Sunday, January 1, 2012

தமிழ் சினிமா 2011 : பத்து சிறந்த படங்கள்

கடந்த வருடத்தின் சிறந்த பத்து படங்களை தர வரிசையின் அடிப்படையில் கீழே கொடுத்துள்ளேன்

1.ஆரண்ய காண்டம்
2.ஆடுகளம்
3.அவன் இவன்
4.மயக்கம் என்ன
5.யுத்தம் செய்
6.எங்கேயும் எப்போதும்
7.மெளன குரு
8.அழகர் சாமியின் குதிரை
9.வாகை சூட வா
10.மங்காத்தா

இவை குறித்து சற்று விரிவாகவும் பார்க்கலாம்.

2011 ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடம்தான். பத்து படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் தேற்றி விட முடிந்தது. கடந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ஆரண்ய காண்டம்படத்தைச் சொல்லலாம் தமிழின் முதல் neo-noir படம். தமிழின் முதல் black humor படம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகக் கூடிய ஏராளமான முதல் தன்மைகள் படத்தில் இருந்தன. நீளமான, சாவகாசமான காட்சிகள். முடிவுகளில் ஒளிந்திருக்கும் விபரீதம் அல்லது விபரீதத்தில் துவங்கி புன்னகையில் முடியும் காட்சியமைப்பு. இவ்வகை திரை மொழி தமிழிற்குதான் புதிதே தவிர ஹாலிவுட்டில் மிகவும் பழைய உத்திதான். இவ்வகைமையில் quentin tarantino பெயர் போனவர். இவரின் எல்லாப்படங்களுமே கிட்டத்தட்ட இப்படித்தான்.

தமிழின் ப்ளாக் காமெடி படத்திற்கான உதாரணமாய் மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சொல்ல வேண்டிய தர்மசங்கடத்திலிருந்து ஆரண்ய காண்டம் நம்மை காப்பாற்றிவிட்டது. ஒரு நாட்டின் மொழியோ, இன்ன பிற சமாச்சாரங்களோ நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு தேர்ந்த சினிமா காணாமல் போக செய்துவிடுகிறது. ஆரண்ய காண்டமும் தேர்ந்த சினிமாக்களின் பொது மொழியில் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரராக வரும் காளையன் – சோமசுந்தரம்தான். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஆச்சர்யப்பட வைத்தது. “சாராயம் வாங்கிக் கொடுத்தவன் சாமி மாதிரி”யில் துணுக்குற வைத்து “ஒரு ஜமீன்னு கூட பார்க்காம அடிச்சிபுட்டீங்க”ல் நெகிழ வைத்து “நீயும் அப்படிச் சொல்லாதடா வெள்ள குஞ்சி” யில் கரைந்து போக வைத்துவிட்டார். படு புத்திசாலித்தனமான திரைக்கதை, உறுதுணையாய் இசை, உயிரோட்டமான கதாபாத்திரங்கள் எனஆரண்ய காண்டம் ஒரு முழு சினிமாவிற்கான உத்திரவாதம்.

ஆடுகளம்


இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட ஆறு விருதுகளைக் குவித்த படம். கோழிச் சண்டை பின்புலத்தில் நிகழும் துரோகம் வன்மம் யாவற்றையும் படு யதார்த்தமாகவும் கச்சிதமாகவும் பதிவு செய்த படம். யதார்த்தப் படங்கள் வெளித்தோற்றங்களை மட்டுமே, பாவணைகளை மட்டுமே பதிவு செய்யாமல் வாழ்வின் ஆழம் நோக்கியும் நகர வேண்டும். சாதியம் பின்னிப் பிணைந்து கிடக்கும் நம் வாழ்வை விமர்சனங்களோடு பதிவிப்பது அத்தனை எளிதான காரியமில்லை. கமலஹாசன்களால் மெனக்கெடப்பட்டு துதிபாடத்தான் முடிந்ததே தவிர, சாதியத்தின் வன்மத்தை தொட முடியாமலேயே போனது.

