Monday, July 4, 2011

அத்தியாயம் 7 நிர்கதி

கதவை மூடியதும் நித்யா என்னை வந்து கட்டிக் கொண்டாள். என் உள் உதடு லேசாய் கிழிந்திருந்தது. கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை தன் உதடுகளால் உறிஞ்சினாள். என்னாலதான் விச்சு என தேம்ப ஆரம்பித்தாள். நான் நித்யாவை விலக்கி தலையை வாரச் சொன்னேன். தலை பரட்டையாகி இருந்தது. நிதானமாய் தலை முடியை இருவரும் ஒழுங்குபடுத்தினோம். போய் முகத்தைக் கழுவி வரச் சொன்னேன். நானும் ஆடைகளை மாற்றிக் கொண்டேன். இனி செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கலாம் என்றேன். விஷயம் தெரிந்ததும் நித்யாவின் அம்மா ஒருவேளை இங்கும் வரலாம். என்ன பதில் சொல்வது என்பதை எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. நித்யா திடீரென உறுதியான குரலில் நாம இங்கிருந்து போய்டுவோம் விச்சு என்றாள்.

எங்கே போவதெனக் குழப்பமாக இருந்தது. என் வீட்டிற்கும் போகமுடியாது. என் அண்ணனுக்கும் அக்காவிற்குமே இன்னும் திருமணமாகவில்லை. அக்காவிற்கு இப்போதுதான் வரன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் நின்றால் என்னாவது என யோசிக்கவே பயமாக இருந்தது. நித்யாவின் அம்மா இங்கு வந்தால் அழுது புரண்டாவது அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துப் போய்விடுவார்கள். கிடைத்த எல்லா நட்புகளையும் என் மோசமான சுயநலத்தால் எதிரிகளாக மாற்றிக் கொண்டாயிற்று.என் சொந்த ஊர் நண்பர்கள், கல்லூரிக்கால நண்பர்கள் என யாரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. யாரிடமும் உதவி என்று போய் நிற்கவும் முடியாது. எல்லா வழிகளும் அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. மெதுவாய் நித்யாவிடம் சொன்னேன்.

”நாம இங்கயே இந்த வீட்லயே இருந்துடுவோம் நித்தி எதிர் வீட்டு போலிஸ்காரர் கிட்ட சொல்லி ஏதாவது ஒரு போலிஸ் ஸ்டேசன்ல கல்யாணம் பண்ணிப்போம். இதே வீட்லயே இருந்துப்போம்”
”குரு சும்மா விடமாட்டான் விச்சு, அம்மா அழுது புரண்டு செத்துப் போய்டுவேன்னு சொல்லி பயமுறுத்தி நம்மள பிரிச்சிடுவாங்க”
”வேற என்னதான் பன்றது நித்தி?”
”பேசாம செத்துடலாம் விச்சு”
”ச்சே பைத்தியம். இதென்ன முட்டாள்தனமான பேச்சு. உங்க அம்மா வரட்டும் நாம நம்ம நிலமைய சொல்லலாம் அப்புறம் என்னாவுதுன்னு பாக்கலாம்”

வாழ்நாள் முழுக்க சுயநலவாதியாகவே இருந்துவிட்டேன். யாருக்கும் பெரிதாய் எந்த உதவியையும் செய்ததில்லை. எனவே பதிலுக்கு போய் உதவி கேட்க எனக்கு ஒருத்தருமில்லை. முழுமையாய் கைவிடப்பட்ட வேதனைதான் இந்தச் சூழலை விட அதிகம் மனதை அரித்தது. தேம்பிக்கொண்டிருந்த நித்யாவை இயலாமையோடும் ஆதூரத்தோடும் அணைத்துக் கொண்டேன். என்ன நடந்தாலும் நடக்கட்டும் நித்யா நாம உறுதியா இருப்போம் என்றேன். இருவருமே நித்யாவின் அம்மா வருகைக்காக காத்திருந்தோம். மணித் துளிகள் கரைந்தும் கதவு தட்டப்படவே இல்லை.

