Friday, November 13, 2009

குளிர் நினைவுகள்


குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. நகரத்தின் இரைச்சல்களிலிருந்து சற்றுத் தள்ளிய வீடிது. இதுவரை எத்தனை வீடுகளில் வசித்திருப்பேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீடாய் நினைவு படுத்தத் துவங்கியது. என் கிராமத்து வீடு, திருவண்ணாமலை வீடு, கிருஷ்ணகிரி அறை, காட்டிநாயனப் பள்ளி அறை, ஓசூர் தர்கா அறை, அண்ணாமலை நகர் வீடு, அண்ணாமலை நகர் அறை, டவுன்ஷிப் வீடு,பாண்டிச்சேரி நடேசன் நகர் வீடு, ரெட்டியார் பாளையம் அறை, எல்லப் பிள்ளைச் சாவடி வீடு, முதலியார் பேட்டை அறை சென்னை ஜாபர்கான் பேட்டை அறை,திருவள்ளூர் நேரு நகர் அறை, பூங்கா நகர் வீடு, ஆயில் மில் அறை, மதுரை வீடு, ஷார்ஜா பேங்க் ஸ்டீரீட் வீடு, துபாய் அல்கூஸ் அறை, கராமா அறை, டெய்ரா அறை, ஷார்ஜா வீடு மீண்டும் டெய்ரா அறை இப்போது இந்த பர் துபாய் வீடு. இது நான் வசிக்கும் இருபத்தி நான்காவது வீடு. புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

எது என்னை இப்படி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் சித்திரங்களையும் வரிசையான காட்சிகளாக மாற்றி சுழலவிட்டுப் பார்த்தேன். முன் பின் கால வரிசைப்படி வேகமாய் நினைவுகளில் வீடுகளை நகர்த்தியும் பின்பு மெது மெது வாய் நகர்த்தியுமாய் நினைவுகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுக்கவே சடாரென எழுந்து திரைச்சீலையை சரக் கென விலக்கினேன். பளிச் வெள்ளை வெயில் திடீர் மிரட்சியாய் இருந்தது. சடார் சரக் பளிச் என்ன ஒரு ரிதம்! என நினைவு சப்தங்களில் முன்பும் பின்புமாய் அலையத் துவங்கியது.

நினைவைக் கட்டி இழுத்து நிகழில் பொருத்தினேன். மணி என்ன என சரியாய் தெரியவில்லை. எட்டரை அல்லது ஒன்பது இருக்கலாம். இங்கு குளிர் துவங்கி விட்டது.வெயிலுக்கு கருணை வந்து விட்டது. தூர தேசப் பறவைகள் வரத் துவங்கி விட்டன. கடல் புறாக்கள் அதிகம் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. எல்லா காலத்திலும் இருக்கும் புறாக்கள் மிகுந்த அசட்டையாய் தரைத் தளத்தில் நடந்து கொண்டிருந்தன. குளிருக்கு ஒண்டும் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எல்லாப் பூனைகளையும் கொன்றிருப்பார்களோ என்கிற எண்ணம் பயத்தைத் தந்தது. இந்த நகரம் இன்னும் சரியாய் விழிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருந்து விட்டு அடுத்த நாள் நண்பகல் வரை தூங்கும் இந்த நகரம் என்னை மட்டும் சீக்கிரம் எழுப்பி விட்டு விடும். மனித சஞ்சாரங்கள் குறைந்த காலையை நினைவுகளோடு போராடியபடி குளிரோடு அணுகுவது இதமாகத்தான் இருக்கிறது.

