Tuesday, September 1, 2009

குறிஞ்சி

குறிஞ்சி ஹவுசிங் போர்டில் இருக்கிறாள். அவள் குறிஞ்சி மலரைப் போல இருக்கிறாளா? என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் குறிஞ்சி மலரைப் பார்த்ததில்லை. பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் பூவென்பது தெரியும். தினத் தந்தியில் இப்பூவின் படம் பார்த்திருக்கிறேன். மற்றபடி இவள் பெயருக்கும் மலருக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அழகான பெயர் இல்லையா!? உருவம், அழகு இதெல்லாம் நபருக்கு நபர் வேறுபடும். எனக்கு கருப்பு நிறப் பெண்களைப் பிடிக்கும் உங்களுக்குச் சிவப்பு நிறப் பெண்களைப் பிடிக்கலாம். எது அழகென்பது கூட தனிப்பட்ட ரசனையைப் பொறுத்ததுதான், ஆனால் ஒரு பெயர் அழகா இல்லயா என்பது பொதுவானதுதானே!? அய்யனார் என்பது உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு மோசமான பெயராகத்தான் இருக்க முடியும். ஆனால் குறிஞ்சி என்ற பெயர் அழகு என்பதை நம் இருவராலுமே மறுக்க முடியாது. இதுவரை சொல்ல வந்தது என்னவெனில் குறிஞ்சி என்கிற அழகான பெயரையுடைய பெண் ஹவுசிங் போர்டில் இருக்கிறாள்.

1. எந்த ஊர் ஹவுசிங் போர்ட்?
2. ஹவுசிங் போர்ட்க்கு தமிழ்ல என்ன?
3. குறிஞ்சிக்கு என்ன வயசு? எப்படி இருப்பா? அவள வச்சி நீ கத கித எதாச்சும் சொல்ல போறியா? குறிஞ்சிதான் இந்த கதைக்கு ஹீரோயினா? தயவுசெய்ஞ்சி இவ என் இத்தனாவது காதலிங்கிற உன் வழக்கமான ரீல இதிலயும் விடாதே.

திருவண்ணாமலை.
வீட்டு வசதி வாரியம்.
இருபத்தி இரண்டு . நல்லா இருப்பா. தெர்லயே. அதுவும் தெர்ல. ஹிஹிஹி!!.

”குறிஞ்சிக்கு அப்பவும் சரி இப்பவும் சரி என்னத் தெரியாது. தினம் சாயந்திரம் ஐந்தரை மணிக்கு அவள பாக்கிரதுக்காகவே கோரி மேட்டுத் தெருவில போய் நிப்பேன். அப்ப அந்த இடம் நல்ல மேடா இருந்தது.அதுனால சைக்கிள் ல வர்ர எல்லாரும் இறங்கி தள்ளிட்டுதான் வருவாங்க. நான் மேட்ல நின்னுட்டு பார்த்துட்டிருப்பேன். குறிஞ்சி அவளோட BSA SLR சைக்கிள தள்ளிட்டு வருவா. அந்த மேடு மேற்கு பார்த்தபடி இருக்கும். வெய்யில் சரியா முகத்தில அடிக்கும். புருவம் சுருக்கி, நெற்றில இருந்து கோடு மாதிரி இறங்குற வியர்வையோட என்ன கடந்து போவா. குறிஞ்சி பி எஸ்.சி பிசிக்ஸ் படிச்சிட்டு ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சரா வேல பாத்திட்டிருந்தா. நான் அவள காதலிச்சேன்.”

1.கோரிமேட்டு தெருவுல சிக்கன் கட ஒண்ணு இருந்ததா சாரு சொன்னாரே அந்த கட அப்பவும் இருந்ததா?
2.இடத்த குறிப்பிடுற நீ காலத்த ஏன் சொல்ல மாட்டேங்குற அதாவது அப்ப நீ இன்னா பண்ணிகிட்டு இருந்த?
3.இதுலயும் ஆரம்பிச்சிட்டியா கொடும. நீ எப்பதாண்டா காதலிக்காம இருந்த?

அப்ப அந்த கட இல்ல. சிலாகிக்கிற அளவுக்கு சுவையான கடைன்னும் எனக்கு படல. தொண்ணூத்தி மூணுல சிக்கன் கபாப் கடைகள்லாம் கிடையாது. அரசு மருத்துவமனைக்கு எதிர்க்க பீப் பிரியாணி, பீப் வறுவல் கடைங்கதான் இருந்தது.