”ஒருவேள வரமாட்டங்களோ?”
”விச்சு பேசாம நாமளே போய் அம்மாவ பாத்துட்டா என்ன?”
”அதுவும் சரிதான். வா! இங்க உக்காந்து குழப்பிக்கிறதுக்கு மொதல்ல உங்கம்மாவ போய் பாக்கலாம்”
அறையை சாத்திக் கொண்டு படியிறங்கிப் போனோம். நித்யாவின் வண்டி குப்புற சாய்ந்து கிடந்தது. வண்டியைத் தூக்கிக் கிளப்பினேன். நித்யா பின்னால் அமர்ந்து கொண்டாள். நல்ல வெயில். சாலை தகித்தது. நூறடி சாலையிலேயே வண்டியை விட்டேன். இரயில்வே கேட் தாண்டி இரண்டாவது சந்தில் வண்டியைத் திருப்பி, பாரதிதாசன் நகருக்குள் நுழைந்து வெளியேறி நித்யா வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினேன். கதவு திறந்தே இருந்தது. நித்யாவின் அம்மா டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். இவள் உள்ளே நுழைந்ததும் எங்கடி போன என சாதாரணமாய் கேட்டுவிட்டு மீண்டும் டிவி பார்ப்பதைத் தொடர்ந்தார். நித்யா எதுவும் பேசாமல் உள்ளே போனாள். ஒருவேளை குரு அம்மாவிடம் விஷயத்தை சொல்லவில்லையோ என நினைத்து சின்ன பெருமூச்சு வந்தது. சில நிமிடங்கள் கழித்து நானும் உள்ளே நுழைந்தேன்.

அட வாப்பா! என அகலமான புன்னகையோடு வரவேற்றார். அம்மாவிற்கு இன்னும் விஷயம் தெரிந்திருக்கவில்லை. உட்காரச் சொன்னார். வெயில் எப்டி காயுது பாரம்பா என்றபடியே உள்ளே தலையைத் திருப்பி ”நித்யா அண்ணன் வந்திருக்கு பார் தண்ணி கொண்டா” என்றார்
என்னுள் அமிலம் பாய்ந்தது போலிருந்தது. உள்ளே பாத்திரம் சப்தமாய் கீழே விழுந்தது
”இவ்ளோ வயசாச்சி இன்னும் தண்ணி மொள்ள கூட தெரில பாரம்பா” என சொல்லிக் கொண்டிருந்தார்.

நித்யா கடுகடுப்புடன் வெளியே வந்தாள்
”அண்ணன்னு சொல்லாதேமா”
”ஏண்டி?”
”நானும் அவரும் லவ் பன்றோம்”
உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.
”என்னடி சொல்ற? என்னப்பா இது?”
நான் தலையை நிமிரவில்லை.
”ஆமாமா நாங்க ஆறுமாசமா லவ் பன்றோம் ஆனா இந்த மாதிரின்னு இப்பதான் தெரியவந்துச்சி”
”அய்யோ இந்த அக்குரமத்த நான் எங்க போய் சொல்வேன். ஏண்டி பாவி இதுக்கா உன்ன படிக்க வச்சது? இதுக்கா நீ கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தது?” என்றபடியே அழ ஆரம்பித்துவிட்டார்
”அம்மா தயவு செய்ஞ்சி அழாத. நான் என்ன ஓடியாபோய்ட்டேன் இப்படி ஆகிடுச்சி. என்ன பன்றதுன்னு சொல்லு”
”என்னடி என்ன பன்றதுன்னு கேக்குற. இதுலாம் நடக்காது. ஒலகம் என்ன சொல்லும். எல்லாம் காறித் துப்புவாங்க. ஏம்பா இவதான் சின்னபொண்ணு உனக்கு புத்தி எங்க போச்சு?”
நான் தலையை நிமிரவே இல்லை.
”நித்யா, தம்பி ரெண்டு பேரும் சொல்றத கேளுங்க. இத அப்படியே விட்ருங்க.வெளில தெரிஞ்சா அசிங்கம்”
அப்படிலாம் விட முடியாதும்மா எனச் சொல்லி முடிப்பதற்குள் நித்யாவின் அம்மா அவளை அறைந்தார்
”என்னடி வாய் நீளுது ஒரே பொண்ணாச்சே, அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு பாத்து பாத்து வளர்த்தா நீ இன்னமும் பண்ணுவ இதுக்கு மேலவும் பண்ணுவ”
”அம்மா நீ என்ன கொன்னாலும் சரி நான் வாழ்ந்தா விச்சுவோடதான் வாழ்வேன்”
அய்யோ கடவுளே என தலையில் அறைந்து கொண்டு அம்மா கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
நான் எழுந்து ”அம்மா இப்படி நடக்கும்னு எதிர்பாக்கல. ஆனா அதுக்காக எங்களால பிரியவும் முடியாது. ஒலகம் எப்பவும் நாலுவிதமா பேசதான் செய்யும் அதுக்கு பயந்துலாம் வாழ முடியாது”
அம்மா அழுகையை நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். ”நீ என்ன மாதிரி பையண்டா? தங்கச்சி முற உள்ள பொண்ண போய் கட்டிக்கிறேன்னு சொல்ல வெட்கமா இல்ல. ச்சீ வெளில போ”
”இந்த முறதான்னு தெரிஞ்சிருந்தா இப்படிலாம் நடந்திருக்காது. தெரியாமதான பண்ணோம்”
”இப்ப தெரிஞ்சிடுச்சில்ல. பேசாம போய்டு அதான் ரெண்டு பேருக்கும் நல்லது”
”முடியாது மா”
”டேய் ஆம்பள இல்லாத வீடுன்னு நெனச்சி இஷ்டத்துக்கு பேசிறியா, இரு எம்மவன கூப்டுறேன்” என்றபடியே கூந்தலை முடிந்துகொண்டு போன் பக்கமாய் போனார்
நித்யா போய் போன் ஒயரைப் பிடுங்கிப் போட்டாள்.
”எல்லாம் காலங்காத்தாலயே உன் பையன் என்ன இழுத்து போட்டு அடிச்சான். இன்னும் ரெண்டு தடியனுங்கள கூட்டி வந்து அவரையும் போட்டு அடிச்சான். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கள வெட்டிப் போட்டுங்க” என அழுதாள்
நித்யாவின் அம்மா சிலையாக நின்றார்கள்