தேநீர் குடித்தால் என்னவெனத் தோன்றிற்று. தேநீர் தியானமுறை நினைவிற்கு வந்தது. சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தத்தின் மீது தியானித்தபடி, தயாரானவுடன் அதன் வாசனையை உள்ளிழுத்தபடி, தேநீரை மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் உறிஞ்சிக் குடித்தபடி நகரும் நாட்கள் மிகுந்த நிறைவுகளைத் தரக் கூடும். தியானம், நிர்வாணம், அமைதி, சலனமின்மை என எல்லாவற்றிலிருந்தும் இப்போது விலகிக் கடந்து வந்தாயிற்று. நினைவுகளோடு போராடப் பழகி விட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று. எனக்கானத் தேநீரைத் தயாரிக்க எனக்கான உணவைச் சமைக்க எப்போதும் பிடித்திருக்கிறது. தேயிலையில் பால் கலப்பது வன்முறைதான் என்றாலும் எனக்கிதுதான் வசதி. செம்மண் நிறத்தில் லேசாய் ஏல வாசனையோடு டீ தயாரித்துக் குடிக்க எனக்குப் பிடித்திருக்கிறது. என் முடி வெள்ளையாவதற்கு இதுதான் காரணமென இவள் சொல்வதை நினைத்தபடியே மேலதிகமாய் ஒரு கரண்டி தேயிலையைக் கூட்டினேன். காலையில் புகைக்க எனக்குப் பிடிக்காது. உடல் மாசுபடுவதைக் காட்டிலும் இந்த அதிகாலைக் குளிர் காற்றில் புகை நாற்றத்தைக் கலப்பதில் விருப்பமிருந்ததில்லை. எனக்கு இரவுகளில்தான் புகை தேவைப்படும். குளிரில் நடுங்கியபடி மொட்டை மாடியில் புகைக்கும்போது காற்று மாசாவதை நினைத்துக் கொள்வதில்லை.

பால்கனியில் நடக்கையில் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. பால்கனியில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி வாய்விட்டுப் படிக்கும் சிறுமியொருத்தி மீன் தொட்டியில் உலவும் மீனைப் போலிருக்கிறாள் என்கிற குறுங்கவிதையது. மிக வழக்கமான காட்சியை சாதாரண வார்த்தைகளில் புனைவிற்கு தள்ளுவது அல்லது தன் கவிதைப் படிமங்களை இயல்பிற்கு கொண்டு வருவது, இதில் அதையும் அதில் இதையும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே கோர்ப்பது இவைதாம் இவர் கவிதைகளில் கவித்துவத்தை கொண்டு வரும் யுக்தியாக இருக்கிறது. யாருமில்லாத அமைதியான காலையில் சத்தமாய் ஒரு கவிதையை சொல்லி முடித்தவுடன் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் தெரியவில்லை.

முழுக்க முழுக்க தன் வயமான இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது. குற்ற உணர்வில் திளைக்காதிருக்க வாழ்வு இன்பமயமானதுதான் என்பதை நம்ப வார இறுதி விடுதிகளும் சக நண்பர்களும் உதவுகின்றனர். இவையெல்லாம் இல்லாத பிறருக்கு எது விடுதலையாய் இருக்க முடியும் என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாய் இருக்கலாம். ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரைத் தளத்தில் கோடு போட்ட காகிதம் ஒன்றை மென் காற்று மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தது. புறா அக்காகிதத்தின் மீது வந்தமர்ந்தது. கோடு போட்ட காகிதம் ஒன்றில் பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் என் பக்கத்தில் பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்ட நண்பியொருத்தியின் நினைவு வந்தது. அவள் அந்தக் காகிதத்தை ஸ்கேனித்து அனுப்பியிருந்தாள். எதையோ வீட்டில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் காகிதம் தட்டுப்பட்டதாயும், ஒரு வருடத்திற்கு முன்பு என் பக்கத்தை மிகுந்த விருப்பங்களோடும், எரிச்சலோடும், கோபங்களோடும் படித்துத் திரிந்ததாயும் அவ்வப்போது பிடித்தவற்றை ஏதாவது ஒரு காகிதத்தில் எழுதி, எங்காவது தொலைத்து விடுவது வழக்கமானதெனவும் சொல்லியிருந்தாள். மிகவும் இணுக்கி இணுக்கி அந்த ஒரு பக்கத்தில் நான் எழுதிய வரிகள் எழுதப்பட்டிருந்தன. இணையம் அறிமுகமாவதற்கு முன்பு வரை நானும் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை / காட்சிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அதே வழக்கத்தைக் கொண்ட இன்னொருத்தி எழுதி வைத்துக் கொள்வது என் வரிகளாய் இருக்கிறதென்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இம்மாதிரிக் குளிர் காலையில், தேநீரோடு, காட்சிகளை விழுங்கியபடி, பிடித்தமான நினைவுகளில் மூழ்குவதும் ஒரு கட்டத்தில் சலிக்கவே செய்கிறது. சலிக்கும் நொடிதான் இசை கேட்பதற்கான துவக்கம். இந்துஸ்தானியையும் கஜலையும் மென்மையாய் கசியவிடும்போது தயவு செய்து யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

