Monday, March 14, 2011

அத்தியாயம் ஐந்து. தீராப்பழி

சூரியன் முகத்தைச் சுட்டவுடன் விழித்துக் கொண்டேன். சாய்விருக்கையில் படுத்தபடியே தூங்கி விட்டிருக்கிறேன். குணா எப்போது போய் படுத்தான் எனத் தெரியவில்லை. அந்த இரவில் வீட்டை விட்டு வெளியேறிய குணா எங்கு சென்றான்?. எப்படி இம் மாதிரியான ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்தான்? என்பது பற்றியெல்லாம் அவன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லக் கூடும். எழுந்து முன் கட்டிற்கு வந்தேன். திண்ணையில் எதிரே அமர்ந்து சீராளனுடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். சீராளன் முகம் சரியாக இல்லை. தெலுங்கில் பேசிக் கொண்டார்கள். நான் படுக்கையறைக்குப் போய்விட்டேன். சற்று நேரம் கழித்து தாமஸ் வந்தான்.

“குணா இன்னும் தூங்கிட்டிருக்கான், நைட் ரொம்ப லேட்டாகிடுச்சா?” என்றான்
“ஆமா” எனப் புன்னகைத்தேன்.
நீ எழுந்திட்டியா? குளியல் போட்டுட்டு வந்துருவமா?
“ம்ம்” என்றபடி தாமசுடன் கிளம்பினேன்

நாங்கள் வெளியே வந்தபோது,சீராளனுடன் திண்ணையில் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் சட்டெனப் பேச்சை நிறுத்தினார். சீராளன் முகம் தீவிர யோசனையில் இருந்தது. காலை ஏழு மணி இருக்கும். வீதியில் சந்தடி மிகுந்திருந்தது. மாடுகள் கூட்டமாய் வயல் பக்கம் சென்று கொண்டிருந்தன. ஆற்றில் குளித்துவிட்டு பள்ளிக்குப் போகும் சிறார்கள் சீருடையோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். நான்கைந்து நாய்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஓடிக்கொண்டிருந்தன. அவர்களோடு நாய்களும் குளித்திருந்தன. உடலை லேசாய் உதறியபடியே ஓடின. சிறார்கள் பேசுக்கொண்ட தெலுங்கு கீச் கீச் என கிளிக் கத்துவது போலிருந்தது. ஆற்றில் ஓரிரு முதியவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கிராமமே ஏற்கனவே குளித்துவிட்டிருக்கக் கூடும். காலை ஏழு மணி என்பது கிராமங்களில், தளர்ந்த முதியவர்கள் குளிக்கும் நேரம்தான். நீர் கதகதப்பாக இருந்தது. சீக்கிரம் குளித்து விட்டு வெளியேறினோம். குணா எதிரில் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு வாயில் ஒரு பல்குச்சியுடன் எதிரில் வந்தான். புன்னகைத்துவிட்டுக் கடந்தோம்.

அந்த நபர் போய்விட்டிருக்கிறார். சீராளன் திண்ணையில் தனியே அமர்ந்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் புன்னகைக்க முயன்று தோற்றான். ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. அவனாய் சொல்லட்டும் என நினைத்துக் கொண்டே பின் கட்டை நோக்கிச் சென்றோம். கொடியில் ஈர உடைகளை காயவைத்துக் கொண்டிருந்தபோது சீராளன் முன் கட்டின் உத்திரத்தைப் பிடித்தபடி தொண்டையைக் கனைத்தான்.