நான் ஆண்கள் மேனிலைப் பள்ளில ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன்.

காதலிக்காமலாம் இருக்க முடியாது கண்ணு!. அப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு எங்காச்சும் ஒயரமான எடத்தில இருந்து குதிச்சி செத்து போலாம்.

”மேடு ஏறினதும் குறுக்கிடுற மணலூர் பேட்டை ரோடை த் தாண்டி ஏறி மிதிக்க ஆரம்பிப்பா. நானும் பின்னாலயே போவேன்.தாமரைக் குளம் தாண்டினதும் முதல் இறக்கம். தாமரை நகருக்குள்ள போய் இரண்டாவது வலது திருப்பத்துல அவ வீடு. இரண்டாவது வலது திரும்புற இடத்தில நான் நேரா போய்டுவேன். பத்தாவது காலாண்டுத் தேர்வுக்கு முன்னால ஷீலா அறிமுகமாகிற வரை இப்படித்தான் வந்துட்டிருந்தேன்.கிட்டதட்ட ஒண்ணர வருஷம். அதே இடம் அதே சைக்கிள் பின் தொடரல்னு இருந்தேன். ஷீலா நட்பு கிடைச்சதும் அதே ஐந்தரை மணிக்கு நான் அவளோட இருக்க வேண்டியதா இருந்தது. அதுனால குறிஞ்சிய பாக்கிறது கட் ஆச்சி. நான் பாக்க தம்மா தூண்டு இருந்ததால குறிஞ்சிக்கு என் மேல சந்தேகம் எதுவும் வந்திருக்காதுன்னுதான் நெனைக்கிறேன். சனி ஞாயிறுல சாயந்திர டைம்ல யாரோட டிவிஎஸ் 50 யாவது மாட்டும். அத எடுத்துட்டு குறிஞ்சி வீட்டுத் தெருவுக்கா போவேன். குறிஞ்சி வீட்டு முன்னால முல்லை பூக் கொடி ஒண்ணு இருக்கும். அந்த கொடிய அவங்க வீட்டு மாடில ஏத்தி விட்டிருப்பாங்க எங்க வீடு மாதிரியே. குறிஞ்சி பாவாட சட்ட போட்டுட்டு பூவ மாடிப்படிக்கட்டில இருந்து எட்டி எட்டி பறிச்சிட்டிருப்பா. அப்பலாம் எனக்குள்ள பூபூக்குற மாதிரி இருக்கும்.”

1. மணலூர் பேட்டை உஸ்மான் சித்தர் ஃப்ராடாமே உனக்கு தெரியுமா அவர?
2. தாமர குளத்தில நெறய தாமரை பூ இருக்குமா?
3. குறிஞ்சிக்கும் உனக்கும் எட்டு வயசு வித்தியாசம். ஷீலாக்கும் உனக்கும்? அதுவும் இல்லாம நீ காதல் ங்கிற வார்த்தய ரொம்ப தேய்க்கிற. பாக்கிற பொண்ணுங்க மேலலாம் வர்ரதுக்கு பேர் காதல் இல்ல. இந்த வார்த்தய பயன்படுத்த உனக்கு எந்த அருகதையும் இல்ல. தயவுசெஞ்சி இனிமே இந்த வார்த்தய பயன்படுத்தாத.

தெரில. எனக்கு இந்த மாதிரி சாமியாருங்க மேலலாம் நம்பிக்க இல்ல. நித்யானந்தம் என்னோட க்ளாஸ்மேட்தான் ஆனாலும் போய் பாக்கனும்னு கூட தோணினதில்ல.

அந்த குளத்தில பூவே இருக்காது. தாமர பூ ஒரு காலத்தில இருந்ததாம். நான் பொறக்கறதுக்கு முன்னாடி. இப்ப இல்ல. ஆனா அது ரொம்ப பெரிய குளம்.

