Monday, December 19, 2011

அஞ்சலி - சிகெரெட்


பதினேழு வயது. டிப்ளமா இரண்டாவது வருடம். ஒரு மீறலுக்கு, எதிர்ப்பை ஆர்ப்பாட்டமாய் தெரிவிப்பதற்கு ஆரம்பித்ததுதான். முதல் வருட எச்.ஓ.டி யே தன்னுடைய வீட்டை ஹாஸ்டல் மாதிரி நடத்திக் கொண்டிருந்தார். இருபத்தைந்து மாணவர்களும் இரண்டு தடித்த நாய்களும் அவர் வீட்டில் தங்கியிருந்தோம். கடுமையான சட்டங்கள்.இருபத்தைந்து பேரும் உள்ளே குமுறிக் கொண்டிருந்தாலும் எச்.ஓ.டி என்பதால் வெளியே காண்பித்துக் கொள்ள முடியவில்லை. மேற்படி நாளில் குடும்பத்தோடு அவர் வெளியூர் போயிருந்த சமயம். இருபத்தைந்து பேருக்கும் உற்சாகம் கரை புரண்டது. என்னசெய்வதென்றே தெரியாமல் போனது. கோல்ட் பிளேக் பில்டர் சிகரெட்டை வாங்கி வந்து பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லா அறைக்குள்ளும் போய் புகையை ஊதித் தள்ளி தத்தமது கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டனர். அந்த உற்சாக புகை எதிர்ப்பில் நானும் கலந்து கொள்ளும் பொருட்டு வாழ்நாளின் முதல் சிகரெட்டை உள்ளே இழுக்கத் தெரியாது புகைத்து முடித்தேன். விரைவில் சிகரெட் புகைப்பது என்பது பதின்மத்தின் மாபெரும் லும்ப அடையாளம் என்பதும் தெரிய வந்தது. இரண்டு மாதத்தில் புகையை மூக்கு மற்றும் காது வழியே வெளியேற்றுவது, புகையை உள்ளிழுத்து விட்டு டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு இழுத்ததை வெளியே விடுவது, வளையங்களை காற்று வெளியில் உருவாக்குவது மாதிரியான கலைகளில் தேர்ச்சி பெற்றேன்.

ஒரு கட்டத்தில் எச்.ஓ.டி எங்களை மேய்க்க முடியாது அறையிலிருந்து வெளியேற்றினார். சந்தோஷமாய் அருகிலிருந்த கிராமத்தில் தனி வீடு எடுத்து தங்கிக் கொண்டோம். புகை, மகிழ்ச்சி எல்லாமே இரட்டிப்பானது. கல்லூரி பஸ் ஸ்டாண்டில் நின்று புகைபிடித்தால் தாம் பெரிய ஆள் என்றொரு மிதப்பு வந்து போகும். பெரிய ஸெட் ஆட்கள் தவ்ளோண்டு பையன் என்பதைக் கூட பொருட்படுத்தாது ஆட்டையில் சேர்த்துக் கொள்வார்கள். மூன்றாம் வருட பையனையும் மச்சி என தாராளமாகக் கூப்பிடலாம். பீடியின் உபயத்தால்தான் நிறைய மார்க் வாங்கினோம். நாளை தேர்வு என்றால் இன்றிரவு முழுக்க கண் விழித்துப் படிப்போம். தூக்கத்தை விரட்ட பீடிக்கட்டு. எல்லோருமே நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோம். கடைசி வருடத்தில் தேர்வுகள் முடிந்து கல்லூரி அடைக்கப்பட்டு ஈ காக்கை உட்பட எல்லாமும் பறந்து போயிருந்தும் நாங்கள் மட்டும் தங்கியிருந்து கொட்டமடித்தோம். ஸரக்கடிக்க வழியில்லாது போன ஒரு பிற்பகலில் எங்கிருந்தோ கஞ்சாத் துகள் பொட்டலங்களை அறைத் தோழன் வாங்கி வந்திருந்தான். தலைகீழான உலகத்தை, மரண போதையை அன்று புகை வழியே தரிசிக்க முடிந்தது. பாண்டிப் பயலுக்கு சற்று அதிகமாகி பிதற்ற ஆரம்பித்துவிட்டான். ஒரு கட்டத்தில் அவனுக்கு செத்துப் போய்விடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. டைரியை துழாவி எடுத்து தன்னுடைய கடைசி கடிதத்தை கைநடுங்க வீட்டாருக்கு எழுத ஆரம்பித்ததுதான் அந்நிகழ்வின் உச்சம். நள்ளிரவு வாக்கில் அனைவரும் சமநிலைக்குத் திரும்பி, பேயாய் பசித்த வயிற்றை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாமல் அங்கிருந்த ஒரே ஓட்டல் கடைக்காரரையும் எழுப்பி அடுத்த நாள் காலை மாடு உண்பதற்காய் மீதமிருந்த பண்டங்களை தின்று விட்டு வந்தோம்.

