Saturday, June 18, 2011

அய்யனாரின் விஜி

அய்ஸ்..

உங்க கதையை பற்றி என்னுடைய கருத்து இவை. பாதி எழுதி எழுதாமாலும் இருந்தது. இன்று தான் முடித்தேன். :) உங்கள் பார்வைக்கு.

நன்றி
கவிதா
http://kavithavinpaarvaiyil.blogspot.com/


அய்யனாரின் விஜி

முதல் பாகம் முழுவதுமாக படித்திருந்தேன். அது எங்கெங்கோ பயணித்து கொஞ்சம் எனக்கு கவனம் குறைந்தது, ரத்தம், கத்தி, காமம், கொலை ன்னு அதிகமாக இருந்தது. சில வார்த்தை பிரயோகங்கள் கெட்ட வார்த்தைகளாக நான் அறிந்துக்கொண்டாலுமே அவை எனக்கு புதிதாக இருந்தன. அய்யனாரின் கற்பனை வளமை கண்டு வியப்பாக இருந்தது. படுக்கை அறை வர்ணனைகள் திரும்பவும் வியப்பளித்தன. :) ஒரு வன்முறை நிறைந்த உடைகள் கலைந்த கவர்ச்சி கலந்த சினிமா பார்த்தது போன்ற ஒரு உணர்வு.

இரண்டாம் பாகம் வந்தபோது படித்தேன்.. அதே போன்ற ரத்தம், கத்தி, கொலை.. அதிகமாக பெண்கள் உறுப்புகள் அவற்றின் அதிக தேடல் என்று என்னமோ படிக்க ஆர்வமில்லாமல் போனது. பெண்களை இன்னும் கொஞ்சமாக கலந்திருக்கலாமென தோன்றியது.

நாவல் முடிந்து விஜி என்ற கதாப்பத்திரம் பற்றி அய்யனார் எழுதியவுடன், அவரின் கற்பனை மேல் இருந்த வியப்பு சற்றே பின் நோக்கி சறுக்கியது. இப்படியும் ஒரு பெண்ணை பற்றி எளிதாக எடைப்போட்டு விட முடியுமா? அதாவது ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, மேலோட்டமாக பேசலாம்.. அவரைப்பற்றி தெரியாதவரை, அல்லது அவரிடம் பழகும் வரை. அதில் மேற்கொண்டு சொன்னப்பட்ட கணவர் என்ற ஒருவரை ப்பற்றிய கருத்துரைகளை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மனிதர்களின் நடத்தை, செயல், பேச்சு போன்றவற்றை அதிக அளவில் கவனிக்கும் தன்மையுடைவளாக இருப்பதால், உடனே அவரின் கற்பனையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு தானா அய்யனார் என்ற எண்ணமே வந்தது.

சரி, எனக்குத் தெரிந்த ஒரு நிஜ விஜி யின் கணவரிடம் வருவோம். மேம்போக்காக பார்த்த வெளி ஆண்கள், விஜி யின் கணவன் அவளுக்கு ஏற்றவரில்லை என்று முடிவு செய்து பேசுகிறார்கள். காரணம், தோற்றம், பேச்சு, நடை, உடை, உடல் மொழி போன்றவை. இதில் யாருமே அந்த ஆணுடன் தொடர்புடையவர்களோ நேரடியாக பரிச்சயம் ஆனவர்களோ இல்லை. அப்படி இருக்க, அவரை ப்பற்றிய முன்முடிவு சரியா என்று தெரியவில்லை. பொதுவாக ஆண்களை அவர்களின் தோற்றம் நடத்தை பேச்சு வைத்து கணித்துவிட முடியுமா? அதாவது அவன் எதற்கும் தகுதியில்லாதவன், அதுவும் ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவு அவன் தகுதி இல்லாதவன் என எப்படி முடிவு செய்ய முடியும்? இதனை முடிவு செய்வது அவனை மணந்த பெண்ணால் மட்டுமே முடியும். அவள் வாய் திறந்து சொன்னால் மட்டுமே தெரியும்.