ஷீலா என்ன விட 2 வயசு பெரியவ. சரியா படிக்க மாட்டா அதுனால 2 வருஷம் பெயிலாகி கேர்ல்ஸ் ஸ்கூல்ல பத்தாவது படிச்சிட்டு இருந்தா. என் ஏரியா பொண்ணுதான். ஆனா பேசினதில்ல. திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு வந்து எனக்கு கணக்கு சொல்லித் தர்ரியா ன்னு கேட்டா. அப்ப இருந்து தினம் சாய்ந்திரம் என் வீட்டு மாடில அவளுக்கு கணக்கு சொல்லித் தந்தேன். நீ யூகிக்கிற மாதிரி நான் முதன் முறையா முத்த மிட்ட பெண் அவதான். ஒரு நாள் சாயந்திரம் பபுள்கம் மென்னுட்டு இருந்தா நான் எனக்குன்னு கேட்டேன் இந்தா எடுத்துக்கன்னு நாக்குல பபுள்கம் வச்சி நீட்டினா. நான் எடுத்துகிட்டேன். காதல்னா புனிதம் அப்படிங்கிற உன் மிகைப்படுத்தல் புண்ணாக்குத் தனங்கள எப்படி உன் கிட்ட இருந்து துரத்தி அடிக்கிறதுன்னு எனக்குத் தெரில. நான் உன்னயும் காதலிக்கிறேன் அப்படிங்கிறது உனக்கு தெரியும்தான? நீ வாய்கிழிய சொல்ர இல்ல, ஒருத்தனதான் காதலிச்சேன் இனிமேலும் அப்படித்தான்னு, நீ சொல்லும்போதெல்லாம் உன்னோட போலித்தனம் பிரம்மாண்டமா முன்னால வந்து நிக்குது. நான் அடிச்சி சொல்ரேன் இந்த ஒலகத்துல எவனாளும் இல்ல எவளாலும் ஒருத்தனோட ஒருத்தியோட லாம் தன் காதல் உணர்வுகள நிறுத்திக்க அல்லது திருப்திபட்டுக்க முடியாது. அப்படி கிட்டேன், பட்டுட்டேனு சொல்ர உன்ன மாதிரி ஆளுங்கள விட போலிங்க யாருமில்லன்னுதான் தோணுது…

”குறிஞ்சிய காதலிச்சிட்டு இருக்கும்போதுதான் மோகமுள் படிச்சேன். என்ன விட எட்டு வயசு பெரிய பொண்ண காதலிக்கிறனேன்னு இருந்த சின்ன குற்ற உணர்வும் காணாம போய்டுச்சி. எப்பலாம் குறிஞ்சி நினைவு வருதோ அப்பலாம் மோகமுள் படிச்சேன். யமுனா குறிஞ்சி மாதிரியே இருக்கிறதா நெனச்சிகிட்டேன். தன்ன விட அதிக வயசு உள்ளவங்கமேல காதல் வயப்பட்டா தப்பா? அது ஏதாவது மன வியாதியா? இந்த சைக்காலஜிஸ்டுங்க எல்லா இயல்பான உணர்வுக்குமே வாய்ல நொழயாத பேர ஒண்ண வச்சிடுவாங்களே! இந்த உணர்வுக்கு அவங்க என்ன பேர் வச்சிருக்காங்களாம்?. அப்ப இதயம் னு ஒரு படம் வேற பார்த்தேன். ஹீரா இடத்தில குறிஞ்சி, காட்டன் சாரியோட மண் மீது நடக்க கூடாத பாதங்களோட, தினம் என் கனவில நடந்திட்டிருந்தா. சைட்ல ஷீலா வேற தினம் பபுள் கம் திங்க ஆரம்பிச்சா. நான் அப்ப ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்திருந்ததால உதட்டு முத்தத்துல எக்ஸ்பர்ட் ஆகி இருந்தேன்.”

1.சில டைம் என்ன நானே நொந்துக்குறேன்.உன்ன மாதிரி ஒரு ஜென்மத்தோடலாம் சவகாசம் வச்சிருக்கேன்னு
2.நீ சொல்ரதுலாம் சுத்தப் பொய் 2 வருஷம் முன்னால ஒரு நாள் நைட் நல்லா குடிச்சிட்டு எனக்கு போன் பண்ணி அழுத ”ஐ லாஸ்ட் மை விர்ஜினிட்டி”ன்னு இப்ப என்னடான்னா ஒம்பதாங்க்ளாஸ்லயே ஜேம்ஸ்பாண்ட் ஆனேன்னு கத வுட்ற.அடங்கு மவனே!.
3.வயசு அதிகமான பெண் மேல வர்ர ஈர்ப்புக்கு பேர் தெரில.ஒரு வேள ஆண்ட்டி போபியாவா இருக்குமா :)

நல்லா நொந்துக்கோ
முத்தம் கொடுத்தாலாம் விர்ஜினிட்டி போகுமா? என்னடி கொடும? ? ஒம்பதாங்க்ளாஸ் இல்ல பத்தாங்க்ளாஸ்.
நல்லா வைக்கிறடி பேர!.
சரி ரொம்ப வளவளன்னு போகுது இந்தா க்ளைமாக்ஸ்.....