வேலைக்குப் போக ஆரம்பித்த வாழ்க்கை வேரொரு விதம். பயம் குறிக்கோள் எதுவுமே இல்லாத பதின் பருவத்தைப் போலில்லை அது. புகை மட்டும் தொடர்ந்து வந்தது. நிறைய நண்பர்களையும் கொண்டு வந்தது. மிகவும் நல்ல மாதிரியான பொது அடையாளங்களில் மாட்டிக் கொண்டுவிடாமலிருக்கவும் புகை உதவியது. புதுச்சேரி நகரமும் வாழ்வும் பதின் பருவத்தை மீண்டும் கொண்டு வந்தது. நிறைய நண்பர்கள், நிறைய கொண்டாட்டம். வாழ்வு அப்படியே வழுக்கிக் கொண்டு போனது. புகை புகை புகைதான். என் வாழ்வில் அதிகபட்ச சிகரெட்டுகளை ஊதித் தள்ளியது புதுச்சேரி வாழ்வில்தான். நாளொன்றுக்கு பதினைந்து சிகரெட்டுகள் குறையாமல் புகைத்தேன். இரவுப் பணியென்றால் கணக்கு வழக்கே கிடையாது. கிடைத்த நண்பர்களும் அப்படியே. ஒரு சிகரெட்டிற்கும் அடுத்த சிகரெட்டிற்கும் அரை மணி நேர இடைவெளி போன்ற ரூல்ஸ்களை நாங்களே உருவாக்கி அதைத் தினம் நாங்களே மீறினோம். நான்கு சிகரெட்டுகளும் இரண்டு டீயும்தான் இரண்டு வருடக் காலை உணவாக இருந்தது.

வாழ்வு விசிறிக் கடாசியதில் ஒசூர், சென்னை, மதுரை நகரங்களை சுற்றிமுடித்து நானும் புகையும் ஷார்ஜா வந்தோம். ஷார்ஜா அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே புகைக்கலாம். கணினியோடு ஆஸ்ட்ரேவும் டேபிளில் இருக்கும். விதம் விதமான சிகரெட்டுகளும் கிடைத்தன. எல்லாமிருந்தும் புகைக்க உடன் நண்பர்கள் இல்லாமல் போனது சிகரெட்டின் எண்ணிக்கையை கணிசமாய் குறைத்தது. அடுத்தடுத்த பணி மாற்றங்கள். கடைசி இரண்டு அலுவலகங்களிலும் புகைக்க தடை. வெளியில் போய் புகைக்கலாம் என்றாலும் உடன் பணிபுரியும் ஒருவருக்கும் புகைப்பழக்கம் கிடையாது. அத்தோடு சோம்பலும் சேர்ந்து கொள்ளவே கடந்த மூன்று வருடங்களாய் அலுவலகத்தில் புகைப்பது நின்று போனது. திருமணம் குழந்தைகள் என்றானபிறகு மிடில் க்ளாஸ் உடல் நலன் விழிப்படைந்து நாளொன்றுக்கு இரண்டு சிகரெட்டுகள் என்ற கணக்கை வகுத்துக் கொண்டது. அவ்வப்போது மீறல்கள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு பாக்கெட் சிகரெட் என்றொரு கணக்கில்தான் ஒரு வருடம் ஓடியது. இனி ..

