Monday, March 29, 2010

அங்காடித் தெரு – கை விடப்படுதலின் துயரம்

தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதையின் குரூரத்தோடும் மற்றுமொரு படைப்பை நம் முன் வைத்திருக்கிறார். சாமான்யர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்டு தத்தளிக்கும் குடும்பங்கள், அடுத்த வேளை உணவிற்கான உத்திரவாதமற்றோர், சாலையோர மனிதர்கள் என தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் முப்பது சதவிகித மக்களின் வாழ்வை மிகுந்த வீச்சோடு பேசுகிறது இப்படம். அவர்களின் குமுறலை, துயரத்தை, மரணத்தை, இழப்பை, கதறலை, நசுக்கப்படுதலை, ஒடுங்கிப்போதலை மிகுந்த வன்மத்தோடும் சற்றே மிகையோடுமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். வறுமையும் விபத்தும் தத்தமது கோரத் தாண்டவங்களை நிகழ்த்திக் காட்டும் பிரதான இடமாக இவர்களின் வாழ்விருக்கிறது. இவர்களின் வாழ்வை மொத்தமாய் உறிஞ்சிக் குடித்து வீங்கிப் பெருத்திருக்கும் பண முதலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் இப்படம் கடுமையாய் சாடியிருக்கிறது.

அங்காடித் தெருவின் திரைக்கதையிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட அற்புதமான சிறுகதைகள் பிரிந்து செல்கின்றன. அல்லது பல சிறுகதைகள் சேர்ந்து ஒரே திரைக்கதையாய் பிணையப்பட்டிருக்கிறது. இப்படம் முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.

1. செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே ஒரு தேர்ந்த சிறுகதையாக கண் முன் விரிகிறது.
தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசை யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது (கனி யின் வார்த்தைகளில் : அவன் ராணிய வேசைன்னு சொன்னான் பார் அப்பவே அவ நெஞ்சு வெடிச்சி செத்து போயிட்டா அப்புறம் கீழ விழுந்தது வெறும் உடல்தான்) ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள். வறுமை என்கிற ஒரே பலவீனத்தை மிக மோசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கம் ஒரு பெண்ணைக் கொன்றும் இன்னொருவனைப் பைத்தியமாக்கியுமாய் கெக்கலிக்கிறது. பார்வையாளர்களாகிய நாம் உறைந்து போகிறோம்.

2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். இது இன்னொரு நேர்த்தியான சிறுகதை.

3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய். இந்தக் கதையை மட்டுமே விவரித்து எழுதினால் சிறந்த சிறுகதையாக வரும் என்பதில் சந்தேகமில்லை

4. வெளியில் பளபளப்பாய் திரியும் பணக்காரப் பெண்ணின் குசுவினால் ஓடி மறையும் ஏழை இளைஞர்கள் பகுதி மிகுந்த எள்ளலோடு பதியப்பட்ட எதிர் கதையாடல்.

5. எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.

முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர், பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர், பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர், வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி என படம் முழுக்க கதாபாத்திரங்களும் கதைகளும் சிதறிக் கிடக்கின்றன.
எல்லாக் கதைகளும் எல்லாக் கதாபாத்திரங்களும் விளிம்பு மனிதர்களின் மீது பாயும் அதிகாரங்களின் வெறியாட்டத்தையும் தின்றுக் கொழுத்த பணக்காரர்களின் குரூர முகத்தினையும் அப்பட்டமாக தோலுறிக்கின்றன. அதே நேரத்தில் மனித நேயத்தையும் சிறியதொரு நம்பிக்கை வெளிச்சத்தையும் பார்வையாளர்களிடத்தில் கடத்தவும் தவறவில்லை.

