Tuesday, December 16, 2014

இயற்கையின் சமீபம்

Alamar (2009)  -  திரைப்படத்தை முன் வைத்து :


ஏழு வயதில் கடல் பார்த்த பிரம்மிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு  கோடை விடுமுறைக்குப் புதுச்சேரி சித்தப்பா வீட்டிற்குப் போயிருந்தபோதுதான் முதன் முறையாய் கடலைப் பார்த்தேன். புதுவைக் கடல் சீற்றம் மிகுந்தது. காந்தி சிலைக்கு சமீபமாய் அப்போது ஓரளவிற்கு மணற்திட்டிருந்தது. கடலில் பயமில்லாமல் இறங்கி, சீறிவரும் அலைகளை பிரம்மிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என் உயரத்திற்கு வரும் அலைகளை நெருங்கவோ, குறைவாய் இருந்த மணற்திட்டில் கால் பதிந்து அலைநுரையை கையில் அள்ளவோ பயமில்லாமல் இருந்தது. கிராமத்தில் வளர்ந்ததால் ஐந்து வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன்.  ஆறு, குளம், ஏரி குட்டை என எங்கே நீரைப் பார்த்தாலும்  நிஜாரைக் கழட்டி எறிந்துவிட்டு குதிக்கும் வழக்கமிருந்தது. விடுமுறை நாட்களில் நாள் முழுக்க நீரில் கிடந்து செம்பட்டை ஏறிய தலைமுடியோடு திரிந்த பால்யம் என்னுடையது. கடல் சிறுவர்களுக்கு எவ்வளவு பெரிய பரவசத்தைத் தரும் என்பதை நானாகவும் என் குழந்தைகளின் மூலமும் அறிந்திருக்கிறேன். Alamar என்கிற இந்த மெக்சிகன் திரைப்படம் ஒரு சிறுவனின் கடல் அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது. அந்த அனுபவங்கள் வழக்கமாய் யாருக்கும் கிடைக்காத அபூர்வ அனுபவமாக அச்சிறுவனுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களான நமக்குமாய் அமைகிறது.

தாயுடன் இத்தாலியில் வசிக்கும் சிறுவன் நேதன், விடுமுறைக்குத் தன் தந்தையும் தாத்தாவும் வசிக்கும் மெக்சிகோவின் Banco Chinchorro கடலுக்குப் போய் வருவதுதான் கதை. Banco Chinchorro வைக் கடல் என்பதை விட பவழத் தீவு (Atoll) எனக் குறிப்பிடுவது பொருத்தமானது. மோதிர வடிவில் இருக்கும் இக்கடற்பரப்பு காயலைச்( lagoon) சுற்றி இருக்கும். ஏராளமான நீர்தாவரங்களையும் இயற்கையின் பேரெழிலையும் கொண்ட பிரதேசம். இந்தப் பகுதியின் மொத்த அழகையும் இத்திரைப்படம் தன்னில் பொதிந்து வைத்திருக்கிறது. அத்துடன் மூன்று தலைமுறை ஆண்களின் மகத்தான அன்பையும் மிக மென்மையாய் பேசுகிறது. காயலுக்கு சமீபமாய் கடலில் மர வீடமைத்து நேதனின் தந்தையும் தாத்தாவும் வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்  படகில் போய் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். நேதனின் தந்தையும் தாத்தனும்  மீன்களைப் பற்றியும் அவற்றைப் பிடிக்கும் முறைகளைப் பற்றியும் சமைக்கும் முறைகளைப் பற்றியும் அவனுக்குச் சொல்லித் தருகிறார்கள். தூண்டிலிட்டு பாரகுடா மீன் வகைகளையும் கடலுக்கு அடியில் போய் lobster களை யும் தந்தையும் தாத்தனும் பிடித்து வருகிறார்கள். தந்தை தன் மகனுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான். பறவைகளைப் பற்றி அவற்றின் இயல்பு பற்றிச் சொல்லித் தருகிறான். இயற்கையோடு இணக்கமாக எவ்வாறு இருப்பது என்பதை சொல்லித் தருகிறான். முதலைகளை கண்டு அஞ்சாதிருப்பது அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வரும் cattle egret பறவையொன்றோடு விளையாடுவதென நேதன் ஒவ்வொரு நாளையும் அத்தனைப் புத்துணர்வோடு கழிக்கிறான். தாத்தா தன் மீனவ வாழ்வைக் குறித்தும் இயற்கைக்கு சமீபமாக இருக்கும் ஆனந்தம் பற்றியும் மகனோடு பேசுகிறார். அவர்களின் உரையாடலில் மீனையும் ஸ்ட்ராங் காஃபியையும் பறவைகளையும் கடலையும் தாண்டி வேறொன்றும் இருப்பதில்லை. இயற்கையின் இன்னொரு அங்கமாகவே அம்மனிதர்களின் வாழ்விருக்கிறது. இயற்கையைக் கண்டு அஞ்சாமல் அதனோடு இரண்டறக் கலப்பது குறித்து தாத்தனும் தந்தையும் சிறுவனுக்குக் கற்றுத் தருகிறார்கள்.