“நாம ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தோம். ஆனா சும்மா இருக்க விடமாட்டாங்க போல”
“என்ன சொல்ற?” என்றான் தாமஸ்
“மதுரைல என்ன வெட்டினது யார்னு தெரிஞ்சிடுச்சி”
“யார்?” என்றேன்
“இது என்னோட பழைய கணக்கு. என் அப்பாவோட எதிரிங்க. அவர் விட்டுவைச்ச மீதி என்ன துரத்திட்டு இருக்கு. இனிமே ஒளிய முடியாது”
“முழுசா சொல்லு” என்றான் தாமஸ்
“குணாவும் வந்திரட்டும். நீங்க ரெடியாகி வாங்க. சாப்டுட்டே பேசுவோம்”

0
ஜிகினா விவகாரத்திற்குப் பின்பு சீராளனுக்கு மீண்டும் பெண் உடல் மீதான விருப்பம் அதிகரிக்கத் துவங்கியது. மதுரையில் காலூன்ற ஆரம்பித்த நாளிலிருந்து ஜிகினாவைப் புணரும் நாள் வரை அவன் பெண்களை முற்றிலுமாய் தவிர்த்திருந்தான். கொடைக்கானலில் இருந்து திரும்பியதும் அவனால் இரவுகளில் சும்மா தூங்க முடியவில்லை. மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. மதுரையில் எல்லாத் தரப்பு ஆட்களோடும் சீராளனுக்குத் தொடர்பு இருந்தது. ஆனாலும் அவர்களிடம் கேட்க யோசித்தான். மற்ற மூவருக்கும் இவ்விஷயம் தெரிந்துவிடக் கூடாது என்பதில் திடமாய் இருந்தான். போலவே அவனால் இன்னொரு உறவிலும் ஈடுபட முடியவில்லை. இதற்கு மேல் ஒரு பெண்ணைப் பார்த்துப், பின்னால் அலைந்து, பேசிப்பேசிப்பேசி படியவைத்து, புணர்வதெல்லாம் அலுப்பாய் தோன்றியது. தொழில் முறை பெண்களிடம் போகவும் பெரும் தயக்கம் இருந்தது. வெளியூர் செல்ல ஒரு வாய்ப்பும் அமையவில்லை.

கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நேரத்தில்தான் தேவி அறிமுகமானாள். ஒரு மதியத்தில் ட்ராவல்ஸில் வெளியே நின்றபடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். நடுத்தரவயதில் ஒரு பெண் அவனிடம் ஐநூறு ரூபாயை நீட்டி ”சில்லறை இருக்குமா?” என்றாள். ஏதோ யோசனையில் இருந்தவன் சற்று திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். ஐந்தடிக்கு குறைவான உயரம். பருத்துச் சிவந்த உடல். குண்டு முகம். செழித்த கன்னங்கள். சீராளன் மனதிற்குள் மழையடித்தது. பெண்களைப் பார்த்த உடனேயே, ரெண்டும் ரெண்டும் நாலு எனச் சொல்லிவிடும் ஆற்றல் சீராளனுக்கு இருந்தது.

“என்கிட்டயும் இல்லயே.எவ்ளோ வேணும்?” என்றான்
“பக்கத்து கடைக்கு இருநூறு ரூபா தரனும். சில்லர இல்லங்கிறாங்க” என்றாள்
அவள் விழிகள் அலைபாய்ந்து கொண்டே இருந்ததைப் படித்தான். சிணுங்கலான குரலும், உடல்மொழியும் அவனுக்குப் பழக்கமானதுதான். பேச்சில் தெலுங்கு வாடை இருந்தது.
இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைத் தந்தான்.
“தீனினு இச்சையண்டி” என்றான்.
“மீரு தெலுகா? எனச் சிரித்தாள்.
சீராளன் புன்னகைத்தான்.
அவள் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தாள்.
“நா பேரு தேவி, நேனு இக்கட மாட வீதில உன்னானு. மீரு நாத்தோ ஒச்சாரண்டே, நேனு அக்கட பெட்ரோல் பங்க்ல சேஞ்ச் மாற்சேஸி இச்சேஸ்தானு”
“நேனு போஜனம் செய்தானிக்கு வெளுத்தானுன்னு அனுக்குண்டானு” என்றான்
“நேனு இங்கா போஜனம் செய்லேதண்டி” என்றாள்
“மீரு ஒச்சகண்டி முந்து போஜனம் சேஸ்தம் ஆ தரவாத்தா சேஞ்ச் சேசி இச்சஸ்தானு” என்றான்