விபத்து இந்தப் படத்தில் வெகு கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் சாமான்யர்களின் உயிரைத்தான் காவு வாங்குகின்றன. சாமான்யன் ஒரு தனிமனிதனுமல்ல. மரணமோ, உடல் ஊனமோ அது அவனுக்கு மட்டும் நேராது அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினுக்கும் நேரும் அவலத்தையும் அங்காடித் தெரு நுட்பமாய் பதிவு செய்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு உதயம் தியேட்டருக்கருகில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் உயிரை / உடலைப் பறித்த லாரியின் வன் சக்கரங்களுக்கடியில் சிக்குண்ட லிங்குகளின் கனிகளின் வாழ்வு இப்படி இருந்திருக்கலாம். விடியப் போகும் அடுத்த நாள் அவர்களுக்கு மிக முக்கியமானதொரு நாளாக இருந்திருக்கக் கூடும். அடுத்த நாளின் சுதந்திரத்தை அவர்கள் மிகப் பெரும் போராட்டத்தினுக்குப் பிறகு பெற்றிருக்கலாம். அப்போதுதான் துளிர்த்த ஒரு செடி வேரோடு பிடுங்கியெறிப்பட்டதைப் போல கனிகளின் லிங்குகளின் துளிர்த்த வாழ்வை அந்த லாரி நசுக்கி அழித்திருக்கக் கூடும். ஆளில்லாத ரயில்வே கேட்டுகளை கடக்க முனைந்து, ரயிலிடம் தோற்று, தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எத்தனையோ குடும்பங்கள் சென்னையின் நெரிசலில், அதிகார வர்க்கத்தினரின் காலடியில் புதையுண்டிருக்கலாம். பனையேறியின் வாழ்வும் சாவும் பனையிலேதான் என்பதை நிரூபித்த எத்தனையாவதோ பனையேறியின் மீதமிருக்கும் வாழ்வைக் காக்க வேண்டி அவரின் இரண்டு பதின்ம வயதுப் பெண்களில் ஒருத்தி சென்னையின் துணிக்கடைகளில் மாரைக் கசக்கும் கருங்காலிகளுக்கு இரையாகலாம். இன்னொருத்தி மேல்தட்டு வர்க்கத்தினரின் நாய்கள் தங்கும் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருப்பது இந்த விபத்துக்கள்தாம். அந்த விபத்துகளின் பின்னாலிருக்கும் அரசாங்கத்தின் மெத்தனம், தனிநபரின் கவனக் குறைவு போன்றவைதாம் மிகப் பெரும் துயரங்களுக்கான ஊற்றாய் இருக்கிறது. எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளும் மேல் தட்டு வர்க்கம் கை விடப்பட்டவர்களின் வாழ்வை மிகுந்த விருப்பத்தோடு விழுங்கி ஏப்பம் விடுகிறது.

திரையாக்கத்தைப் பொறுத்த வரை அங்காடித் தெரு வெயிலின் நகலாகத்தான் வந்திருக்கிறது. இரு படங்களும் வெவ்வேறு தளம்தான் என்றாலும். ஒரு பெண்ணின் தற்கொலையோடு முடியும் முதல் பாதி, பால்ய கால முன் கதைக் காட்சியமைப்புகள், மிகுந்த சப்தங்களோடு பெய்யும் மழையில் சண்டை, வலிந்து திணிக்கப்படும் குரூரம், கிளிட்சே அழுகை என பலக் காட்சிகளில் வெயிலின் பாதிப்பு இருந்தது. இம்மாதிரியான பேட்டன் கதை சொல்லல் முறைகளிடம் வசந்த பாலன் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. இந்த படத்தின் மிக மோசமான விஷயம் இசை. குதூகலம், கொண்டாட்டம், துயரம், என எந்த உணர்வையுமே இசை தூண்டவில்லை. மாறாய் காட்சிகளின் வீர்யத்தை இசை சற்றே குறைக்கிறது. பின்னணி இசையை சரியாகப் பயன்படுத்தும் இயக்குனராக நம் சூழலில் பாலுமகேந்திராவை சொல்லலாம். அவர் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்களின் பின்னணி இசையென்பது மெளனமும், காற்றும், பறவைகளின் சப்தமும் அல்லது சூழல்களின் ஒலிகளாகத்தான் இருக்கும் அதுவே அக்காட்சிகளின் இயல்பைக் குலைக்காது பார்த்துக்கொள்ள உதவும். இம்மாதிரியான படங்களுக்கு நடனத்துடன் கூடிய பாடல் காட்சிகளெல்லாம் பொருந்தாது உறுத்தலாகி விடுகின்றன. படத்தின் இயக்குனரே எழுதும் உரையாடலுக்கும் எழுத்தாளரின் உரையாடலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ஜெயமோகன் சரியாய் நிறுவியிருக்கிறார். இரண்டாம் பாதி தொய்வை திரைக்கதையில் சற்று சரி செய்திருக்கலாம். ஆனந்தியாக நின்று போயிருந்த அஞ்சலி கனியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். படத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் இவரின் பங்கு பிரதானமாகிறது.

