Tuesday, November 3, 2009

சிதைந்த நிஜமும் செழித்த நிழலும்

1

ஒழுங்குகள்/ ஒழுங்கீனங்கள் இவ்விரண்டிலும் என்னைப் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து, வருந்தி, கத்தி, புலம்பி நிகழைக் கொன்று கொண்டிருக்கிறேன். எல்லா உச்சத்தையும் எட்டியதாய் இறுமாந்தும், எல்லாவற்றையும் இழந்துபோனதாய் கதறியுமாய் நகர்கின்றன என் நினைவு மேகங்கள். நிறைவடையாது இருப்பதன் பெயர், நிறம், அடையாளம் என எதையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவ் உணர்வின் தன்மை நான் அடிக்கடிக் கனவு காணும் நதியினடியில் துயிலும் தணிவாகத்தான் இருக்கும். மேலும் அதன் இயல்பே உயரமான பாறையின் மீதிருந்து குதித்துச் சிதறிப்போவதற்கு முன்பான விநாடியின் உடல் சில்லிப்பை /துடிப்பை ஒத்ததாய் இருக்கலாம். ஒரு மலை வீற்றிருப்பதுபோல் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்னுள் பதியனிட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அதன் தடத்தைப் பிடித்துவிடலாம். அதுவரைக்கும் இவ்வுழல்வுதான்.அதுவரைக்கும் இந்த போதைதான்.அதுவரைக்கும் இந்தக் கோபம்தான். அதுவரைக்கும் இந்தப் பைத்தியம்தான் அதுவரைக்கும் இந்த வெந்துச் சாதல்தான். அதுவரைக்கும் இதேக் கதறல்கள்தாம். புலம்பல்கள்தாம். வாந்திதாம். தாம்.. தாம்...தாம்… தாஆஆம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்.

இறுதி எது? உச்சம் எது? நிறைவு எது? எங்கடா இருக்கு எனக்கான வாழ்வு? : ஜோர்பா தி புத்தா : அடிசெருப்பால!

சமீபமாய் நான் நம்பிக் கொண்டிருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாய் உதிரத் துவங்குகின்றன. இது எனக்கு மட்டும் பிரத்யேகமாய் அவ்வப்போது நிகழும் ஒன்று. அதனாலேயே நம்பிக்கைகளின் கிளைகளை நான் எப்போதும் விரிப்பதில்லை. விரித்திராத கிளைகள் வேர்களுக்குள்தான் அடங்கியிருக்கின்றன. அல்லது நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கும் வேர்களே விரிக்காத கிளைகளாவும் இருக்கின்றன. இப்பாதுகாப்பான, பத்திரமான, அதி ரகசிய, தகவலை தடம் பிடித்துவிடுபவர்களே எனக்கான பிரச்சினைகளாக உருமாறத் துவங்குகின்றனர். எல்லாவற்றையும் உதறவும் முடியாது /சுமக்கவும் முடியாது, விரும்பி/வெறுத்து, விலகி/நெருங்கி, எதிரெதிர் துருவங்களில் என்னையே பொருத்திக் கொண்டு இவ்விளையாட்டினை ஆடித் தீர்க்கிறேன். என் வாழ்வுச் சதுரங்க கட்டங்களில் நகரும் காய்களுக்கு எவ்வித குதூகலத்தையும் என்னால் தந்துவிட இயலாது. அதே சமயத்தில் எவ்விதத் துயரையும் தந்துவிடாதிருக்க மெனக்கெடுகிறேன். காய்கள் வெறுமனே நகர்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நகர்த்துபவர்கள் வெறுமனே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்தினையோ வருத்தத்தினையோ தந்துவிடாத ஒன்றை ஏன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்? என்பவர்களுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இது இப்படித்தான் இருக்கிறது.

எந்த ஒன்றின் எச்சம் நான்? எதன் மிகுதி என்னை நீட்டித்திருக்கிறது? எதன் விருப்பம் என்னை இயங்கவைக்கிறது?: உண்மையின் உன்னத சங்கீதம் : முடியல!

