Thursday, March 7, 2013

கடைசி நாளில்....3மேடைப் பேச்சில் பள்ளிக் காலங்களில் சிறந்து விளங்கினேன். டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டு, எவர் சில்வர் பூக்கூடை, தம்மாதூண்டு பித்தளை கப், பிளாஸ்க் என நான் வாங்கி குவித்திருந்த பரிசுகளின் எண்ணிக்கை அதிகம்தான். இது போக சான்றிதழ்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வீட்டில் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும்போது இச்சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல் கைக்குக் கிடைத்தது. சுவாரசியமாய் எடுத்துப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒரு சான்றிதழில் பவாயின் கையெழுத்திருந்தது. ஆச்சரியமும் சந்தோஷமுமாக இதை பவா விடம் சொன்னேன். 93 ஆம் வருட கலை இலக்கிய இரவு நிகழ்வுகளின் ஒரு பாகமாக பள்ளி மாணவர்களுக்கு நடத்திய பேச்சு போட்டி ஒன்றில் நான் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். சான்றிதழில் பவா வின் கையொப்பம். ஆனால் அதை அவரிடமிருந்து வாங்கினேனா என்பது நினைவில்லை. மேடை, மைக், பேச்சு என்பதெல்லாம் என் நினைவிலிருந்து மங்கியே போனது. கூச்ச சுபாவியாக, கூட்டுக்குள் அடங்கிகொள்ளும் ஆமையாக மாறிப்போனேன். பதினைந்து வருடங்கள் கழித்து என் புத்தக வெளியீட்டு விழா மேடையில்தான் மீண்டும் மைக்கைப் பிடிக்க நேர்ந்தது. பேசிமுடித்தவுடன் ஆரம்பிக்கும்போது சொன்ன வணக்கமும் முடிக்கும்போது சொன்ன நன்றியும் மட்டுமே நினைவிலிருந்தது. அநிச்சை செயல் என்பதின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் விளங்கியது. நல்லா பேசின என பெருந்தன்மையாக பிரபஞ்சன் தேற்றினார். தமிழ் ஏதோ கிண்டலடித்த நினைவு. இப்பின்புலத்தில் எஸ்கேபி கல்லூரியில் சினிமா குறித்து ஒரு மணி நேரம் பேசவேண்டும் என்பதை நினைத்து இரண்டு நாள் திகிலாகத் திரிந்தேன். ஆனால் பேசித்தான் ஆகவேண்டும். விழா அழைப்பிதழில் பெயரெல்லாம் வந்துவிட்டது. முதல் நாள் வம்சிக்குப் போய் சினிமா தொடர்பான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். ஒரு உரையை தயாரித்துவிட்டு படித்துவிடும் திட்டம். ஆனால் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்க நேரம் வாய்க்கவில்லை. துண்டு சீட்டு குறிப்புகள் கூட இல்லாமல் அடுத்த நாள் காலை எஸ்கேபி கல்லூரிக்குப் போய்விட்டேன்.

எஸ்.ராமகிருஷ்ணனை முதல் முறையாய் சந்தித்தேன்.  முன்பு தொலைபேசியில் பேசியிருந்ததோடு சரி. எழுதிக் கொண்டிருக்கும் நாவல், சினிமா குறித்தெல்லாம் பகிர்ந்துகொண்டார். விழாவின் அறிமுக உரையை கருணா நிகழ்த்தினார். வெகு இயல்பான பேச்சு. பொறியியற் கல்லூரியில் Film Club தொடங்குவதன் பின்புலத்தை விவரித்துக் கொண்டிருந்தார். தன் கல்லூரியிலிருந்து வெளியே போகும் மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு போகிறவர்களாக இருக்ககூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், சினிமா என சகல விஷயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு சரியான அறிமுகத்தைத் தருவதில் முனைப்பாக இருக்கிறார். அடுத்த சிறப்புரை எஸ்.ராமகிருஷ்ணனுடையது.  விலாவரியாக சினிமா குறித்து ஒரு பேருரையை நிகழ்த்தினார். பிறகு சில குறும்படங்களைப் பார்த்தோம். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பேச்சு என்னுடையது. வழக்கம்போல வணக்கம் சொன்னதும் நன்றி சொன்னதும்தான் நினைவில் இருக்கிறது. வெகுநேரம் பேசிவிட்டதைப் போல் தோன்றவே திடீரென நிறுத்திவிட்டேன். இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாம் என எல்லோரும் வருத்தப்பட்டார்கள். நான் சொன்ன சில்ரன் ஆப் ஹெவன் கதையில் சில தகவல் பிழைகளை வம்சி சுட்டினான். "ஆனா நீங்க கத சொன்ன ஃப்ளோவுல அதுலாம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதுண்ணே" எனவும் தேற்றினான். வம்சி மிகக் கூர்மையான பார்வையைக் கொண்டிருக்கிறான். நிறைய வாசிக்கிறான். நிறைய படங்கள் குறித்து விவாதிக்கிறான். அவன் வளர்ச்சி மகிழ்வளிக்கிறது. ஷாஜியும் அஜயன் பாலாவும் இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமாக்கள் குறித்துப் பேசினார்கள். ஷாஜியிடம் கே.ஜி.ஜார்ஜ் குறித்துப் பேசிகொண்டிருந்தேன். ஷாஜிக்கும் கே.ஜி.ஜார்ஜை மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு கட்டுரை எழுதச் சொல்லி கேட்டேன். அஜயன் தன் அடுத்த படம் குறித்து பகிர்ந்து கொண்டார். மாலை எஸ்கேபி கல்லூரியின் திறந்த புல்வெளி அரங்கில் ஐரோப்பிய பெண்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திபெத்திய பெண் புத்தர் வழிபாட்டு முறைகளை மேடையில் நிகழ்த்தினார்கள். அக்குழுவின் தலைமைப் பெண்மணியோடும் கிதார் கலைஞரோடும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

