Monday, December 7, 2009

ஒரு புகைப்படக் கலைஞனும் பூனைகளால் நிறைந்த வீடும்

திருவண்ணாமலையில் பவா வுடன் ஓவியர் காயத்ரியின் ஸ்டூடியோவில் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்க்க நேர்ந்தது. ஓவியமா ஒளிப்படமா என குழம்ப வைக்கும் அளவிற்கு ஒளியுடன் விளையாடியிருந்த அப் புகைப்படங்களை எடுத்தவர் யார் எனக் கேட்கையில் பவா பினு பாஸ்கரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பினு பாஸ்கர் மிக நேர்த்தியான புகைப்படக் கலைஞன். சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் வாழப் பழகியவன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவன். என்றெல்லாம் பவா சில உதாரணங்களோடு சொல்ல ஆரம்பித்ததும் பினுவை எனக்குப் பிடித்துப் போனது. பினு கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தற்போது தோஹாவில் வசிக்கிறார் என்றதும் விரைவில் பார்த்து விடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசுகையில் பினு துபாய் வருவதாகத் தெரிவித்தார். ஒரு பிற்பகலில் ballentine சகிதமாய் அவர் தங்கியிருந்த கடற்கரையோர வில்லா ஒன்றினுள் நுழைந்தேன். இரண்டு நவீன அழுக்கான ஹார்லி டேவிட்சன்கள், அதைச் சுற்றிச் சிதறிக் கிடந்த பேட்டரிகள், தட்டு முட்டு இரும்பு சாமான்கள், வண்ணம் உலர்ந்து உதிர்ந்த பெயிண்ட் காலி டப்பாக்கள் என எல்லாம் சேர்ந்து வில்லாவின் முகப்பில் என்னை வரவேற்றன. உள்நுழைந்தால் வரவேற்பரை முழுக்க இசைக் கருவிகள். கிதார்கள், மிகப் பெரிய ட்ரம்ஸ், கீபோர்ட் இன்னும் பல வகை தந்திக் கருவிகள் (ஸ்பானிய கிதாராக இருக்கலாம்) இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்தன. இரண்டு பிரெஞ்சு நபர்கள் மேல் சட்டை இல்லாமல் கணினி முன் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் கைக்குலுக்கி உள் நுழைந்தால் கூடம். நடுக்கூடத்தில் ஒரு சலவை யந்திரம். அதைச் சுற்றி அழுக்குத் துணிகள். அதையும் கடந்தால் ஒரு சமயலறை. அதன் நடுவில் ஒரு பெரிய மகாகனி உணவு மேசை. அதன் மீது மடிக் கணினியை வைத்தபடி ஜூலியா அவரின் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார். ஜூலியா பினுவின் ஸ்பானியத் தோழி. திருவண்ணாமலையில் சிறிது காலம் வசித்திருந்திருக்கிறார். பவா மற்றும் காயத்ரியின் நலன் விசாரித்துவிட்டு பின் இணைந்து கொள்வதாக விடைபெற்றார்.