பல பெண்கள் தன் கணவர் பற்றி குறிப்பாக அவர்களின் படுக்கை அறை விஷயங்களை சக தோழிகளிடம் மிகவும் வெளிப்படையாக பேசுபவர்களாகவே உள்ளனர் என்பது ஆண்களுக்கு தெரியுமா? மாறாக ஆண்கள் தன் மனைவியை பற்றி வெளியில் மூச்சு கூட விடமாட்டார்கள் என்பதை அறிவோம். :).

எனக்கு தெரிந்த ஒருவர், வீடு முழுக்க சாமி படங்களும், யோகா, நாட்டு மருந்து, பக்தி புத்தங்கள் என படித்து எந்த நேரமும் ஒரு மயான அமைதியுடன் இருப்பார், இந்த நடைமுறை உலகத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது, நடை உடை பாவனை எல்லாவற்றிலுமே அதீத சாந்தமும் நிதானமும் தெரியும். கடவுளை பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல் பேசுவார். அவர் மனைவியிடமும் அதே அமைதியுடன் இருப்பார். அவர் மனைவி எந்த நேரமும் கத்தி ஆர்பாட்டம் செய்பவராகவே இருப்பார், இவர் மிக பொறுமையாக அவரை எப்பவும் சிரித்த முகத்தோடு சகித்துக்கொள்வார். எல்லாமே வீட்டில் மனைவி இஷ்டத்திற்கு தான் நடக்கும். மனைவி எங்கு போகிறார் வருகிறார் என்பது கூட இவருக்கு தெரியாது. இவரின் டெபிட், கெரிடிட் கார்ட் எல்லாமே மனைவியின் பர்சில் தான் இருக்கும். வாயில்லா பூச்சி எனவும், இவரை வெளியிலிருந்து கவனிப்பவர்கள் மிக எளிதாக "கூஜா" என்று சொல்லலாம். ஏன் வெளியில் சொல்லும் போது மனைவி வண்டி ஓட்ட, பின்னால் அமர்ந்து செல்வார். இவரை நான் கவனித்த வரை கணித்தது, மனைவிக்காக விட்டுக்கொடுக்கிறார், சுதந்திரம் கொடுக்கிறார், ஆனால் சொம்பு இல்லை என்பதே. :) . என் எதிரில் மனைவி அவரை மிக மோசமாக திட்டியபோது, அதே சிரிப்போடு, நீ பேசுவதற்கும் கத்துவதற்கும் என்னால் பதில் அளிக்க முடியும்.அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக உனக்கு அடங்கி போகிறேன் என்று நீ அர்த்தம் கொண்டால் அது உன் தவறேயன்றி என் தவறல்ல என்றார்.

அவருடைய மனைவியே என்னுடைய தோழி, தோழியின் மூலமே அவரை அறிவேன். ஆனால் அவரிடம் சில சமயம் கடவுள் பற்றிய விதாண்டாவாதத்தில் இறங்க முயற்சி செய்யும் போதே... நம்பி கேட்பவர்களிடம் விளக்கம் சொல்லலாம்... என்று முடித்துக்கொள்வார். அதிகம் பேசியதில்லை என்றாலும், தோழி அவர்களின் அந்தரங்கம் பற்றி ஒரு முறை சொன்ன போது.. அவரா இவர் என்று என்னை அதிசய வைத்தது.

வெளித்தோற்றதை வைத்தோ, அவர்களின் நடை உடை பாவனகளை வைத்தோ அவர் அப்படித்தான் என்று கணிப்பது சரியில்லை என்பதே என் கருத்து.