ஆம் நான் புகையை நிறுத்திவிட்டேன். கடைசியாய் ஒரு ரெட் மார்ல்ப்ரோ சிகரெட்டை பத்து நாட்களுக்கு முன்பு ஒரு அதிகாலையில் குளிரில் நடுங்க நடுங்க புகைத்தோடு சரி. இந்த முடிவு புது வருடத்திற்கான வழக்கமான இனிமேல் வகையறா முடிவு அல்ல. உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்க bore அடிக்கிறது. கடுமையான bore. சிகரெட் பிடிப்பது உற்சாகத்திற்காக என்கிற நிலையிலிருந்து நகர்ந்து சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கடமையாய் வேலையாய் மாறிப்போனது. ஏற்கனவே கடமை, கண்ணியம், கட்டுப்பாடாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, எதற்கு இன்னொரு சுமை எனத் தோன்றவேதான் நிறுத்தி விட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா? இந்தக் கருமத்தை எல்லாம் எழுதி எங்களை ஏன் கடுப்பேற்றுகிறாய் என்கிற உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் எங்களின் பதினான்கு வருட பந்தத்திற்கு ஒரு அஞ்சலிக் கட்டுரை கூட எழுதவில்லையென்றால் அப்புறம் நானென்ன வளரும் எழுத்தாளன்?

என் ப்ரிய புகையே- சிகரெட்டே போய் வா. என் பழைய காதலிகளைப் போல நீயும் நானும் ஒரு போதும் சந்தித்து விடாதிருப்போம்.

புகை கட்டுரைக்கு எதற்கு அஞ்சலி போட்டோ என்கிற கேள்வி உங்களுக்கு எழாதுதானே?

Friday, December 16, 2011

குறுநாவல் 4. அத்தியாயம்3“அமுதாக்கா இந்தா மருதாணிப் பூ”
“ஐ! ஹப்பா என்ன வாசன. இந்த வாசன ஒரு மாதிரி இருக்கில்ல”
“ஆமா “
“உனக்கும் பிடிக்குமா மருதாணிப்பூ”
“பிடிக்கும் ஆனா ரொம்ப பிடிச்சது மரமல்லிப்பூ தான்”
“ஏன் மரமல்லி பிடிக்கும்?”
“அதுல பீப்பி ஊதலாம்”
“ஐயே ஏழாவது வந்துட்ட இன்னுமா பீப்பிலாம் ஊதுற”
“அதனால என்ன?அக்கா கார்ட்ஸ் வெளாடலாமா?”
“போடா போர். நீதான் ஜெயிப்ப”
“வேற என்ன பண்ணலாம்”
“சும்மா இருக்கலாம்”


“உனக்கு ரஜினி பிடிக்குமா கமல் பிடிக்குமாடா?”
“ரஜினி. உனக்கு?”
“கமல். என்ன கலர் பிடிக்கும்?”
“நீலம். உனக்கு?”
“மெருன். ரொம்ப பிடிச்ச படம் எது?”
“ராஜா சின்ன ரோஜா.உனக்கு”
“அலைகள் ஓய்வதில்லை. உன் பிரெண்ட்ஸெல்லாம் யாரு?”
“முருகன், கோபி அப்புறம் ரமா. உன் பிரண்ட்ஸ்லாம் யாரு?”
“ப்ச் யாருமே இல்ல. நான் தான் பத்தாவதுக்கப்புறம் ஸ்கூல் போகலயே”
“கூட படிச்சவங்க?”
“பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆய்டுச்சி. தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு பசங்களும் வெளியூருக்கு படிக்க போய்ட்டாங்க”
“உனக்கு எப்பக்கா கல்யாணம்?”
“அடபோடா”
“ஏங்க்கா?”
“எனக்கு கல்யாணமே வேணாம்”
“ஏங்க்கா?”
“என்னவோ பிடிக்கலடா”
“போனமாசம் உன்ன பொண்ணு பாக்க வந்தாங்களே. மாப்ள கூட நல்லா இருந்ததா அம்மா சொன்னாங்க. அவங்க லட்டர் போடலயாக்கா?”
“இல்லடா.”
“ஏன் உன்ன பிடிக்கலயாமா?”
“எங்க தரித்திரத்த பிடிக்காம இருந்திருக்கும்”
“காசு கேட்கறாங்களாக்கா?”
“ஆமாடா ஓசில யாராச்சும் கல்யாணம் பண்ணிப்பாங்களா?”
“உங்க அப்பாதான் வேலைக்கு போறாரே அவர்கிட்ட காசு இல்லயா?”
“அவர்தான் சாயங்காலம் ஆனா குடிச்சிடுறாரோ எப்படி இருக்கும்?”
“நல்லவேள எனக்கு அப்பா இல்ல”
“உண்மதாண்டா. எனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லாம இருந்திருந்தா கூட நல்லாருந்துருக்கும்.”
..
“செம்பருத்தி பூத்திருக்காடா உங்க வீட்ல?”
“உனக்குதான் அடுக்கு செம்பருத்தி பிடிக்காதே”
“பரவால்ல. வா போய் பறிக்கலாம்”
“தலைலதான் மல்லி இருக்கே எதுக்கு செம்பருத்தி?”
“சாமிக்குடா. சாயங்காலம் கோயிலுக்கு போலாம்”
“அப்ப சாயங்காலம் பறிச்சிக்கலாம்”
“அப்ப வாடிடும்டா”
“போக்கா நான் வரல”
“ஏண்டா? “
“பாட்டி ஏதாச்சிம் வேல வைக்கும்”
“அம்மா எங்க”
“ஸ்கூல் க்கு போயாச்சி”
“இன்னிக்கு சனிக்கிழமையாச்சே”
“அடுத்த வாரம் ஏதோ இன்ஸ்பெக்சனாம் லாக் கொடுக்கனும்னு போயிருக்கு”
“உங்க அம்மா ரொம்ப நல்லவங்கடா”
“ஆமாக்கா”
“உன் அப்பாவ நினைவிருக்கா உனக்கு?”
“இல்லக்கா. நான் வயித்துல இருக்கும்போதே செத்துட்டதா அம்மா சொல்வாங்க”
“உங்க அம்மா பாவம்டா தனியா உன்ன வளத்திருக்காங்க”
“பாட்டி தான் இருக்காங்களே”
“இது வேற தனி டா”
“என்ன வேற?”
“ஆம்பள துணை இல்லாம தனியா இருக்கிறது”
“எதுக்கு ஆம்பள துண?”
“ஒரு பாதுகாப்புக்குதான்”
“அதான் நான் இருக்கனே”
“ஆமா இவரு பெரிய ஆம்பள”
“ஆமா நான் ஆம்பளதான்”
“அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?”
“ச்சீ நீ எனக்கு அக்காவாச்சே”
“அதுனால என்னடா?”
“பே”
“இப்ப வேணாம்டா வளந்து என்ன கல்யாணம் பண்ணிக்க”
“அய்ய பே”
“முகம் எப்படி செவக்குது பாரு”
“ நா வீட்டுக்கு போறேன்”
“டேய் ரவி நில்றா நில்றா”
"பே பே பே"

