Thursday, May 7, 2009

நேர்காணல் : நாம் இதழ் - 2

9. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களை தவிர்த்து வலையுலக வாசிப்பில் உங்களை கவர்ந்த வலைதள எழுத்தாளர்களாக யாரை குறிப்பிடலாம்?
இன்றளவிலும் என்னை தனது மொழியால் தக்க வைத்துக் கொண்டிருப்பது சன்னாசியின் கரிசல் வலைத்தளமே.அவரின் சிடுக்குகள் நிறைந்த மொழியின் வீச்சு என்னால் கடந்துவிட முடியாததாய் இருக்கிறது. பெரும்பாலான வலைப்பூக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.பிடித்தமானவைகளின் பட்டியல்கள் அதிகம்.சிறுபத்திரிக்கைக்காரர்களான நாகர்ச்சுனன், வளர்மதி, ஜமாலன் போன்றோர்களைத் தவிர்த்து சித்தார்த், டிசே தமிழன், நிவேதா, பெயரிலி, ஜ்யோவ்ராம்சுந்தர்,பைத்தியக்காரன்,ஆடுமாடு, சுகுணாதிவாகர், தமிழ்நதி, மோகன்தாஸ், கதிர்,சுரேஷ்கண்ணன்,மதி கந்தசாமி, ஆசிப்மீரான், மணிகண்டன்,லேகா,நதியலை,கென் என நீளமானவை.

10. கடல் கடந்த பின்னரும் பணிச்சூழலை கடந்து வாசிப்பதற்கான எழுதுவதற்கான நேரத்தை பெற முடிவதன் காரணம் ?
சொந்த விருப்பம்தான்.ஏற்கனவே சொன்னது போல எனக்கான நிறைவு இத்தளமாய் இருக்கின்றது.

11. பொதுவாக கவிதைகள் குறித்தான உங்களின் பார்வை
கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து மாறிக்கொண்டும் வடிவத்தை அவ்வப்போது ஒழுங்கமைத்துக் கொண்டும் தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது.பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.துளிர் விடும் விதைகள் சூழல்களின் ஒத்திசைவில் செடியாகவோ மரமாகவோ தன் இருப்பை வடிவமைத்துக் கொள்கிறது.கவிதை ஒரு சொல்விளையாட்டோ அல்லது வெறும் அழகியல் வடிவமோ மட்டுமல்ல.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.

12. எல்லாம் எல்லோருக்கும் - இன்று எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எதை வாசிப்பது எதை விடுவது என்ற குழப்பநிலையில் இதன் வீச்சு எத்தகையதாக இருக்கும்?
இது ஒருவகையில் எல்லாருக்குமான எழுத்து முயற்சிகளுக்கான வாய்ப்பாய் இருக்கிறது.நம் பின்நவீனச் சூழலில் எழுத்தாளன் பிரதானப்படுத்தப்படுவதில்லை.எழுதி முடித்தவுடன் ஆசிரியன் இறந்து போகிறான்.வாசகன் மட்டுமே பிரதானமானவன்.வாசகனுக்கு ஒரு படைப்பை அணுக முழுச் சுதந்திரமிருக்கிறது.வாசகன் தன் இயல்பு நிலைக்கேற்ப படைப்பை புரிந்து கொள்ளும் சுதந்திரம் மிக முக்கியமானது. திணித்தல்களை தவிர்த்து எழுதப்படும் படைப்புகள் மட்டுமே இச்சூழலில் கொண்டாடப்படும்.எழுத்து வாசகனை முன்னிருத்துவதால் எழுதுபவனைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.சூழல்கள் உன்னதங்களை தீர்மாணித்துக் கொள்ளட்டும்.ஆக அதிக ஆசிரியனால் எப்போதும் மிகப் பரவலான வீச்சை உருவாக்கிவிடமுடியாது.வாசகன் மட்டுமே வீச்சினுக்கான காரணகர்த்தா.
13. உங்களின் வலைபதிவு எழுத்தால் இதுவரையில் கிடைத்தது என்ன?
தொடர்ச்சியான இடம்பெயர்தல்களில் நான் இழந்தது என் சமூக அடையாளம் மற்றும் ஒரு நிரந்தர முகவரி.யாரேனும் திடுமென்று உன் சொந்த ஊர் எதுவெனக் கேட்டால் சிறிது யோசித்து திருவண்ணாமலை என்கிறேன்.கடைசி 12 வருடங்களில் 6 மாதத்திற்கு மேல் எந்த சூழலிலும் தொடர்ச்சியாய் இருந்ததாய் நினைவில்லை(குறைந்த பட்சம் இருப்பிடங்களையாவது மாற்றிக் கொள்வதுண்டு)இந்த சிக்கலான நிகழிற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது. வலையெழுத வந்த பின் நிறைவு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று என்னை நிரப்பி இருக்கிறது.அடுத்த நகர்வுகளுக்கான அரிப்புகள் இல்லை.ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.மொத்தத்தில் எழுத்தென்பது ஆசுவாசமாய் இருக்கிறது.கிடைத்திருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்துகொண்ட புதிய மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.தோன்றும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது பெருகிக்கொண்டிருக்கும் நட்பு வட்டங்களினூடாய் என் அணுகுமுறைகளின் நம்பகத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன.பறவையின்சிறகைப்போல காற்றில் முகவரியற்று வரும் கடிதங்கள் என் மொக்கை கவிதையை மூன்று வரிகளில் பாராட்டிச் செல்கிறது. ஆச்சர்யங்களும் வியப்பும் மேலிட திருவிழாவில் வழி தப்பிய குழந்தையொன்றின் காலடித் தடம் பற்றி கடந்து கொண்டிருக்கிறேன் வலைப்பதிவையும் எனக்கான எழுத்தையும்.