அன்புள்ள கவிதா,

தாமதமான இந்த பதிலுக்கு வருந்துகிறேன். உடனே பதில் எழுத முடியாமல் போய்விட்டது. பாராட்டுக் கடிதமாக இருந்தால் நன்றி என்ற ஒரே சொல்லோடு போய் இருக்கும். உங்கள் விமர்சனத்தை முக்கியமாக கருதியதால் பிறகு பதில் எழுதிக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டேன். ஒரு புனைவை வாழ்வின் யதார்த்தத்தோடு பொருத்திப் பார்க்கத் தேவையில்லை என்பது என் பார்வை. ஆனால் இந்த நாவலை நிஜமாகவே கருதியது என் விவரணைகளின் நம்பகத் தன்மை மீது மகிழ்ச்சி ஏற்படுகிறது. விஜி கணவனின் ஆண்மை குறித்து நாவல் ஒரு போதும் சந்தேகிக்கவில்லை. விஜியை அலைபவளாகவும் நாவல் சித்தரிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண் மிக சுலபமாய் பிற பெண்களைக் காதலிக்க முடிவதுபோல் ஒரு பெண்ணாலும் இன்னொரு ஆணைக் காதலிக்க முடியும். உடல் ரீதியான திருப்தி மட்டுமே ஒரு பெண்ணுக்கு எல்லாவித முழுமைகளையும் தந்துவிடும் என எண்ணுவது சரியானதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

விஜியின் கணவன் ஒரு லோக்கல் ரவுடி.விஜியை நயவஞ்சகமாக ஏமாற்றிப் படுகுழியில் தள்ளியவன். அவனை விஜி எதிர்கொள்ளும் விதத்தை, விஜியின் இன்னுமொரு பரிமாணத்தை நாவலின் இரண்டாவது பாகத்தில் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். போலவே ஒரு ஆண் இரண்டு பெண்களோடு எந்த வித குற்ற உணர்வும் கொள்ளாமல் சமூக அங்கீகாரத்தோடு வாழ்வதுபோல் ஏன் பெண்ணாலும் இரண்டு ஆண்களுடன் சமூக அங்கீகாரத்தோடு வாழ முடிவதில்லை என்பன போன்ற திறப்புகளையும் இரண்டாம் பாகத்தில் வாசிக்கலாம். மேலும் ஆண்தான் பெண்ணை வைத்துக் காப்பாற்ற வேண்டும் அவனுடன்தான் பெண் ஓடிப்போக வேண்டும் போன்ற சமூக வழக்குகள் குறித்துமான எதிர் கேள்விகளை நாவலின் இரண்டாம் பாகத்தில் வாசிக்கலாம். பெண் குறித்தான சில மாற்றுப் புரிதல்களை நாவலின் இழையோடே புரிந்து கொள்ளும்படிதான் எழுத மெனக்கெட்டேன். மற்றபடி தனியாக பெண் அடையாளம் குறித்து எதையும் நாவலில் வைக்க முயற்சிக்க வில்லை. அத்தியாயங்களாய் வெளிவரும்போதே வாசித்துவிட்டு உடனுக்குடன் விமர்சித்த நண்பர்கள் இரண்டாம் பாகத்தில் விஜியின் புதிய பரிமாணம் திடீரென்று ஏற்படுவது போன்ற தோற்றத்தை தருகின்றது என்றனர். இன்னொரு அத்தியாயமாக விவரித்து எழுதலாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இன்னொரு அத்தியாயமாய் விவரித்துச் சொல்ல நாவலின் களம் இடம்தராததால் போகிற போக்கில் சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மையத்திற்கு வந்துவிட்டேன்.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கெட்டவார்த்தைகள், இரத்தம், வன்முறை, படுக்கை அறை விவரிப்புகள் என எல்லாமும் இருக்கிறதுதான். அவற்றை வன்முறையின் அழகியலாகவும் வாசித்துப் பார்க்கலாம். உங்களின் பகிர்வுகளுக்கு நன்றி. எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த குறு நாவலையும் வாசியுங்கள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...