ஓட்டமாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். . பாட்டி கூடத்தில் உட்கார்ந்து கொண்டு கீரை ஆய்ந்து கொண்டிருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்து "எங்கடா போய் சுத்துற?" என அதட்டியது. மறு பேச்சு பேசாமல். செம்பருத்தி செடியிடம் போய் நின்றேன். கையகலத்தில் சிவப்படுக்காய் பூத்திருந்த ஒரு பூ விடம் கிசுகிசுப்பாய் சொன்னேன். “நான் வளந்து அமுதாக்காவ கல்யாணம் பண்ணிப்பேன்”

ஓவியம் எம்.எப்.ஹூசைன்

மேலும்

குறுநாவல் 4. அத்தியாயம்2“பயப்பட வைக்கிற அழகு அவ... அவளோட கண்கள சந்திச்ச நொடி செத்தாலும் மறக்காது. பெண் பார்க்க போயிருந்தப்ப கொஞ்சம் கூச்சத்தோட அவங்க வீட்ல தல குனிஞ்சி உட்கார்ந்திருந்தேன். மருதாணி சிவப்பேறிய பாதங்கள் மெல்ல நடந்து வந்திச்சி. கொலுசு தவழ்ந்து தவழ்ந்து வர சப்தம். அவளோட பாதங்கள் அவ்வளவு கச்சிதமா அளவெடுத்து செதுக்கின மாதிரி இருந்தது. நிமிர்ந்து முகம் பாக்கவே தோணல. பாதங்களையே பாத்திட்டிருந்தேன். கூட வந்தவங்க கிண்டல் கேட்டு நிமிர்ந்து பாத்தேன். அவ ரொம்ப நேரமா என்னையே பாத்திட்டிருந்தாபோல. அவ்வளவு ஆழமா ஒரு பார்வ. சடார்னு சிலிர்த்து போச்சி. அவ கண்கள தாண்டி என்னால எதையும் பாக்க முடியல. எழுந்து வெளிய ஓடிடனும் போல இருந்தது. இவ்ளோ அழக என்னால தாங்க முடியாதுன்னு தோணுச்சி. அவ முகத்த சரியா பாக்க கூட முடியாம, எப்படா இந்த பெண் பார்க்கிற சம்பிரதாயம் முடியும்னு நெருப்பு மேல உட்கார்ந்திருந்தேன். முடிஞ்சதும் ஓட்டமும் நடையுமா வந்துட்டேன். அம்மாகிட்ட பொண்ண பிடிக்கலன்னுட்டேன். ஏண்டான்னு கேட்டதுக்கு பதிலே தெரியல. அப்புறம் தொடர்ந்து அந்த பார்வை ராத்திரில தூங்க விடாம இம்சிச்சது. அம்மாவும் அந்த பொண்ணையே முடிச்சிடலாம்னு வற்புறுத்துனாங்க. மூணு நாள் கழிச்சி பட்னு சரின்னுட்டேன்.

