Wednesday, January 30, 2013
Thursday, January 24, 2013
Wednesday, January 2, 2013
2012
வேறெப்போதும் உணர்ந்திராத மன அமைதியை இந்த வருடத்தில் பெற்றேன். பெரும்பாலான இரவுகளில் பயல்களுக்கு கதை சொல்லிக்கொண்டே பயல்களுக்கு முன்பாகவே தூங்கிப் போனேன். தேவையில்லாத எண்ணங்கள், அநாவசியக் கற்பனைகள், சதா குழம்பித் திரியும் மனம் என எல்லாவற்றிடமிருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டேன். வெளி உலகத் தொடர்புகள், நண்பர்கள், ஊர்சுற்றல், வார இறுதிக் குடி போன்றவையும் என்னைத் துண்டித்தன. மிகக் குறைவாகத்தான் யோசித்தேன். மிகமிகக் குறைவாகத்தான் எழுதினேன். மூன்று குறுநாவல்களின் கரு மனதில் விழுந்திருந்தாலும் அதிலேயே மனம் ஊறிக் கிடக்காததால் எழுத முடியவில்லை. ஒவ்வொரு நாளும் துளிர்க்கும் பசுஞ்செடியைப் போல் இச்சிறு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் வேகத்திற்கு, துடிப்பிற்கு, உற்சாகத்திற்கு ஈடுகொடுக்க இன்னும் உயிர்ப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. Wide Awake, Alertness போன்ற பதங்கள் எல்லாம் ஞானவாழ்வில் மட்டுமல்ல குமாஸ்தா வாழ்விலும் உண்டு என்பதை இந்தப் பயல்கள் கற்றுத் தருகிறார்கள். ஒரு நாளில் நூறு ஏன்-ம்பா? விற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் கண்முன் விரியும் காட்சிகள் அனைத்தும் ஏன்? என்கிற கேள்வியோடுதான் முடிகின்றன. சில பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு சும்மா- பா என்கிற பதிலையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்/றோம்.
மனதை தொந்தரவு செய்யும் எந்த செய்திகளையும் மேய்வதில்லை. இந்த வருடத்தில் பார்த்த படங்களை விட பாதியில் நிறுத்தின படங்கள் அதிகம். “நீ இப்ப ஒரு குழந்த மாதிரி ஆகிட்ட தெரியுமா?” என நம்பமுடியாத குரலில் இவள் சொல்வதைக் கேட்டு புன்னகைக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தேன் என்பதை நினைக்க வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எல்லா உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் முழுமையாய் உணர்ந்துவிட்டே வெளிவர விரும்புகிறேன். தீயைத் தீண்டி அறிய விரும்பும் மனம். பிறருக்கு என்னால் நேர்ந்த துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நானே என்கிற புள்ளிக்கு திமிர் பிடித்த மனம் மெல்ல நகர்வதை உணரமுடிகிறது. எம்பிஏ முதல் வகுப்பில் தேறியது. புதுக் கார் வாங்கியதென குமாஸ்தா சாதனைகளும் இவ்வருடத்தில் உண்டு. என்னை வற்புறுத்தி, நச்சரித்து, திட்டு வாங்கிக் கொண்டு, படிக்க வைத்த மனைவிக்கு எம்பிஏ வும், சீட்டை மட்டுமே தேய்ப்பவனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் அரசிற்கு காரும் சமர்ப்பணம்.
இந்த வருடத்தில் நீலகண்டப் பறவையைத் தேடி – நாவலை வாசித்துவிட முடிந்தது. மிக வேகமாக வாசித்து முடித்து விட்டு சில பகுதிகளை மீண்டும் வாசித்தேன். மன எழுச்சி என்கிற பதத்தை படிக்க நேரிடும்போதெல்லாம் ஒரு சின்ன ஏளனப் புன்னகை தோன்றும். ஆனால் நீலகண்டப் பறவை தந்த உணர்வை வார்த்தையில் கடத்த தோற்றுப் போய் அதே மன எழுச்சியையே துணைக்கழைக்கிறேன். ஆம் இந்த நாவல் மிகுந்த மன எழுச்சியைத் தந்தது. முதல் வேலையாக எழுதிக் கொண்டிருந்த குறுநாவலை நிறுத்திவிட்டேன். என்ன மாதிரியான குப்பை இது? என என் எழுத்தின் மீது கோபம் வந்தது. ஒரு பெரும் மரத்தைத் தொட்டுப் பார்த்து இரண்டு வருடங்களாகப் போகின்றன, என்னால் எந்த மாதிரியான எழுத்தைத் தந்துவிட முடியும்? நான் ஏன் எழுத்து என்கிற பெயரில் குப்பையைச் சேர்க்கிறேன்? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்த ஒரு இரவில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தூங்கப் போய்விட்டேன். கொஞ்சம் இந்திய க்ளாசிக்குகளை படிக்கலாம் என தூக்கத்தின் நடுவே நினைத்துக் கொண்டேன்.
