Wednesday, March 23, 2011

அத்தியாயம் பத்து. விலகல்

சென்னை வந்ததிலிருந்தே சீராளனுக்கு லேசான நெருடல் இருந்து கொண்டேதான் இருந்தது. லோகுவின் ஆட்கள் தேடிக் கொண்டு வருவார்கள் எனதான் ஆரம்பத்தில் சென்னை வரத் தயங்கினான். இப்போது அய்யனார் மீதுதான் முழு சந்தேகமும் இருந்தது. அவனை லோகுவின் ஆட்களோ, அல்லது வேறு யாராவதோ விலைக்கு வாங்கியிருக்கக் கூடும் என நம்பினான். அந்த இரவில் குணா வந்த ஐந்து நிமிடங்கள் கழித்து, காயங்களே இல்லாமல் அவன் வந்ததும், நடுவழியில் குணாவை ஆபத்தான நிலையில் கைகழுவி விட்டு பாதியில் இறங்கி கொண்டதும் அவன் மீது சந்தேகம் வலுக்க காரணங்களாக இருந்தன. அடிக்கடி ”தாயோலி இப்படி நெருக்கமா பழகிட்டு முதுகில குத்திட்டானே” என வாய்விட்டே புலம்பிக் கொண்டான். ஒரு கையை இழந்த குணாவைப் பார்க்கும்போதெல்லாம் சீராளனின் இரத்தம் கொதித்தது. தாமசை நினைக்கும் போதெல்லாம் சீராளனுக்கு கண்கள் கலங்கின. அய்யனாரைக் கொல்வதின் மூலம்தான் தாமசின் கணக்கை நேர் செய்ய முடியும் என அவன் நம்பினான். மேலதிகமாய் தாமஸ் செத்துப் போனதிற்கும், குணாவின் கை போனதிற்கும் மானசீகமாய் தானும் ஒரு காரணம் என்பதும் சீராளனின் குற்ற உணர்விற்கு முக்கிய காரணமாய் இருந்தது.

மருத்துவமனை வந்து ஐந்து நாட்கள் ஓடிப்போயிருந்தன. குணா மெல்லத் தேறிக் கொண்டு வந்தான். இடையில் சீராளன் அவனுடைய கொல்லம் தொடர்புகளுடன் தொலைபேசி, மருத்துவ சிகிச்சைக்கும் தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்தான். டாக்டர் எப்போது குணாவை டிஸ்சார்ஜ் செய்வார் எனக் காத்திருந்தான். குணாவிடம், அய்யனாரின் துரோகம் பற்றித்தான் நாளிற்கு இரண்டு முறை ஆத்திரமாய் பேசிக் கொண்டிருந்தான். டாக்டர்கள், குணாவிற்கு முழுமையாய் காயம் ஆற ஒரு மாதம் ஆகும் என்றனர். சீராளன் கொல்லத்தில் போய் சிகிச்சையை தொடர்ந்து கொள்வதாக சொன்ன பிறகு, டாக்டர் ஏழாம் நாள் போகச் சொன்னார். செயற்கைக் கை பொருத்துவது குறித்த விவரங்களைக் கேட்டுக் கொண்டான். இப்போது நவீன செயற்கைக் கைகள் வந்துவிட்டதால் ஒரிஜினல் கைக்கும், செயற்கை கைக்கும் பயன்பாட்டு அளவில் கூட பெரிய வித்தியாசங்கள் இருக்காது என டாக்டர் சொன்னது சீராளனுக்கு ஆசுவாசமாய் இருந்தது.