தாலி கட்டி முடிச்சப்புறம்தான் மண மேடைல அவள சகஜமா என்னால பாக்க முடிஞ்சது. சந்தன நிறம். என்ன விட கொஞ்சம் உயரம். அய்யோ அவ உடம்ப உங்ககிட்ட என்னால சொல்லவே முடியாது. சாகடிக்கிற அழகு அவ. முதலிரவு. அவள தொட்ட உடனேயே சிலிர்த்திடுச்சி. அணைச்ச உடனே எனக்கு எல்லாமே ஆகிடுச்சி. மூணு மாசம் இப்படியே போச்சு. ஒரே ஒரு முற கூட என்னால சரியா பண்ண முடியல. ஆண்ம குறைவா இருக்குமோன்னு சந்தேகமா இருந்தது. எனக்கு பழக்கமான ஒரு பெண்ணிருந்தா. அவளோட கல்யாணத்துக்கு முன்னவே எனக்கு தொடர்பு இருந்தது. அவளுக்கும் என்ன பிடிக்கும். அவளோட ஒரு நாள் உறவு வச்சிகிட்டேன். உறவு திருப்தியா இருந்தது. பிழிஞ்சிட்டடான்னு ஆசையா அலுத்து கிட்டா. அப்போ பிரச்சின மனசுதான்னு தெளிவாகி, ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு போனேன். நல்ல வெளிச்சத்துல அவளோட துணிகள முழுசா விலக்கினேன். தகதகன்னு அவளோட முலைகள் ரெண்டும் ஜொலிச்சது. மிரண்டுட்டேன். மெதுவா அவ இடுப்புக்கு கீழ பாத்தப்ப அய்யோ அவ்வளவு பெரிய பூ . அம்மா! எனக்கு மயிர்க்கால்லாம் நின்னுடுச்சி. என்ன மன்னிச்சிடுன்னு சொல்லிட்டு வெளில ஓடிவந்தேன். இருட்டுல எந்த பக்கம் போறேன்னு தெரியாத ஓட்டம். ஓடிக் களைச்சி எங்கயோ விழுந்து மயங்கிட்டேன். மறுநாள்தான் எழுந்திரிச்சி பார்த்தேன். என்னால அவளோட வாழவே முடியாது. அவ மோகினி, சாமி. அவளப் பாக்கவே பயமா இருக்கு. என்னால வீட்ட விட்டு ஓடவும் முடியல. அம்மாவ தனியா விட்டுப் போகவும் முடியாது. “

சாமி அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

போதை தெளிந்து எழுந்து அவர் முன்னால் நடக்க நான் பின் தொடர்ந்தேன். வேட்டவலம் ரோட்டிலிருந்து வெகுதூரம் நடந்து செங்கம் ரோட்டிற்கு வந்துவிட்டோம். இரமணாசிரமம் தாண்டியதும் சாமி சடாரென வலது புறம் திரும்பி கருமாரியம்மன் கோயில் தாண்டி, பலாக்குளத் திட்டில் போய் அமர்ந்து கொண்டார். அவர் உட்கார்ந்த இடத்திற்கும் கீழ் இறங்கி இன்னொரு கருங்கல்லில் உட்கார்ந்து கொண்டேன். என்ன ஏது என்றெல்லாம் அவர் கேட்கவில்லை நானாய்தான் சொல்ல ஆரம்பித்தேன். சாமி எதுவும் பேசாமல் தொடர்ந்து மெளனமாய் இருந்தார். குளத்தில் பாதி அளவிற்குதான் நீர் இருந்தது. பாசிக் குளம் கருமையாய் எந்த அசைவுமே இல்லாமல் தூங்கிக் கிடந்தது. எனக்குப் புகைக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் மீண்டும் கஞ்சாப் புகையை உள்ளிழுக்க பயமாய் இருந்தது. அவராய் ஆரம்பிக்கட்டும் எனக் காத்திருந்தேன்.