சமயலறையிலிருந்து வீட்டின் தோட்டம் துவங்குகிறது. சில மரங்கள் நடப்பட்டிருந்தன. புற்கள் வளர்க்கப்பட்டிருந்தன. வில்லாவைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம். அங்கங்கே சிகெரெட் துண்டுகள் நிரம்பி வழியும் சாம்பல் கிண்ணங்கள். உடைந்த, நெளிந்த, தூசுபடிந்த இருக்கைகள். இவற்றோடு சுலபத்தில் எண்ணிவிட முடியாத எண்ணிக்கையில் பூனைகள். அந்த வில்லாவின் முகப்பு இரும்பு கேட்டிலிருந்து தோட்டத்துப் புற்செடிவரை எங்கும் நீக்கமற பூனைகள் நிறைந்திருந்தன. சின்னஞ்சிறு குட்டியிலிருந்து முதிர்ந்த பூனை வரை பல்வேறு வடிவில் பூனைகள் அவ்வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தன. பூனைகளுக்கான உணவு அங்கங்கே தட்டுக்களில் சிதறிக் கிடந்தது. அதுதவிர்த்து சமயலறை மேசையின் மீது யாராவது உணவருந்தும்போது அவரை குட்டிப் பூனைகள் மொய்க்கத் துவங்கிவிடும். ஜூலியா மேசையின் மீது உணவருந்திக் கொண்டிருந்தபோது சுமார் பத்து பூனைக்குட்டிகள் அவரின் மீதும் மேசையின் மீதும் ஒன்றன் பின் ஒன்றாய் ஏறியபடி உணவுத் தட்டினை நெருங்கின. ஜூலியா சிறிதும் சப்தமெழுப்பாது, சலிக்காது ஒரு கையினால் உணவருந்தியபடி இன்னொரு கையினால் மேசையிலிருந்து ஒவ்வொரு பூனைக்குட்டியையும் இலகுவாய் கீழிறக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியை சற்றுத் தொலைவில் அமர்ந்தபடி நானும் பினுவும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வசிப்பிடங்களில் சுதந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. சுத்தமான ஒழுங்கான வீடுகளைக் காட்டிலும் சுதந்திரத் தன்மையை இயல்பாய் கொண்டிருக்கும் இவ்வீடு உண்மையான கலைஞர்களுக்கானது. இந்த வீட்டின் உரிமையாளர் தேர்ந்த இசைக் கலைஞர். உலகின் பல பாகங்களிலிருந்து வரும் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என எல்லாரின் தங்குமிடமும் இதுவாய் இருக்கிறது. பினுவால் இம்மாதிரியான இடங்களில் மட்டுமே தங்க முடிவதாய் சொன்னார். இம்மாதிரியான சூழல் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வதற்கு உகந்ததாய் இருக்கிறது என்றார்.

பிற்பகலுக்கு சற்று முன்னர்தான் பினு விழித்திருக்கிறார். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தூங்காது நேற்று முழுக்கத் தூங்கியதாய் சொன்னார். இருவரும் கிளம்பி மெக்டொனால்டில் அமர்ந்தோம். பினு இதுநாள் வரைக்குமான தன் கதைகளை, பயணங்களை, வாழ்வை என்னிடம் சொல்லத் துவங்கினார்.

பட்டப் படிப்பிற்கு பிறகு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென்று மிகவும் யோசித்துப் பின்பு திரைப்படம்தான் தனக்கான துறையெனத் தீர்மானித்து அடையாறு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பித்திருக்கிறார். காலியாகவிருக்கும் எட்டு இடங்களில் ஒரு இடம் மட்டுமே மற்ற மாநிலத்தினருக்கானது. அந்த இடத்தினுக்கான நேர்முகத் தேர்வு மிகக் கடினமாக இருக்கும் என்பதினால் பினு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நேர்முகத் தேர்வை திருப்தியாக செய்தும் ஜூரிகளின் பாராட்டு பெற்றும் அந்த இடம் ஆந்திரா தயாரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு சென்றுவிட்டிருக்கிறது. வெறுத்துப் போன பினு தன் பயணத்தை துவங்கியிருக்கிறார். ஒரு வருடம் முழுக்க வீட்டைத் துறந்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து அவர் வீட்டுக்குத் தொலைபேசுகையில் பினுவின் அச்சன் ஆஸ்திரேலியாவிலிருக்கும் புகைப்படக் கல்லூரியில் சேரச் சொல்லி பினுவிற்கு அழைப்பு வந்திருக்கும் தகவலை சொல்லியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் படிப்பு வேலையென பத்து வருடங்கள் வாழ்ந்துவிட்டு துபாய் வந்திருக்கிறார். சாச்சி & சாச்சி என்ற விளம்பர நிறுவனத்தின் முதன்மை புகைப்படக்காரராய் வேலை பார்த்திருக்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பு துபாயை விட்டுப் போன அந்த நாளை மிகவும் வேடிக்கையும் குதூகலமுமான குரலில் பினு விவரித்தார். தான் பார்த்து வந்த வேலை சலிப்பை ஏற்படுத்தவே ஒரு நாள் இங்கிருந்து ஓடிவிடத் தீர்மானித்திருக்கிறார். தன் நண்பன் ஒருவனை காரில் ஏற்றிக் கொண்டு விமான நிலையம் வந்திருக்கிறார் கார் சாவியை நண்பனிடம் கொடுத்துவிட்டு விமானம் ஏறிப் போய்விட்டிருக்கிறார். மிக அதிக வருமானம், வீடு, கார், நண்பர்கள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுச் செல்லும் துணிச்சல் வெகு சொற்பமானவர்களுக்குத்தான் வருகிறது. இப்போது மீண்டும் விளம்பரத் துறையின் மீது பினுவிற்கு ஆர்வம் வந்திருக்கிறது. நிறுவனங்களின் விளம்பரங்கள், நிகழ்வுகள் இவற்றை நண்பர்கள் உதவியுடன் வடிவமைக்கிறார். துபாயில் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியை வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்.