ஒரு விளையாட்டுப் பின்னணியில் சாதியத்தின் வன்மங்களை மிக நேரடியாகவும் தெளிவாகவும் பதிவித்ததில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடுகளம் வெண்ணிலா கபடிக் குழுவின் நேரடிச் சாடலை, வீரியத்தை எட்டவில்லை எனினும் ஸ்தூலமாக அதை சரியாய் முன்னெடுத்திருக்கிறது. சாதியத்தின் வழி உருவாகும் கெளரவம் என்பதைக் காக்க வேண்டி, மனிதர்கள் நடத்தும் போராட்டமாகத்தான் இப்படத்தைப் பார்க்கிறேன். இறந்து போன கணவனின் கெளரவத்தை மகன் காப்பாற்றாமல் போய்விடுவானோ எனப் புலம்பும் தாய்கிழவி - அம்மா சாவதற்குள் ஒரு முறையாவது சேவற் சண்டையில் ஜெயித்து கெளரவத்தை நிலைநாட்டி விட துடிக்கும் மகன்- பல வருடங்களாய் சேமித்து வைத்திருந்த பெயர், தான் வளர்த்துவிட்ட சீடனாலே மெல்லத் தேய்வதைப் பொறுக்கொள்ள முடியாத குரு - எல்லாத் தவறுகளையும் தன் மீது சுமத்திக் கொண்டு குருவின் கெளரவத்தைக் குலைக்காமல் ஊரை விட்டு வெளியேறும் சீடன். ஆக இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் இன்னொருவரின் கெளரவத்தை அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட தன் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகின்றன. சாதி இந்தக் கதாபாத்திரங்களினூடே மெல்லிதாய் படந்திருப்பதையும் இயக்குனர் நுட்பமாய் பதிவு செய்திருக்கிறார்.

பொல்லாதவன் தந்த வெற்றியினால் அதே திரைக்கதை உத்தியை ஆடுகளத்திலும் வெற்றிமாறன் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு கதையை எல்லா வகையிலும் சரியாக சொல்ல மெனக்கெடும் உழைப்பும் ஆய்வுகளும் பாராட்டப்பட வேண்டியவை. வெற்றிமாறனுக்கு அது கிடைத்தது.

அவன் – இவன்.
பாலாவின் திரைப்படங்கள் நாயக வழிபாடு என்பதிலிருந்து விடுபடாதவைதாம் என்றாலும் வழக்கமான வெகுசன நாயகத் தன்மைகளிலிருந்து விலகியவை. முரட்டுத்தனமான,ரெளத்ரமான,அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாத, அன்பிற்காக ஏங்குகிற,நன்றி உணர்வும் விசுவாசமும் மிகுந்த பாலாவின் நாயகர்கள் மிக அழுத்தமான தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துவதில் வியப்பேதுமில்லை. தமிழ் சினிமாவில் பாலாவிற்கு நான் மிக முக்கியமான இடத்தை தர விரும்புவதற்கு காரணம் அவர் படங்களில் இருக்கும் அசல் தன்மைக்காகத்தான். வேறெந்த மொழிப் படங்களின் பாதிப்பும், இயக்குனர்களின் சாயலும் பாலாவிடத்தில் இல்லை. அவருக்கு அவரின் சாயல்கள்தாம் பிரதானம். பாலாவின் நாயகர்களைப் போலவே பாலாவின் திரையாக்கமும் மிகவும் தனித்தன்மையானது. கதாபாத்திரங்கள், அவற்றின் சூழல் இந்த இரண்டையும் உருவாக்க அதிகம் மெனக்கெடும் பாலா தொழில்நுட்பம், திரைக்கதை உத்தி போன்றவைகளை நம்புவதில்லை. நேர்கோட்டில் சொல்லப்படும் வழக்கமான திரைமொழிதான் என்றாலும் கச்சிதமான பாத்திரப் படைப்புகளின் மூலமும் சம்பவாமி யுகே யுகே ஸ்டைல் அழித்தொழிப்புகள் மூலமும் பாலாவின் படங்கள் அசாதாரணத் தன்மையை அடைகின்றன.