நான் பேச ஆரம்பித்தேன்.
”நித்யா அப்பாவும் நீங்களும் எந்த உறவுமே கிடையாது. ஜாதியும் வேற நீங்க கல்யாணம் பண்ணிக்கிலயா?”
”தம்பி விஷயம் என்னன்னு உனக்கு புரியுதா இல்லயா? நித்யா வேற யார கூட்டி வந்து கல்யாணம் பண்ணி வைன்னாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல, நான் அப்பவே காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா நீ அப்படி கிடையாது. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா சொந்தக்காரங்க மட்டும் இல்ல அக்கம் பக்கமும் காறித் துப்பும். தயவு செய்ஞ்சி இத இப்படியே விட்டுடு உன் கால்ல வேண்ணாலும் விழுறேன்” என்றபடியே விழ வந்தார்கள். நான் பதட்டமாய் குனிந்து அவரைப் பிடித்துக் கொண்டேன்.

அம்மா ப்ளீஸ் என என் குரல் உடைந்தது. தாங்கலாய் அவரை சோபாவில் உட்கார வைத்துவிட்டு நித்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல் வெளியேறினேன். நித்யா விச்சு விச்சு எனக் கத்தினாள். நித்யாவின் அம்மா வேகமாய் எழுந்து கதவை சாத்தியிருப்பார்கள் போல. டொம்மென்ற சப்தம் முதுகிற்கு பின்னால் கேட்டது. கசப்பும் வெறுப்பும் மனதில் மண்டியது. கண்மண் தெரியாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது. நிமிர்ந்து சாலையைக் கூடப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தேன். கால்கள் தானாய் ஒரு பார் முன்னால் நின்றன. அழுக்கும் குப்பையுமான பார் அது. உள்ளே போய் அமர்ந்து கொண்டு குடிக்க ஆரம்பித்தேன். காலம் நேரம் எல்லாம் போதையில் ஸ்தம்பித்துப் போகும் வரை குடித்தேன். நித்யா நித்யா என மனம் அரற்றியது. முதல் நாள் பார்த்த சம்பவத்திலிருந்து இன்றைய காலை வரை நிகழ்ந்தவைகள் கண்முன் ஓடின. என்ன நேரமானது எனத் தெரியவில்லை. பாரில் மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. கடைக்காரர் ஒருவர் அருகில் வந்து வீட்டுக்குப் போப்பா என்றது மங்கலாய் கேட்டது. எவ்வளவு குடித்தேன்? பணம் கொடுத்தேனா இல்லையா? என்பதெல்லாம் நினைவில் இல்லை. தள்ளாட்டமாய் வெளியில் வந்தேன். யாரோ ஒரு ஆட்டோக்காரரை கடைக்காரரே கூப்பிட்டார். ஏறி அமர்ந்து கொண்டு வீட்டுக்கு வழி சொன்னேன். செல்போன் விடாமல் கத்திக் கொண்டிருந்தது. எடுத்து ஆன் செய்யக்கூட முடியவில்லை. ஆட்டோ வீட்டிற்கு முன்னால் நின்றது. இறங்கி பணம் கொடுத்துவிட்டு மாடியேறி வந்ததெல்லாம் நினைவில் நிற்கவே இல்லை. மீண்டும் செல்போன் அலறியது. எடுத்தேன் நித்யாதான் பேசினாள் ”விச்சு, குரு விஜய் ஃபாருக் மூணு பேரும் எங்கயோ போய் குடிச்சிட்டு விழுந்து வாறி இருக்கானுங்க. மூணு பேருக்குமே நல்ல அடி. நான் இப்ப ஜிஎச்ல தான் இருக்கேன். திடீர்னு உன்ன நெனச்சி பயம் வந்தது. நீ ஒழுங்காதான இருக்க? என்றாள் நான் தூங்கிட்டிருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே போன் நழுவியது.

மேலும்

No comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...