ஏழாம் நாள் சீராளனின் வற்புறுத்தலின் பேரில் குணாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். சீராளன் மீண்டும் சென்னைத் தொடர்புகளிடமே பேசி ஒரு வண்டியை ஏற்பாடு செய்தான். குணா வலி நிவாரணி மாத்திரைகளாய் விழுங்கிக் கொண்டிருந்தான். மாத்திரை இல்லாமல் அவனால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பின்னிரவில் மருந்தின் மயக்கம் தீர்ந்து விழிப்பு வந்தபோது, வலி உயிர் போவது போலிருந்தது. குணா அந்த நேரத்தில் ஏன் பிழைத்தோம்? என நொந்து கொண்டான். ஒற்றைக் கையுடன் இனிமேல் வாழ்ந்து கிழிக்க என்ன இருக்கிறது? என அடுத்த நாள் சீராளனிடம் வெளிப்படையாகவே புலம்பினான். இன்னும் இரண்டு மாதங்களில் செயற்கைக் கை பொருத்தி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என சீராளன் தேற்றினான். குணாவிற்கு இந்த மருத்துவமனையை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதை விட்டு வெளியேறும் நாளிற்காகத்தான் காத்திருந்தான். சீராளன் பணத்தைக் கட்டிவிட்டு குணாவைக் கூட்டிப் போக சக்கர நாற்காலியோடு அறைக்குள் நுழைந்தான். குணா அதில் உட்கார மறுத்து விட்டான். நான் நடக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கித் தரையில் கால் வைத்தான். மின்னல் வெட்டாய் கையில் வலி வெட்டிப் போனது. பற்களைக் கடித்தபடி வலியை அடக்கிக் கொண்டான். உள்ளே நுழைந்த நர்ஸ் அதிக சிரமமெடுத்துக் கொள்ளக் கூடாது சக்கர நாற்காலியில் அமருங்கள் என கண்டிப்பாய் சொன்னார். குணா எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான். சீராளன் வேதனையோடு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மருத்துவமனையின் முகப்பிற்குப் போனான். கருப்பு நிற ஸ்கார்ப்பியோ நின்று கொண்டிருந்தது. நாங்கள் வருவதைப் பார்த்ததும் ட்ரைவர் அவசரமாய் காரின் கதவைத் திறந்து வைத்தார். குணா எழுந்து நின்றான். இரண்டடி எடுத்து வைத்து, சற்று சிரமப்பட்டு பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். சீராளனும் பக்கத்திலேயே அமர்ந்தான். ஓட்டுனரிடம் மெதுவாய் போக சொன்னான். குணா ”அதெல்லாம் வேணாம் சார் ஃபாஸ்டா போங்க” என சிரித்தபடியே சொன்னான். ட்ரைவர் வண்டியை எடுத்தார்.