எஸ்.ராமகிருஷ்ணின் நெடுங்குருதி நாவல் - வேம்பலை கிராமத்தை நினைவுபடுத்தும் சூழல். திருட்டைத் தொழிலாகக் கொண்ட மக்கள், பெண் சாயல் கொண்ட ‘டோங்கிரி’ துள்ளலான ‘வட்ரூபி மண்டையன்’ என சுவாரசியமான மாற்றுத் தாய் சகோதரர்கள். மொழித் திருகல் இல்லாத அச்சு அசலான மனிதர்கள், விசுவாசமாய் இருக்க ஒரு ஹைனஸ் அவரின் கோரமான சாவு, இறுதியில் சூரசம்ஹாரம். சுபம். பாலாவின் அடிநாதம் இவ்வளவுதான். சூழலையும் ஆட்களையும் மாற்றிப்போட்டால் நந்தாவோ பிதாமகனோ அவன் – இவனோ வந்துவிடும். ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் இருக்கும் கச்சிதம்தான் பாலா. ஜி.எம்.குமாரின் குரூரமான சாவிற்கு அழுத்தமான பின்னணி இல்லை என்பதுதான் படத்தின் மீதான என் ஒரே பிராது. மற்றபடி படத்தின் சிறந்த அம்சமாக எனக்குத் தோன்றிய, உரையாடல்களிலேயே மனம் திளைத்துக் கொண்டிருந்தது. சாம்பிளுக்கு ஒன்று

”திங்கிறது பேல்றது பேல்றது திங்கறது இதே வேல இவனுக்கு”
…..

‘மாவு மாதிரி போவுதுமா”

”போவட்டுமேடா அதையெடுத்து வந்திருக்கிறவங்களுக்கு ரொட்டியா சுட்டு தர முடியும்.”

இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வசனம் எழுதப் போய் எதை மாற்றினார்கள்? அல்லது எந்த வகையில் தம் எழுத்தாளுமையை நிரூபித்தார்கள்? என்கிற பரவலான கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் அவன் இவன் பட வசனம் நல்லதொரு பதில்.

மயக்கம் என்ன
பாலா, மிஷ்கின் வரிசையில் எனக்குப் பிடித்த இன்னொரு இயக்குனர் செல்வராகவன். இந்த மூவருக்குமே திரை மொழியில் தனி பாணி உண்டு. எங்கள் படம் இப்படித்தான் அல்லது ஒரு கதையை இப்படித்தான் சொல்வோம் என்பது போன்ற தனித்தன்மை இந்த மூவருக்குமே உண்டு. தனக்கான ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வதில் தவறேதுமில்லை. அந்த பாணியை எந்த அளவிற்கு உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள முடியும் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் இருப்பு அடங்கியிருக்கிறது. மயக்கம் என்ன விமர்சன அடிப்படையில் மிகவும் சராசரிப்படம். ஆனால் இந்தப் படத்தை உயிர்ப்பிப்பது செல்வாவின் திரையாக்கம்தான் என்பதில் சந்தேகமே கிடையாது. செல்வராகவனின் தனித்தன்மைகள் என்ன என்பது குறித்து யோசித்தால் ஒரு பட்டியலையே தயார் செய்து விடலாம்

1.சுய சரிதைத் தன்மை : Self narration களில் இருக்கும் ரகசியத் தன்மை அலாதியானது. இயக்குனரின் சுயசரிதையாகவும் பிரதான கதாபாத்திரத்தின் சுயசரிதையாகவும் பார்க்க முடிகிற இரண்டு திறப்புகள் இருக்கும்.

2.கதாநாயகிகள்: திறமையானவர்கள்,கனிவானவர்கள், தைரியமானவர்கள், ஏற்கனவே ஒரு காதலனைக் கொண்டிருப்பவர்கள். சராசரி ஆண் புனைந்து கொள்ளும் தேவதைகளின் நிஜநிழல் வடிவங்கள்

3.கதை : கதாநாயகி முதல் காதலைத் துறந்து இரண்டாவதாய் குறுக்கிடுபவனின் மீது சலனப்படுவாள். அவனின் பலகீனத்தை இரசிப்பாள். அவனை நிஜமாய் நேசிப்பாள். அவனின் போராட்டங்களை, இயலாமைகளை எளிதாக்கி அவன் இலக்கை அடைய உறு துணையாய் நிற்பாள். காதல் கொண்டேன், 7ஜி, மயக்கமென்ன மூன்று படங்களின் கதையும் இதுதான். களம்தான் வெவ்வேறு. புதுப்பேட்டையிலும் ஆயிரத்தில் ஒருவனிலும் இதே பெண் சாயல்கள் இருந்தாலும் இரண்டின் தளமும் வேறு.