நிலா அவ்வப்போது மேகங்களுக்கிடையில் எட்டிப் பார்த்ததே தவிர முழுவதுமாய் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மிக அருகில் மலை துவங்கியது. நேரம் என்னவாகி இருக்கும் எனத் தெரியவில்லை. ஒரு மணியை தாண்டி இருக்கலாம். மனித சஞ்சாரமே இல்லாத இந்த இரவு எனக்குப் புதிது. பிறந்தது முதல் திருவண்ணாமலையில்தான் இருக்கிறேன் என்றாலும் இந்தப் பகுதிகளுக்கு வந்ததே கிடையாது. பலாக்குளத்தின் கரையோரங்களில் மிகப் பிரம்மாண்டமான மரங்கள் அடர்த்தியாய் கருமையைப் பூசிக் கொண்டு நின்றுகொண்டிருந்தன. காலிடுக்கிலிருந்து பாம்பு ஏதாவது வருமா? என யோசனையாக இருந்தது. பாம்பின் நினைவு வந்த பிறகு உட்கார முடியவில்லை. எழுந்து கரையில் நடக்க ஆரம்பித்தேன்.

சாமி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“வீட்டுக்கு போ. பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க வழிய பாரு. உம் பொண்டாட்டி மோகினியும் கிடையாது சாமியும் கிடையாது. சாதாரண பொம்பளதான். எல்லாப் பொம்பளக்கிம் இருக்கிறதுதான் அவளுக்கும் இருக்கு. பூ இருக்கு புண்ணாக்கு இருக்குன்னு நீயா எதையும் கற்பன பண்ணிக்காத”

மெளனமாக இருந்தேன்

“வேலைக்கு ஏதாச்சும் போறியா?”

“ம். ஸ்கூல் வாத்தியார்”

“அடப்பாவி புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறவனா நீ?”

தலையை குனிந்து கொண்டேன்

“பள்ளிகோடம் போறதில்லயா?”

“இப்ப ஒருமாசமா போறதில்ல. மெடிக்கல் லீவ். “

“எப்ப கல்யாணம் ஆச்சி உனக்கு ?”

“நாலு மாசம் இருக்கும்”

“அப்ப இது ஏதோ பிரம்ம. உம் பொண்டாட்டிய எங்காச்சிம் தனியா கூட்டிப் போ. தகிரியமா அவள பாரு. எல்லாம் சரியா போய்டும்.”

எதுவும் பேசாமல் மெளனம் காத்தேன்.

“பொம்பளப் பாவம் சும்மா விடாதுடா. அவள இப்படி தவிக்க விடாத. ஒழுங்கா குடுத்தனம் நடத்துற வழிய பாரு.”
எழுந்து வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தேன். அவரைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.


வீதி நாய்களும் குறைக்க சோம்பல்படும் நேரத்தில் கதவைத் தட்டினேன். லேசாய்த்தான் தட்டினேன். வாசல் பல்பு பளிச் சென எரிந்தது. சத்தமே இல்லாமல் கதவு திறந்தது. கதவுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு மிரண்ட பெரிய விழிகளால் என்னைப் பார்த்தாள். ஹாலில் நீல விளக்கு. பார்வையை தாழ்த்திக் கொண்டு சற்று முன்னால் போய் தயக்கமாய் திரும்பிப் பார்த்தேன். நீல வெளிச்சத்தில் பெரிய பெரிய பூப்போட்ட நைட்டியில் பூப்பூவாய் நின்று கொண்டிருந்தாள். பூ பூ மனம் அடிக்கத் தொடங்கியது. அடித்தடித்து பூ பூ பூ என உரக்க கத்த ஆரம்பித்தது. தலையைப் பிடித்துக் கொண்டு தோட்டத்திற்காய் ஓடினேன். வெளிச் சுவரிற்கும் மாடிக்குப் போகும் படிக்கட்டிற்கும் இடையே ஒரு மிகச் சிறிய இடம் இருக்கும். அங்கு போய் உடல் குறுக்கிப் படுத்துக் கொண்டேன்.