சொற்பமான ஆட்கள் மட்டுமே அமர இயலும் துபாய் கலேரியாவின் குட்டித் திரையரங்கில் மிக சொற்பமான ஆட்களுன் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். இடைவேளையில் கழிவறையில் இருபத்தாறு வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் அழுகையைக் கட்டுப் படுத்த முனைந்து தோற்றுக் கொண்டிருந்தார். சில காட்சிகளில் பின்னிருக்கைப் பெண்களின் விசும்பல்களும் துல்லியமாய் கேட்டன. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் ஏதோ ஒரு நிம்மதியின்மையை உணர்வதாக நண்பியொருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள். இவைதாம் இத்திரைப்படத்தின் வெற்றியாகவிருக்கிறது.

42 comments:

ஆயில்யன் said...

மிக நுட்பமான விமர்சனம் ! கிளைகதைகளாக விவரித்திருக்கும் வரிகள், வலிகள் நிரம்பிய கதைகளை பிரசவிக்ககூடும்!

படம் பார்த்த பலரும் ஏதோவொரு மன அவஸ்தையினை பெற்றதாக கூறுகிறார்கள் - நிச்சயம் இயக்குனரின் வெற்றியே!

விமர்சனத்திற்கு நன்றி!

butterfly Surya said...

அன்பின் அய்யனார்,

உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.

பகிர்விற்கு நன்றி.

butterfly Surya said...

தமிழ் சினிமாவில் எத்தனையோ தொட்டு பார்க்காத கதைகளங்கள் கொட்டி கிடக்கின்றன என்று புலம்பி கொண்டிருந்த பலருள் நானும் ஒருவன்.


முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர்.. ///

ஆனால் அதே தெருவில் 25 வருடங்களுக்கு கடை ஆரம்பித்த முதலாளியின் அசுர வளர்ச்சியை சொல்லாமல் சொல்லுவதாக எனக்கு பட்டது.

ஒரு காட்சியில் பாண்டி Dubai என்று போட்ட டி. ஷர்ட் அணிந்து வருகிறான். கட்டிட வேலைக்காக செல்லும் கடல் கடந்து செல்லும் அமீரக இந்தியர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமாக எனக்கு தோன்றியது.

நேற்று ஒரு தொலைகாட்சி பேட்டியில் வசந்த பாலனும் வெளி நாட்டு வாழ் தமிழர்களின் நிலை பற்றி இதை குறிப்பிட்டார்.

இதை பற்றி உங்கள் பதிவில் எதிர்பார்த்தேன். அந்த வாழ்க்கை முறையை முற்றிலும் அறிந்தவர் நீங்கள்.

நேசமித்ரன் said...

இந்த பார்வை ..இது அய்யனார்
நன்றி அய்யனார் !

சென்ஷி said...

திரைப்படத்தை விமர்சனமாய் பதிவு செய்தலில் தேவையான நேர்த்தி மிகச் சிறப்பாய் இந்தப் பதிவில் பங்கு கொண்டிருக்கிறது.

மிகச் சிறப்பான அங்கீகாரம்.

கோபிநாத் said...

\\தன்னுடைய முதல் படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன்\\

அய்ஸ் வசந்தபாலன் முதல் படம் ஆல்பம் ;-) சரியாக ஓடல..2வது படம் தான் வெயில். ;)

அப்போ படத்தை பார்த்து அழுதாதான் வெற்றின்னு சொல்றிங்க...ரைட்டு ;))

\\சொற்பமான ஆட்கள் மட்டுமே அமர இயலும் துபாய் கலேரியாவின் குட்டித் திரையரங்கில் மிக சொற்பமான ஆட்களுன் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.\\

அப்போ எங்க ஊருக்கு படம் வராதா!! ;(

Unknown said...