4.மழை நடனம், நெருப்பு நடனம்

5.காமம் குறித்தான அச்சமின்மை, முடிந்தவரை காமத்தை நேரடியாய் அணுகுவது

6.மனப் பிறழ்வு அல்லது பித்து நிலை

7.போதை மற்றும் கொண்டாட்டம்

காமம், பெண், போதை இவை சலிக்காத விஷயங்கள்தாம் என்றாலும் கவனமாகக் கையாள வேண்டிய தளம். செல்வா இந்த தளத்தில் அடித்து ஆடுகிறார்.
மயக்கம் என்ன படத்தின் முதல் பாதியை தனுஷும் இரண்டாம் பாதியை ரிச்சாவும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தோல்விக் கலைஞனின் மேட்னஸ் என்கிற புள்ளிக்கு படத்தை நகர்த்தியிருந்தால் மயக்கம் என்ன கச்சிதமாய் வந்திருக்கக் கூடும். ஆனாலும் செல்வாவிற்கு விக்ரமன் நினைவு வந்திருக்க வேண்டாம்தான்.

யுத்தம் செய்
மிஷ்கினின் தனித்துவமான திரையாக்கத்தில் வந்த த்ரில்லர் படம். அவருக்கே உரித்தான கேமிரா கோணங்கள். ஒரு கதையை இப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவேன் என்பது போன்ற திரை மொழி படத்தின் மிகப்பெரிய பலம். குற்றங்கள் – தண்டனைகள் இவற்றுக்கிடையேயான ஆடுபுலி ஆட்டம்தான் கதையின் ஒன்லைனர். வாயூரிசம் குறித்து தமிழில் பதிவுகள் கிடையாது. அந்த வகையில் யுத்தம் செய் வாயூரிசத்தின் விளைவுகளை அடிநாதமாகக் கொண்டு குற்றங்களை உருவாக்கி அவற்றை மறைப்பதும் கண்டுபிடிப்பதுமான சுவாரசிய விளையாட்டைக் கட்டமைத்திருந்தது. முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு கேவிக்கேவி அழும் சேரனா இது என திகைக்க வைத்த பாத்திரப்படைப்பும் இன்ன பிற கதாபாத்திரங்களின் செய்நேர்த்தித் தன்மையும் மிஷ்கினால் மட்டுமே இயலக் கூடிய சாத்தியங்கள். யுத்தம் செய்யில் பதிவு செய்யப்பட்டிருந்த மார்ச்சுவரிக் காட்சிகள் தமிழில் கிடையவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

துண்டிக்கப் பட்ட கைகளை பொது இடத்தில் காட்சிக்கு வைப்பது, மெல்ல மெல்ல கதாநாயகனும் பார்வையாளர்களையும் புதிரை நோக்கிப் போவது போன்ற த்ரில்லர் தன்மைகள் படத்தின் கச்சிதமான திரைக்கதைக்கு கட்டியம் கூறுகின்றன. படத்தின் இசை,எடிட்டிங் என பல விஷயங்கள் த்ரில்லர் உணர்விற்கு உறுதுணையாக இருந்தது. சில பார்ப்பனியத் தன்மைகள் இடையிடையே எட்டிப் பார்த்தது ”உங்களால இவ்ளோ முடியும்னா படிச்ச எங்களால என்னாலாம் பண்ண முடியும்” என ஜெயப்ப்ரகாஷ் கேட்பது ஆபத்தான விளையாட்டுதான் என்றாலும் நிகழ்ந்த குற்றங்களை கணக்கில் கொண்டு இந்த வசனத்தை தாண்டிப் போகலாம். ஆனால் ஒரு படத்தின் அரசியல் என்பது தவிர்க்கமுடியாதது என்னதான் த்ரில்லர் படம் என்றாலும் அரசியல் ப்ரக்ஞையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எங்கேயும் எப்போதும்