சென்னையை விட்டு வெளியேறியதும் குணா, சரக்கடிக்கனும் போல இருக்கு ஏற்பாடு பண்னு என்றான். சீராளன் தயங்கினான். உடல் நிலை இப்படி இருக்கும்போது குடிப்பதா என மறுத்தான். குணா வற்புறுத்தவும் வழியில் நிறுத்தச் சொல்லி ஒரு கேஸ் பியரும் வைன் புட்டிகளையும் வாங்கி வந்தான். ஹாட் வேணாம் குணா என்றபடியே பியரை பல்லால் கடித்துத் திறந்து குணாவிடம் கொடுத்தான். வேகமாய் பீர் புட்டியை வாங்கியவன் மடக் மடக் என ஒரே மூச்சில் முக்கால் பியரைக் குடித்துவிட்டு பெரிதாய் ஏப்பம் விட்டுவிட்டுச் சொன்னான்.
”என்ன மறுபடியும் கொண்டு போய் ஆஸ்பத்திரில போட்ராத சீராளா”
சீராளன் உடைந்து போனான்.
”இல்ல குணா கொல்லத்துல காயல ஒட்டி ஒரு கெஸ்ட் அவுஸ் இருக்கு.. அங்கதான் தங்க போறோம்.. தினம் எட்டு மணி நேரம் ஒரு நர்ஸ் கூட இருப்பாங்க.. டாக்டரை தினம் இரண்டு முற விசிட் பண்றாமாதிரி அரேஞ் பண்ணி இருக்கேன்… சீக்கிரம் எல்லாம் சரியா போய்டும் பாரேன்”
தன்னுடைய பியரை எடுத்து வேகமாய் குடித்தவன். கறுவிக் கொண்டே சொன்னான்
“உனக்கு கை மாட்ன உடனே அய்யனார போட்றோம்”
“ப்ச். வேணாம் சீராளா. எல்லாத்தையும் விட்ருவோம். எல்லாம் தாமசோட போகட்டும். நாம எங்காயாவது போய் புதுசா சுத்தமா வாழ்க்கய ஆரம்பிப்போம்”
”ஆரம்பிக்கலாம் குணா அதுக்கு முன்னாடி கடைசியா அவன முடிச்சிட்டு ஆரம்பிப்போம்”
எதுவும் பேசாமல் குடித்தனர். வண்டி விரைந்தது
0
இந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது. பழகிய மனிதர்கள் அனைவருமே எளிமையாக இருந்தனர். இம்மாதிரியான ஒரு வாழ்க்கையை விட்டுவிட்டு, எங்கங்கோ எதன் பின்னாலேயோ பேய் மாதிரி அலைந்திருக்கிறேன். அதிக மாற்றங்களில்லாத, இயற்கையோடு அண்டிய, இந்த வாழ்வு என் கசப்புகளையும் வெறுப்புகளையும் கழுவித் துடைத்துவிட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக விடிவது போலிருந்தது. ஊருக்கு சற்றுத் தள்ளி கொண்டலகம்மா ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கோதாவரியைப் போல அகண்ட ஆறு இல்லைதானென்றாலும் இந்தக் கிளையாறின் சன்னமான அழகுதான் என்னை வெகுவாக வசீகரித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் பறவைகளின் சப்தங்களில் விழித்தெழுந்து, சூரியன் உதிப்பதற்கு முன்பு ஆற்றுக்கு வந்துவிடுவேன். நீராவிப் புகையை மெல்லக் கசியவிட்டபடி ஓடும் கதகதப்பான நீரில் வெகுநேரம் கிடந்துவிட்டு திரும்ப வீட்டிற்குப் போவேன். காலை உணவு வந்திருக்கும். சாப்பிட்டுவிட்டு வயலுக்குப் போய்விடுவேன். சென்னா ரெட்டி வீட்டிலிருந்து வேளை தவறாமல் வரும் உணவிற்கும், தங்குமிடத்திற்கும் ஒரு நாள் பணம் கொடுக்கப் போய் பெரிய தர்ம சங்கடத்தில் முடிந்தது. இங்கிருக்கும் மனிதர்கள் பணத்தை ஒரு வஸ்துவாகத்தான் பார்க்கிறார்கள். பணம் கொடுத்து அவர்களை அவமதித்து விட்டதாய் சென்னாவின் அப்பா பொருமினார். நகரத்திலேயே வளர்ந்ததால் அடிப்படை பழக்க வழக்கங்கள் தெரியவில்லை என சமாளித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்தேன்.


