Thursday, February 4, 2010

குருவிகளின் பாடலும் மீன்களின் சிதறலும்


மஜித் மஜிதியின் The Song of Sparrows திரைப்படத்தினை முன் வைத்து….

அந்தச் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தாரின் இடையூறுகளையும் தாண்டி பாழடைந்த ஒரு குளத்தினை சீரமைத்து தங்க மீன்களை வளர்க்க விரும்புகின்றனர். பூச்செடிகளை நகரத்தினுக்கு கொண்டு போகும் நாளொன்றில் அவர்களுக்கு வளர்க்க மீன்கள் கிடைக்கின்றன. அவர்களின் உயரத்தினுக்கு சமமான ஒரு பிளாஸ்டிக் வாளியில் தங்க மீன்களை வாங்கி அப்பூச்செடிகளுக்கு அடியில் மறைத்து வைக்கின்றனர். போகும் வழியெங்கும் அந்த மீன்களை வளர்ப்பது பற்றி, அவை பல்கிப் பெருகப் போவதைப் பற்றி மிகுந்த ஆவலுடன் பேசிக் கொள்கின்றனர். செடிகளை இறக்க வேண்டிய இடம் வந்ததும் சிறுவர்கள் தொட்டிச் செடிகளை வண்டியிலிருந்து இறக்கி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கின்றனர். அப்போதுதான் அவ்வாளியினுள் ஓட்டை விழுந்திருப்பதை ஒரு சிறுவன் கவனிக்கிறான். ஏராளமான தண்ணீர் ஏற்கனவே வெளியேறிவிட்டிருக்கிறது. கூச்சலிட்டு மற்ற சிறுவர்களை அழைக்கிறான். அனைவரும் வண்டியிலேறி வாளிக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளை வேக வேகமாய் அப்புறப்படுத்துகின்றனர். மீன்கள் இறந்துவிடுமென பயந்து வாளியினை வெளியிலெடுக்க இடையூராய் இருக்கும் தொட்டிச் செடிகளை வீசி எறிகின்றனர். வண்டியிலிருந்து அவ்வாளியினை தூக்க முடியாமல் தூக்கிக் கீழிறக்குகின்றனர். சற்றுத் தள்ளி வாய்க்கால் ஒன்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது அதை வாளியினுள் நிரப்பி மீன்களை காப்பாற்றி விடலாம் என்கிற உத்வேகங்களோடு அவ்வாளியைத் தூக்கியபடி ஓட முனைகின்றனர். சிறுவர்களின் மென்பிடி நழுவ பிளாஸ்டிக் வாளி உடைந்து மீன்கள் சிமெண்ட் தரையில் சிதறுகின்றன. பதைபதைப்புகளோடு பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவர்களோடு சேர்ந்து கொண்டு அய்யோ! வென சத்தமாய் அலறுகிறேன். சுவாசம் தடைபட்ட தங்க மீன்கள் உயிர் வாழ வேண்டி சிமெண்ட் தரையில் துடிக்கின்றன. மிகுந்த துக்கங்களோடும், அழுகையோடும் அச் சிறுவர்கள் துடிக்கும் மீன்களை அருகில் ஓடும் நீரில் தள்ளிவிடுகின்றனர். அதிர்ச்சியில் குமைந்து போய் இயலாமையில் வெகு நேரம் மருகிக் கொண்டிருக்கிறேன். மஜித் மஜிதியை வெறுக்கும்/நேசிக்கும் கணம் இதுவாகத்தானிருக்கிறது.


இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் சமீபத்திய படமான The Song of Sparrows ல் வரும் ஒரு காட்சிதான் மேல் குறிப்பிட்டது. பார்வையாளர்களின் சமநிலையைக் குலைப்பதுதான் இவரின் எல்லாத் திரைப்படங்களின் அடிநாதமாகவும் வெற்றியாகவும் இருக்கிறது. பெரும்பாலும் சிறுவர்கள், பதின்மர்கள் மற்றும் சாமான்யர்களின் வாழ்வுதான் மஜித் மஜிதி பயணிக்கும் திசையாக இருக்கிறது. எளிமையான மனிதர்களிடம் நிரம்பிக் கிடக்கும் அன்பு, மனித நேயம், கருணை இவற்றை முன் நிறுத்தாமல் வெகு இயல்பான குணமாக காட்சிப்படுத்துவது இவரின் தனிச் சிறப்பு. எளியோர்களின் வாழ்வினை தேவைகள் பழிவாங்கும் குரூரம், சிறுவர்களின் அக உலகம், பதின்மர்களின் மனச் சிக்கல்கள் என்பவையெல்லாம் மஜித் மஜிதி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும், நம் முன் வைக்கும் கதைகளாக இருந்து வருகின்றன.

