Thursday, March 18, 2010

விழாக் குறிப்புகள் -1

நினைவு முழுக்க படு வேகமாய் கடந்து போன இரண்டரை நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் தருணங்களும் மனிதர்களும் பேச்சுக்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு முறையும் என் சொந்த நகரத்தை விட்டு வரும்போது ஒற்றையனாய்த்தான் வருகிறேன் (எப்படி உள் நுழைந்தேனோ அப்படியே) சென்னை விமான நிலையத்தினுக்கு விரையும் வாகனமொன்றில் சன்னல் வழியே இரவுக் குளிர் காற்று முகத்தினை சிதறடித்துக் கொண்டிருந்தது. என்னுடலை உறைவித்து நினைவுகள் எங்கெங்கோ உலவிக் கொண்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை மாலை துவங்கிய பயணமிது. இதோ அதே புள்ளியை நோக்கிய திரும்பல். ஒரு வித இறுக்கமும், இலகுவும் தோன்றி மறைந்தன. எல்லா இறுக்கங்களையும் நான் இலகுவாய் எடுத்துக் கொள்ள இச்சூழலால் தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.

ஒரு படைப்பு வேண்டுமென்றால் பூ மலர்வது போல இயல்பாய் உதிர்க்கலாம் ஆனால் அந்தப் படைப்பை வெளியே கொண்டுவருவதற்கும், வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் ப்ரயத்தனங்கள் எடுக்க வேண்டியிருக்கிறதென ஷைலஜா ஒரு முறை சொன்னார். இதை என்னால் முழுமையாய் உணர முடிந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்தான் துவங்கியது இந்த புத்தகப் பணி. இத்தனைக்கும் இந்த மூன்று புத்தகங்களின் உள்ளடக்கங்களும் ஏற்கனவே எழுதப்பட்டவைதாம். அவற்றை புத்தக வடிவத்தினுக்கேற்றார் போல் மாற்றித், தொகுத்துத், திருத்தி, அட்டையைத் தேர்வுசெய்து, நண்பர்களிடம் படிக்கத் தந்து, முன்னுரை வாங்கி, அச்சகத்தினுக்கு அனுப்ப வேண்டியதுதான் வேலை.

இம்மாதிரியான வேலைகளில் அனுபவமில்லாததால் பல்வேறு வகையில் இடையூறுகளையும், தாமதங்களையும் எதிர் கொள்ள நேர்ந்தது. இத்தனைக்கும் பவா நான்கு புத்தகங்களை கொண்டு வர விரும்பினார். நானாகத்தான் மூன்றாகக் குறைத்தேன். அதற்கே எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களும் எனக்காக வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று. புத்தகச் சந்தையில் இடம்பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இரவு பகலாய் செயல்பட்டு சரியான நாளில் மூன்று புத்தகங்களையும் வம்சி குடும்பத்தார் புத்தகச் சந்தைக்கு கொண்டுவந்துவிட்டு மகிழ்ச்சியாய் தொலைபேசினர். எனக்கு லேசான குற்ற உணர்வும், மகிழ்வும் அந்த தருணத்தில் ஒருமித்து எழுந்தது. விற்பனையும் நல்ல முறையில் இருந்ததாக தெரியவந்ததும் சற்று ஆறுதலாக உணர்ந்தேன்.


இதோ இந்தப் பயணம் வெளியீட்டு விழாவினுக்காக நிகழ்ந்திருக்கிறது. சொந்த நகரத்தில் வசிக்க இயலாதவர்களுக்கு மட்டுமே அந்நகரம் மிகுந்த வசீகரமுடையதாய் இருக்கிறது என்பது உண்மைதான். இரு சக்கர வாகனத்தில் கூட இலகுவாய் பயணிக்க இயலாதிருக்கும் சாலைகளால் ஆன இச்சிறுநகரத்தின் மீதுதாம் என் பிரியங்கள் படர்ந்திருக்கின்றன. இதே நகரத்தில் எனக்குப் பிடித்தமான ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் சகிதமாய் புத்தகங்களை வெளியிட வாய்த்தது என் வாழ்வின் அதி முக்கிய நிகழ்வுதாம். வெளிச்சத்திற்கான நகர்வுகளை, மய்யத்திற்கான தயாரிப்புகளை நிகழ்த்தினாலும் நான் அடிப்படையில் கூட்டுக்குள் சுருங்கி வாழ்வதில் திருப்தியடையும் உயிரினம்தான் என்பது இந்த நிகழ்வில் உறுதியாயிற்று. படபடப்பும், வெட்கமும், கூச்சமும் சேர்ந்து கலவையான ஒரு மனநிலையில்தான் விழா முழுக்கத் திளைத்துக் கொண்டிருந்தேன். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத ஆரம்பிக்கும் புதியவர்கள் வழக்கமான ஏற்புரையாய் சொல்லும் தேய்ந்த வசனங்களை நானும் சொன்னேனா என்பது நினைவிலில்லை. ஆனால் அதே தொணியில் வேறு சொற்களைத்தான் நானும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