விபத்தைக் களமாகக் கொண்டு இதற்கு முன்பு வந்த சிறந்த படங்களாக ரிதம் மற்றும் அங்காடித் தெருவைச் சொல்லலாம். ரிதம் வேகமான திரைக்கதை இல்லை என்கிற ஒரே குறைதானே தவிர பிரமாதமான கதைக் களம். அங்காடித் தெருவில் விபத்திற்கு பிரதான இடம் இல்லையென்றாலும் தீர்மானிக்கும் சக்தியாக விபத்து இருக்கிறது. அங்காடித் தெருவிலும் ரிதத்திலும் விபத்திலிருந்து வாழ்வு துவங்கும். இதில் விபத்தோடு சில உயிர்கள் அஸ்தமிக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸை முதலில் சொல்லி விட்டு பின்பு அந்தக் க்ளைமாக்சின் உச்ச பதற்றத்திற்காகவே கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள். அஞ்சலி அனன்யா கதாபாத்திரங்கள் யாவும் பாலகுமாரனின் பெண் தன்மைகளைக் காட்சிப் படுத்தியிருந்ததாலோ என்னவோ என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த எல்லோருக்குமே இந்தப் பெண் கதாபாத்திரங்கள் மீது வாஞ்சையும் பிடித்தமும் இருந்ததை பெருவாரியான பஸ்ஸர்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல படம் என்கிற அங்கீகாரத்தை உடனே தந்துவிடும் அளவிற்கு இயக்கம் இருந்தது. அறிமுக இயக்குனர் என்ற வகையில் சரவணனுக்கு எங்கேயும் எப்போதும் நல்லதொரு ஆரம்பம். ஆனால் ஒரு நல்ல திரைப்படம் என்பது வெறும் இரசனை மனோபாவத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதில்லை. இது முழுக்க ஆண்களின் பெண் பற்றிய பகற்கனவு மட்டுமேதான். இன்னொரு வகையில் பெண் மீது நாம் நிகழ்த்தும் வரலாற்று வன்முறையும் கூட.


மெளனகுரு

வருட இறுதியில் வந்த ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுக இயக்குனரான சாந்தகுமார் மிரட்டியிருக்கிறார். ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையில்லாத எந்த இடைச்சொருகலும் படத்தில் கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்கள்- சாமன்யன் பாதிக்கப்படுவது- அதிலிருந்து வெளிவருவது என்பது போன்ற பழைய ஹீரோயிசக் கதைதான் என்றாலும் சொல்லி இருக்கும் விதம் முற்றிலும் மாறுபட்டது. படத்தின் பலம் சின்னச் சின்ன காட்சியமைப்புகளிலும் பாத்திரப் படைப்புகளிலும் முழு கவனத்தை செலுத்தியிருப்பதுதான். குறிப்பாக கர்ப்பிணி போலிஸ் உமா. ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பு. இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழில் இதற்கு முன்பு வந்தது கிடையாது. ஒட்டு மொத்த படத்தையும் சாதாரணமாக இந்தப் பாத்திரம் சுமக்கிறது. அதிகம் நடிக்கத் தேவையில்லாத பாத்திரமென்பதால் அருள்நிதி தப்பிக்கிறார். ஓரம்போ ஜான் விஜய், மனநல விடுதி நண்பர் முருகதாஸ் என நேர்த்தியான நடிகர்கள் படத்தின் ஓட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை நிற்காத திரைக்கதை, சின்ன சின்ன திருப்பங்கள் என மெளன குரு கச்சிதமான படம்.

அழகர்சாமியின் குதிரை

கதைக்கு சொந்தக்காரரான பாஸ்கர் சக்தியே இணை இயக்குனராகவும் பணியாற்றி இருப்பதாலோ என்னவோ அபூர்வமாய் சினிமாவாகும் இலக்கியம், வழக்கமாய் சிதைந்து போகும் அபத்தத்திலிருந்து இந்தப் படம் தப்பிப் பிழைத்திருக்கிறது. ஒரு சின்னப் புன்முறுவல் இல்லாமல் அழகர் சாமியின் குதிரை சிறுகதையைப் படிக்கவே முடியாது அதேப் புன்முறுவல் படமாய் பார்க்கும்போதும் தங்கி இருந்ததுதான் இந்த முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். பாஸ்கர் சக்தியின் கதைகள் அதிக இலக்கிய ஜோடனைகளில்லாத, நேரடியான, யதார்த்தக் கதைகள். சில நுட்பமான பார்வைகளும், அபாரமான கிண்டல்களும் பாஸ்கரின் எல்லாக் கதைகளிலுமே காணக் கிடைக்கும். அந்தக் கதைகளில் அழகர்சாமியின் குதிரை உச்சமானது. அதைத் திரையில் காணும்போது கிடைத்த உற்சாகம் வாசகனுக்கே உரியது.

