Tuesday, November 17, 2009

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936 ல் டி.பி ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார். அதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத் தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973 இல் விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980 இல் தமிழில் வெளிவந்தது. எண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குனரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்ரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக் கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை. பின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக ப்ரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி. எழுபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குனர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.

பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குனர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை. பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர இந்திய மனங்கள் அனுப்பதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொருத்த வரை பெண்களும் தங்களின் மூளையை விட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு நாயகி ஜாக்கெட் மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குனர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது. இதுவரை தமிழ் சினிமாக்களில் எழுதப்பட்ட காதல் பாடல்களில் பெண் தன்மையே / பார்வையே இல்லை என்கிற அதிர்ச்சி வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் கேட்டதும்தான் எனக்கு எழுந்தது. இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கருப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.

பெண் தன் காதல் உணர்வைச் சொல்வதாய் ஒரு பாடல் எழுதப்படக்கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குனர்களை எப்படி எதிர்பார்க்க? இம்மாதிரியான சூழலிலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

சம கால பெண் இயக்குனர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு, கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுது போக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடுத்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம்.

ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சம கால தமிழ்படங்களிலிருக்கும் பெரும்பாலான இம்சைகள் இப்படத்தில் இல்லை. நேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாராஸியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுது போக்குப் படமாய் இருந்தது. தமிழில் கலைப்படங்களுக்குத்தான் சாத்தியமில்லையென்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்க நிலைதான் இருந்து வருகிறது. பொய் சொல்லப் போறோம், திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்து இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன. ஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன. இந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்கு பாராட்டுக்களும் வாழ்த்தும்.

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு விசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன. அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், கபோதிகள், கவிர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

22 comments:

நர்சிம் said...

//எழுபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குனர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.//

உண்மை.

மதுரை வீரன்,ஆச்சர்யமான தகவல்.

பதிவு பிடித்திருந்தது.

வால்பையன் said...

வெகு நாட்களாக தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்த விசயம்!

TKB காந்தி said...

//ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள்// - :))))))

நல்ல பதிவு.

Anonymous said...

Informative blog. Thanks

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி

Nandhini JS said...

Dear Mr.Ayyanar Viswanath,

Your words convey that you expect so much more out of women filmmakers. We will do our best. I hope and pray that more women directors come into the field and make more good movies.

Thanks so much for the encouragement.

Regards,
Nandhini JS.
My blog - http://nandhinijs.blogspot.com

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை
இது தானாக நடந்ததா என்று தெரிய விலை, இன்று காலை பொதிகை தொலைகாட்சியில் மதுமிதா என்ற பெண் இயக்குனர் (வல்லமை தாராயோ) பேட்டி கண்டேன் (பாதி நிகழ்ச்சி தான் பார்த்தேன்).

அவர் சொன்ன சில கருத்துக்கள்:

பெண்களால பெண்களின் பார்வையில் மட்டும் தான் யோசிக்க முடியும், எனவேதான் திரைக்கதை சிறப்பகா செய்ய முடிவது இல்லை, வெளியூர் படப்பிடிப்பிகோல் அலைவதிலும் பெண் இயக்குனர்களுக்கு சிரமம் உள்ளது .

மதுமிதா சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் திரைப்படம் சார்ந்த படிப்புகள் படித்து உள்ளார்.

http://www.tamiltubevid.com/2008/07/vallamai-tharayo-tamil-movie.html

குப்பன்.யாஹூ said...

http://en.wikipedia.org/wiki/Madhumitha_(director)

தமிழன்-கறுப்பி... said...

பத்தி வீரருக்கு நன்றி.

:)

Deepa said...

//சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்//

உமாஷக்திக்கும் சந்திராவுக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு அய்யனார்.


//சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.
//
ரொம்ப சரி. பெரும்பாலும் இங்கே பெண்கள் ஆண்களின் பார்வையிலேயே தான் தங்கள் பிரச்னைகளைக் கூடப் பார்க்கப் பழகி இருக்கிறார்கள்! Out-of-the-box thinking is the need of the hour!

உயிரோடை said...

//பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு//

ந‌ல்ல‌ ஜோக் விழாம‌ல்(விழுந்து விழுந்துக்கு எதிர்ப‌த‌ம் விழாம‌ல் தானே) சிரிந்தேன்.

