Tuesday, April 17, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளின் வரிசைக் கிரமத்தில் ஒரு நொடியைக் கூட முன் பின் மாற்ற அனுமதிக்காத என்னுடைய நிகழ், மிகுந்த இயலாமையோடு அத்தனை எழுச்சியையும் கொண்டு போய் எழுத்தில் கொட்ட வழிவகுத்தது. அந்தப் பேரெழுச்சியில் எழுதப்பட்டதுதான் ‘பழி’. இரண்டு பக்கங்கள் எழுதினாலே இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் மனதின் அரிப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு நூறு பக்கங்கள் எழுதி முடித்தேன். ஆறு மாத மகனும் மனைவியும் ஊரிலிருந்து வந்த பின்னர் மனதின் பரபரப்பு சற்று அடங்கியது. நானும் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு மிக சந்தோஷமாய் மகனின் உலகத்திற்குள் நுழைந்து கொண்டேன். பாதியில் விட்ட பழியை எடுத்துப் படித்த என் மனைவி, அதன் காமத்தையும் வன்மத்தையும் கண்டு மிரட்சியடைந்து இதைப் பிரசுரித்தால் படிப்பவர்கள் உன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என பயந்தாள். எழுதியதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே எனவும் அறிவுறுத்தினாள்.

இடையில் மழைக்காலம் கதைக்கான முடிச்சு மனதில் விழுந்தது. அம்முடிச்சை அப்படியே கொண்டுபோய் பாண்டிச்சேரியில், நான் கடந்து வந்த சூழலில் பொருத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கதைக்கு தேவையான மென்மையையும் காதலையும் என்னால் எழுத்தில் கொண்டு வரவே முடியவில்லை. முழுக்க வன்மத்திலும் காமத்திலும் மனம் தகித்துக் கொண்டிருந்தது. எழுதாமல் தீராதிது என உணர்ந்ததும் மழைக்காலத்தை அழித்து விட்டு மீண்டும் பழியை தூசி தட்டி, உத்திகளைப் புகுத்தி, அத்தியாயங்களாய் பிரித்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். சாகஸம், காமம்,வன்மம், பரபரப்பு என வெகுசன வாசிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களும் பழியில் இருந்ததால் இணையத்தில் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. என் வலைப் பக்கத்தைப் பார்த்தாலே விழுந்தடித்துக் கொண்டு ஓடும் பலரையும் இந்நாவல் கட்டிப் போட்டது. போலவே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இலக்கிய வாசகர்களிடமிருந்தும், பெரும்பாலான வாசகிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் எல்லாத் தரப்பு வாசகர்களும் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார்கள். அது பழியின் சுவாரசியம். ஒரே மூச்சில் படித்தேன் என்பதுதான் எல்லோருடைய பகிர்வாகவும் இருந்தது.

பழிக்கு கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகம் அடுத்தடுத்து மழைக்காலத்தையும் இருபது வெள்ளைக்காரர்களையும் எழுத வைத்தது. மழைக்காலம் குறுநாவலில் வரும் மையப் பாத்திரங்களைத் தவிர்த்து பிற எல்லாப் பாத்திரங்களும் நிஜமானவை. இடம்,சூழல், பெயர் என எதையும் மாற்றவில்லை. எழுதித் தீரா சில விஷயங்களின் வரிசையில் காதலுணர்வும், இளமையும்தான் முதலிடத்தைப் பிடிக்கும் போல. என்னால் விட்டு வெளியேறவே முடியாத பொறிதான் மழைக்காலமாக வடிவம் பெற்றது. சில மென் உணர்வுகளை இந்தக் குறுநாவல் அசைத்துப் பார்க்கலாம்.

என்ன எழுதினாலும் அதாகவே, அந்த எழுத்தின் உணர்வாகவே கிடப்பதுதான் என்னுடைய மாபெரும் சிக்கல். இந்த சிக்கல் பிற படைப்புகள் மூலமும் அவ்வப்போது ஏற்படுவதுதான். பழி எழுச்சியையும், மழைக்காலம் காதலுணர்வையும், இருபது வெள்ளைக்காரர்கள் நடுவாந்திரமாக ஒரு மன உணர்வையும் தந்தது. ஒரே நேரத்தில் நெருங்கியும், விலகியும் சஞ்சரிக்கும் மனதை இருபது வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை, இரமணாசிரமம், மலை சுற்றும் பாதை, ஜவ்வாதுமலை அடிவாரம், வனம்,மலை ஓடை, என இடங்களின் மீது புனையப்பட்ட கதைதான் இருபது வெள்ளைக்காரர்கள். இந்தக் கதைக்கான ஆதாரப் புள்ளி நிலப் பிரதேசங்கள்தாம். இந்த இடங்களெல்லாம் என் மனதின் அடியாழத்தில் தங்கிப் போனவை. ஒரு வகையில் இப்பிரதேசங்களில் அலைந்து திரிய முடியாமல் போன ஏக்கத்தின் வடிகாலாகவும் இக் குறுநாவலை அனுக முடியும். மற்றபடி எழுத்தின் மூலம் எழுதுபவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இனி கிட்டுபவை எல்லாம் மிகுதியே.

என்னுடன் எப்போதுமிருக்கும் பவா, பார்த்துப் பார்த்து புத்தகத்தை நேர்த்தியாய் கொண்டு வர மெனக்கெடும் ஷைலஜாக்கா, மூன்று நாவல்களையும் சிரத்தையாய் வாசித்துத் தொகுத்த ஜெயஸ்ரீ, நெருக்கடியான பணிகளுடைக்கிடையிலும் அட்டைப் படம் தந்த பினு, வடிமைத்த வம்சி நண்பர்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லி மாளாது. என்றென்றைக்குமான என் ப்ரியங்களும் அன்பும்.


அய்யனார் விஸ்வநாத்
ayyanar.v@gmail.com
ayyanaarv.blogspot.com
00971554216250

2 comments:

நந்தாகுமாரன் said...

hmm ... sounds interesting ... வாங்கிப் படித்துவிட வெண்டியது தான் ...

காமராஜ் said...

முன்னுரை மிக நேர்த்தியாக இருக்கிறது அய்யனார்.கதைகளின் விதைகளையும் குருத்தையும் கூராக்கியிருக்கிறது முன் னுரை. படிக்க ஆவலாக்கி விட்டீர்கள் தேடி அலையவேண்டும்.

வாழ்த்துக்கள் அய்யனார்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...