Wednesday, September 7, 2011

இருபது வெள்ளைக்காரர்கள் – காட்சி எட்டுபட்சிகளின் சப்தம் கேட்டுத்தான் கண் விழித்தேன். கூடாரத்திலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சமவெளிக்குப் பின்னாலிருந்த மலைகளுக்குப் பின்னாலிருந்து சூரியன் மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது. ஓடைக்கு அந்தப் பக்கமிருந்து பட்சிகளின் சப்தங்கள் அந்தக் காலையை முழுவதுமாய் நிறைந்திருந்தன. கடைசிக் கூடாரத்திலிருந்து சமைக்கும் வாசம் வந்தது. நான்கு பேர் கைகளில் சில பட்சிகளை வேட்டையாடிக் கொண்டு ஓடையில் நீந்தி வந்து கொண்டிருந்தனர். அந்தக் குழுவிலேயே வயதான வெள்ளைக்காரர் ஓடைக்கு சமீபமாய் ஒரு ஓவிய ஸ்டேண்டை விரித்து வைத்துவிட்டு, நின்றபடி வரைந்து கொண்டிருந்தார். சமையல் நடக்கும் கூடாரத்திற்காய் போனேன். தமிழ் குழு தான் சமைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் வாசித்த பெண் ஒரு கொக்கின் தலையை அறுத்துக் கொண்டே என்னைப் பார்த்துச் சிரித்தாள். இன்னொரு பெண் வெந்த முயலின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். சிகரெட் கொடுத்ததிற்கு வருத்தம் தெரிவித்தாள். “அது கொஞ்சம் காட்டமான கஞ்சா” என்றாள். புன்னகைத்தேன். அவளின் பெயர் மீரா. இன்னொருவளின் பெயர் நிவேதிதா. மற்ற இரண்டு ஆண்களும் ராஜன், கிறிஸ்டி என அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். நால்வரும் பாண்டி ஆரோவில்லைச் சேர்ந்தவர்கள். ஆட்டோ ட்ரைவர் என அறிமுகப் படுத்திக் கொண்டேன். நால்வரிடமும் அதே புன்னகை இருந்தது. இருபது வெள்ளைக்காரர்களில் மூன்று குழுக்கள் இருந்தன. மெக் குழுவினர் ஒன்பது பேர். ஐந்து பேர் கொண்ட குழு கோவாலிருந்தது வந்திருந்தார்கள். மற்ற அறுவர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

கோவா குழு வேட்டையாடிக் கொண்டு வந்தது.பெங்களூர் குழு கையில் பெரிய கேமராக்களோடு சமவெளிக்குப் பின்னால் தனித்தனியாய் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.மெக் குழுவினர் காடுகளில் நடக்கப் போயிருக்கிறார்களாம். சமையலுக்கு உதவ ஆரம்பித்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் சமையல் கூடாரத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். காடை, கொளதாரி. கொக்கு, முயல் என எல்லா பட்சி,விலங்கு வகையறாக்களும் உணவாய் மாறியிருந்தன. நல்ல ருசியாகவும் இருந்தது. வைன் புட்டிகளோடு காலை உணவை சாப்பிட்டார்கள். ஒரு வெண்கலப் பாத்திரத்தில் இரண்டு உடும்புகளும் வெந்து கொண்டிருந்தன. மெக் என்னைப் பார்த்து கிண்டலடித்தான். இன்னொரு ஹிப்பியை தயார் செய்துவிட்டோம் என்ற அவன் ஜோக்கிற்கு என்னைத் தவிர எல்லாருமே சிரித்தார்கள். உணவு முடிந்ததும் குழுவாய் கலைந்து போயினர். சிலர் காட்டிற்காய் நடக்கத் துவங்கினர். சிலர் ஓடையில் காற்று மிதப்பான்களை போட்டுப் படுத்துக் கொண்டு புத்தகம் படித்தனர். இன்னும் இரண்டு பேர் வரைய ஆரம்பித்தனர். நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். மீரா தனியாக வந்து “வா சமவெளிக்காய் நடக்கலாம்” என அழைத்தாள். அவளோடு போனேன்.மரங்களோ மேடுகளோ இல்லாத பரந்த புல்வெளி. தொலைவில் மீண்டும் உயரமான மரங்கள் தென்பட்டன. நிச்சயம் இந்தப் புல்வெளி ஒரு அதிசயப் பிரதேசம்தான். எதுவும் பேசாமல் சிறிது தூரம் நடந்தோம்.

