Wednesday, December 29, 2010

திரும்புதலும் காணாமற் போதலும்ஒரு திரைப்படத்தின் எல்லாக் காட்சிகளுமே லேசான மர்மத்தை உள்ளடக்கி இருப்பது பார்வையாளர்களை வெகுவாய் ஈர்க்கக் கூடிய சிறந்ததொரு திரைக்கதை உத்தியாகும். திகைப்பை படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வைத்திருந்து இறுதிக் காட்சியில் திடாரென ஒரு அதிர்ச்சியைத் தந்து முடிந்து போகும் படங்கள் யாவும் இதுவரை புன்முறுவலைத்தான் வரவழைத்து விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் இதே உத்தியைக் கொண்ட இந்தப் படத்தை பார்த்து முடித்துவிட்டு என்னால் புன்னகைக்க முடியவில்லை. லேசான பயமும், அதிர்ச்சியும் வெகு நேரம் நீடித்திருந்தது. காட்சிகள் ஏற்படுத்தியிருந்த அழுத்தமான பிம்பச் சித்திரங்களிலிருந்து வெளியேற வெகுநேரம் பிடித்தது.

The return என்கிற இந்த இரஷ்யத் திரைப்படம் தந்தை – மகன் உறவை மிகுந்த இறுகிய முகத்தோடு பேசுகிறது. நான் பார்த்த பெரும்பாலான இரஷ்யப் படங்கள் துயரத்தைக் கொண்டாடுபவையாய் இருக்கின்றன. வாழ்வின் இருண்மையை, இயலாமையை, துக்கத்தை பெரும்பாலான இரஷ்யப் படங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் கதா பாத்திரங்கள் அனைத்துமே மிகத் துக்கமானவைதாம். இவரின் மனிதர்கள் வாழ்வின் துக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களாக, புதிர்களின் மாய வழியில் சிக்கிக் கொள்பவர்களாக, விநோதங்களும், திகைப்புகளும், துக்கங்களும், பெருக்கெடுக்கும் நிஜ /நிழல் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். தர்க்கோயெவ்ஸ்கியின் உலகம் நீரும் தீயும் கலந்த காட்சிப் படிமங்கள்தான். இந்தப் படமும் கிட்டத் தட்ட தர்க்கோயெவ்ஸ்கியின் உலகத்தை ஒட்டிதான் எடுக்கப்பட்டுள்ளது. அவர் உண்டாக்கும் திரைஓவியப்புதிர்நீர்மப் படிமங்களின் சாயல் எதுவும் இல்லையெனினும் காட்சி ரீதியிலாக இந்தப் படமும் மிகவும் அழுத்தமானதுதான்.

படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு உயராமன டைவிங் மரத் திட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது செங்குத்தான படிகள் கொண்ட அதன் உச்சியிலிருந்து சிறுவர்களும் பதின்மர்களும் நீரில் குதித்துக் களிக்கின்றனர். இருப்பதிலேயே சிறிய சிறுவன் அங்கிருந்து குதிக்க முடியாமல் பயப்படுகிறான். ஏற்கனவே குதித்தவர்கள் அவனை குதிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். குதிக்காவிடில் நீயொரு கோழை என ஏசுகின்றனர். சிறுவன் அங்கேயே மடங்கி உட்கார்ந்து விடுகிறான். வெகு நேரம் கழித்து அவனைத் தேடிக் கொண்டு வரும் அவனின் தாய் அச்செங்குத்தான படிகளில் மேலேறி அவனை அணைத்துக் கொள்கிறாள்.எங்கே செத்துப் போய்விடுவேனோ என பயந்தேன் என அழுதபடியே அம்மாவைக் இறுக்கிக் கொள்கிறான். இந்த உயரத்தின் பயம்தான் நிகழப்போகும் அசம்பாவிதத்திற்கான ஒரு முடிச்சாய் இருக்கிறது. படத்தின் திருப்புமுனையை முதற்காட்சியிலேயே சூசகமாக சொல்லிவிடும் இந்த உத்தி அபாரமாய் கையாளப்பட்டிருக்கிறது.