அதற்கு மாறாய் தினம் வயலுக்குச் சென்று மக்களோடு மக்களாய் வேலை செய்ய ஆரம்பித்தேன். அறுவடை முடிந்த காலமென்பதால். கட்டி வைக்கப்பட்ட நெற்கட்டுகளை அடித்து நெல் தனியாய் வைக்கோல் தனியாய் பிரிப்பது, களத்தில் அம்பாரமாய் சேமிக்கப்பட்ட நெற்குவியலைப் புடைப்பது, பின்பு அளந்து சிறு சிறு சாக்குகளில் கட்டி, நெல் மண்டிக்கு அனுப்புவது என எல்லா வேலைகளிலும் உதவினேன். மனிதர்களைக் கொல்லும் ’மகத்தான’ பணியிலிருந்த என் மனம், இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டுத் தன் இயல்பை அடைந்தது. ஒவ்வொரு வேலையையும், ஏன் ஒவ்வொரு அசைவையுமே என் அடி மனதிலிருந்து செய்தேன். சென்னாவின் அப்பா என்னைக் களத்தில் வேலை செய்ய விடுவதில்லை. நெல் மண்டி விவகாரங்கள், பணம் கொடுக்கல் வாங்கல், போன்றவற்றை நான் எடுத்துச் செய்தால் போதும் என மிகத் தயக்கத்தோடு சொன்னார். நான் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டாலும். களத்திலும் வேலை செய்து கொண்டுதானிருந்தேன். வைக்கோல் சுனை புடுங்க தணிந்த மாலையில் கிணற்றில் குளிக்கும் உற்சாகத்தை நான் வேறெப்போதும் அடைந்ததாய் நினைவில்லை. அபூர்வமாய் நானும் சென்னாவும் குடித்தோம். குண்டூரில் இரண்டாவது காட்சி தெலுங்கு படம் பார்த்தோம். என்னை முழுமையாய் இந்த வயல் அதன் ஈரச் சேற்றால் இழுத்துக் கொண்டுவிட்டது. நடுவில் மாந்தோப்பு வேலைகள், உரம், பூச்சிக்கொல்லிகள் வாங்குவது, வேளாண்மை அலுவலகம் போய் வருவது, மற்ற விவசாயிகளின் கடன் சம்பந்தமான வேலைகள் என எல்லாவற்றையும் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டேன். காலையிலிருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் இருந்தது. என் வாழ்வின் மிக சந்தோஷமான, நிம்மதியான நாட்களாய் இவை இருந்தன.

நடுவில் குணா மற்றும் சீராளனின் நினைவு வரும். அவர்களுக்குத் தொலைபேசி பண விவகாரங்களை செட்டில் செய்துவிடலாம் எனத் தோன்றும் ஆனாலும் அதை மறக்கடிப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாய் வேலைகள் தினம் வந்து கொண்டிருந்தன. ஒரு அறுப்பு முடிந்து, மீண்டும் நாற்று விட்டு நடும் வேலைகளையும் முடித்த பின்பு சற்று ஓய்வு கிடைத்தது. ஒரு பகலில் சீராளனிடம் பேசி, முகவரி வாங்கி வங்கி விவரங்களை கொரியர் அனுப்ப முடிவு செய்தேன். நானும் சென்னாவும் குண்டூர் போனோம். என் அலைபேசி வேலை செய்வதை நிறுத்தி இருந்தது. பொது தொலைபேசியிலிருந்து சீராளன் எண்ணிற்கு கூப்பிட்டேன்.

”சீராளா அய்யனார் பேசுறேன்”
மறுமுனையில் அமைதி
சீராளா?
..
”சீரா”
”ம்ம் சொல்லு”
”எப்படி இருக்க? குணா எப்படி இருக்கான்? கை எப்படி இருக்கு?”
மறுமுனையில் பதில் வரவில்லை
”சீராளா பேசுரது கேட்குதா”
”கேட்குது. சட்னு விஷயத்துக்கு வா, எதுக்கு போன் பண்ண?”
”உங்களோட பேங்க் அக்கவுண்ட் டீடெய்ல்லாம் ப்ரிண்ட் எடுத்திருக்கேன். எந்த அட்ரஸ்க்கு அனுப்ப?”
”உனக்கு இப்ப என் அட்ரஸ் வேணுமா? சொல்லிட்டா ஆள விட்டு வெட்டுவியா?
நான் அதிர்ந்தேன் ”சீராளா என்ன பேசுற? நான் ஏன் உங்கள வெட்டனும்?”
”அப்புறம் எதுக்குடா நட்டாத்துல விட்டு போனவன் ரெண்டு மாசம் கழிச்சி அட்ரஸ் கேக்குற?”
”இல்லடா பேங்க் டீடெய்ல்ஸ் அனுப்பதான் கேட்டேன்”
”அதான் என் மெய்லயும் இருக்கே நான் பாத்துக்க மாட்டனா”
”இல்லடா அது எனக்கு நினைவுக்கு வரல”
”நடிக்காதடா ங்கோத்தா, நான் கொல்லத்துல இருக்கேன் எவனுக்கு சொல்லனுமோ சொல்லு”
”சீராளா நீ என்ன பேசுரேன்னு புரியல. நான் எவன் பூலையும் ஊம்ப வேண்டிய அவசியமில்ல. தாமஸ் செத்ததுக்கும், குணா கை போனதுக்கும் நானும் ஒரு காரணம்தான். அதுல எந்த மாத்துக் கருத்துமில்ல. அதுக்கு நீ என்ன பழி வாங்கனும்னு நினைச்சனா வந்து என்ன வெட்டு வா!. இல்லனா நானே உங்கிட்ட வரேன் என்ன கண்ட துண்டமா வெட்டிப் போடு. ஆனா எவன்கிட்டயோ உங்கள காட்டிக் கொடுத்துட்டேன்னு மட்டும் சொல்லாத” எனக்கு குரல் உடைந்தது.