நண்பகல் ஆகிவிட்டிருந்தாலும் வெயில் தெரியவில்லை. காற்று மென்மையாய் வருடிக் கொண்டிருந்தது. நடக்க நடக்க காடு அருகில் வந்தது. காட்டிற்குள் நுழைந்ததும், ஒரு மூங்கில் புதர் தென்பட்டது. அங்கு மட்டும் ஒரு சிறு மணற் குவியல் இருந்தது. மீரா மணலில் போய் அமர்ந்து கொண்டாள். தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தைப் பிரித்து, இன்னொரு சதுர வெள்ளைத் தாளை சுருட்டி அதில் அடைத்தாள். என்னைப் பார்த்து “இதுதான் கஞ்சாத் துகள்” என்றாள். சடுதியில் ஒரு சிகரெட் தயாரானது. தியானத்தைப் போல கண்கள் மூடி, அந்த சிகரெட்டை ஆழமாய் உள்ளிழுத்தாள். புகை வெளியே வரவே இல்லை. நான்கைந்து இழுப்புகளுக்குப் பிறகு அவள் கண்கள் மிதக்க ஆரம்பித்தன. முயன்று பார் என எனக்காய் நீட்டினாள். நான் வாங்கி மெதுவாய் இழுத்தேன். மீண்டும் அந்த தைரியத்தை உடல் விரும்பியது. இருமல் இல்லை, புகையை வெளியே விட்டேன். அடுத்த இழுப்பு, உடல் சிலிர்த்து அடங்கியது. தலைப்பகுதி லேசாக சுழல ஆரம்பித்த உடன் வேகமாய் அடுத்தடுத்து இழுத்தேன். மீரா சிரித்தாள். நானும் சிரித்தேன். அவள் சப்தமாய் சிரிக்க நானும் சப்தமாய் சிரித்தேன். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு. நிறுத்தி நிறுத்தி சிரித்தது தொடர் சிரிப்பானது. மரங்கள் சுழல ஆரம்பித்தன. புதர் தலைகீழானது. திடீரென எனக்குப் பயம் வந்தது. நான் பைத்தியமாகி விட்டதைப் போலிருந்தது. அருகிலிருந்த மீராவை இறுக்க கட்டிக் கொண்டேன். உடல் நடுங்கியது. உள்ளிருந்து விம்மல்கள் பெருகி வந்தன. திடீரென அழுகையாய் அது உயர்ந்தது. அழுவதைப் பார்க்க முடிந்தாலும் அதைத் தடுக்க முடியவில்லை. மீரா அழுவதற்கு பதிலாய் சிரித்தாள். சிரித்துக் கொண்டே இருந்தாள்.

அவளைக் கீழே தள்ளி மேலமர்ந்தேன். தள்ளாட்டம் அதிகமாகி பின் பின்புற சாய்மானமில்லாது, மூங்கில் மர அடிப்பாகத்தின் மேல் சரிந்தேன். மீரா எழுந்து, புதரின் அடிபாகத்தில் கிடந்த என் உடலை இழுத்து மணலில் தள்ளினாள். பின் என் மீது சாய்ந்துகொண்டு காலை நீட்டி அடுத்த சிகரெட்டை த் தயாரித்தாள். முழுவதுமாய் புகைத்து முடித்து அப்படியே சரிந்து கொண்டாள். இலைப்பச்சை நிறத்தில் ஊசி உடலுடன் நான்கைந்து பாம்புகள் மரத்தின் மீதிருந்து கீழே இறங்கி என் கால் மீது ஊர்ந்து தாண்டிப் போயின. மீரா எழுந்து ஒரு பாம்பைப் பிடித்தாள். அது அவள் கைகளைச் சுற்றிக் கொண்டது. பின்பு மெல்ல அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மீண்டும் புதர்களில் போய் ஒளிந்தது. சூரியன் உச்சிக்கு வந்ததும் அதுவரை இருந்த நிழல் காணாமல் போனது. தொண்டை வறண்டு போனது. மரத்துப் போன உணர்விலிருந்து உடல் மீண்டது. “தாகமாய் இருக்கிறது வா போலாம்” என்றேன். தள்ளாட்டம் சற்று நிலைபெற்றதைப் போலிருந்தது. மீரா தள்ளாட்டமில்லாது எழுந்தாள். மீண்டும் கூடாரத்திற்காய் நடக்க ஆரம்பித்தோம்.

மேலும்

ஓவியம் : காயத்ரி காமூஸ்

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...