நல்ல விமர்சனம் அய்யனார்.

பிச்சைப்பாத்திரம் said...

//தன்னுடைய முதல் படத்தை//

வசந்த பாலனின் முதல் படம் 'ஆல்பம்'.

அப்புறம்.. வெயில்' திரைப்படம் இத்தனை பரவலான பாராட்டுதல்களுக்குத் தகுதியான படமில்லை என்பதே என் பார்வை. சில நுட்பமான காட்சிகளைத் தவிர்த்து அதுவுமொரு வணிகநோக்குத் திரைப்படமே. ஆனால் அந்த சமரசமுமில்லாமல் 'அங்காடித் தெரு'வை வசந்தபாலன் உருவாக்கியிருக்கிறார் என கேள்விப்படுகிறேன். பார்த்தபிறகுதான் தெரியும்.

KUTTI said...

அட்டகாசமான விமர்சனம்.

மனோ

ராம்ஜி_யாஹூ said...

superb review, thanks Ayyanar.

அக்னி பார்வை said...

த‌ வே ஹோம் படத்தை என்னை அழ வைத்த திரைப்படம்.. ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கத்தை திருடி சென்றுவிட்டது.. படத்தை எடுத்த்வர்கள் சுகமாக தூங்கிகொன்டிருப்பார்கள் ஆனால் இன்னும் பல கடைகளில் ரத்த்மும் சதையுமாக மனிதர்கள் அலைகழிக்கபட்டே கொண்டிருக்கிறார்கள்

ஆடுமாடு said...

நுண்ணிய விவரிப்போடு சொல்கிறது விமர்சனம்.

பல சிறுகதைகளை உள்ளடக்கியதுதான் சினிமா என்றாலும் காட்சியாகப் பார்ப்பதற்கும் படிப்பதற்குமான வித்தியாசங்கள் நிறைய.

கொத்திப்போடுகிற சூழ்நிலைகளின் அரிவாள்களில், தென்பகுதி இளசுகள் இளமையை தொலைக்கும் இம்மாதிரியானதொரு கதையை, வசந்தபாலன் போன்றோரால் மட்டுமே எடுக்க முடியும். படத்தின் இறுதிகாட்சியும் சில இடங்களில் வரும் சோகமும் மிகைப்படுத்தலே என்றாலும் அதை படத்திற்கான திருஷ்டிப்பொட்டாகத்தான் பார்க்கிறேன்.

கனவுகளை கண் மைகளில் அமுத்திவிட்டும், வரும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களில் ஏக்கத்தை தூக்கி வைத்தும் வாழும் தொழிலாளர்கள் பற்றிய இப்படியொரு படத்தை எடுத்ததற்காக, வசந்தபாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வாழ்த்துகள்.

ஸ்ரீவி சிவா said...

என்னளவில் 'காதல்' படத்திற்கு பிறகு மனதில் ஒரு கனத்தை ஏற்றிய படம் இது.

உங்களுடைய பார்வையை, படத்தை அணுகிய விதத்தை தெரிந்து கொள்ள காத்திருந்தேன்.
நுட்பமான பார்வை அய்யனார்.
பகிர்வுக்கு நன்றி

Sabarinathan Arthanari said...

நல்ல விமர்சனம்

நன்றி

அகல்விளக்கு said...

இதுவரை படித்ததிலேயே மிகச்சிறந்த விமர்சனம் உங்களுடையதுதான்...

அருமை...

தமிழன்-கறுப்பி... said...

எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு படம், இனிமேல்தான் பார்க்கணும் அய்யனார், பகிர்வுக்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

அன்பு சுரேஷ் கண்ணன்,

வெய்யில் ஆக இருக்கட்டும், காதல் ஆக இருக்கட்டும், விண்ணை தண்டி வருவாயா க இருக்கட்டும், அங்காடி தெரு ஆக இருக்கட்டும்.

இன்றைய தமிழ் சினிமா சூழலில் பத்துக்கு ஒன்பது படங்கள் மொக்கை , அரைத்த மாவையே அரைப்பதாய் வருவதால், கொஞ்சம் சுமாராக எடுத்தாலே நல்ல பெயர் வந்து விடுகிறது.