இப்போது குணா பேசினான்
”எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு, அன்னிக்கு நைட் நீ எங்க போன?”
”குணா அந்த ஜெயா வேற யாரும் இல்ல என் காதலி. நான் பாண்டில ஒரு பொண்ணோட வாழ்ந்தன்னு சொன்னனே அவதான் அது”
இப்போது சீராளன் கத்தினான் ”அதுக்காக கூட வந்தவங்கள நட்டாத்துல விட்டுடுவியாடா ங்கோத்தா”
”சீராளா அவள அங்க திடீர்னு பாத்ததும் என்ன பன்ரதுன்னே தெரியல. படிக்கட்டுக்கு அடில ஒரு ரூம் இருந்தது அங்க கூட்டிப் போய் பழைய கதலாம் சொன்னா. இப்ப அவ இந்த நிலமைக்கு வந்ததுக்கு காரணம் நான் தான்னு திட்டினா. எனக்கு எல்லாம் மறந்து போச்சு. திடீர்னு துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டுத்தான் சுதாரிச்சேன். வெளில ஓடிவர பாத்தேன். ஆனா அவ என்ன விடல. அஞ்சி நிமிசத்துல அவ புருசன் ரூம்ல பூந்து, என்ன வெட்ட வந்தான். என்ன காப்பாத்தப் போய் அவ செத்துப் போனா.”
அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. குரல் கம்மிப் போனது
குணா சீராளன் யாருமே பேசவில்லை
ஒரு நிமிடம் எல்லாம் அமைதியாக இருந்தது.
மூக்கை உறிஞ்சிக் கொண்டு தொடர்ந்து பேசினேன்
”நான் இப்ப குண்டூர்ல எல்லா அடையாளத்தையும் அழிச்சிகிட்டு ஒரு விவசாயியா வாழ்ந்திட்டிருக்கேன். நான் பண்ணது தப்புதான். அதுக்காக நீங்க கொடுக்கிற தண்டனைய சந்தோஷமா ஏத்துக்கிறேன். எப்ப வேணா என்ன வந்து வெட்டுங்க வாங்க” எனச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன்.

தொலைபேசி பூத்தை வெட்டு வெளிவில் வந்தேன். முகத்தை அழுத்தமாய் துடைத்துக் கொண்டேன். சென்னா தூரத்தில் நின்றுகொண்டிருந்தான் ஒயின் ஷாப்பிற்கு போய் மதுபுட்டிகளை வாங்கினேன். பேசாமல் வண்டியிலேறி அமர்ந்து கொண்டேன். சென்னா மாலை ஒரு கல்யாணத்திற்கு அப்பா அம்மாவோடு போவதாய் சொன்னான். நாளைதான் வருவோம் என்றான். எனக்கும் தனியாய் குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. சரி என்றேன். தோப்பிற்கு வந்து சேர்ந்தேன்.

ஓவியம்: வான்கோ

மேலும்

2 comments:

Nithi said...

We need 2 or 3 part posting at a time.....any chance???

trjprakash said...

Good.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...