பயல்களின் அனுமதி இல்லாமல் டிவி பார்க்க முடியாததால் சாகசப் படங்கள், குறிப்பாக அனிமேட்டட் படங்களாக பார்த்துத் தள்ளினோம். ஹேப்பி ஃபீட் வகையறாக்களோடு மியாசகி படங்களையும் கலந்து கட்டி இரு தரப்பும் திருப்தியடைந்து கொண்டோம். பயல்கள் தூங்கிய பின்பு நல்ல பிரிண்ட் கிடைத்த புதுத் தமிழ் படங்களையும் விடாமல் பார்த்தோம். டோனி காட்லிஃப் படங்களைக் குறித்து எழுத ஆரம்பித்து அதையும் இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொண்டேன். ஏனோ தெரியவில்லை தொடரமுடியவில்லை. சமீபமாய் கண்டறிந்த இன்னொரு இயக்குனர் Emir Kusturica. செர்பிய இயக்குனர். இவரின் Time of the Gypsies படம் பல அதிர்வுகளைத் தந்தது. இவரின் மற்ற படங்களையும் பார்த்து விட்டு எழுதவேண்டும். இப்படியாய் ஜிப்சி படங்களைப் பார்த்து, ஜிப்சி இசையைக் கேட்டு, வாழ்வு அனுமதித்தால் ரோமானிய தேசங்களில் சுற்றி அலைந்துவிட்டு, ஜிப்சிக்களைப்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தையும் இங்கே பதிந்து வைக்கிறேன்.
அகிரா வைக் குறித்தும் ஒரு நூல் எழுத வேண்டும். அல்லது கட்டுரைகளாவது எழுத வேண்டும். ஆனால் உலகின் பெரும்பாலானவர்களால் எழுதி,பேசி, சலிக்கப்பட்டுவிட்டவர் அகிரா. புதிதாக அவரை எந்த கோணத்தில் எழுதி விட முடியும்? என்கிற சலிப்பும் கூடவே எழுகிறதுதான். ஆனால் எழுத்து இரண்டாம் பட்சம் முதலில் சற்று விழிப்பாய் மீண்டும்அகிரா படங்களைப் பார்ப்போமே என ஆரம்பித்து விட்டேன். செவன் சாமுராய், yojimbo, The bad sleeps well ஆகிய மூன்று படங்களை கடந்த இரண்டு நாளில் பார்த்தேன். செவன் சாமுராயை என்னுடன் பார்த்த மனைவி “கொள்ளைக்காரர்களுக்கு பதிலாய் யானையைப் போட்டால் அப்படியே கும்கி படம். இப்படியா அட்ட காப்பி அடிப்பாங்க? “ என அங்கலாய்த்தபடியே சாமுராய் அல்லாத ஒருவனுக்கும் கிராமத்துப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அப்படியே கும்கியில் சுடப் பட்டிருப்பதையும் சொன்னாள். மேலும் “அடிக்கிறது அட்ட காப்பி ஆனா டிவில வந்து உட்கார்ந்துட்டு, கால்மேல கால் போட்டுட்டு நானே ஜிந்திச்சேன்னு பேட்டி கொடுக்கறத பாத்தாதான் பத்திட்டு வருது” என பொரிந்து தள்ளினாள். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பிரபல ப்ளாக்கர் ஆவதற்கான எல்லாத் தன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன எனச் சொன்னேன் “ஏ! பே” எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டாள்.
Subscribe to:
Posts (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
Mubi தளத்தில் கீஸ்லோவெஸ்கி, ஹெடரோவ்ஸ்கி, ஆக்னஸ் வர்தா, சாப்ளின், டிண்டோ ப்ராஸ், எரிக் ஹோமர் போன்ற பிரபலமான இயக்குநர்களின் படங்களைத் தவிர்த...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...