இந்த விழாவினுக்கான அடித்தளங்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டும் எனப் பேச ஆரம்பித்தபோதே பவாவினால் முன்னெடுக்கப்பட்டதுதான். திருவண்ணாமலையில் வெளியீடு என்பதை நானும் விரும்பியதால் சற்றுத் தாமதமாக நடத்த வேண்டியதாயிற்று. மானஸியின் பிறந்த நாளைத் தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் புத்தக வெளியீடுகளை நிகழ்த்தி விடலாம் என்பதை பவா தொலைபேசி உறுதி செய்ததும் பத்து நாட்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டேன். இத்தனை வருடங்களாய் தூங்கி, சமீபமாய் விழித்துக் கொண்ட என் அலுவலகம் திடீர் புத்திசாலிகளை அங்கங்கே உலவ விட்டதில் என் விடுமுறை மறுக்கப்பட்டது. நிகழ்வினுக்கு வர முடியாத மன நிலையை வளர்த்துக் கொண்ட பின்பு வம்சி வெளியீடுகளின் அழைப்பிதழைப் பார்த்தேன். என் தனியொருவனுக்காக இத்தனை பேர் மெனக்கெடும்போது இங்கென்ன வேலையென ஒரே ஒரு நாளை போராடிப் பெற்றுக் கொண்டு வியாழக் கிழமையன்று ஒரு மோசமான வானூர்தியில் என் இடத்தைப் பதிந்து கொண்டேன். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் குறுகலான வானூர்தியில் ஏறியதும் லேசான பினாயில் வாசம் வீசியது. மோசமான நிறத்தில் உடையணிந்த மெலிந்த பெண்கள் கடமையாய் புன்னகைத்ததும் அவசரமாய் அவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டேன்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நட்டம் காரணமாக(அப்படித்தான் சொல்லப்படுகிறது) இரவில் சொற்பமாய் தரும் உணவையும் நீரையும் தவிர்த்து மற்ற எல்லாவற்றினுக்கும் காசைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பணம் பிடுங்குவதின் உச்சமாய் குட்டித் திரையில் ஆர்யாவும் த்ரிஷாவும் பேசிக் கொள்வதைக் கேட்க ஐந்து திர்ஹாம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. நடமாடும் மதுச்சாலைகளும் உண்டு என்பது லேசான ஆசுவாசத்தை தந்தது. கிட்டத் தட்ட ஆறு மணி நேர இடுக்கிப் பயணமிது. நம் சொந்த ஊர் பேருந்தில் கூட தாராளமாய் அமரலாம். ஆனால் இந்த இருக்கை பேருந்து இருக்கையை விட அளவில் குறுகியதாய் இருந்தது. ப்ளாக் லேபிள் லார்ஜ் பதினோரு திர்ஹாம், சோடா நான்கு திராம், கண்ணாடியும் பிளாஸ்டிக்குமல்லாத க்ளாஸ் மற்றும் வறுகடலை இரண்டு திராம், பனித் துண்டங்களை பற்றி விசாரிக்கவில்லை. எனினும் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது துபாய் மதுவிடுதிகளோடு ஒப்பிடுகையில் சற்றுக் குறைவுதான். மூன்று முறை பிளாக்கியதும் எதைப் பற்றியும் கவலைப்படாது தூங்கி விட்டேன்.

விழித்துப் பார்த்தபோது திருச்சிராப் பள்ளி எனப் பரிதாபமாய் எழுதப்பட்ட பெயர்பலகை நள்ளிரவில் தனியாய் கண்ணில் பட்டது. துபாயிலிருந்து திருச்சி வந்து பின் சென்னை வரும் விமானமிது. கிட்டத் தட்ட எல்லா இருக்கைகளும் இங்கேயே காலியாகிவிட்டிருந்தன. தென் தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு இவ்விமானம் நேர அடிப்படையில் வசதியானதாக இருக்கலாம். இதே விமானம் கோலாலம்பூர் வேறு போகிறதாம். சென்னை மற்றும் கோலாலம்பூர் பயணிகள் ஏறிக்கொண்டதும் மீண்டும் செங்குத்தான பயணம் துவங்கியது. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த இருபது வயது மதிக்கத் தக்க உயரமான பெண்ணொருத்தி எனக்கு எதிர் இருக்கையில் பெற்றோர் சகிதமாய் வந்தமர்ந்து உடனடியாய் தூங்கிப் போனாள். சுஜாதாவின் ரங்கத்துப் பெண்களின் நிழலை அவள் தன் முகத்தில் தேக்கி வைத்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்களின் பரபரப்பை நினைத்துக் கொண்டேன். தூக்கம் விலகி ஓடியது. இந்தப் பயணத்திற்கான துவக்கப் புள்ளி எதுவாக இருந்தது? இணக்கமான மனிதர்களற்ற சூழலா? மிகப்பெரும் பூதத்தைப் போல இளைப்பாறிக் கிடந்த நேரமா? இணையத்தின் அசாதாரண சாத்தியமா? ஓசி வலைப்பூ? நண்பர்கள்? நண்பிகள்? தோழிகள்? காதலிகள்? இவையெல்லாமும்தான் என்றாலும் எல்லாவற்றுக்குமான துவக்கப்புள்ளி ஆறுவயதில் எனக்கு அறிமுகமான, பார்வதி நகருக்கு குடிநீர் வந்ததை அறிவிக்கும் பணியிலிருந்த, நைனார் தாத்தாவின் கையிலிருந்த பூந்தளிர் புத்தகமாகத்தான் இருக்கமுடியும்.


