Thursday, June 16, 2011

குறுநாவல் 2. அத்தியாயம்1. முடிவிலிருந்து கிளைத்தல்


மாபெரும் விருட்சமாகியிருந்த

அன்பின்

கிளைகளில் வசித்திருந்தோம்

ஊழின் மிக மெல்லிய விரல்கள்

ஒரு பூவினைக் கொய்வது போல்

அத்தனை எளிதாக இவ்விருட்சத்தை

வேரோடு பிடுங்கிப் போட்டது

அன்பின் வேர்கள்

அன்பைப் போன்றே

மிக நொய்மையானவை.“இங்க நாம நிறுத்திப்போம் நித்யா. போதும் இது.சொல்லப்போனா இந்த உறவுல ரொம்ப தூரம் வந்திட்டோம்னு நினைக்கிறேன். இனிமேலும் தொடர்ந்தோம்னா விலகும்போது கஷ்டமாகிடும். பிரிவு,வேதனை,பீலிங்க்ஸ் ப்ளா ப்ளான்னு ஏதாச்சும் வந்துடப்போகுது. ஸோ நாளையிலிருந்து நாம பேசிக்க வேணாம்.போன வாரம் கூட இந்த முடிவு எடுத்து, அப்புறம் நானே அதை மீறி, முந்தா நேத்து நைட் உங்கிட்ட பேசிட்டேன். இனிமே இந்த மாதிரி நடக்காது.”

“முந்தாநேத்து நைட் நீ பேசல விச்சு. ஒளறின”

“ம்ம் “

“என்ன ஒளறினோம்னு நினைவிருக்கா உனக்கு?”

“இருக்கு”

“குடிச்சிட்டு நான் இல்லன்னா செத்துடுவேன்னு சொல்லுவ, அடுத்த நாள் என்ன விட்டு ஒழிஞ்சி போன்னு வார்த்தைகளை நெருப்பா கொட்டுவ. நான் என்னதாண்டா செய்யட்டும்?”

“நாம நிறுத்திக்கலாம் நித்யா. அதான் ஒரே தீர்வு”

“நீ என்னை என்னன்னு நினைச்சிட்டிருக்க? கூப்டப்ப வரனும். போன்னு சொன்னா போகனும். நீ என்கிட்ட எவ்ளோ மோசமாலாம் பேசியிருக்க தெரியுமா? சத்தியமா வேற எந்த பொண்ணா இருந்தாலும் உன்ன தூக்கி போட்டுட்டு இன்னேரம் போயிருப்பா”

“நானும் அதான் சொல்றேன் நீ போ. உன் வாழ்க்கைய பாரு”

“உனக்கு என்னதாண்டா பிரச்சின?”

“தெரியாத மாதிரி கேட்காத”

“உறவுல ரொம்ப தூரம் வந்துட்டோம்னு சொன்னியே நமக்குள்ள என்னடா உறவு?”

“ஒண்ணுமே கிடையாது. உன்ன எனக்கும், என்ன உனக்கும் தெரியும் அவ்ளோதான்”

“அப்புறம் நேத்து நைட் நீ ஐ லவ் யூ கண்ணம்மா, என்ன விட்டுப் போய்டாதன்னு அழுத? உனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவியா?”

“குடிச்சிட்டு பேசினதெல்லாம் அப்பவே மறந்துடு. அது அந்த நேரத்துக்கான எக்ஸைட்மெண்ட் அவ்ளோதான்”

“எவ்ளோ சுலபமா சொல்ற. உன் எக்ஸைட்மெண்டை நானும் போதைல கேட்டிருந்தனா பிரச்சின இல்ல. நான் தெளிவா இருக்கேனே என்ன பண்ணித் தொலைய?”

“சரி சாரி”

“உன் சாரிய தூக்கி குப்பைல போடு”

………

“சரி இப்ப என்ன வேலை உனக்கு?”

“எதுவும் இல்ல. இனிமே ஆபிஸ் போக மூட் இல்ல. ரூம்க்கு போறேன்”

“வா போகலாம்”

“நீ எதுக்கு?”