நான் கூட‌ இய‌க்குன‌ர் ஆக‌னும் என்று அதான் ஆசை. ம்ம்ம்ம் ம‌க்க‌ள் பாவ‌ம். அதான் விட்டுடேன்.(ஒழுங்க‌ ஒரு க‌தை எழுது முத‌லில் என்று சொல்வ‌து காதில் விழுது.)

மு.சீனிவாசன் said...

ஒளிப்பதிவாளர் B.R.விஜயலக்ஷ்மிய மறந்துட்டீங்களே? 5 வருடங்கள் அசோக்குமாருடன் பணி செய்தவர், 20 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர், SPB யை வைத்து ஒரு படம் இயக்கியவர் (பாட்டுப் பாடவா), "சூலம்" தொடரின் கிரியேடிவ் டைரக்டர்....அனைத்துக்கும் மேலாக பழம்பெறும் தயாரிப்பாளர், இயக்குனர் B.R.பந்துலுவின் மகள்

ரௌத்ரன் said...

முதலில் தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்?

இங்கு சினிமாவின் சாத்தியங்களே அறியாதவன் தான் பெரும்பாலும் இயக்குனராக இருக்கிறான்.

ஒரு சராசரி தமிழ் இளைஞனுக்கு முதலில் தன் விருப்பமான துறை எது? எதில் தான் சோபிக்க முடியும் என்பதிலேயே நிறைய குழப்பம் இருக்கிறது என்பது என் அனுபவம்.

சினிமாவை பொறுத்தவரை,ஒரே இரவில் எளிதாக கிடைத்து விடும் அதீத பணம் மற்றும் புகழுக்காகவே இளைஞர்கள் முண்டியடித்து கொண்டு இத்துறைக்கு வருகிறார்கள்.

தனக்கு என்ன தெரியும்.எதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என்ற தெளிவே இல்லாத பல சினிமா துறை இளைஞர்களை சென்னையில் சந்தித்திருக்கிறேன்.

சுய கேள்விகளே இல்லாத எந்த ஒரு கூமுட்டையும் இன்று தன்னை ஒரு எழுத்தாளன் என்றோ கவிஞன் என்றோ இயக்குனர் என்றோ கூறிக் கொள்ள முடியும்.

திரைக்கதை எழுதுவது எப்படி?கேமாராவை இயக்குவது எப்படி? என சந்தையில் மலிந்து கிடக்கின்றன விளக்க புத்தகங்கள்.இருக்கவே இருக்கிறது பர்மா பஜாரில் டிவிடி கடைகள்.யாரும் கொஞ்சம் முயற்சித்தால் ஒரு போல -சினிமாவை எடுத்து விட முடியும் தான்.

நிறைய பேசலாம் அய்யனார்.பெண்ணோ ஆணோ நம் வாழ்வுச்சூழலில் நம்மை இயந்திரமாக்கும் கல்வி முறையும் குடும்ப அமைப்புகளும் தான் இருக்கின்றன.முட்டி மோதி தன் வட்டம் விட்டு வெளி வருபவர்கள் எல்லா காலத்திலும் விரல் விட்டு எண்ணும் அளவே இருந்திருக்கிறார்கள்.அவர்களும் தன்னிருத்தலுக்கு போராடுமொரு கோர வாழ்வில் சிக்கிக்கொள்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள்.எப்பொழுதும் தகுதியற்ற சராசரிகளின் பினாத்தல்களால் நாறிக்கிடக்கிறது மொத்த சூழலும்.

சினிமா மட்டுமல்ல அரசியல்,விளையாட்டு,என எத்துறையை எடுத்து கொண்டாலும் பொருத்தமற்றவர்களே இடத்தை அடைத்து கொண்டு நிற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் ஒரு ஆளுமையை தேடுவது சந்தையில் ஊசியை தேடுவது போலத்தான்.

ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழ் உலகம் அல்லவா? இதில் பெண் இயக்குனர்கள் ஏன் இல்லை என்ற கேள்வி என் அளவில் பொருளற்றது.

நல்ல பதிவு அய்யனார்.

KARTHIK said...

உமாஷக்தி சந்திராவுக்கும் என் வாழ்த்துக்கள்ங்க.
அவங்க படத்துல எதாவது வெளிநாட்டு மாப்புள மாதிரி ரோல் வந்தா கொஞ்சம் ரெக்கமண்டு பண்ணுங்க தல.