அடுத்த அரை மணி நேரத்தில் தேவியை கிழக்கு மாட வீதியின் நெருக்கடியான சிறு சிறு சந்துகளுக்கு உள்ளிருந்த, இலக்கம் அறுபத்து ஒன்பதாம் எண் கொண்ட வீட்டின், மூன்றாவது கட்டு இருட்டு அறைக்குள் தரையில் கிடத்தி, வியர்க்க வியர்க்கப் புணர்ந்தான். இப்படியாகத் துவங்கியதுதான் தேவியுடனான பழக்கம். அந்த வீட்டில் தேவியுடன் இன்னும் ஆறு பெண்கள் இருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தரகன் தொழில் நடத்திக் கொண்டிருந்தான். சீராளன் பெரும்பாலும் மதிய நேரத்தில்தான் போவான். அங்கிருக்கும் மற்ற பெண்களை அவன் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. தேவி இருக்கும் கடைசி அறைக்கு விடுவிடுவெனப் போவான். ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் போய்விடுவான். இருட்டான அந்த அறையும், கலவியுடன் பொங்கும் வியர்வையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறைக்குள் இவனைத் தவிர யாரையும் அனுமதிப்பதில்லை என்றாள். வாடிக்கையாளர்களுக்கு தனியாக முன் வீட்டில் தடுப்பு மறைவுகள் இருந்தன. மதிய நேரத்தில் வரும் தனி வாடிக்கையாளர்கள், மற்றப் பெண்களுக்கும் இருந்ததால் யாரும் யாரையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

தேவி இருந்த அறையின் ஒரு மூலையில் சிறிய நாடா ஸ்டவ் இருந்தது. அதில்தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அறையின் இன்னொரு மூலையில் இரண்டு சுவர்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக் கயிறில் அவளின் உடைகள் தொங்கிக்கிடக்கும். கும்மிருட்டு எப்போதுமிருந்து கொண்டிருந்தது. சற்றுக் கண்கள் பழகினால் வெளிச்சமிருப்பதைப் போன்ற உணர்வு வரும். வெற்றுத் தரையில் தலையணையை மட்டும் தலைக்கு வைத்துக் கொண்டு கலவுவார்கள். தொங்கிக் கிடக்கும் அவளின் உடைகளில் இருந்து வரும் விநோத மணம் அறையை நிறைத்திருக்கும். தேவியின் உடல் வியர்க்க வியர்க்க சீராளனுக்கு காமம் பொங்கும். ஒரு மணி நேரத்தில் மூன்று முறை கலவி கொள்வார்கள். சில நாட்களில் சீராளன் சும்மா இருந்து விட்டுப் போவதுமுண்டு.

சென்ற மாதம் பதினேழாம் தேதி சீராளன் முதல் முறையாய் தன் கவனத்தில் பிசகினான். தேவியுடன் சல்லாபித்து விட்டு வெளியில் வந்தபோது, பின்னாலிருந்து ஒரு கரம், அரிவாளை அவன் பின்னங்கழுத்தில் பாய்ச்சியது. சுதாரித்துத் திரும்பி தன் மினியேச்சரை எடுத்து இரண்டு முறை சுட்டான். நான்கைந்து பேர் சிதறி ஓடினர். அணிந்திருந்த டி-சர்டை கழற்றி கழுத்தைச் சுற்றி இறுக்கக் கட்டிக் கொண்டான். பத்தடித் தொலைவில் ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பக்கவாட்டில் பூட்டப்பட்டிராத, அவனது யமாஹா 100 சிசியில் பாய்ந்தமர்ந்து பறந்தான்.
இரத்தம் முதுகை நனைத்து, யமஹாவின் வழி இறங்கி, கருப்புத் தார் சாலையில் கோடிழுத்துக் கொண்டே வந்தது. கண்கள் முன் மினுக்கட்டாம் பூச்சிகள் பறந்தபடியிருக்க, நழுவும் நினைவை கெட்டியாய் பிடித்தபடி, எனக்குத் தொலைபேசினான். வண்டியை ஓரம் கட்டச் சொன்னேன். அவன் நிற்கும் இடத்திற்கு சமீபமாய் இருப்பவனை இன்னொரு தொலைபேசியில் அழைத்தேன். இவனிடம் பேசிக்கொண்டே, அவனிடம் விசயத்தைச் சொன்னேன். அவன் சீராளனை பார்த்துக் கொண்டிருப்பதாய் சொன்னான். விரைந்து செயல்படுவென இரண்டு தொடர்புகளையும் துண்டித்து விட்டு, நானும் அந்த இடத்திற்கு வண்டியில் விரைந்தேன். நான் சென்று சேரும்போது சீராளன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