“நம்மோட கடைசி சந்திப்புன்னு வச்சிக்கோயேன்”

“அதுலாம் ஒண்ணும் வேணாம் நீ கிளம்பு”

“ஏய் ச்சீ வா”

என்றபடி தன்னுடைய வண்டியை நோக்கிப் போனாள். நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை வெளியில் எடுத்துக் கிளப்பினாள். தரையில் காலூன்றித் திரும்பிப் பின்னால் நின்று கொண்டிருந்த என்னை அழைத்தாள்.

“வந்து உட்கார் விச்சு”

“வேணாம் நித்யா நீ வீட்டுக்கு போ”

“அடச்சீ உட்காரு எரும”

பேசாமல் போய் அமர்ந்தேன். நித்யாவிடமிருந்து அவளின் வழக்கமான வாசனை. பாண்ட்ஸ் பவுடரும் ஃபேர் எவர் க்ரீமும் இழைத்த வாசனை. பின்னங்கழுத்தில் வேர்வை மினுங்கிக் கொண்டிருந்தது. சில முடிக் கற்றைகள் கழுத்து வியர்வையில் நனைந்து ஒட்டிக் கொண்டிருந்தன. கடற்கரை சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது. ஈஸ்வரன் கோவில் தெருவிலிருந்து இந்திராகாந்தி சிலை வர, இவள் ஏன் கடற்கரையை சுற்றிக் கொண்டு போகிறாள் என யோசிக்க எரிச்சல் வந்தது. காற்றில் அவள் கூந்தல் அலையலையாய் முகத்தில் மோதியது. இந்த சனியன் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் தலைக்கு குளித்துவிட்டு நிறைய மல்லிகைப்பூவையும் வைத்துக் கொண்டு வந்துவிடுகிறது. திடீர் பிரேக்குக்கு என்னுடல் அவளோடு ஒட்டியது. நிலைத் தன்மைக்கு அவள் முன் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். கை எடுறா எரும என சிணுங்கினாள். நீ ப்ரேக்க மெதுவா போடு என்றபடியே கையை விலக்கினேன். என்னுடைய எல்லா பலவீனங்களையும் இவள் துல்லியமாய் தெரிந்து வைத்திருப்பது இன்னும் எரிச்சலை வரவழைத்தது. கடற்கரை சாலை முடிவு வளைவிலிருந்து சின்ன மணிக்கூண்டு வரை அந்த எரிச்சல் மனநிலை இருந்தது. போலிஸ் ஸ்டேசன் சிக்னலில் காலூன்றி நிற்கும்போதுதான் கவனித்தேன். ஒரு காலில் மட்டும் தங்கத்தில் ஒரே முத்து வைத்த கொலுசு போட்டிருந்தாள்.

“எப்ப வாங்கின இத?”

“எத?”

“கொலுசு?”

“நேத்து. அண்ணனோட முதல் மாச சம்பள கிஃப்ட் . நல்லாருக்கா?”

“ம்ம்.”

“நல்லாருக்குன்னு வாயத் தொறந்துதான் சொல்லேன் அதென்ன ம்ம். சரியான ஊமக் கோட்டான் நீ.”

“நல்லாருக்குடி”

“ஹப்பா மழ வரும்”

சிக்னல் தாண்டியதும் அவள் மேல் எனக்கு அன்பு பெருக்கெடுத்தது. பஸ் நிலையம் தாண்டி நெல்லித் தோப்பு வளைவில் அவள் இடுப்பைப் பற்றிக் கொண்டேன். முகத்தை கழுத்திற்கு நெருக்கமாய் வைத்துக் கொண்டேன். ஏய் நவுந்து ஒக்கார் என்றாள். நான் நகரவில்லை. இந்திராகாந்தி சிலை தாண்டிய முதல் வளைவில் அவளை இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மிக அதிகமாய் நேசிக்க ஆரம்பித்தேன். வீட்டிற்கு முன்பிருந்த புங்கை மரத்தடியில் வண்டியை நிறுத்தினாள். மாடிக்குப் போகும் படிக்கட்டுகளில் எனக்கு முன்பு ஏறினாள் . கதவிற்கு முன்பு நின்றபடி சாவி என்றாள். அவளை ஒரு கையால் விலக்கியபடி கதவைத் திறந்தேன். உள்ளே வந்து கதவைத் தாழிட்டவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டேன். எனக்காய் திரும்பியவளின் உதடுகளைப் பசி மிகக் கவ்விக் கொண்டேன்.

