைக்கிறது. இரண்டு முதியவர்களை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஞாயிற்றுக் கிழமை நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் கொஞ்சம் தடிப்பாக உயரமாக இருந்தான்.(....) இன்னொருவனுக்கு அதே வயது. ஒல்லியாக நாய் அடிக்கிற கோலைப் போல இருந்தான்
. இந்த உவமையில் திடுக்கிட்டு வாசிப்பதை நிறுத்தி சிரித்துவிட்டேன். நாய் அடிக்கிற கோல் எவ்வளவு பிரமாதமான உவமை!. ஒரு மனிதனை இப்படி விவரிக்க இயலுமா என ஆச்சரியமாக இருந்தது. கதை சமகால சூழலுக்கும் சரியாகப் பொருந்திப் போகும் அரசுப் பணி ஊழல்களை தோலுறிக்கிறது. லஞ்சத்தில் ஊறித் தடித்த தோல்களைக் கொண்ட மனிதர்களை இழிகிறது. கூடவே வெற்றியடைய முடியாத எழுத்தாளனின் தோல்விப் புலம்பல்களையும் சேர்த்துக் கொள்கிறது. இக்கதை பிடித்துப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எழுதுகிறவன் ஒரு வகையான விசித்திரப் பிராணி; அதனாலேயே பல சமயங்களில் தன் வாலின் நிழலைப் பிடிக்க முயன்று தளர்ந்து போகும். அடர்த்தியான காட்டு வழியே குறிக்கோள் என்பதே இல்லாமல் சும்மா நடந்து கொண்டே போகும். உடம்பில் கொழுப்பை வளர்த்துக் கொண்டு இந்த மிருகம் தாவரம், மாமிசம், பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் செரித்துக் கொண்டு, பால் சொரிந்து சுமை குறைந்த எருமையைப் போல கலங்கிய நீரில் விழுந்து பத்து வட்டமடிக்கும்.
சாகித்ய அகடாமி விருது பெற்ற P.Lankesh ஒரு இயக்குனரும் கூட. நான்கு திரைப்படங்களை இயக்கியிருப்பதாய் விக்கி சொல்கிறது - தவறாக ஒரு மலையாளப் படத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறது. இவரின் பிற படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா? எனத் தேட வேண்டும். இதுவரைக்குமாய் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கன்னடப் படைப்புகளையும் தேடிப் பிடிக்க வேண்டும்.

 மிகை என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

Wednesday, March 22, 2017

கூடு திரும்புதல்

இந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் ! என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக? அல்லது எழுத என்ன இருக்கிறது? என்கிற விட்டேத்தி மனநிலைதாம் முக்கியக் காரணம்

ஒரேயடியாய் சேர்ந்து கொண்ட சினிமாப் பித்தும், இலக்கிய அடையாளமாகவிருந்த மனதிற்குப் பிடித்த சில முகங்களின் பரிதாபகரமான காரிய வெளிறல்களும் எழுத்தின் மீதான வாஞ்சையை சற்றல்ல, நிறையவே குறைத்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எல்லாத் துறையிலேயும் நிகழும் தேய்மானம் தான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

இதையெல்லாமா எழுதுவது? என்கிற கூச்சமும் சென்ற சில வருடங்களில் என்னிடம் அடையாய் அப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் நெகிழ்ந்த சில வியாழன் இரவுகளில் மட்டும் எதையாவது கிறுக்கி வைக்கப் போய்,பின்பு அதுவே வழக்கமானது. சில நெருங்கிய நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு என் குறிப்பைப் பார்த்து நாளை நினைவு கொள்வதாய் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவசரமாய் விழித்துக் கொண்டு வியாழன் இரவுக் குறிப்புகளை நிறுத்தினேன்.

 முன்பு எப்போதுமே இல்லாத அசாத்திய அமைதி இப்போது வாய்த்திருக்கிறது. மேலும் நிதானப்பட்டிருக்கிறேன். மனதின் பைத்திய நிழல்களையெல்லாம் துரத்தி அடித்தாயிற்று. சிறுமை, மனநோவு, கோபம், பற்றாக்குறை, பேராசை என எதுவுமில்லை. முழுமையாய் மகிழ்ச்சியோடிருந்தல் என்பது இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பிழைகளையும் என்னுடைய பிழைகளையும் முழுமையாய் மறந்துவிட்டு ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாய் எதிர் கொள்கிறேன். நோய்மையுற்றிருந்த உடல், மனம் இரண்டும் வலுப் பெற்றிருக்கிறது.

 எழுத மட்டுமே விரும்புபவன் எங்கே போவேன்? எங்கெங்கோ சுற்றி விட்டு மீண்டும் கூட்டிற்கே வருகிறேன். எழுத்தே என்னைச் சேர்த்துக் கொள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...