அன்று பேர் வாங்க பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேதிரன் மிகுந்த சிரமப் பட வேண்டி இருந்தது, அப்போது சந்தையில் இருந்த தரமான போட்டி இன்று இல்லை.

எனவே சற்று மெனக்கெட்டால் போதும் என்று நல்ல பெயர் வந்து விடும்.

இருந்தும் இந்த படைப்பாளிகளுக்கு, இயக்குனர்களுக்கு நமது நெஞ்சார்ந்த ன்றிகள்.

ராம்ஜி_யாஹூ said...

அய்யனார்

தமிழ் பதிவர் குழுமம் - பற்றி உங்களின் கருத்து , ஆலோசனை என்ன அய்யனார், அறிய ஆவலாய் உள்ளேன்.

Naresh Kumar said...

மிக நுட்பமான விமர்சனம் அய்யனார்!!!

என்னளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது!!!

நரேஷ்
http://nareshin.wordpress.com

Ayyanar Viswanath said...

நன்றி ஆயில்யன்

சூர்யா படம் முழுக்க நுட்பமான விவரணைகள் சிதறிக் கிடக்கின்றன. நீங்கள் பகிர்ந்திருந்த இரண்டையுமே உள்வாங்கியிருந்தாலும் பகிர விட்டுப் போயிற்று. அமீரகத்தில் கட்டுமாணத் தொழிலாளர்களின் இருப்பிடங்களும் இப்படித்தான் இருக்கின்றன என்பதை துபாய் பனியனின் மூலம் பதிவு செய்திருப்பது மிக முக்கியமானது. இந்த எக்ஸாம எவண்டா கண்டுபுடிச்சான் என்பதிலிருந்து அங்கங்கே தூவலாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களின் விரிவான பகிர்வுகளுக்கு நன்றி.

Ayyanar Viswanath said...

நேசமித்ரன் மற்றும் சென்ஷி பகிர்வுகளுக்கு நன்றி.

கோபிநாத் மற்றும் சுரேஷ் கண்ணன் தகவலுக்கு மிக்க நன்றி. சு.க உங்கள் பார்வையை அறியவும் ஆவலாய் உள்ளேன். வெயில் ஹீரோயிசத்திலிருந்து விடுபடவில்லையெனினும் படமாக்கப்பட்ட விதம், திரைக்கதை பார்வையாளனுக்கு தரும் லேசான நடுக்கம் எனக்கிருந்தது

Ayyanar Viswanath said...

செல்வராஜ், மனோ மற்றும் ராம்ஜி மிக்க நன்றி.

ராம்ஜி பதிவர் குழுமம் பற்றி சரியாய் தெரியவில்லை. முதலில் என்ன நடக்கிறது என்பதைப் படித்து விடுகிறேன்.என்னுடைய கருத்தென்று ஏதாவது இருந்தால் பகிர்கிறேன் :)

அக்னிப் பார்வை வே ஹோம் எனக்கும் பிடித்தபடம்தான். உண்மைதான் நீங்கள் சொல்வது :)

Ayyanar Viswanath said...

ஆடுமாடு
வசந்தபாலனை சந்தித்தால் வலையுலகின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். நானும் முடிந்தால் விரைவில் தொலைபேசுகிறேன்.

சிவா,சபரிநாதன்,அகல்விளக்கு மற்றும் தமிழன் கறுப்பி பகிர்வுகளுக்கு மிக்க நன்றி

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ் அய்யனார். கிளைக்கதைகளை சிறுகதைகளாக விவரித்தது அருமை. படம் ஷார்ஜாவில் வந்தால் காண வேண்டும். இல்லையேல் துபாய் வந்து காண வேண்டும்.

rajasundararajan said...

விரிவாகப் பகுத்து ஆய்ந்திருக்கிறீர்கள், நன்றி.

ஆனால் படம் ஓடிக்கொண்டு இருக்கிற காலகட்ட விமர்சனங்களில், திருப்பக் காட்சிகள், கதை முடிவு பற்றி வெளிப்படுத்தி எழுதுவது அறமாகுமா? (இடைவேளை அதிர்நிகழ்வை வெளிப்படுத்தி விட்டீர்கள்).