2

மனிதர்கள் எவரும் தேவையில்லையென்கிற மனநிலை எப்போதெல்லாம் எனக்கு ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வேன். நெருக்கமான நண்பர்கள், அறிமுகமானவர்கள், தினம் பேசுவோர், அவ்வப்போது சந்திப்போர் என எல்லாரையும் வெளியே தள்ளி மிகக் குரூரமாய் கதவைச் சாத்திக் கொள்ளும் இந்தத் திமிர்தான் அந்நிய வாழ்வின் மூலமாய் நான் பெற்றுக்கொண்ட செல்வப்பயனாய் இருக்கிறது. எனது தலைமறைவு வாழ்வு இன்னொரு வகையில் மிகுந்த சுவாரஸ்யமானது. அலுவலகத்திலிருந்து எத்தனை சீக்கிரம் வரமுடியுமோ அத்தனை சீக்கிரம் வந்து எனது பொந்திற்குள் அடைந்து கொள்வேன் அறைக்கதவை எந்தக் காரணத்திற்கும் திறந்துவிடத் தேவையில்லாத வாழ்வாய் இருப்பதால் எனக்குப் பிடித்தமான நிழல் உலகத்திற்குள் என்னை மூழ்கடித்துக் கொள்வேன். புத்தகங்களில், திரைப்படங்களில் வாழும் வாழ்க்கைக்கான பின்புலம் மனிதர்கள் மீதிருக்கும் என்னுடைய அவ நம்பிக்கைகளாகத்தான் இருக்கின்றன.

கைவசமிருக்கும் கடைசிப் பணத்தையும் சாம்பலாக்கிவிட்டு நடையைக் கட்டிய In to the Wild கிறிஸ்தான் கடந்த மூன்று வாரங்களாக நினைவிலாடிக் கொண்டிருக்கிறான். இந்த நிலப்பரப்பை ஒற்றைப் பணமில்லாமல் நடந்து /கடந்து பயணிக்கும் வாழ்வு மிக அதிக வளைவுகள் கொண்டதாய் இருக்கக் கூடும். விநோதங்களை, அதிர்ச்சிகளை, பயங்களை, எதிர் கொள்ள வேண்டிவரும். எதிர்பாராமின்மை மட்டும் எப்போதுமிருக்கலாம்.

சுதந்திரத்தின் காற்றை அடர்ந்த வனங்களில் உள்ளிழுக்க முடிவதை, பயம் என்பதின் நிழலைக் கூடத் தொடாத வாழ்வினை, புதிய மனிதர்களை, புதிய வாழ்வை, உயிர்ப்பை கிறிஸ் முழுமையாய் துய்ப்பதைக் காணும்போது ஏற்படும் ஒப்பீடுகள் இதுவரைக்குமான என் இயங்குதலை அபத்தமாக்கின. என்னுடைய நமுத்த இவ்வாழ்வின் மீது திரை கிறிஸ் கனவில் காறியுமிழ்கிறான். கெக்கலித்துச் சிரிக்கிறான். நான் கூனிக்குறுகி அறையின் இருள் மூலைகளில் ஒண்டுகிறேன். அவனது சுதந்திரப் பீறிடல், உற்சாகப் பிளிறல் சுதந்திரத்தை வாய் ஓயாது முணுமுணுக்கும் என் போதாமையின் செவுளில் ஓங்கி அறைகிறது, நான் பலமிழந்து மூர்ச்சையாகிறேன்.