விழாவின் இரண்டாம் நாள் காலை எடிட்டர் லெனின்  எடிட்டர் லெனின் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் உள்ளே நுழைந்தேன். வாயிலில் ராம் உலாத்திக் கொண்டிருந்தார். லெனின் பேசி முடிக்கும்வரை  கிடைத்த ஒருமணிநேர இடைவெளியில் இரண்டு டீ குடித்து மூன்று சிகரெட் பிடித்து அரங்கிற்கு வெளியே எங்களின் பேச்சு நீண்டு கொண்டிருந்தது. ராம் ஒரு அற்புதமான கலைஞன். பினுவைப் போல, செளக்கத்தைப் போல, அருணைப் போல, நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உடனேயே ராமை எனக்குப் பிடித்துப் போனது. எங்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் ராம், ஷைலஜாக்காவின் சூர்ப்பணகை குறித்து நிகழ்த்திய உரை இன்னும் நினைவில் இருக்கிறது. இந்நிகழ்விலும் ராமின் பேச்சு அபாரமாக இருந்தது. கற்பனையை, மிதத்தலை, போலிமதிப்பீடுகளை செவிட்டில் அறைந்து யதார்த்தத்தை, அழகியல் போர்த்தப்பட்ட குரூரத்தை ராமின் பேச்சு முன் வைத்தது. அரசியல், கலை, இலக்கியம்,சினிமா குறித்தெல்லாம் மிக வெளிப்படையாக, கறாரான விமர்சனப் பார்வை ராம் முன்வைத்தார். இந்த உரை இரண்டு நாள் விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. பேச்சை முடித்துக் கொண்டு வந்தவரிடம் ராம் மைக்கின் முன்னால் நீங்கள் வேறொரு ஆள் எனச் சொன்னேன்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு  கிளம்பி பாண்டிச்சேரி போனேன். நாகரத்னம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீடு. வாசு மற்றும் நண்பர்கள் போவதாய் சொல்லியிருந்தார்கள். வாசுவிற்கு தொலைபேசி மாலை அவர்களோடு திண்டிவனத்தில் இணைந்து கொண்டேன். இங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை இருந்தது. தமிழவனை முதன் முறையாகப் பார்த்தேன்ரமேஷ் வந்திருந்தார். போப்பு, பரமேஸ்வரி, மதுமிதா, யுகபாரதி மணிகண்டன், வா.மணிகண்டன் உள்ளிட்ட பல நண்பர்களை சந்தித்தேன். விழா முடிந்து பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போனோம். அஜந்தா மாடியில் அமர்ந்தபடி, பவுர்ணமி நிலவை, அலைகளை பார்த்தபடி குடித்தேன். இரவு முழுக்க பாடல்களைப் பாடியும் பேசியுமாய் கழிந்தது. இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாய் அந்த இரவு இருந்தது. வாசுவிற்கு நன்றி. அதிகாலையிலேயே சின்னவனுக்கு ஜூரம் என மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. போக திட்டமிட்டிருந்த சித்தப்பா வீட்டிற்கு போகாமல் வீடு திரும்பினேன்.

தொடர் பயணங்களின் விளைவாக நால்வருமே சளியும் இருமலும் ஜூரமுமாய் அவதிப்பட்டோம். பயல்கள் விளையாடப் பெரிய வெளியும், நாய்குட்டியும் இருந்ததால் உடல்நலன் குறித்து அவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாளின் மொத்த வெயிலையும் தலையில் வாங்கினார்கள். தெருவின் எல்லா வீடுகளுக்கும் மிக இயல்பாய் சென்று வந்தார்கள். வீதி நாய்களின் வாலைப் பிடித்து இழுக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆட்டுகுட்டிகளை விரட்ட, மாடுகளுடன் சண்டையிட விரும்பினார்கள். இருவரையும் கட்டுக்குள் வைத்திருக்க பெரும் சிரமப்பட்டோம்.