மஜித்தின் திரைப்படங்களில் மீனும் நீரும் முக்கியப் படிமமாக காட்சிப் படுத்தப்படுகிறது. இரானிய சினிமாக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்படிமம் மீனாக இருக்கலாம். எளிய மனிதர்களின் இயலாமையை, அவர்கள் வாழ்வின் குரூரங்களால் பழிவாங்கப் படுவதை காட்சிப்படுத்தும் அழகியல் படிமமாக மீன்களை குறிப்பாய் தங்க மீன்களை கையாள்வது இரானிய இயக்குனர்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில்ரன் ஆப் ஹெவனின் கடைசிக் காட்சியை இதுவரைக்குமான மஜித்தின் திரையாக்கங்களின் கவித்துவ உச்சம் என்றும் கூட சொல்லி விட முடியும். ஒரு சிறுவனின் இரத்தம் தோய்ந்த கால் விரல்களை மீன்கள் கடிக்கும் காட்சிதான் அது. ஃபாதர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியிலும் இரத்தம் தோய்ந்த சிறுவனின் கரங்கள் நீரில் அலையும் காட்சியை வைத்திருப்பார். Baron திரைப்படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாது பார்வைகளில் மட்டுமே நேசத்தினைப் பரிமாறிக் கொள்ளும் அப்பெண் விடைபெறும் காட்சியில் மழை ஒரு பாத்திரமாய் இடம் பெற்றிருக்கும். குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் பாதச் சுவட்டில் மழை நீர் நிறையும் காட்சி மிகக் கவனமாய் பதியப்பட்டிருக்கும். நீர் மனிதனின் ஆதாரம் மட்டுமல்ல ஆசுவாசமும் அதுதான் என்பதுதான் இவர் தரும் செய்தியாக இருக்கிறது.

The Song of Sparrows என்கிற இந்தப் படம் தீக்கோழிப் பண்ணை ஒன்றிலிருந்து துவங்குகிறது. பண்ணையில் பணிபுரியும் கரீம் ஒரு நாள் திரும்பி வராத தீக்கோழி ஒன்றினுக்குப் பொறுப்பேற்று வேலையை இழக்கிறார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரத்தினுக்காக வேறு வேலை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் கரீம் எதிர்பாராத விதமாய் வாடகை ஓட்டுனராகிறார். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் நகரம் முழுவதும் அலைந்து திரிந்து பயணிகளை / பொருட்களை ஏற்றிச் செல்கிறார். முன்பு பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கிடைத்த பணத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார். அவரின் குடும்பம், குழந்தைகள், சுற்றியுள்ள மனிதர்கள், அவருடைய ஓட்டுனர் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள், மேலும் அவருக்கு நிகழும் எதிர்பாராத விபத்து இதைச் சுற்றிப் படம் நகர்ந்து ஒரு சிறிய நம்பிக்கையுடன் நிறைவடைகிறது.


பணத்தின் அத்தியாவசியமும் முக்கியத்துவமும் உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருப்பதை படம் நெடுகிலும் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஒரு சிறுமி போக்குவரத்து நெரிசல்களுக்கிடையில் சாம்பிராணிப் புகையை வாகனங்களுக்கு விசிறியபடி பணத்தை யாசிக்கிறாள். அவளது சிறு பிராயமும், குரலும் சிக்னலில் காத்திருக்கும் கரீமை நெகிழ்த்த தன் சட்டைப் பையினுள் துழாவி 500 டோமன்களை எடுக்கிறார். ஆனால் அதையே அச்சிறுமிக்குத் தர அவரின் வாழ்வு இடம் தராததால் காத்திருக்கும் பிற வாகனங்களின் கதவுகளைத் தட்டி 500 டோமன்களுக்கு சில்லறை கிடைக்குமா என சோதிக்கிறார். 500 டோமனுக்கு சில்லறை வைத்திருக்குமளவுக்கு ஏழைகள் அங்கு இல்லாததால் பலரிடம் சோதித்தும் 500 டோமனை மாற்ற முடியாமல் போகிறது. மிகுந்த வருத்தங்களோடு அச்சிறுமியைப் பார்த்தபடியே கரீம் சிக்னலைக் கடக்கிறார். அன்பு, கரிசனம், மனித நேயம் போன்ற உணர்வுகளெல்லாம் கூட பணத் தேவையின் பிரம்மாண்டங்களின் முன் நிறமிழந்து போவதை இந்தக் காட்சி மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.

அன்றாட வாழ்வினுக்கான பணத்தை அன்றைய நாளின் உழைப்பில் மட்டுமே ஈட்ட முடியும் மனிதர்களின் வாழ்வு ஏராளமான திருப்பங்களைக் கொண்டிருக்கும். தொடர்ந்து வரும் நெருக்கடிகள், அம்மனிதனைச் சார்ந்திருக்கும் குடும்பம், தேவைகள் என ஏகப்பட்ட சவால்களுடன் கடினமான உடலுழைப்பையும் கோரும் வேலையும் அம்மனிதனை விழுங்கக் காத்திருக்கும். எல்லாவற்றையும் எதிர் கொள்ள அம்மனிதனுக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது வாழ்வின் மீதான விருப்பமும், தன் குடும்பம் என்கிற அமைப்பின் மீதான காதலும் தான். இந்த ஆதார நம்பிக்கைகள்தாம் அன்றாடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மிகப் பெரிய பலமாகவும் இருக்கிறது.