தொடரும்..

16 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் அய்யனார்! அந்த தாத்தாவுக்கும், பூந்தளிர் புக்குக்கும் தாங்க்ஸ்! :-)

தமிழன்-கறுப்பி... said...

hmmm... Thanks Ayyanar.

Mohan said...

உங்களுடைய புத்தக வெளியீட்டு விழா விவரனைகளே ஒரு புத்தகமாகப் போட வேண்டிய அளவுக்கு சுவாரசியமாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

அய்ஸ், நானும் சந்திராவும்தான் விழாவுக்கு வரவேண்டியிருந்தது. வழக்கம் போலவே, ஆபீஸ் டென்ஷன். முடியாமல் போனதற்காக வருந்தினேன்.

(ஒவ்வொரு வாட்டியும் இப்படியே சொல்லு என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது)

சிறப்பாக நடந்தது என்று தெரிந்துகொண்டேன். வாழ்த்துகள்.

☼ வெயிலான் said...

விழா இனிதே நடைபெற்றதில் மகிழ்ச்சி.
பவாவிற்கும், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!!

கச்சிராப்பாளையத்தார் விழாவிற்கு வந்திருந்தாரா? ;)

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

ச.முத்துவேல் said...

/இச்சிறுநகரத்தின் மீதுதாம் என் பிரியங்கள் படர்ந்திருக்கின்றன. இதே நகரத்தில் எனக்குப் பிடித்தமான ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் சகிதமாய் புத்தகங்களை வெளியிட வாய்த்தது என் வாழ்வின் அதி முக்கிய நிகழ்வுதாம். /

அட ! ஆமால்ல!

interesting. continue...

காமராஜ் said...

வரலாமென்று நினைக்க மட்டும் முடிகிற தூரம்.பவாவிடம் கேட்டுக்குறைத்துக்கொண்டேன் ஆவலை.வாழ்த்துக்கள் அய்யனார்.
பிரம்புவீடு பற்றி எழுதவில்லை.

Deepa said...

வாழ்த்துகள் அய்யனார்!

கோபிநாத் said...

\\\ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நட்டம் காரணமாக(அப்படித்தான் சொல்லப்படுகிறது) இரவில் சொற்பமாய் தரும் உணவையும் நீரையும் தவிர்த்து மற்ற எல்லாவற்றினுக்கும் காசைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்\\

தல மீதி எந்த விமனாத்திலும் டிக்கெட் கிடைக்கலியா..!? ஜெட்ல போங்க..இப்போதைக்கு அவன் தான் டாப்பு.

சரக்கு++ படிக்கும் போது காலத்தின் கொடுமைன்னு சொல்ல தோணுது ;))

போட்டோ ஒன்னே ஒன்னு தானா..!?

தொடருங்கள்..நம்ம ஊருக்கு வந்தாச்சா!??

anujanya said...

புத்தகங்கள் வெளியானதற்கு வாழ்த்துகள் அய்ஸ். இந்தக் கட்டுரையும் சுவாரஸ்யம் வழமை போலவே. மூணு பெக் அடித்த பின்னும் ஸ்ரீரங்கத்து தேவதையை மிஸ் பண்ணாத உங்கள் கவனம் ....ஹ்ம்ம் எல்லாத்துக்கும் மச்சம் வேணும் பாசு.

அனுஜன்யா

selventhiran said...

வெளிமான்களைப் பற்றிய விஸ்தாரமான கட்டுரையொன்றின் ஒவ்வொரு பத்தியிலும் புத்தியில் நீர் எட்டிப்பார்த்தீர்!

நாமக்கல் சிபி said...

ஒரு +

ராம்ஜி_யாஹூ said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யனார்.

இது போலவே இன்னும் பல விழாக்கள், படைப்புக்கள் நடக்க வாழ்த்துகிறேன், விரும்புகிறேன்.

ரௌத்ரன் said...

Congrats ayys :)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...