யார் வெட்டியிருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. உள்ளூர் அரசியல்வாதியிடம் உறவு சுமுகமாகவே இருந்தது. ஜிகினா துண்டு துண்டாய் வெட்டப்பட்ட வீடியோவைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ந்து போனான். மேலும் ஒரு பந்தாய் சுருட்டிய மஞ்சள் பை அவனிடமிருந்து வந்து சேர்ந்தது. இதுவரை எந்தச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளவும் இல்லை. பின் யார் வெட்டி இருப்பார்கள்? என மண்டையை உடைத்துக் கொண்டோம். விபசார விடுதி நடந்துபவர்களுக்கு இவனை வெட்டக் காரணம் எதுவும் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு பலமான எதிரி எங்களுக்கு உருவாகி இருப்பதாய் நினைத்துப் பரபரப்படைந்தோம். சீராளன் உடல் தேறி வந்ததும் எங்காவது போய் சில மாதங்கள் ஓய்வு எடுக்கத் திட்டமிட்டது கூட இந்த சிக்கலில் இருந்து தற்காலிகமாய் தப்பிப்பதற்காகத்தான்.
0
குணாவும் வந்து சேர்ந்தான். நால்வரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். சீராளன் சொல்ல ஆரம்பித்தான்.

”என்னை வெட்டினது பக்கத்து ஊர்காரன். கிட்டத்தட்டப் பத்து வருஷப் பகை. இவங்க கிட்ட இருந்து தப்பிச்சிதான் கேரளாவிலயும் தமிழ்நாட்லயும் சுத்திட்டிருந்தேன். நான் பண்ண ஒரே தப்பு, மாட வீதி வீட்டுக்கு ரெகுலரா போனதுதான். அங்க தொழில் நடத்திட்டு இருந்தது இவனுங்க ஆளுங்கதான்”
0

சீராளனுடைய தாத்தா இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். அவர் காலத்திலிருந்தே எண்ட்ட பள்ளி கிராமத்தின் அறிவிக்கப்படாத தலைமைக் குடும்பமாக சீராளனுடைய குடும்பம் இருந்து வந்தது. தாத்தாவைப் போலவே சீராளனின் அப்பாவும் மிக நேர்மையானவர். கடுமையான உழைப்பாளி. ஆனால் படிப்பு வரவில்லை. விவசாயம் பார்த்துக் கொண்டார். சித்தப்பாக்கள் படித்து வெளிமாநிலம், வெளிநாடு என ஆளுக்கொரு திசையில் சென்றுவிட்டனர். சீராளனுடைய அப்பாவிற்கு அந்த ஊரில் நல்ல செல்வாக்கு இருந்தது. மாடு வாங்குவதிலிருந்து, வரப்புத் தகராறு வரை எல்லாவற்றுக்குமான தீர்வை அவரால் தந்துவிட முடியும் என அந்த ஊர்மக்கள் நம்பினர். மேலதிகமாய் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், விவசாயக் கடன்கள் என அரசாங்க நிமித்தமான காரியங்களுக்கும் மக்கள் சீராளனுடைய அப்பாவையே நம்பியிருந்தனர். எண்ட்ட பள்ளி கங்காவரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. அந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ வையும் சீராளன் அப்பா தெரிந்து வைத்திருந்தார். அவரின் குடும்பத்தோடும் சீராளன் குடும்பத்திற்கு நல்ல உறவு இருந்தது. எம்.எல்.ஏவின் கடைசி மகனும்,சீராளனும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். உடல் நலக் குறைவினால் எம்.எல்.ஏ இறந்த பிறகு அடுத்த தேர்தலில், அவரின் மூத்த மகன் எம்.எல்.ஏ வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அப்பாவின் நேர்மை மீது அவனுக்கு கடும் வெறுப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. அவன் பொறுப்பிற்கு வந்ததும் கங்காவரம் பகுதி தலைகீழானது. கள்ளச்சாராயத்திலிருந்து விபசாரம் வரை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அரசாங்க அலுவலகங்களில் மெத்தனமும், லஞ்சமும் இயல்பானது. கங்காவரத்திற்கு கீழிருந்த பதினேழு பஞ்சாயத்து கிராமங்களும் தனித்து விடப்பட்டன. மக்களுக்கு எந்த வசதிகளும் போய்ச்சேரவில்லை.