நித்யாவைக் கடந்த ஆறு மாதங்களாகத் தெரியும். ஐந்து மாதங்களாகக் காதலித்துக் கொண்டிருக்கிறோம். நித்யா என் நண்பனின் தங்கை. ஒரு வகையில் என் சகோதரி முறையும் கூட. நித்யாவை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் இதே நொடியில் அலுவலகத்தில் பாதியில் விட்டு வந்த வேலையை எனக்காக நித்யாவின் அண்ணன் குருமூர்த்தி செய்து கொண்டிருப்பான். குரு நான் பணிபுரியும் அலுவலகத்தில் சேர்ந்து நாற்பது நாள் ஆகிறது. அவன் நித்யாவின் அண்ணன் எனத் தெரியாமல்தான் அவனுக்கு நெருக்கமானேன். ஒரு நாள் அறையில் முகச் சவரம் செய்து கொண்டிருக்கையில் குரு உள்ளே வந்தான். செல்ஃப் ஷேவிங்கா? எனக் கேட்டவனிடம், மீன் குஞ்சுக்கு நீந்த கத்து தரணுமா? என பதில் சொன்னேன். அட! எங்க அப்பாவும் பார்பராதான் இருந்தார் என்றான். எங்களின் அப்பாக்கள் பார்பர்கள் எனத் தெரிந்ததும் நட்பு இன்னும் நெருக்கமானது. ஒரு முறை வீட்டிற்கு அழைத்துப் போனான். அவன் அம்மா என் சொந்த கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் சுட்டி பங்காளி முறை என்றார். எங்களுக்கும் அவர்கள் பங்காளிகள்தாம் எனச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் நித்யா அம்மாவென உள்ளே வந்தாள். வரவேற்பறையில் என்னைப் பார்த்து அதிர்ந்தாள். ஏற்கனவே காதலியாகவிருந்த ஒருத்தி திடீரென நண்பனின் தங்கையானதையும், திடீர் சகோதரி உறவானதையும் கிரகிக்க முடியாமல் நானும் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த நாளில் இருந்து அவளிடமிருந்து விலக முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருக்கிறேன். நித்யா ஓரிரு நாட்கள் அதிர்ச்சியாகத் திரிந்தாள். பின்பு சகஜமாகிவிட்டாள். முரணான உறவைப் “புடலங்கா” என்கிறாள். அண்ணன் நண்பனாக இருப்பதில் என்ன பிரச்சினை? நல்லதுதானே என்கிறாள். நான் விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

Photo art by naufal

(மேலும்)

3 comments:

Unknown said...

good start! கதை வழக்கமான உன் கதையிலிருந்து வித்யாசமாக இருக்கும் போல் இருக்கிறதே அய்ஸ் ;)))

Elangovan said...

உங்க கதை எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு... அடுத்த கதைக்காக காத்திருந்தேன்... உங்களோட கதை சொல்லும் பாணி எனக்கு பிடிச்சிருக்கு... ரொம்ப உன்னிப்பா ஒவ்வொரு நிகழ்வையும் எழுதிருக்கீங்க... கதைய படிக்கும்போது நானும் அதில ஒரு பாத்திரமா இருப்பதைபோன்ற ஒரு உணர்வு... ஒருசிலருடைய எழுத்தை படிக்கும்போது மட்டும்தான் அப்படி தோன்றும்... அதில் நீங்களும் ஒருவர்... அதுதான் ஒரு எழுத்தாளனுடைய திறமையும்...

Ayyanar Viswanath said...

நன்றி உமா.

நன்றி இளங்கோவன்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...