சென்ற வருடத்திற்கு முந்தின குளிர்காலத்தில் கராமாவிலிருந்தேன். விடுமுறை தினங்களில் சீக்கிரம் எழுந்து நடைக்குப் போவது வழக்கமாய் இருந்தது. குளிர் விரவிய தெருக்களில், பனி மூடிய அகலமான சாலைகளில் ஏதேனும் ஒரு விநோதப் பறவை தட்டுப் படலாம். அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன். பின்பொரு பறவையின் முகம் கொண்ட சிறுமியையும் செம்பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணையும் அவ்வப்போது கடந்து போவேன். இருவரிடமும் கேட்காமலேயே விட்டுப் போன ஒரு கேள்வி என்னிடம் இருந்தது. உங்களை மனித உருவாய் போகக் கடவதென சபித்த பறவையின் பெயர் என்ன?

17 comments:

குப்பன்.யாஹூ said...

அட்டகாசம் அய்ய்ஸ்.

பத்து பதினைந்து பதிவுகளில் எழுத வேண்டிய விஷயங்கள்.

எதை பாராட்டுவது எதை விடுவது.

குளிர் காற்றில் புகை கலக்க செய்து காற்றை மாசு படுத்த வேண்டாம், தெயிலையோடு பாலை கலந்து வன்முறை செய்ய வேண்டாம்,

புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

osho froid jk gone to shelf.


சம காலத்தின் சிறந்த தமிழ் எழுத்தாளர் என உங்களை கொண்டாடுவதில் பெருமிதம் அடைகிறேன் அய்யனார்.

நாகா said...

குளிர் காலம் துவங்கி விட்டதால் கடந்த ஒரு வாரமாக மனைவி வீட்டிலிருந்து க்ரீக் வரை அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறாள், ஆனால் எனக்கு நினைவுகளோடு கனவுகளும் இணைந்த அதிகாலைத் தூக்கம்தான் சுகம். பர் துபாய் வந்து விட்டீர்களா? இனி அடிக்கடி சந்திப்போம், எந்தப் பகுதியில் என்று மின்னஞ்சலில் தெரிவியுங்கள் - ktnagu@gmail.com

Ashok D said...

/தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று/

/இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது/:)

தலைப்பு தனிமையின் இசை என்றே வைத்திருக்கலாம். நன்று.

நான் Jafferkhanpet-ல் browsing center வைத்துள்ளேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசித்துப் படித்தேன்.

anujanya said...

சமீப காலங்களில் நான் படித்த மிகச் சிறந்த இடுகை இது அய்ஸ். உங்க கிட்ட இருந்து வந்த சமீப சூப்பர் போஸ்ட் என்றும் சொல்லலாம். ஏதோ கூடு விட்டு கூடு பாய்ந்த மாதிரி உங்க உடலுக்குள் புகுந்து அத்தனையும் அனுபவத்த மாதிரி இருக்கு.

சில கச்சேரிகள் ஆரம்பத்திலேயே தெரிந்து விடும். பிரமாதமாக இருக்கும் என்று. போலவே டெண்டுல்கர் ஆட்டம். ராஜாவின் பாட்டு. இந்த இடுகை முடிந்து விடக்கூடாதே அல்லது ரொம்ப சிறியதாக இருக்கக் கூடாதே என்று ஆசைப்பட்டேன்.

முகுந்த் நாகராஜன் உங்களுக்குப் பிடிக்கும் என்பது இனிய 'அதிர்ச்சி'. நீங்க முரட்டு ஆசாமி; என் போன்ற மென்மையான கவிஞர்களுக்கு (ஹுக்கும்) தான் அவரைப் பிடிக்கும் என்று நினைத்தேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கவிதை இன்னமும் நினைவில் இருக்கு.

மற்றபடி எல்லா வீடுகளின் சித்திரங்கள் சுழல்வது, தேநீரில் வன்முறை, செம்மண் நிறத் தேநீர், அழகுத் தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் 'ஸ்கேனித்து' என்று ஒரு ஆச்சரியம், மூளையில் புரியாத மொழியை ஏற்றுவது, முத்தாய்ப்பாய் magical realism என்று அதகளம்.

நீங்கள் இந்த மனநிலையில் நிறைய எழுதவேண்டும் என்று ஆசையாக இருக்கு.

அனுஜன்யா

இரவுப்பறவை said...