எஸ்கேபி கல்லூரி விழாவின் தாக்கம் தணியுமுன்னரே பவா அடுத்த நிகழ்விற்கு அழைப்பிதழை தயாரித்துவிட்டார். இம்முறை பவா வின் ஆங்கிலப் புத்தக வெளியீடு. ஆங்கிலத்திலேயே பேசுவதாக சொன்னேன். குவாவாடிஸ் என்பதால் இடம் குறித்த  அச்சம் குறைவாக இருந்தது. இம்முறை எழுதி வைத்து வாசித்துவிட்டேன். வழக்கம்போல பவா தன் ஆத்மார்த்தமான உரையை நிகழ்த்தினார். ஷைலஜாக்கா புத்தகத்திலிருந்து அப்பா கட்டுரையை வாசித்தார். போப்பு பேசினார். இறுதியாக ஜேபி ஒரு பிரமாதமான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். ஜேபி பவாவின் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர். இருவரின் நட்பையும் குவாவாடிஸ் உருவான விதத்தையும் மிக ஆதூரமான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். குவாவாடிஸ் இடமே வேறொரு மனநிலையைத் தந்தது

ஊருக்கு கிளம்பும் நாள் வந்தே விட்டது. கடைசி நிகழ்வாக எங்கள் வீட்டின் மூன்று குட்டிப் பயல்களுக்கும் மொட்டையடித்து காதுகுத்தினோம். பிரபஞ்சன் மிக சாதுவாய் இரண்டு கண்டங்களையும் தாண்டினான். ஆகஷூம் அகிலும் களேபரப்படுத்தினார்கள். ஒரு வழியாய் நிகழ்ச்சி நல்லபடியாய் முடிந்தது. அடுத்த நாள் மிகப்பரபரப்பாய் இருந்தது. தொடர்பு விட்டுப்போன என் பால்ய நண்பர்கள் மூவர் தொலைபேசினார்கள். மதியம் பவாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பும்போது மழைத்துளியொன்று முகத்தில் பட்டது. மிக உற்சாகமாய் கடைசி மணிநேரங்கள் கடந்தன. மழை விட்டதும் என் பால்ய நண்பர்களில் ஒருவன் சந்திக்க விரும்பினான். இரமணாசிரமம் எதிரில் இருந்த தேநீர் கடையில் அமர்ந்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தொடர்பு விட்டுப்போன பத்துவருடங்களை பேச்சால் மீண்டும் இணைத்தோம். இன்னொரு பால்ய நண்பனும் வந்து இணைந்துகொண்டான். அவர்களுக்கு தொடர்பிலிருக்கும் நண்பர்களோடு தொலைபேசியில் பேசினேன். இனி எல்லோருடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே வீடு வந்து நள்ளிரவில் விமான நிலையத்திற்கு கிளம்பினோம்.

இடையில் சினிமாபற்றி ஒரு புத்தகம் கொடுங்கள் என ஷைலஜாக்கா கேட்டார்கள். இந்த வலைப் பக்கத்திலிருக்கும் சினிமாக் கட்டுரைகள், வவெதொஅவெகு கட்டுரைகளை  ஏற்கனவே நிகழ் திரை கனவு என்ற பெயரில் தொகுத்து வைத்திருந்தேன். அதை லேசாக தட்டி ஒரு வாரத்தில் தந்துவிடுவதாய் சொன்னேன். ஆனால் அத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்த்தபோது மிக சாதாரணமாய் இருப்பதாய் பட்டது. இதையெல்லாம் புத்தகமாய் வேறு போட வேண்டுமா என்கிற தயக்கமும் மேலெழுந்தது. ஆகவே புதிதாய் ஒரு சினிமா புத்தகம் எழுத முடிவெடுத்திருக்கிறேன். அதிகம் அறியப்படாத இயக்குனர்களின் மொத்த திரைப்படங்கள் குறித்தும் விலாவரியாய் எழுதும் திட்டம். எமீர்கஸ்தூரிகா, டோனி காட்லிப், பார்க் வூ, கிடானோ என இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்தியாவிலிருந்து இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் குறித்த ஒரு முழுமையான கட்டுரையும் புத்தகத்தில் இடம்பெறும். ஏற்கனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். இரண்டு மாதத்திற்குள் முடித்துவிடும் ஆசை இருக்கிறது. இந்த புத்தகம் முழுமையாய் வருவதற்கான எல்லா உழைப்பையும் இடவேண்டும்.


1 comment:

Sridhar Narayanan said...

// புதிதாய் ஒரு சினிமா புத்தகம் எழுத முடிவெடுத்திருக்கிறேன். அதிகம் அறியப்படாத இயக்குனர்களின் மொத்த திரைப்படங்கள் குறித்தும் விலாவரியாய் எழுதும் திட்டம். //

அருமை. புத்தகம் நல்லபடியாக வந்து பிரமாதமாக வெற்றி பெற வாழ்த்துகள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...