- ஓவியம் எம்.எப்.ஹூசைன்


மேலும்

Tuesday, December 13, 2011

குறுநாவல் 4. அத்தியாயம்1ஒரு மட்டமான பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். மட்டம் என்பது நாகரீக உச்சரிப்பு. படு கேவலமான பார் என்பது சரியாக இருக்கலாம். பார் என இதைச் சொல்லலாமா? என்று கூடத் தெரியவில்லை. தகரக் கூரை வேய்ந்த குட்டிச் சுவர் என்பது சரியாக இருக்கலாம். ஒரு மூலையிலிருந்து மூத்திர நாற்றம் கசிந்து வந்து கொண்டிருந்தது. கூட்டமாய் கூரைக்குள் குடித்து விட்டு கூரைக்கு வெளியே போய் அந்த மூலைக்குப் பின்னால்தான் ஒன்றுக்கடிப்பார்கள். இன்னொரு மூலையில் மஞ்சளாய் வாந்தி ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நின்றபடியே சரக்கை வாயில் ஊத்திக் கொள்ள ஏதுவாய் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சுவரில் எப்படியோ அரையடிப் பலகையை நீளத்திற்கும் அடித்து வைத்திருந்தார்கள். அறை நடுவில் கால் உடைந்த மேசை ஒன்றும், எதிரெதிராய் இரண்டு பிளாஸ்டிக் ஸ்டூல்களும் போடப்பட்டிருந்தன.

மூலைகளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருக்கிறேன். அரைப் புட்டி கருப்பு ரம் பாதி தீர்ந்திருந்தது. மேசை மீது சின்னதாய் பல்லால் கடித்து துளையிட்ட ஒரு வாட்டர் பாக்கெட். உள்ளங்கை அகல எவர்சில்வர்வர் தட்டில் சுண்டல். அடுத்த பாதி புட்டி வயிற்றுக்குள் போவதற்கு முன்பு ஒரு சிகரெட் வேண்டும். கையில் சிகரெட் இல்லை. வாங்க காசும் இல்லை. வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாராவது வருவார்கள். வரவேண்டும்.

நண்பகல் பதினோரு மணி இருக்கலாம். வெயில் மெதுவாய் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. யாரும் வரக்காணோம். கடைப் பையனிடம் கேட்கலாம். சிகரெட்தானே. நாளைக்கு காசு தருவதாய் சொல்லலாம் என்றபடியே தம்பீ எனக் குரல் கொடுத்தேன். சற்று நேரம் கழித்து காக்கி டவுசர் அணிந்த ஒரு சிறுவன் உள்ளே வந்தான். இந்தக் கடைக்கு பல முறை வந்திருக்கிறேன். ஒரு முறை கூட இந்த சிறுவனை சரியாய் பார்த்ததில்லை. பிஞ்சு முகம். பனிரெண்டு வயதிற்கும் குறைவாய்தான் இருக்க வேண்டும்.

“இன்னா வோணும்னா?” மூக்கை உறிஞ்சிக் கொண்டான். அவனிடம் கடன் கேட்க கூசியது.

“ஒண்ணுமில்லபா அப்றமா கூப்டுறென்” என்றேன்.

அவன் திரும்பிய நொடியில் ஒரு காவிச் சட்டை உள்ளே நுழைந்தது. பாரை ஒரு முறை நோட்டம் விட்டு முகத்தை லேசாய் சுளித்தது. எனக்கு எதிரிலிருந்த ஸ்டூலை எடுத்து மேசைக்கு பக்கவாட்டில் போட்டு அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது.

“சாமிங்க கூட குடிக்க ஆரம்பிச்சிருச்சா?” என சிரித்தேன்.
சாமி எதுவும் சொல்லாமல் மெதுவாய் புன்னகைத்தார். கடைப் பையனிடம் பணத்தைக் கொடுத்தார். நான் குடிக்கும் அதே கருப்பு ரம்மைக் கேட்டார். ஜோபியில் கைவிட்டு ஒரு சாதா சிகரெட்டை வெளியில் எடுத்து மேசையில் லேசாய் தட்டி வாயில் வைத்தார்.

“எனக்கொண்ணு கிடைக்குமா?” என்றேன்
“இத உன்னால அடிக்க முடியாதே”
“ஏன்?”
“இது கஞ்சா”
“அதனால என்ன கொடுங்க ஒரு இழுப்பு இழுக்கிறேன்”
“பழக்கம் இருக்கா?”
“இல்ல”
“அப்ப வேணாம் ஏற்கனவே குடிச்சிருக்க. சுத்தி கடாசிரும்”
“அட கொடு சாமி. கஞ்சாவா நானான்னு பாத்துடலாம்”

சாமி இன்னொரு சிகரெட்டை ஜோபிக்குள் கைவிட்டுத் துழாவி வெளியில் எடுத்தார். எனக்காய் நீட்டினார்.
வேகமாய் வாங்கிப் பற்ற வைத்து இழுத்தேன்.