அந்திரேயும் இவானும் சகோதரர்கள். அந்திரேய் பதின்மன். இவானுக்கு 12 வயது. இவர்களின் தந்தை 12 வருடத்திற்கு முன்பே பிரிந்து சென்றுவிடுகிறார். சிறியவன் இவான் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஒரு மங்கலான புகைப்படம்தான் இருவருக்கும் தந்தையாக இத்தனை வருடங்கள் இருந்து வந்திருக்கிறது. இருவரும் விளையாடிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரும் ஒரு மாலையில் கட்டிலில் படுத்திருக்கும் ஒருவரைக் காட்டி உங்களின் தந்தை வந்துவிட்டார் என்கிறாள் தாய். இரவு உணவு தந்தையோடு அருந்தும்போது அவரிடம் எங்களை மீன் பிடிக்க அழைத்து செல்வீர்களா? என ஆர்வமுடன் கேட்கின்றனர். தந்தையும் ஒத்துக் கொள்கிறார். இருவரும் படுக்கையில் படுத்தபடி கிசுகிசுப்பாய் பேசிக் கொள்கின்றனர். அவரின் திடகாத்திரமான உருவம் இருவருக்கும் பிடித்திருக்கிறது. அவரின் கார், என்ன வேலை செய்வார் என்பது பற்றியெல்லாம் ஆர்வமாய் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாள் காலையில் தந்தை இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு தீவினை நோக்கிச் செல்கிறார்.

தந்தை மிக இறுக்கமான முகத்தைக் கொண்டிருக்கிறார். மிகப் பிடிவாதமானவராகவும் கோபக்காரராகவும் இருக்கிறார். சிறுவர்களுடன் இயல்பாய் அவரால் பழக முடியவில்லை. அவரின் வேலை என்ன? இத்தனை நாள் எங்கிருந்தார்? என்பது குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார். எனினும் அவரின் முரட்டுத்தனத்தோடு மெல்லிதாய் ஒரு அன்பும் இழையோடுகிறது. அந்திரேய் தந்தையுடன் எளிதில் ஒட்டிக் கொள்கிறான். இவான் இயல்பிலேயே வீம்பு பிடித்தவன் என்பதால் அவனுக்குப் புதிதாய் வந்த தந்தையோடு ஒத்துப் போகவில்லை. பயணத்தின் வழி நெடுக நிகழும் சம்பவங்கள் மனித மனதின் புதிர் விளையாட்டுக்களோடும், சிறுவனுக்கும் தந்தைக்குமான பனிப்போருடனும் கழிகிறது. வினோதமான பல பிரதேசங்களுக்கு தந்தை அவர்களை அழைத்துச் செல்கிறார். சூழல்களின் திகைப்பும் மூவருக்கிடையே எப்போதும் இருக்கும் இறுக்கமும் படத்தை சுவாரசியமாக்குகிறது. இறுதிக் காட்சியில் நிகழும் விபரீதம் படத்தின் மீது அவிழ்க்க முடியாத சில முடிச்சுகளை இன்னும் இறுக்குகின்றது.

இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் Andrei Zvyagintsev இது இவரின் முதல் படம். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவெனில் இவரின் தந்தை ஆறு வயதில் காணாமல் போய்விட்டிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதுமாய் தொடர்ந்த சிக்கலை, இழப்பை அதே சிறுவனின் மனநிலையோடு இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். சில படைப்புகள் இயக்குனரின் வாழ்வோடு ஒன்றியிருக்குக்குமெனில் அவை பார்வையாளனுக்குத் தரும் நெருக்கம் உண்மைக்கு மிகச் சமீபமானது. இம்மாதிரியான படைப்புகள் எளிதில் கலைத்தன்மையை அடைந்து விடுகின்றன. வாழ்வும் கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதானே?

Trailer

8 comments:

jayaramprakash said...

வணக்கம் தல.அடுத்த அத்தியாயம் எப்ப எழுதுவீங்க. படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

Ashok D said...

எஸ்.ராவும் எழுதியிருக்கிறார் என எண்ணுகிறேன்..

முடிவை சொல்லாதது நன்று :)

Ayyanar Viswanath said...

விரைவில் எழுதுகிறேன் ஜெயராம் நன்றி


எஸ்.ரா எழுதியதை நான் இன்னும் படிக்கவில்லை அசோக். தேடி படிக்கிறேன்.

Unknown said...

இந்தப் படம் பார்த்துள்ளேன். செழியன் கூட எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அற்புதமான படம் அய்யனார். நினைவு படுத்தியமைக்கு நன்றி மீண்டுமொரு முறை பார்ப்பேன்.

Santhosh said...

அய்ஸ்.. டோரண்டு டவுன்லோடு சுட்டி இருக்கா? இல்லாட்டி டோரண்ட் fileஜ எனக்கு அனுப்ப முடியுமா?

Santhosh said...

email follow up....

Ayyanar Viswanath said...

நன்றி உமா

சந்தோஷ் நான் டிவிடி வாங்கிதான் பார்த்தேன். டோரண்ட் லிங்க் தேடி பாக்கிறேன். கிடைச்சா அனுப்புறேன்.

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல பகிர்வு

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...