தொழில் முறை நடிகர்களை அதிகம் பயன்படுத்தாமல், கிராமத்து முகங்களைத் தேடிப் பிடித்துப் போட்டிருப்பது படத்தோடு ஒன்றுவதற்கு உதவுகிறது. எவரின் நம்பிக்கைகளையும் காயப்படுத்தாத, மெல்லிதான கிண்டலொன்று படம் முழுக்க இழைந்திருக்கிறது. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் சில நிமிடங்களே வந்து போகும் அபாரமான கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள். அப்புக்குட்டி மனதை அள்ளுகிறார். குதிரையை காணும் இடமாகட்டும், சைக்கிளை அப்படியே போட்டு விட்டுக் காவல் நிலையத்திற்குப் போய் கதறும் காட்சியாகட்டும் அப்புக் குட்டி அபாரப்படுத்தியிருக்கிறார்.

அப்புக் குட்டி போலிஸ் ஸ்டேசனில் அழும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். அப்படி ஒரு சோகமான காட்சியிலும் அப்புக் குட்டி போலிஸ் என நினைத்து திருடனின் காலைப் பிடித்து அழுவார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாநாயகனை சித்தரித்திருப்பது மாற்றங்களின் மீது நம்பிக்கையை வரவழைக்கிறது.

குதிரை காணாமல் போனதற்காக கிராமத்து மக்கள் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுக்கும் காட்சி, ராமகிருஷ்ணன் அண்ட் கோ வினர் விவகாரமான சிறுவன் பிரபுவை நைச்சியம் பண்ணித் தகவல் வாங்க முயற்சிக்கும் காட்சி, என படம் முழுக்க சப்தமாய் சிரிக்க ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. படத்தில் ஓரிரு குறைகள் இருக்கிறதுதான் என்றாலும் நல்ல நகைச்சுவையும் அழுத்தமான இரண்டாம் பாதிக் கதையும் நல்ல படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறது.

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு படத்தோடு ஒப்பிடுகையில் அழகர்சாமியின் குதிரை சற்றுப் பின் தங்கித்தான் இருக்கிறது என்றாலும் சுசீந்திரன் குழுவினரின் மீது நல்லதொரு நம்பிக்கையை இந்தப் படம் வரவழைத்திருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சரியாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்ததுதான் என்றாலும் வந்தவரை ஓகே என சந்தோஷப் பட்டுக் கொள்ளவும் இதில் நிறைய விஷயங்களிருக்கின்றன.

வாகை சூட வா

சிறார்களின் வாழ்வும் கல்வியும் நசுக்கப்படுவதைக் களமாகக் கொண்ட படம். நல்ல பாடல்கள் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமே இல்லாத கதை சொல்லும் முறை, வழக்கமான தமிழ் சினிமாத்தனங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருந்த பாணி என பல சிறப்புகள் இருந்தாலும் வாகை சூடவா வின் பலவீனமான திரைக்கதை படத்தை மிளிரச் செய்யவில்லை. படத்தில் நிகழ்வுகள்/ சம்பவங்கள் என எதுவுமே கிடையாது. இரண்டே கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை. ஒரு மணிநேரப் படமாக்கி இருந்தால் கச்சிதமாக இருந்திருக்கக் கூடும். சற்குணத்தால் களவாணி போன்று இன்னொரு நேர்த்தியான கமர்சியல் படத்தை தந்திருக்க முடியும்தான் என்றாலும் இப்படி ஒரு முயற்சிக்காக பாராட்டத்தான் வேண்டும்.

மங்காத்தா

தமிழில் எனக்குப் பிடிக்காத நடிகர் விஜய். அவருக்கடுத்த இடம் அஜித்திற்கு. இவ்விருவரும் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூட சில நேரங்களில் யாரிடமாவது பொங்குவேன். ஆனால் மங்காத்தா அஜித் சற்று அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். லும்பன் கேரக்டரை ஹீரோயிசம் இல்லாமல் லும்பனாகவே செய்திருக்கிறார் இதுவும் ஹீரோயிசத்தின் பாகம்தான் என்றாலும் கூட வெங்கட் பிரபுவின் வழக்கமான கும்பலர்களில் ஒருவராய் இணைந்திருப்பது நல்லதொரு மாற்றம்தான். வெங்கட் பிரபு சென்னை 28 ற்குப் பிறகு கதைக்கெல்லாம் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஹாலிவுட் படங்களை சுட்டு காமெடியையும் சுவாரசியத்தையும் சேர்த்து கமர்சியலாக வெற்றி பெற்று விடுகிறார். மங்காத்தாவிலும் அதே அழுகுணி ஆட்டம்தான். guy Ritchie படங்களை பிச்சி பிச்சி மங்காத்தாவாக்கி இருக்கிறார். போரடிக்காத திரைக்கதை மற்றும் அஜித்தின் மாற்று ஆட்டத்திற்காக படத்தைப் பார்க்கலாம். ஏழாம் அறிவு மாதிரியான தமிழர் உணர்வை தீனியாக்கும் படங்களுக்கு மங்காத்தாக்கள் தேவலாம் என்பது என் துணிபு.