கருத்தாடல்கள்,அரசியல் நுட்புலம்,சந்தேகித்தல்,கூர்மையான விமரிசனப் பார்வை குறித்தான புரிதல்கள் சற்று புலப்பட துவங்கியிருக்கின்றன.இசங்கள், சித்தாந்தங்கள், கொள்கைகள்,இயக்கங்கள் போன்றவைகளைப் பற்றிய விழிப்பும் பரவலான வாசிப்பின் சாரங்களை சுலபமாய் பெற்றுக்கொண்டபடியுமாய் கடந்துபோகின்றன நாட்கள்.

14. புனைவு படிமம் குறியீடு நவீன சொல்லாடல் போன்றவை தங்களுக்குள் எவ்விதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன? புரிதலுக்கு சிரமமான இந்தகைய வடிவங்களே தீவிர இலக்கிய எழுத்தாளர்டகளுக்கு பரந்த வாசகபரப்பை பெற்றுத்தரவில்லையா? காரணம் எஸ்ரா வை தெரிந்த பலர் சொல்லும் முதல் வார்த்தை உங்களின் கதவிலாசம் நன்றாக இருந்தது அது மாதிரி ஏன் அதிகம் எழுதுவதில்லை
குறியீடும் படிமமும் நவீனத்துவ சொல்லாடல்கள் மேலும் அதற்கான தேவைகளும் மலிந்து போய்விட்டன. தற்போதைய பின்நவீன சூழலின் சொல்லாடலே புனைவு.பிரதிகள் ஒற்றைத் தன்மையில் இல்லாமல் திணித்தல்கள் இல்லாமல் பன்முக வாசிப்பினுக்கான சாரங்களை உள்ளடக்கிய பிரதிகளே புனைவுகள்.காலம், இடம், கதை சொல்லும் முறை, கதை சொல்லி என எல்லா தளங்களிலும் துல்லியத்தை வேண்டி நிற்கின்றன.சரியான பயிற்சியும் விரிவான பார்வையுமிருத்தலே புனைவினுக்கான அடிப்படை தேவைகளாய் முன் நிற்கின்றன.ஒரு பிரதி பரந்துபட்ட வாசகர்களை சென்றடைவது நல்லதுதான் என்றாலும் நமது வெகுசன வாசகனைப் பொருத்தவரை அவனுக்கு எல்லாமே ஆயத்தமாக வேண்டும்.ஆயத்த ஆடை, ஆயத்த உணவு, அதே போல ஆயத்த இலக்கியம்.மேலோட்டமான வாசிப்பிலேயே அந்த பிரதி தனது சாராம்சங்களுடன் வாசகனின் மூளையில் ஏறிப் படுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையெனில் அந்த பிரதி புரியவில்லை என தட்டையாக நிராகரித்துவிடுகிறான்.மேலும் வெகு சனத்திற்கான அடிப்படை சிக்கல் அவன் திரும்ப திரும்ப ஒரே வட்டத்தில்தான் உழலுகிறான் மாற்றங்களை விரும்புவதில்லை.எனவேதான் அதைப்போல ஏன் எழுதவில்லை ரீதியிலான கேள்விகள் முளைத்தெழுகின்றன.வெகுசனத்தினை திருப்திபடுத்தும் அல்லது தனது மூன்றாந்தரங்களால் வெகுசனத்தை கட்டமைத்திருக்கும் போலித்தனங்கள் நமது சூழலை விட்டு ஒழியாத வரை இந்தச் சிக்கல் நீடித்திருக்கும்.