மேலை எழுத்துலக விமர்சகர்கள் இப்படிச் செய்வதில்லை என்று கேள்வி.

சரண் said...

மிக மிக அருமையான.. நுட்பமான விமர்சனம்...நல்ல படத்தை அடையாளப்படுத்தியதற்கு நன்றி! ஒரு படத்தை பார்வையாளர்கள் இப்படியெல்லாம் அணுகினால் நல்லன ஜெயிக்கும் என்பதே நிதர்சனம்! வெயிலின் வெம்மையே இன்னும் தணியவில்லை அதற்குள் அங்காடித்தெருவின் கசகசப்புக்குள் நம்மை பயணிக்க வைக்கிறார் இயக்குநர்... வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள்!

சரண் said...

மிக மிக அருமையான.. நுட்பமான விமர்சனம்...நல்ல படத்தை அடையாளப்படுத்தியதற்கு நன்றி! ஒரு படத்தை பார்வையாளர்கள் இப்படியெல்லாம் அணுகினால் நல்லன ஜெயிக்கும் என்பதே நிதர்சனம்! வெயிலின் வெம்மையே இன்னும் தணியவில்லை அதற்குள் அங்காடித்தெருவின் கசகசப்புக்குள் நம்மை பயணிக்க வைக்கிறார் இயக்குநர்... வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள்!

Santhappanசாந்தப்பன் said...

உங்களுடைய திரைப் பார்வை எல்லாம் சரிதான்.


அதுக்காக, இதுவரை எந்த பதிவருமே சொல்லாத இறுதி காட்சியைப் பற்றி இவ்வளவு நீண்ட விளக்கம் தேவைதானா?

திரைப் பார்வை என்ற பெயரில், படத்தின் முக்கியமான குறியீடுகளைக் குறிப்பிட்டு, ஒரு சராசரி ரசிகனின் சிந்திக்கும் திறமையை மழுங்கடிக்கிறீர்கள்.

ரௌத்ரன் said...

நல்ல விமர்சனம் அய்யனார்...

இன்னும் வெயிலே பார்க்கவில்லை...இதையும் அடித்து பிடித்து இப்பொழுதே பார்த்தால் தான் உண்டு :(

காமராஜ் said...

தோழா,,,
இப்படியும் அனுகலாம்.
இஞ்ச் இஞ்சாக நல்லதும் அல்லாததுமாக புட்டுவைத்திருக்கும் நேர்மையான பதிவு இது. ...

படம் பாக்கல.
பெற்றால் தான் பிள்ளையா ?

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

அருண்மொழிவர்மன் said...

நேற்றுத்தான் படம் பார்த்தேன்.நீங்கள் சொன்னது போலவேவெயிலின் பாதிப்பு பல இடங்களில் தெரிந்தாலும், என்னளாவில் அதிகம் பாதித்த படங்களில் ஒன்றூ. தவிர, இது போன்ற வேலை செய்யும் இடங்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி அறிந்தும் இருப்பதால் படத்தில் இலகுவாக பொருத்திக் கொள்ள முடிந்தது.

நண்பனாக வரும் மாரி கதா பாத்திரமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

உயிரோடை said...

மிக‌ நேர்த்தியான‌ விம‌ர்ச‌ன‌ம். ப‌ட‌த்தை மீண்டும் பார்த்த‌து போல‌ இருந்த‌து. ந‌ன்றி.

பொதுவாக‌ ப‌ட‌ம் முடிந்து வீடு வ‌ரும் வ‌ரை ச‌ல‌ ச‌ல‌ வென்று பேசிக்கொண்டிருக்கும் நானும் அவ‌ரும் வீடு வ‌ரும் இந்த‌ முறை எதுவுமே பேச‌வே இல்லை.

எல்லாமே நாம் க‌ண்ட‌, கேட்ட‌ காட்சிக‌ள் போல‌வே இருந்த‌து. ப‌ட‌த்தில் க‌னியில் கால்க‌ளை முறித்த‌து, மேலும் லிங்கு அவ‌ளை ஏற்பானா என்று யோசிப்பில் கிளைமேக்ஸை சராச‌ரியாக‌ அமைத்திருப்ப‌து த‌விர‌ ம‌ற்ற‌ எல்லாமே ந‌ன்றாக‌ இருந்த‌து.