கரீம் மகளின் காது கேட்கும் கருவி செயலற்றுப் போகிறது. புதிய கருவி வாங்குவதற்கான பணத்தை சேமிப்பதற்குள் அவர் விபத்துக்குள்ளாகிறார். கால்களுக்கு மருந்திடும் மகளை வருடியபடி குணமானதும் புதிய கருவி வாங்கிவிடலாம் என ஆதூரமாய் சொல்கிறார். கேட்காத கருவி இப்போது பேட்டரி மாற்றியதும் இயங்குவதாயும் பாடங்களைக் கேட்க முடிவதாயும் அவளின் மகள் சொல்கையில் மகிழும் கரீம் உண்மையில் அக்கருவி இயங்காதிருப்பதையும் உடனே தெரிந்து கொள்கிறார். இந்தக் காட்சியில் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர்தான் நெகிழ்வாய் இருக்க முடியும்.

வாழ்விலிருந்து திரையையும் திரையிலிருந்து வாழ்வையும் இணைக்கும் பாலமாக மஜித் மஜிதி தொடர்ந்து இயங்குகிறார். அவரின் திரை வாழ்வில் இக்குருவிகளின் பாடல் மிக முக்கியமானது.

12 comments:

உயிரோடை said...

ப‌கிர்வு ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து அய்ய‌னார். சாங்க் ஆப் சாரோஸ் ப‌ட‌த்தின் காட்சியாக‌ நீங்க‌ள் சொன்ன‌ காட்சிக்கும் பின் விள‌க்கி இருக்கும் க‌தைக்கும் ச‌ம்ம‌ந்த‌ம் தேடிய‌ ப‌டி இருக்கின்றேன். :)

☀நான் ஆதவன்☀ said...

பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

அய்யனார், நல்லதொரு அறிமுகம். ஆனால் நீண்ட நாட்களாக இதைப் பார்த்துவிடமென்று தேடிக் கொண்டிருக்கிறேன். :-(

Deepa said...

பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யனார்.
மஜித் மஜிதியின் சிலர்ன் ஆஃப் ஹெவனும் கலர் ஆஃப் பேரடைஸும் பார்த்திருக்கிறேன்.
இதையும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

// மஜித் மஜிதியை வெறுக்கும்/நேசிக்கும் கணம் இதுவாகத்தானிருக்கிறது.//ரசித்தேன்.

//அன்பு, கரிசனம், மனித நேயம் போன்ற உணர்வுகளெல்லாம் கூட பணத் தேவையின் பிரம்மாண்டங்களின் முன் நிறமிழந்து போவதை இந்தக் காட்சி மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.//
:-((

Mohan said...

இந்தப் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் விமர்சனம். படம் கொடுக்கும் உணர்வினை,கொஞ்சம் கூட குறையாமல் உங்கள் எழுத்துகளில் கொண்டு வந்து விடுகிறீர்கள்!

butterfly Surya said...

அய்யானார், மஜித் மஜீதி என்றுமே என் மனம் கவர்ந்த இயக்குநர். அற்புத படைப்பாளி.

இந்த படம் போன வருடம் ஜனவரியில் பார்த்தேன். பதிவும் இட்டிருக்கிறேன்.
சென்ற மாத சூரிய கதிர் கட்டுரையிலும் இந்த படம் பற்றி எழுதியிருந்தேன்.


உங்கள் பகிர்வு வழக்கம் போல் அருமைதான். உங்கள் நுண்ணிய பார்வையும் சேர்த்து இன்னும் விவரித்து எழுதியிருந்தால் சிறந்த வாசிப்பு அனுபவம் கிடைத்திருக்கும்.


இதற்கு அடுத்த படமான Kashmiri Float தான் தேடி தேடி சலித்து விட்டேன். வெளிவந்து விட்டதா..? என்று அறிய ஆவல். நீங்கள் பார்த்து விட்டீர்களா?

கோபிநாத் said...

\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.
\\

உன்கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன். ;)

கோபிநாத் said...

\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.
\\

உன்கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன். ;)

KARTHIK said...

// குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் பாதச் சுவட்டில் மழை நீர் நிறையும் காட்சி மிகக் கவனமாய் பதியப்பட்டிருக்கும் //

அந்த கடைசிலையாவது அவ இவன்கிட்ட பேசமாட்டளாங்கர மாதிரி ஏங்க வெச்சுடுவார்.

நிச்சையம் பாக்கவேண்டிய படம்
நன்றி.

பதி said...

நல்லதொரு பகிர்வு மற்றும் பார்க்க தூண்டும் விமர்சனம்.

உங்களுடைய பதிவுகளைப் படித்து மஜித் மஜிதியின் 2 படங்களைப் பார்த்து லயித்திருக்கின்றேன்.

இதனையும் பார்க்க வேண்டும்.

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அய்யனார்.

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...