கொதித்தெழுந்த சீராளனின் அப்பா அரசாங்க அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். விவசாயிகளைத் திரட்டி எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தர்ணா செய்தார். மெல்ல இவரின் குரல் வலுக்க ஆரம்பிக்கவே, எம்.எல்.ஏ தனிப்பட்ட முறையில் சீராளனின் அப்பாவை வாங்கப் பார்த்தான். முடியாமல் போனது. அடுத்த கட்டமாக சீராளனின் அப்பா எம்.எல்.ஏ மீது புகார் மனுக்களை முதல்வருக்கு அனுப்பினார். விஷயம் கேட்டுக் கொதித்த எம்.எல்.ஏவின் குண்டர்கள், ஒரு நள்ளிரவில் சீராளனின் வீட்டிற்குத் தீவைத்தனர். விடுமுறைக்கு மாமா வீட்டிற்குப் போயிருந்த சீராளனைத் தவிர்த்து அனைவரும் அத் தீயில் கருகிப் போயினர். சீராளன் அப்போது மேல் நிலை வகுப்பைத் தாண்டியிருந்தான். பதினேழு வயதில் தன் குடும்பத்தையே இழந்த அவனுக்குப் பழி உணர்வு முதன்முதலாய் வேர்விட ஆரம்பித்தது. அவனும் அவன் மாமாவும் இன்னும் சில கிராமத்து மனிதர்களுமாய் சேர்ந்து எம்.எல்.ஏ வீட்டிற்குத் தீ வைத்தனர். கூடவே ஓரிரு பெட்ரோல் குண்டுகளையும் வீட்டிற்குள் வீசினர். வெடித்துச் சிதறிய தீப்பிழம்பில் எம்.எல்.ஏவும் அவர் குடும்பமும் கருகியது.

அந்த இரவிலேயே சீராளனை சித்தூரிலிருக்கும் உறவினர் வீட்டிற்கு அவன் மாமா அனுப்பி வைத்துவிட்டார். ஓரிரு நாளில் அவன் மாமாவையும் எம்.எல்.ஏ உறவினர் கும்பல், வெட்டிச் சாய்த்தது. சீராளனுடன் பள்ளியில் படித்த கடைசி மகன் லோகு உயிர் பிழைத்து விட்டிருக்கிறான். அவனைத் தவிர எல்லாரும் அன்று மாண்டு போயிருக்கிறார்கள். எப்படியும் சீராளனை மோப்பம் பிடித்து விடுவார்கள், என பயந்து அவன் தஞ்சம் புகுந்திருந்த உறவினர்கள் அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு நள்ளிரவில் சித்தூரிலிருந்து வெளியேறிய சீராளன், நெடுஞ்சாலை லாரி ஒன்றில் தஞ்சம் புகுந்தான். திருவனந்தபுரம் சென்ற அந்த லாரியின் ட்ரைவர்தான் சீராளன் இவ்வாழ்வைத் தேர்ந்தெடுக்க காரணமாய் இருந்திருக்கிறார். கேரளாவில் அப்போது முளைவிட ஆரம்பித்திருந்த தலைமறைவு இயக்கங்களுடன் சீராளன் ஐக்கியமானான். நான்கு வருடங்கள் அவர்களோடு இயங்கிவிட்டுப் பின்பு வெளியேறி, கூலிக்காய் கொலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