தமிழில் ஒரு படம் பண்ண வேண்டுமென்பது பினுவின் ஆசையாய் இருக்கிறது. சமீபத்தில் பூ படம் பார்த்து பிடித்துப் போனதாம். சிறந்த கதைகளை படமெடுக்கத் துணியாத தமிழ் சினிமாவின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

பினுவை சந்திக்கப் போவதற்கு முன்பு வரை எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. நட்பு நிமித்தமோடு மட்டுமில்லாமல் அவரின் மூலமாய் எனக்கு இரண்டு உதவிகள் தேவைப்பட்டன. ஒன்று என்னுடைய வரவிருக்கும் புத்தகங்களுக்கான முகப்பிற்குத் தேவைப்பட்ட அவரெடுத்த புகைப்படம் மற்றொன்று புத்தகப் பின்பக்கத்திற்கான அவரால் எடுக்கப் படப் போகிற என் புகைப்படம். முதலாவதைக் கூட கேட்டுவிடலாம் இரண்டாவதைக் கேட்கத்தான் நான் மிகவும் தயங்கினேன்.

உணவு முடித்து வீட்டிற்கு வந்ததும் நான் அதைக் கேட்டுவிட்டேன். இதற்கா இத்தனைத் தயக்கம் என்றபடி தன்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து வந்தார். சூரியன் அமிழும் நேரமாதலால் ஒளி குறைவாக இருந்தது. அவரின் புகைப்படப் பெட்டிக்கு சார்ஜ் தேவைப்படவே ஜூலியாவின் நிக்கானினால் என்னைப் புகைப்படமெடுக்கத் துவங்கினார். ஒரே ஒரு புகைப்படத்திற்காக அவர் செலவிட்ட நேரம் முப்பது நிமிடங்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளிக்குகள். அவற்றிலிருந்து சிலவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்புவதாய் சொன்னார்.

பினுவிற்கு சிதிலமடைந்த பிரதேசங்களின் மீது பெரும் காதலிருக்கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத இடங்கள், மறைக்கப்பட்டக் காட்சிகள் இவற்றை தனது புகைப்படங்களாக்க பெரிதும் விரும்புகிறார். அவரின் மடிக்கணினியில் அவரெடுத்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். உலகின் பல்வேறு பாகங்களில் நடத்திய கண்காட்சிகள் அவற்றில் இடம்பெற்ற படங்கள் என எல்லாம் பார்த்து முடித்த பின்பு என் எழுத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். நான் என் எழுத்தின் மீது வைத்திருக்கிற சுய மதிப்பீடுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். நானிலும் நுழையும் வெளிச்சம் என்கிற தலைப்பை ஆங்கிலத்தில் விளக்கியபோது பினு மகிழ்ந்து போனார். அப்போது ballentine யையும் பூனைகள் புடைசூழ ஆரம்பித்திருந்தோம். இலேசாய் கூச்சம் விலக தலைப்புக் கவிதையை சொல்ல ஆரம்பித்தேன்.
விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..
பினு இந்த அவள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்றதற்கு ஆம் என்றேன் (வாழ்க போமோ!)