பிச்சைப்பாத்திரம் said...

சினிமாவில் பெண்கள் பணிபுரிவதற்கு அக/புற வயமான சிக்கல்கள் முன்பு இருந்தன. பால்ரீதியான இடைவெளிகள் குறுகிக் கொண்டிருக்கும் இந்த வணிகமயமான காலகட்டத்தில் திரைத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு மெல்ல அதிகரித்துக் கொண்டு வருகிறது. பெண்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டிய திரைப்படங்களை பெண்கள்தான் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். ஆண் இயக்குநர்களால் அவ்வாறான பாவனைதான் செய்ய இயலும். இதையும் மீறி அபூர்வமாக சில தெறிப்புக்களை காண முடிகிறது. வசந்தின் 'ரிதம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. விதவையான மீனா தன்னுடைய மகனுக்கு முடிதிருத்துவதற்காக அழைத்துச் சென்று அவனை இருக்கையில் அமர வைத்து விட்டு சற்று தள்ளி அசெளகரியமான சங்கடத்துடன் நின்று கொண்டிருக்கும் காட்சியை இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை. இந்தியச் சமூகச் சூழலைப் பொறுத்தவரை முடிதிருத்தகம் என்பது ஆண்களின் உலகத்தை மையப்படுத்தியது. (மேல்தட்டு மக்கள் மாத்திரமே புழங்கி வந்த பியூட்டி பார்லர்கள் இப்போதுதான் நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது) அந்த சூழலை ஒரு பெண் எப்படி உணர்வாள் என்பதை திரைமொழியில் ஒரு பெண்ணால்தான் சொல்ல முடியும்.

தற்போதைய தமிழ் சினிமா சூழ்நிலையில் குறிப்பிடும்படியான பெண் இயக்குநர்கள் இல்லைதான் என்றாலும் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் கையாள்வதற்கான எளிமை காரணமாக பல பெண் இயக்குநர்கள் வருங்காலத்தில் பெருகி வருவார்கள் என நம்புகிறேன்.

மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ்த் திரை பெண் இயக்குநர்களின் வரிசையில் விஜயலட்சுமி, ஜானகி விஸ்வநாதன் (குட்டி, கனவு மெய்ப்பட வேண்டும்), அனிதா உதீப் (குளிர் 100 டிகிரி) போன்ற சில பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

MSK / Saravana said...

பத்தி வீரர் பராக்.. பராக்.. பராக்..
:)

MSK / Saravana said...

இருக்கிற இயக்குனர்களே (ஆணோ பெண்ணோ) நல்ல படத்த எடுக்க மாட்டேங்குறாங்க.
நல்ல படம் எடுக்கும் யார் வந்தாலும் (ஆணோ பெண்ணோ) மிக்க மகிழ்ச்சியே.
சந்திரா, தேன்மொழி தாஸ், உமா ஷக்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Pot"tea" kadai said...

பராக் பராக் பராக்...

திரு திரு துரு துரு எனக்கும் பிடிச்சிருந்தது :)

Sanjai Gandhi said...

//ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. //

நம் நால்வருக்குமே பிடித்திருந்தது. குறிப்பாக நான் எதிர்பார்க்கும் திரைப்படம் இதைப் போன்றது தான். நந்தினியின் அடுத்த படத்திற்கு வெய்ட்டிங்க..

நல்ல தகவல்களுடன் சிறப்பான பதிவு.

Unknown said...

வாழ்த்துக்கு நன்றி அய்யனார். இனி வரவிருக்கும் தலைமுறைகளில் பெண்கள் அதிகம் சாதிக்கக் கூடிய சூழல் உள்ளது. இலக்கியம், அரசியல், சினிமா எல்லாவற்றிலும் பெரும்பான்மையாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் நிலை நீடிக்கத்தான் செய்கிறது. போராட்டம் இல்லாவிட்டால் எந்த வெற்றியும் ருசிக்காதுதானே? நம்பிக்கை இருக்கிறது அய்யனார். நிச்சயம் சாதிப்போம் ;))) அருமையான கட்டுரை, பகிர்விற்கு நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

next post?

இனியாள் said...

நல்ல பதிவு, நீங்கள் சொல்லி இருப்பது உண்மையே.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...