எம்.எல்.ஏ ஆட்களால் அதற்கு மேலும் கங்காவரத்தில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மக்களிடையே செல்வாக்கு மோசமடைந்ததால், முதல்வர் நேரடியாய் தலையிட்டு லோகுவை கங்காவரத்திலிருந்து வெளியேற்றி தமிழ் நாடு ஆந்திரா பார்டரில் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுமாறு அனுப்பி விட்டிருக்கிறார். சித்தூரில் அண்ணன் விட்டுப் போன விபச்சாரத் தொழிலை லோகு மீண்டும் தொடங்கி இருக்கிறான். அவனுடைய விபசார நெட்வொர்குகள் மதுரை வரை வியாபித்திருக்கின்றன. அதைப் பார்வையிட வந்த ஒரு மதியத்தில்தான் சீராளனைப் பார்த்துவிட்டிருக்கிறான். அடுத்த நாள் சீராளனை வெட்ட ஆட்களை ஏவியிருக்கிறான். இது எதுவுமே தெரியாத சீராளன் பத்து வருடத்தில் ஊர் மாறியிருக்கும் என நினைத்து உறவினர்களைத் தொடர்பு கொண்டு, ஓய்விற்காக எங்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்ததாய் சொல்லி முடித்தான்.

நேற்று இரவு தம் ஆட்களுடன் கங்காவரம் ஜெயாக்கா விபசார விடுதியில் லோகுவையும் அவன் ஆட்களையும் சீராளன் உறவினர் ஒருவர் பார்த்திருக்கிறார். அவரிடம் சீராளனைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். சீராளனின் தலையை வெட்டி எண்ட்ட பள்ளி கிராம எல்லையில் வைக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் மதுரையில் அவன் தப்பி விட்டான் என்றுமாய் கறுவிக் கொண்டிருந்தார்களாம். அவர் சீராளனை யார் என்றே தெரியாது எனச் சொல்லிவிட்டு நேராய் சீராளனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். எப்படியும் இன்று அவர்கள் சீராளனைத் தேடி வரக்கூடும் எனக் காலையிலேயே வந்து எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்.
0

சாப்பிட்டு முடித்தோம்.
“இப்பவே ரொம்ப லேட்னு நினைக்கிறேன். எல்லாத்தையும் பேக் பண்ணி கார்ல போடு. நாம இங்க இருந்த அடையாளமே தெரியக்கூடாது. உடனே வேற எங்கயாவது போய்டுவோம்” என்றான் தாமஸ்
”இனிமே எங்க போறது தாமஸ்? மதுரைல இந்நேரம் நம்ம ஜாதகத்தையே நோண்டி இருப்பாங்க. அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது” என்றான் சீராளன்
”ஒரே வழிதான் இருக்கு” என்றான் குணா
என்ன? என்பதுபோல் மூவரும் அவனைப் பார்த்தோம்.
”அவனுங்க ஆரம்பிக்கிறதுக்குள்ள நாம முந்திக்கனும்” என்றான் குணா.

மேலும்

9 comments:

bandhu said...

என்ன ஒரு அற்புதமான நடை! Truly Amazing! I am fortunate to be reading this!

Nithi said...

Really superb story......

பிரபல பதிவர் said...

WOW...

Anonymous said...

express speed boss!!!

Anonymous said...

விறுவிறுப்பாக செல்கிறது. இடைவெளி விடாமல் எழுதினால் தன்யனாவேன்.
-ஜெயன்

யுவா said...

ரொம்பவும் எதிர்பார்த்திருந்த இரண்டாம் பாகம். அதே விறுவிறுப்புடன்... கலக்குங்க...

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே
இடைவெளி விழாமல் எழுதிவிட முயற்சிக்கிறேன் :)

Anonymous said...

awesome writing,good narration,simply superb

jayaramprakash said...

super brother.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...