நன்கு இருட்டின பின்பு பினுவிடம் விடைபெற்று வந்தேன். கடற்கரை சாலையில் விரைகையில் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். Bernardo Bertolucci திரைப்படம் ஒன்றினுக்குள் நுழைந்து அவரின் கதாபாத்திரங்களை சந்தித்துவிட்டு வந்த உணர்வைத்தான் அந்த வீடும் மனிதர்களும் பினுவும் தந்திருந்தனர். இம்மாதிரியான மனிதரை எனக்கு அறியத் தந்த பவாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

25 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

வரவிருக்கும் புத்தகங்களுக்கான //

உயிரெழுத்து இதழை பார்த்து அறிந்துகொண்டேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

சென்ஷி said...

அருமையான சந்திப்பைப் பற்றிய பகிர்வு அய்யனார். விரைவில் பிரசவிக்க இருக்கும் புத்தகத்தை பற்றிய மேலதிக விவரங்களை இடுங்களேன்.

உங்களுடைய அந்தப் புகைப்படத்தையும் சேர்த்து பதிவேற்றுங்கள்.

சந்தனமுல்லை said...

Nice Post Ayyanar!

Ken said...

புலி என்கிட்ட நீ கேட்கவேயில்லையே அருமையான உன் போட்டோ இருக்கு என்கிட்ட :)

யாத்ரா said...

ரொம்ப நல்ல சந்திப்பு, பதிவு அய்யனார். சென்ஷி சொல்வது போல உங்கள் புத்தகங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் ஆவல்.

தோழி said...

Binu-va meet panneengala. Last time Gayatri Anand meet pannapo sonnanga. Avaroda profile thedittu irunthen. Great meeting i believe Ayyanar.

Ashok D said...

:)

கவிதைக்கு :)

தமிழன்-கறுப்பி... said...

பகிர்தல் என்பது - உணர்கிறேன் அய்யனார்.

நன்றி.

பினு- கலைஞன்தான்...

anujanya said...

வாவ், உங்கள் புத்தகம் வருகிறதா? விவரங்கள் ப்ளீஸ். விசிறிகளுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டா :)

பாஸ்பரஸ் கவிதை நினைவில் இருக்கு.

பினு சந்திப்பு விவரங்கள் சுவாரஸ்யம். ஆசீர்வாதிக்கப் பட்டவர்கள் :)

அனுஜன்யா

Anonymous said...

கவிதையும் நல்லா இருக்கு.

குப்பன்.யாஹூ said...

மிக அருமை மற்றும் மகிழ்ச்சி அய்யனார்

பினு பாஸ்கர் அறிமுகத்திற்கும் மிகுந்த நன்றி.

சரியான நபரை உங்களுக்கு அறிமுகப் படுத்திய பவா, ஆண்டவன் மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

advance wishes for your book

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அய்யனார் :)

நல்லதொரு சந்திப்பின் சுவாரஸியமான இடுகை அய்ஸ்.

Pot"tea" kadai said...

//பினு இந்த அவள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்றதற்கு ஆம் என்றேன் (வாழ்க போமோ!)//

எவ்வளவு உண்மை!
யாரு போமோ?

சாமி, பொஸ்தகம் போடப் போறீங்களா? அதும் கவுஜயா...யா...யா...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வரவிருக்கும் புத்தகத்துக்கு வாழ்த்துகள்..
நல்ல அனுபவம்..