Pedro González-Rubio என்கிற இயக்குனரின் இயக்கத்தில் 2009 இல் வெளிவந்த இத்திரைப்படம் ஆவணப்படத்தின் சாயல் கொண்டது. பிரம்மிக்க வைக்கும் ஒளிப்பதிவு, இயற்கையின் அசலான பின்னணி ஒலிகள் என இத்திரைப்படம் நம்மை ஒரு மகத்தான அனுபவத்திற்குக் கூட்டிச் செல்கிறது. அதோடில்லாமல் நம் குழந்தைகளுக்கு நாம் தர வேண்டியது என்ன என்பதை இப்படத்தின் தந்தையும் தாத்தனும் உணர்த்துகிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் குழந்தை வளர்ப்பின் பயங்கரங்கள் கண் முன் வந்து போயின. அக்கறை எனும் பெயரில் என் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதின் அறியாமை குறித்து வெட்கினேன். இத் திரைப்படம் நிறைய பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு அல்லது அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டியது என்ன என்பது குறித்தான புதுத் திறப்பாக இருக்கும். எனக்கு இருந்தது.

0


எது என்னுடைய உண்மையான வாழ்வு? எப்போது நான் முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்? என்ன செய்தால் அதில் என்னால் முழுமையாகத் திளைக்க முடியும்? என்கிற கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. இதே கேள்விகளை வெவ்வேறு சூழலில் பல வருடங்களாக என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதுவுமே என்னை முழுமையாய் இட்டு நிரப்புவதில்லை. எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தப்பி ஓடுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று தற்காலிகத் தீர்வாக இருந்தது/ இருக்கிறது. முழுமையான என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். முழுமை இல்லாமற் போகட்டும் ஆனால் பிடித்தம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும்தானே? என்ன செய்தால் என் நிகழ் பிடித்தமானதாக அமையும் என்கிற தொடர்ச்சியான தேடலில் இயற்கைக்குச் சமீபமாக இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறேன். ஏதோ இந்தப் பாலையில் நாட்கள் கழிவதால் ஏற்பட்ட எதிர் ஈர்ப்பு என்று இதை சுலபமாய் தாண்டிப் போக முடியாத அளவிற்கு நாள்பட நாள்பட இந்த எண்ணம் வலுப்படுகிறது. ஆம் இயற்கையின்  அருகாமையில் இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும். இத்திரைப்படத்தில் வருவது போல கடலில் வீடமைத்து மீன் பிடித்து உண்டு வாழ்வது என் இயல்பிற்கு மிக நெருக்கமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு மலைக் கிராமத்தில், சிறு வீட்டில், உயர்ந்த மரங்களுக்கு நடுவில் வசித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் கண்விழித்ததும், சற்றுத் தொலைவிலிருக்கும் மலையருவிக்கு நடந்து போய் குளித்துவிட்டுத் திரும்புவதாய் அமையும் காலை வேளைகளை நினைத்துப் பார்க்கிறேன். நிச்சயம் இது முழுமையாகத்தான் இருக்க முடியும். குறைந்த பட்சம் பறவைகள் ஒலிப் பின்னணியில் எங்களூர் மலையடிவாரத்தில் அடர்ந்த மரங்களை வளர்த்தும், தாவரங்களை வளர்த்துமாய் நிகழை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே என் முழுமையாய் இருக்க முடியும்.


No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...