மாறாய் குவாண்டினின் Death Proof பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். பிறிதொரு பெண்கள் அதே சைக்கோவை துப்பாக்கியால் சுட்டு, கதறக் கதற, விரையும் காரினால் பின்பக்கமாய் முட்டி முட்டி, விரட்டி, வழிமறித்து, தடியால் மண்டையிலடித்து, மூஞ்சியில் மாறி மாறிக் குத்துவிட்டு, தரையில் வீழ்த்தி, அவன் முகத்தில் காலை தூக்கி வைத்துக் கெக்கலிக்கும்போது என் அறையிருளை இவ்வின்பம் விரட்டியடிக்கிறது. திருடன் சேமித்தப் பணத்தை திருடனுக்கும் போலிசுக்கும் தண்ணி காட்டி லபக்கும் பெண்ணின் சாதுர்யமும் கால் கால்சட்டையணிந்து, பைப் புகைத்தபடி, சதா டிவி பார்த்தபடி, இன்னொருவனை துரோகிக்க தூண்டி, சமயோசிதமாய் இருக்க வேண்டிய இடத்தில் வாய் ஓயாது பேசி, குண்டடி பட்டுச் செத்துப் போகும் இன்னொரு பெண்ணின் இளமைத் திமிரும் புன்முறுவலை வரவழைக்கின்றன. நல்லவை, உன்னதம், நேர்மை, தெளிவு, உண்மை, வரலாறு, நேர்க்கோடு என எல்லாவற்றையும் தலைகீழாக்கும் சிதைக்கும் குவாண்டின் மறைமுகமாய் அல்லது நேரடியாய் என்னை என் குற்ற உணர்வுகளிலிருந்து தப்ப வைக்கிறான்.

இன்குளோரியஸ் படத்தில் குவாண்டின் நிறுவியிருப்பதெல்லாம் அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைத்திருப்பதுதான். சமூகம், அறம் , முறம் என்றெல்லாம் யோசிக்காது அதிகத் திமிர்த்தனமாய், அதிக நேர்த்தியாய் ஒருவன் திரிந்தால் அவனை எல்லாருக்கும் பிடித்துத்தான் தொலைகிறது.

வரலாறுகளை விளிம்பின் பார்வையிலிருந்து மறு உருவாக்கம் செய்வதின் தேவைகளை எவர் நிறைவேற்றுவார்/புரிந்துகொள்வார் எனத் தெரியவில்லை. இதை ஓரளவு தேவ் டி யின் சந்தா பாத்திரம் செய்திருக்கிறது. இதுவரைக்கும் சொல்லப்பட்ட தேவதாஸ் கதைகளில் சந்திரமுகி ஊறுகாயாக மட்டும் தொட்டுக் கொள்ளப்பட்ட ஒரு வஸ்து. இதை தேவ் டி நிர்நிர்மாணம் செய்திருக்கிறது. சந்தா என்கிற சந்திரமுகி உருவாவதற்கு இந்த சமூக அமைப்புகள் குரூரத் துணை போவதை சரியாய் பதிவு செய்த படம் இது. பாலியல் தொழிலாளி என்கிற வெற்றுச் சொல் மட்டும் அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கிவிடும் என அரசியலறிவாளர்கள் நம்புவதை சந்தா பாத்திரம் கிண்டலடிக்கும் இடத்தில் அவமானத்தில் கூனிக் குறுகினேன். கொலுசுகளின் சப்தங்களை மட்டும் கொண்டு முன் நகர்ந்து போகும் என் பிரியத்திற்குறிய சந்தா! என்னால் முடிந்ததெல்லாம் உன்னைச் சுமந்தலையும் இந் நாட்களை நீட்டிப்பது மட்டும்தான்....

10 comments:

குப்பன்.யாஹூ said...

மீண்டும் பழைய அய்யனார் பாணி எழுத்துக்கள்.

அருமை அருமை, இதை இதை தான் நான் எதிர்பார்த்து காத்து இருந்தேன்.

நீங்கள் சொல்வது போல உங்களுக்கு மட்டும் அல்ல, பெரும்பாலான மத்திய வயது மக்களை இன்று இணையம், தொலைக்காட்சி, டீவிடி திரைகள் அடைத்து போட்டு விட்டன. நிஜமான மனிதர்களோடு தொடர்பு குறைந்து கொண்டே வருகிறது.(அயல் தேசத்தில் மட்டும் அல்ல, தமிழகத்திலும் இது பரவலாக நடை பெறுகிறது).

புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்பது போல இணையப் பழக்கம் மனிதத்திற்கு கேடோ?

உயிரோடை said...

//நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கும் வேர்களே//

உங்க‌ளுக்கு மிக‌ பிடித்த‌ ப‌டிம‌ம் ஆயிற்றே...

ம்ம் ச‌ரி ஏன் இந்த‌ கொல‌வெறி நீங்க‌ சொல்லி இருக்க‌ ப‌ட‌த்தை பார்த்த விளைவு தான் இந்த‌ ப‌திவுன்னா.... அந்த‌ ப‌ட‌த்தை எப்ப‌டி பாக்கா?

குப்பன்.யாஹூ said...

இந்த பதிவின் தலைப்பை மட்டும் முப்பத்தி மூன்று முறை படித்து பிரமிக்கிறேன், அருமையான தலைப்பு.

பாராட்ட வார்த்தைகள் இல்லை, திருஷ்டி சுத்தி போடுங்க

ரௌத்ரன் said...

ஒரு வெண்மேகம் போல தான் தோன்றியாய் கலைந்தும் கூடியும் விரவுகிறது உங்கள் எழுத்து...

In to the wild என்ன செய்திருக்கும் என்பதை உணர முடிகிறது.நீங்கள் அவசியம் Vagabond பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.

நேற்று Visitor பார்த்தேன் அய்யனார் :)

பகிர்வுக்கு நன்றி.

Toto said...

DEATH PROOF பார்த்து ச‌ந்தோஷ‌த்தில் அதிர்ந்த‌து ந‌ல்லா ஞாப‌க‌ம் இருக்கு.. என‌க்கு உங்க‌ மொழி ந‌டை ரொம்ப‌ புதுசு..புரிய‌ கொஞ்ச‌ம் சிர‌ம‌மா இருக்கு

-Toto
www.pixmonk.com

chandru / RVC said...

ம்ஹூம், ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. நடத்துங்க..! வழக்கம் போல அருமை

யாழினி said...

"""நெருக்கமான நண்பர்கள், அறிமுகமானவர்கள், தினம் பேசுவோர், அவ்வப்போது சந்திப்போர் என எல்லாரையும் வெளியே தள்ளி மிகக் குரூரமாய் கதவைச் சாத்திக் கொள்ளும் இந்தத் திமிர்தான் அந்நிய வாழ்வின் மூலமாய் நான் பெற்றுக்கொண்ட செல்வப்பயனாய் இருக்கிறது........"""


சரிதான்....

எப்ப வெளில வருவிங்க...

மனசு ஏதோ இருக்கமாகுது...

நல்ல படைப்பு...

தமிழன்-கறுப்பி... said...

அய்யனார்,
இதுக்கு பின்னூட்டம் போடவும் முடியல, பின்னூட்டம் போடாம இருக்கவும் முடியல!!

ஆச்சரியங்களோடு படித்துக் கொண்டிருக்கிறேன் சமயம் வருகையில் எழுதுகிறேன்.

seethag said...

thank you for introducing 'In to the wild"..

somewhere Chris sounds like the character 'larry' in RAZOR'S EDGE eh?

But chris is real. oh how i wish i had it in me to walk away like that.......

Ayyanar Viswanath said...

நன்றி குப்பன் யாகூ

ஆம் உயிரோடை பிடித்த படிமம்தான் :)

ரெளத்ரன் விசிட்டர் படத்தை முடிந்தால் பகிருங்கள். அந்த சிரிய இளைஞனும் அவனது தாயும் இன்னும் நினைவிலாடுகின்றனர்.


நன்றி toto :)

நன்றி சேகர்.

நன்றி யாழினி

நன்றி தமிழன்.

பகிர்வுக்கு நன்றி சீதா

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...