போதும் நிறுத்து!! என்ன பெரிய க்ளைமாக்ஸ்?! அவளுக்கு கல்யாணமாகி இருக்கும். நீ உடனே வேற ஒரு பொண்ணு பின்னால சுத்த ஆரம்பிச்சிருப்ப. இல்லனா அந்த பொண்ணு ஆக்சிடன்ல செத்துட்டா, காதல் தோல்வில தற்கொல பண்ணிகிட்டான்னு ஏதாச்சிம் சோ கால்ட் ஷாக்கிங் ரீல் விடுவ. ஐ டோடலி ஹேட் யுவர் சோ கால்டு ரைட்டிங்!! ஓடிப்போஓஓஒ... வந்துட்டான் கத சொல்ரன்னு. கெட் லாஸ்ட்!!!

image :
Henri Rousseau's dream

18 comments:

மஞ்சூர் ராசா said...

அந்த அழகான குறிஞ்சி அப்புறம் என்ன ஆனா.....? ஆமா ஷீலாவுடனான பபிள்கம் காதல் என்ன ஆச்சி?

சும்மா ஒரு க்யூரியாசிட்டி தான் வேறெ ஒண்ணும் இல்லே...

மண்குதிரை said...

ithu pala matter sarithaan

oththukkireen

:-)

இளவட்டம் said...

நல்ல உரைநடை அய்யனார்.மெல்லிய நகைச்சுவை தொடர்ந்து கொண்டே வருகிறது.
//சைட்ல ஷீலா வேற தினம் பபுள் கம் திங்க ஆரம்பிச்சா//
ஹாஹாஹா....சரி நெஜமாவே நம்மள விட வயசு அதிகமான பொண்ண லவ் பண்ணலாமா?தப்பு இல்லியா?

குப்பன்.யாஹூ said...

அற்புதமான எழுத்து அய்யனார். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

என் பார்வையில் அய்யனார் என்ற பெயர் மீது எந்த கசப்பும் இல்லை, எனக்கு குறிஞ்சி காயத்ரி ப்ரியா போன்ற பெயர்கள் எந்த அளவு புடிக்குமோ அதே போல மாரியம்மாள், முத்துபேச்சி, கனகா வும் பிடிக்கும்.

என் வாசிப்பு விருப்பம் இது போன்ற கட்டுரைகள், பாதி கதைகள். முதல் mudivu இல்லாத கதைகள் போdhuம் எனக்கு. இதில தான் எழுதுபவரின் எழுத்து நடை ரசிக்க முடிகிறது என்னால்.

கதை ஆரம்பம் முடிவு என்று இருந்தால் கதையின் கருவில் தான் என் நாட்டம் சிந்தனை போகிறதே தவிர, எழுத்து நடை மீது போவது இல்லை.

இது ஒரு புறம் இருக்க, திருவண்ணாமலை பற்றி சிறப்பாக எழுதுகிறீர்கள், எனக்கும் படிக்க ஆசை. எனவே திருவண்ணாமலை, சுற்றி உள்ள பகுதிகள் (திண்டிவனம், வேலூர், vizupப்புரம், சிதம்பரம் பற்றியும் எழுதுங்கள். எத்தனை நாள் தான் நெல்லை, நாஞ்சில் பற்றி மட்டும் படிப்பது.
Morover dozens of people r here to write about Nellai, naanjil, karisal.

anujanya said...

புனைவுக்கு இந்த வடிவம் ரொம்ப பிடிச்சிருக்கு அய்ஸ். இழைந்து வரும் பகடியும்.

அனுஜன்யா

யாத்ரா said...

ரொம்பப் பிடித்திருக்கிறது. முழுதும் சிரித்துக் கொண்டே வாசித்தேன்.

2.நீ சொல்ரதுலாம் சுத்தப் பொய் 2 வருஷம் முன்னால ஒரு நாள் நைட் நல்லா குடிச்சிட்டு எனக்கு போன் பண்ணி அழுத ”ஐ லாஸ்ட் மை விர்ஜினிட்டி”ன்னு இப்ப என்னடான்னா ஒம்பதாங்க்ளாஸ்லயே ஜேம்ஸ்பாண்ட் ஆனேன்னு கத வுட்ற.அடங்கு மவனே!.