ரசனையின் எல்லைகளில் என்னை மறக்கடித்து விடுகிறீர்கள்...
அருமை...

யாத்ரா said...

உங்க குளிர் நினைவுகளில் எங்கள் ஊரும்,,,,,, யப்பா எவ்ளோ அறைகளில் தங்கியிருக்கீங்க, இந்த நிலையாமையை என்னாலும் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.

Anonymous said...

மூன்றுக்கும் அதிகமான முறை படித்தேன், எப்படி ஒரு அயர்ச்சி தோன்றாமல் தொடர்ந்து எழுதியிருப்பீர்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.

நான் ஒரு மேம்போக்கா படித்துவிட்டு போகலாம்னு வந்தேன்..

சமீப காலத்தில் இவ்வளவு மெல்லிய உணர்வுகளையும், அனுபவங்களையும் நேரில் இருப்பது போன்ற பதிவு இது ஒன்றுதான். ரொம்ம்ப நல்லாயிருக்கு அய்யனார். உங்கள் புத்தகங்களை ஆவலுடன் நோக்குகிறேன்.

Anonymous said...

மிக பொருத்தமான தலைப்பு.. தனிமையின் இசை. ம்ம்ம் நடத்துங்க.

இளவட்டம் said...

அருமையான எழுத்து நடை அய்யனார் என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து சலிப்படைய வைக்கிறிர்கள்.

Sai Ram said...

முதலிரண்டு வரிகளை மேய்ந்து விட்டு வேறு பக்கமாய் தாவ வந்த என்னை கடைசி வரி வரை இழுத்து சென்று விட்டது எழுத்து நடை. தனிமையின் இசை சோக கீதமாக இருந்தாலும் சில சமயங்களில் அதுவே போதையாகவும் இருக்க தான் செய்கிறது.

உயிரோடை said...

//அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன்//

ஆமாம் நீங்க‌ள் அந்த‌ ப‌திவை எழுதி கிட்ட‌த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ம் ஆக‌ போகுது. சென்ற‌ வ‌ருட‌ குளிர்கால‌த்தில் அர‌ட்டை அடித்த‌து நினைவுக்கு வ‌ருக்கின்ற‌து.

சென்னை ஜாம்ப‌ர்கான்பேட்டையில் வேறு இருந்தீர்க‌ளா, அப்ப நீங்க‌ளும் ரௌடி தான் போல‌.

Sanjai Gandhi said...

படிக்க படிக்க ரொம்ப அழகான ஒரு உணர்வு. வாழ்வியல் சூழலை எவ்வளவு அழகா வெளிப்படுத்தறிங்க.. அற்புதம். வார்த்தைகள், வாய்க்குள் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொறித்து இனப் பெருக்கம் செய்துக் கொண்டே இருக்கும் போல.

Ayyanar Viswanath said...

நன்றி குப்பன் யாகூ

நாகா அடிக்கடி சந்திப்போம் :)

நன்றி அசோக்

நன்றி அமித்து அம்மா

அனுஜன்யா விரிவான பகிர்வுகளுக்கும் அன்பிற்கும் நன்றி.

நன்றி இரவுப்பறவை

நன்றி யாத்ரா

மயில் கடுமையான விமர்சனங்களையல்லாவா எதிர்பார்த்தேன் :)

Ayyanar Viswanath said...

நன்றி இளவட்டம்

மிக்க நன்றி சாய்ராம்

நன்றி உயிரோடை :)

சஞ்சய் மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

கிறங்கி போய் விட்டேன் ஐயனார்.

MSK / Saravana said...

இந்த மாதிரியான பதிவுகளை உங்களுக்கு குளிர் காலம் தரும் என்றால், வருடம் முழுதும் குளிர்காலமாய் இருக்கக்கடவது. :)
அல்லது உங்களின் இருபத்தி ஐந்தாவது வீடு, துருவ பிரதேசத்தில் அமைய கடவது. :) (இன்னொருமொரு வீடா என்று என்னை கோபிக்க கூடாது.)
போதை தரும் எழுத்து. இன்னும் அடர் நீல நிற தீற்றல் கொண்ட பறவை என்னுள் பத்திரமாய் இருக்கிறது.
மொழி வளமை உங்களுக்கு ரொம்பவே. (அதில் எனக்கு பொறாமையும் கூட.. :))

இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
கவிஞன் மகன் மழைக்கு பழகி கொண்டானா?

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...