ப‌ல‌ சிறுக‌தைக‌ளை அட‌க்கிய‌ புளிய‌ம‌ர‌த்தின் க‌தையை வாசிப்ப‌த்தை போன்ற‌ அனுப‌வ‌மே ஏற்ப‌ட்ட‌து ப‌ட‌த்தை பார்க்கும் போது.

Unknown said...

அருமையான விமர்சனம் அய்யனார். யாரும் உடன் வர இயலாத நிலையில் நான் மட்டுமே திரையரங்கிற்கு சென்று மனம் கனத்துத் திரும்பி வந்த திரைப்படம் இது.

அங்காடித் தெருவுக்கு விமர்சனம் எழுத இன்னும் என்னால் இயலவில்லை. உன் எழுத்தை வாசித்ததும் எழுத நினைத்த யாவற்றையும் செறிவாக எழுதிச் சென்றுவிட்டாய். தனிமையில் மீண்டும் ஒரு முறை படம் பார்க்க வேண்டும்.

Unknown said...

மிகவும் ரசித்த காட்சிகள் பல இருக்கின்றன. அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடல் காட்சி. பாண்டியின் இயல்பான நகைச்சுவை, லிங்கு பாண்டியின் நட்பின் நெகிழ்தல்கல்...

தன் கால்கள் வெட்டி எடுக்கபட்டதைக் கண்ட கனியின் வீரிடலுக்கிடையே முன்பு லிங்குவுடன் பஸ் ஸ்டாண்டில் மழையில் கால் மிதித்து விளையாடிய காட்சி அவள் மனத் திரையில் மின்னி மறைவது மனதை பிசையும் வலி தருவது.

இயல்பும், இளமையும், ரசனையும், குறும்பும் சோகமும், விரக்தியும் வாழ்தலுக்கான போராட்டங்களும் நிறைந்த இது போன்ற தெருக்களில் நடந்து வெகு நாளாயிற்று...

manjoorraja said...

ஆழமான விமர்சனம்.

நன்றி அய்யனார்.

ESWARAN.A said...

அங்காடித்தெரு விமர்சனம் வெகு நுட்பமானது.என்னை மிகவும் பாதித்த பட வரிசையிலே முதல் இடத்தைப்பிடித்துள்ளது. ஏனென்றால் திருப்பூருக்கு தினம் தினம் ரயிலிலும்,பேருந்திலும் தோளில் மாட்டிய பையுடன் வருகின்ற இளைஞர்களும், சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட பெண்கள் படும் கொடுமையும், 15 வருடம் முன்பு குமரன் சிலை பின்புறம் படுத்துறங்கிக்கொண்டிருந்த வட நாட்டு ஜிப்ஸிகள் நண்டும் சிண்டுமாக 16 பேர் குடிகார லாரி டிரைவரால் இரவில் லாரி ஏற்றி கொல்லப்பட்ட காட்சியும் மனக்கண் முன் வந்து கோரத்தாண்டவம் ஆடியது. துணிந்து படம் எடுத்த வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள்! ஆ.ஈசுவரன்,திருப்பூர்.

அய்யனார் said...

தல.. திரும்பவும் வந்துட்டோம்.. :)

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம் அய்யனார்.

KARTHIK said...

// பின்னணி இசையென்பது மெளனமும், காற்றும், பறவைகளின் சப்தமும் அல்லது சூழல்களின் ஒலிகளாகத்தான் இருக்கும் அதுவே அக்காட்சிகளின் இயல்பைக் குலைக்காது பார்த்துக்கொள்ள உதவும்.//

நல்ல விமர்சனம் பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மை கதை

கரண், சரவணன், அஞ்சலி, கஞ்சாகருப்பு, சண்முகராஜ், காதல் தண்டபாணி, சரவணசுப்பையா, நந்தாசரவணன், பாலாசிங்

http://www.vettothi.com/

surivasu said...

Excellent review for Angadi theru. nobody can beat this review

Best Wishes Ayyanar....
Suriyaprakash.V

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...