Unknown said...

//நன்கு இருட்டின பின்பு பினுவிடம் விடைபெற்று வந்தேன். கடற்கரை சாலையில் விரைகையில் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். Bernardo Bertolucci திரைப்படம் ஒன்றினுக்குள் நுழைந்து அவரின் கதாபாத்திரங்களை சந்தித்துவிட்டு வந்த உணர்வைத்தான் அந்த வீடும் மனிதர்களும் பினுவும் தந்திருந்தனர். இம்மாதிரியான மனிதரை எனக்கு அறியத் தந்த பவாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். // அருமையான சந்திப்பு. பினுவை சந்தித்த உணர்வை தந்துவிட்டது. இசைக்கருவிகளும் பூனைகள் நிறைந்த அவ்வீட்டைப் பார்க்க ஆசை எழுகிறது. ’இருளில் ஒளிரும் பாஸ்பரஸ்’ மறக்க முடியாத படிமம்...சம்பந்தப்பட்ட மனிதர்களின் அறிமுகம் நேரடியாக இல்லாவிடினும் உன் எழுத்தின் மூலமாய் நெகிழ்ச்சியான பதிவாகிவிட்டது அய்யனார். வம்சியில் வரவிருக்கும் புத்தகங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி அமித்து அம்மா

விரைவில் பகிர்கிறேன் சென்ஷி நன்றி.

நன்றி முல்லை

கென் வச்சுகிட்டு என்னய்யா பன்ற உடனே அனுப்பு :)

மிக்க நன்றி யாத்ரா

ஆம் அனு மிக நல்ல சந்திப்பாகத்தான் இருந்தது.பினுவின் புகைப்படங்களைப் பார்த்தீர்களா?

Ayyanar Viswanath said...
This comment has been removed by the author.
Ayyanar Viswanath said...
This comment has been removed by the author.
Ayyanar Viswanath said...
This comment has been removed by the author.
Ayyanar Viswanath said...

நன்றி அஷோக்

நன்றி தமிழன்

அனுஜன்யா மூன்று புத்தகங்கள் வரவிருக்கின்றன விரிவாய் பதிவிடுகிறேன். மிக்க நன்றி

நன்றி சின்ன அம்மிணி

மிக்க நன்றி குப்பன் யாகூ

நன்றி ஆதவன்

பொட் டீ
போமோ - போஸ்ட் மாடர்ன் - பன்முகவாசிப்பு
மொத்தம் மூணு யா :))

நன்றி திருநாவுக்கரசு

வாழ்த்துக்களுக்கு நன்றி உமா

Pot"tea" kadai said...

//போமோ - போஸ்ட் மாடர்ன் - பன்முகவாசிப்பு
மொத்தம் மூணு யா :))//

ஓ! நா லத்தீன் அமெரிக்க கவுஜரோன்னு நெனச்சிட்டேன்!

இவ்வாறான இருசொல்லகராதி (டூ லெட்டர் ஏக்ரொனிம்ஸ்) பயன்படுத்தும்போது முன்னமே அறிவுறுத்தவும்!!!

யாழினி said...

வரபோகின்ற புத்தகத்திற்க்கான காத்திருப்போடு
வாழ்த்துக்களும்..
கவிதை அழகா இருக்கு

MSK / Saravana said...

மூணு புத்தகங்களா??
புத்தக விபரங்களை தெரிவியுங்கள் தல.

MSK / Saravana said...

அழகான சந்திப்பைப் பற்றிய அழகான பகிர்வு தல.

MSK / Saravana said...

ரொம்ப நாள் எழுதாம, ஒரு பதிவு மட்டும் போட்டுட்டு போவதை கண்டிக்கிறேன்..
இன்னும் பதிவு போடுங்க தல. உங்கள் எழுத்தின் போதை தேவையாயிருக்கிறது எனக்கிப்போது.. :)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...