நாசியில் விநோத மணம். துவரஞ்செடி பற்றி எறிவதுபோல ஒரு வாசம். இழுத்து வெளியே விட்டால் ஊதுபத்தி புகைபோல மெல்லிசாய் வெளியேறியது.

“இன்னா சாமி கிக்கே இல்ல. சாதா சிகெரெட்ட விட மட்டமா கீது” என சிரித்தேன்

சாமி புன்னகைத்தார்.

அடுத்தடுத்த நான்கைந்து இழுப்புகள். விர்ரென தலை சுற்ற ஆரம்பித்தது. புது விதமான போதை. எல்லாமே நழுவி நழுவிப் போவது போல இருந்தது. நொடிகள் கரையக் கரைய சாமியும் நானும் செங்குத்தாய் தரையில் விழுவது போல இருந்தது. போதையை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க பயங்கரமாய் மெனக்கெட்டேன். ஸ்டூலில் அமர்ந்திருந்த உடல் வளைந்தது. சாமி என்னைக் கவனிக்காதவராய் பையன் கொண்டுவந்த கால்புட்டி ரம்மை நிதானமாய் குடித்து முடித்தார். மேசை மீது குடிக்காமல் இருந்த என்னுடையதைப் பார்த்தார். என்னால் உடலை அசைக்க முடியவில்லை. ஏதோ சொல்ல வாயெடுத்தேன் நாக்கு வளைந்து குழறியது. என்னைச் சுற்றி நடப்பதை மங்கலாய் பார்க்க முடிந்தது ஆனால் என்னால் பார்க்க மட்டும்தான் முடிந்தது.

சாமி எழுந்து நின்றார் என்னுடைய மீதி ரம்மை மூடி திருகி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியேறினார். உடல் ஸ்டூலில் உட்கார முடியாமல் தொம்மென கீழே விழுந்தது. யாரோ இழுத்துக் கொண்டுபோய் மூத்திர மூலையில் கிடத்தினார்கள்.

கண் விழித்தபோது சாலையோரத்தில் கிடந்தேன். சுற்றிலும் இருள் அடர்த்தியாய் சூழ்ந்திருந்தது. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் இருந்தது. எழுந்து நிற்க முயன்று விழுந்தேன். உடல் கிடுகிடுவென ஆடியது. மெதுவாய் மதிய வாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவில் வந்தன. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரம் சுயநினைவில்லாது கிடந்திருக்கிறேன். பயங்கரமாய் பசித்தது. தாகம் நாக்கை வறட்டியது. எழுந்து நிற்க முடியவில்லை. தலை தூக்க முடியாமல் கீழே கிடந்தது.

சற்று நேரத்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. கால் செருப்பு சப்தம் அந்த நள்ளிரவில் சீரான லயத்துடன் காதில் விழுந்தது. யாரோ என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். தண்ணீரை முகத்தில் அடித்தார்கள். கண் திறந்தால் மதியம் கஞ்சா கொடுத்த சாமி. கையில் வாட்டர் பாட்டிலோடு நின்றுகொண்டிருந்தார்.

அவரிடமிருந்து பாட்டிலை கிட்டத்தட்ட பிடுங்கி தொண்டையில் சரித்துக் கொண்டேன். பாட்டிலின் கடைசித் துளி நீரையும் குடித்த பின்னர் சற்று தெம்பு வந்தார் போலிருந்தது.
சாமி பாட்டிலை என் கையிலிருந்து வாங்கியபடி
“வீட்டுக்கு போ” என்றார்
அவரை சோர்வாய் பார்த்தேன்
“வீடு இருக்கில்ல”
“இருக்கு. ஆனா போனாலும் ஒண்ணுதான் போவலனாலும் ஒண்ணுதான்”
வார்த்தைகள் சன்னமாய் வந்து விழுந்தன

சாமி என்ன ஒரு நொடி ஆழமாய் பார்த்தார். "சரி வா என்னோட" என்றபடி முன்னால் நடந்தார்.ஓவியம் எம்.எப். ஹூசைன்
- மேலும்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...