:)))

தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும் நடக்கட்டும்..

:)

Earn Staying Home said...

மிக நல்ல பதிவு

யாழினி said...

"குறிஞ்சி" Indha Malar Rasikumpadiya iruku...

Deepa said...

:-)) interesting

ரௌத்ரன் said...

//குறிஞ்சி பாவாட சட்ட போட்டுட்டு பூவ மாடிப்படிக்கட்டில இருந்து எட்டி எட்டி பறிச்சிட்டிருப்பா. அப்பலாம் எனக்குள்ள பூபூக்குற மாதிரி இருக்கும்.”//

அது சரி..ஏன் பூக்காது :)

//ஒம்பதாங்க்ளாஸ் இல்ல பத்தாங்க்ளாஸ்.// என்று குழப்பி விடுவதால் மறுபடி மேலே சென்று சரி பார்க்க வைக்கிறீர்கள்.

இடையிடையே கேள்விகளை எழுப்பி கதயாடலை சிதறடிக்கிறீர்கள்.கதயில் நிகழ்கால சம்பவங்களை சாரு துணையுடன் நுழைத்து கேள்வி எழுப்புகிறீர்கள்.ஒருவேளை இது பின்னவீனத்துவ பிரதியா இருக்குமோ என்று இருப்பவனை குழப்ப முயல்கிறீர்கள்,ஷீலாவிடம் பபுள்காம் வாங்கியதையெல்லாம் எழுதி சௌதியில் உபவாசம் இருக்கும் இருப்பவனை காண்டாக்குகிறீர்கள்,கடைசியில் கிளைமேக்ஸ் என்னவென்று கூறாமல் எஸ்கேப் ஆகிவிட்டீர்கள்...

கடவுளே..எப்டி இருந்த நான்.. :D

நல்லாருக்கு அய்யனார்..நேத்து எம்.ஜி.சுரேஷின் பின்னவீனத்துவம் என்றால் என்ன? படிச்சேன்.அதான் (அதுக்கே) இப்பிடி. :)

TKB காந்தி said...

நல்லா இருந்ததுங்க அய்யனார். சின்னதா சொல்லனும்னு தோணினது,

ஒரு வேள ஆண்ட்டி போபியாவா இருக்குமா// phobia - வெறுப்பு, philia - விருப்பு.

இங்க ’ஆண்டிஃபில்லிக்.’

கோபிநாத் said...

இந்த தம்மா தூண்டு தொல்லை தாங்க முடியல சாமீ ;)))))

MSK / Saravana said...

சான்ஸே இல்லை தல.. கலக்கல்..
இந்த எழுத்து வடிவம் நல்லா இருக்கு.

Ayyanar Viswanath said...

மஞ்சூர் ராசா
கத அவ்ளோதான் :)

என்ன பல மேட்டர் மண்குதிரை :)

தெரில இளவட்டம் தெரில

ராம்ஜி
வட தமிழ்நாடு குறித்தும் நிறைய கதைகள் எழுதப்பட்டிருக்கு ஆனா நீங்க சொல்ரா மாதிரி தென் தமிழ் கதைகள விட கம்மிதான். என்னால் முடிந்ததை செய்கிறேன் நன்றி

நன்றி அனுஜன்யா

நன்றி யாத்ரா :)

Ayyanar Viswanath said...

எத சொல்ரீங்க தமிழன் :)

earn staying home :( நன்றி

நன்றி யாழினி

நன்றி தீபா

விரிவான பகிர்வுக்கு நன்றி ரெளத்ரன்
சவுதி உபவாசமா :) பாவம்தான்.
அது சரி பின்நவீனத்துவம் என்றால் என்ன? :))

காந்தி அது சும்மா கிண்டலா எழுதபட்டதுதான் 'aunty'ய குறிப்பிட எழுதினேன்.உங்க குறிப்புகளுக்கு நன்றி

ஆமாம் கோபி தம்மாதூண்டுங்க எப்பவும் பிரச்சினதான் :)

நன்றி சரவணா

ச.முத்துவேல் said...

அய்யனார்,

மீண்டும் திருவண்ணாமலையை எழுதியிருக்கிறிர்கள். நன்றி.

மாற்று எழுத்துன்னு சொல்றாங்களே அது இதுதானா. ரொம்ப நல்லாயிருக்கு. சிலாகிக்க ,நிறைய விசயங்களக் குறிப்பிட்டு சொல்லவேண்டியதிருக்கு எனக்கு.

Anonymous said...

I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...