Saturday, November 3, 2012

அத்தியாயம் - ஐந்து


கோவை தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு ட்ரைவர் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தேன். வீணா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. மெதுவா போங்க போய்டலாம் என்றேன். வீணா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு நாவலை நாங்கள் இருவருமாய்த்தான் எடிட் செய்தோம். எங்களின் முரணான முதல் சந்திப்பிற்குப் பிறகு வீணா நினைவை விட்டு அகன்றே போனாள். மீண்டும் அவளை சென்ற வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்துதான் சந்தித்தேன். ஏற்கனவே வெளிவந்த என்னுடைய மூன்று அல்லது நான்கு மாத நாவல்களை தொகுத்து புத்தகங்களாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு சமீபமாய் பதிப்பிக்க ஆரம்பித்திருந்தோம். விச்சுவின் அடுத்த சக்சஸ்ஃபுல் புராஜக்ட். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான். சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான்.. நம் புத்தகங்கள்தாம் .. என்ற அவன் உற்சாககுரலை என்னால் நம்பக் கூட முடியவில்லை. வாசகர்கள் உன்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற நச்சரிப்பின் காரணமாக ஒரு மாலை அரங்கிற்கு சென்றிருந்தேன். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் தடுமாறிக் கொண்டிருந்தேன். கூட்டம் குறைந்ததும் அரங்கை விட்டு வெளியேறி கண்காட்சியை சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் வீணா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளை எனக்குப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தேன். பேச்சினூடாய் என்னை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் என்னை வரவேற்றார். வீணாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு என்னைப் பிடிக்காதது, ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானேன். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, வீணா தன் உரையை முடித்த போது பலத்த கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை சொன்னேன். கூட்டத்தில் ஒரு குரல்

“ ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. நான் பொருட்படுத்தவில்லை. வீணாவிடம் போய் நன்றாகப் பேசினீர்கள் என்றேன்.புன்னகைத்தாள். இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது என கிசுகிசுத்து விட்டு வெளியேறினேன்.

 அடுத்த நாள் காலை சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி என் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த என்னை மார்பில் மிதித்தனர். அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். ட்ரைவர் ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்கு தொலைபேசினார். விச்சுவை விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். விச்சுவும் போலிசும் வந்து மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அம்மா ரத்தம் வழிந்த என் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தேன். அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னேன். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. ஏன் என்னை வந்து அடித்தார்கள்? என்பது புரியவில்லை. சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன். ட்ரைவருக்கும் வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை

ஸ்டேசனில் விச்சு கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. எனக்கு குழப்பமாய் போயிற்று, பின் அறைக்குப் போனேன். கான்ஸ்டபிளடம் அடிப்பதை நிறுத்த சொன்னேன். மூவரையும் பார்த்து

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது நான் குழப்பமாய் பார்த்தேன் ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

எனக்கு உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன். மற்ற இருவரையும் பார்த்தேன். நான் தான் காட்டுச்சித்தன் என்றான் ஒருவன். இன்னொருவன் மித்ராங்கி என்றான். மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“நீ வீணாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” என்றான் காட்டுச்சித்தன்.

நான் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றேன்

 மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனேன். விச்சுவிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் வீணா” என்றேன். விச்சு நிமிர்ந்து பார்த்தான். அப்ப வீணா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுறேன் என்றான். நான் எதுவும் பேசவில்லை. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா என சொல்லிவிட்டு, எஸ்.ஐ தொலைபேசியில் ரைட்டர் வீணாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே வெளியில் போனேன். வீணாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது ட்ரைவரை கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னேன். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் அய்யனார் “

“ஆமாங்க”

“வீணா பேசுறேன் “

அமைதியாக இருந்தேன்

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போன அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

அமைதியாக இருந்தேன்

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி அய்யனார் இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

உடனே விச்சுவிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னேன். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் அனுபவம் இருந்திருக்கும்போல எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார். அடுத்த நாள் காலை மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு வீணா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தேன். வீணாதான் திறந்தாள். என் மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள்.அவளின் இரவு உடை உடல் என்னையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் அமர்ந்தேன். போலிஸ் ஸ்டேசனுக்கு அவளை வரவழைத்ததிற்காக மன்னிப்பு கேட்டேன். பப்ளிஷர் விச்சு உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது என புளுகினேன்.

“அவர் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பா வே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தேன்.

அடுத்தடுத்த தினங்களில் நெருக்கமாகி விட்டோம். தினம் ஒருமுறையாவது பேசிக் கொண்டோம். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என நாங்கள் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. வீணா மீது ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் என்னை அவளின் பக்கம் ஈர்த்தது உடலாக இருந்தாலும் மெல்ல அவளின் குணமும் எனக்குப் பிடித்துப் போயிற்று. வீணாவிற்கு என்னை விட பத்து வயது அதிகம். திருமணமாகி டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். வீணாவுடைய முதல் நாவல் நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. வீணாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் எங்களின் அறிமுகம் நிகழ்ந்தது.

 ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு வீணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க அய்யனார்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினேன். கதவைத் திறந்த வீணா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

 “சார் வந்துட்டோம்”

ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கினேன். ட்ரைவர் கோவையில் உறவினர் வீட்டுக்குப் போவதாய் சொல்லியிருந்தார். மழையாக இருக்கவே காலையில் போகிறீர்களா என்றேன் இல்ல சார் கிளம்புறேன் ஏதாவது மாற்றம் இருந்தா போன் பண்ணுங்க எனச் சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார்.. மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். வீணாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனேன்.

---மேலும்

2 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

nallarukku

Anonymous said...

நிறைய பேர் கண் முன்னால வராங்க.. கலக்கு ராசா :-0))

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...