தமிழ் திரை நாயகர்களை பொறுத்த மட்டில் சூர்யாவும் விக்ரமும் நம்பிக்கைத் தரக் கூடியவர்கள் என்கிற பார்வையை இந்த வருடம் மாற்றிக் கொள்ள வேண்டியதாய் போயிற்று. போலவே வருட நடுவில் நம்பிக்கை தந்த சுசீந்திரன் வருட இறுதில் சொதப்பி இருக்கிறார். ராஜபாட்டை போன்ற படத்தை அவரால் எப்படி எடுக்க முடிந்தது என்று எரிச்சல்பட வேண்டியதாய் போயிற்று. மதராசப் பட்டினம் விஜய் மீதிருக்கும் கடுப்பு தெய்வத் திருமகளிற்குப் பிறகு இரட்டிப்பாகியிருக்கிறது. அவர் சொந்தமாக எப்போது படமெடுப்பார் என்பதுதான் அடுத்த வருடத்தின் பேராவல். மற்றபடி தமிழ் சினிமாவிற்கு தியாகராஜன் குமாரராஜா, சாந்தகுமார், சரவணன் போன்ற புது இயக்குனர்கள் இந்த வருடத்தில் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அவர்களின் அடுத்த படங்களையும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.நடிகைகளில் ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் இரும்பு மனுஷி ரிச்சாதான்.அஞ்சலியின் நடிப்பிலும் மெருகு கூடிக் கொண்டிருக்கிறது. அமலா பால் அழகாக இருக்கிறார். இசையைப் பொருத்த மட்டில் வாகை சூட வா விற்கு முதலிடம். மயக்கம் என்ன, ஆடுகளம், தெய்வத் திருமகள் படப் பாடல்கள் பிடித்திருந்தன. பின்னணி இசையில் ஆரண்ய காண்டம் யுவன் கலக்கி இருந்தார். யுத்தம் செய் கே நல்ல அறிமுகம்.

அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.

9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நடுநிலையான வரிசை...

தங்கள் பதிவுக்கு ஒரு சபாஷ்.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

//சராசரி ஆண் புனைந்து கொள்ளும் தேவதைகளின் நிஜநிழல் வடிவங்கள்//

//
இது முழுக்க ஆண்களின் பெண் பற்றிய பகற்கனவு மட்டுமேதான். இன்னொரு வகையில் பெண் மீது நாம் நிகழ்த்தும் வரலாற்று வன்முறையும் கூட.//


இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான் அய்யனார் ஆனால் செல்வராகவனின் பெண்களில் ஈர்ப்பிருப்பதும் கூட ஆண் மனங்களின் ஆசைதான்.


ஆனால் நீங்கள் சொல்வது முரணாக இருக்கிறது. புனைந்து கொள்ளும் வடிவங்களில் இருந்தால் அது போதுமா?

manjoorraja said...

அவன் இவன் படத்திற்கு மூன்றாம் இடம் கொடுத்ததை தவிர மற்றவை அனைத்தும் ஓகே.

இனிய வாழ்த்துகள்

Jegadeesh Kumar said...

அவன் இவனை என்னாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. மௌனகுரு ஆச்சரியம்தான். பார்க்க முயற்சிக்கிறேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

படவரிசை எனக்கு ஓகேயாக தெரிகிறது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Venkatesh Kumaravel said...

மௌன குரு உமா ரியாஸ் குறித்து - ஃபார்கோ பார்த்திருக்கிறீர்கள் தானே? எனக்கென்னவோ அதன் நேரடி பாதிப்பு மாதிரியே தோன்றியது.

நிறைய சொல்ல விழைகிறேன். முடிந்தால் பதிவில் எழுதுகிறேன்.

சமுத்ரா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...