நாம் இதழுக்கு தங்களைபற்றிய முழுமையான செய்தியை கொடுக்க உங்களின் குறிப்புகளை தந்திடுங்கள்
எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாது கணங்களில் வாழும் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் என் இருப்பு தனக்கான முழுமைபெறல்களின் நீட்சியில் முதலில் கண்டெடுத்த வடிவம் கவிதை.அதன் கிளர்வில் மனம் பிழன்று கிறுக்கிக்கொண்டிருந்த என் நாட்குறிப்புகளனைத்தும் ஓர் நாள் சலிப்பு மிகுதியில் ஒளிந்துகொள்ள எங்காவது கொட்டிவிடத் தேக்கிவைத்த குப்பைகளனைத்தும் மிகுந்து, தேட ஆரம்பித்து, கண்டெடுத்தது வலைப்பூக்களை.முழுமைக்கான அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்கான தொடர்ச்சியான இடப்பெயர்வுகளில் தற்போதைய இருப்பு வலை எழுத்து மட்டுமே.நிழலின் குளுமையில் தணிந்துபோன வெம்மைகளில் நேசத்திற்கான கரங்கள் நீண்டு சேர்த்துக்கொண்டன நட்பென நாடிவந்த இதயங்களனைத்தையும்.அந்த நட்பே என்னை உங்களோடு நாம் இதழில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.எதிர்பார்ப்புகளற்ற நட்புகளுக்கு வெறும் நன்றியினை மட்டும் தெரிவித்துக் கொள்வது எத்தனை சுயநலமானது!.

21 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். சொல்லும் விஷயத்தின் அடர்த்தியை உங்கள் மொழி கூட்டிவிடுகிறது.

பதில்களும் அப்படித்தான் :)

Venkatesh Kumaravel said...

அய்யனார் என்ற பெயர் வலையுலகில் ரொம்ப பிரபலம், இப்போது தான் வலைப்பூ தொடங்கினேன் என்பதால் முதல் முறை இங்கு வருகிறேன். மிகத் தெளிவான கேள்வி பதில். பிரமிக்கத்தக்க மொழிநடை உங்களுடையது. ஜ்யோவ்ராம் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

anujanya said...

அய்ஸ் & ஜ்யோவ் - இங்கேயும் 'முதுகு சொரிதல்' தானா? :)

Jokes apart, பொருத்தமான, கச்சிதமான கேள்விகளுக்கு அபாரமான பதில்கள். மொழி..மொழி. அது ஏன் என்கிட்டே மட்டும் சிக்க மாட்டேங்குது?

//ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.//

பரவசத்தை எப்போதாவது அனுபவத்திருந்தாலும், அபத்த உணர்வை தினந்தோறும் அனுபவிக்கிறேன்.

கவிதை என்பது என்ன என்று சொல்லியிருப்பதும் அழகு. கவிதை 'மொழியின் கொதிநிலை' என்று சொன்ன பெருந்தேவியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

வாசகனாயிருப்பது தான் எவ்வளவு சொகுசான விடயம்!

அனுஜன்யா

புது வார்ப்புரு நல்லா இருக்கு. நா மாத்தினா, உடனே நீங்களும் செய்யணுமா. துதி செய்வதிலும் ஒரு எல்லை இருத்தல் அவசியம் - உங்க புகைப் படத்தில் கடலுக்கு ஒரு எல்லை இருப்பது போல் :)

Ayyanar Viswanath said...

நன்றி சுந்தர்

நன்றி வெங்கிராஜா

அனுஜன்யா நன்றி
இந்த புதிய வடிவம் சரவணக்குமார் தந்தது

காமராஜ் said...

ரொம்ப நல்லாயிருக்கு அய்யணார்.
நாம் இதழ் எங்கு கிடைக்கும்.

திருவண்ணாமலைக்கு பல
சிறப்புகள் கிடந்தபோதும்,
அதன் பெயரை உசரிக்கும்போதேல்லாம்
தலையை ஒரு பக்கம் சாய்த்துக்கொண்டு
எல்லோரையும் சுண்டியிழுக்கும் இசைத்தோழன்
சுகந்தன் நினைவுக்கு வந்துபோகிறான்.

MSK / Saravana said...

பதினோராம் கேள்வி... எனக்கான பதில்.. :)

//துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம்//
//தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம்.//
இது எனக்கான பதில்களை தந்தாலும்

//பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.//
இது மிகுந்த பயத்தை தருகிறது..

//ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.//
உங்களுக்கும் அப்படிதானா..!!

சென்ஷி said...

இங்க ஏதாச்சும் எழுதிட்டு போகணுமேங்கற கட்டாயத்துல நான் பின்னூட்டிட்டு போறேன் :-))

மத்தத நான் போன்ல பேசிக்கறேன்!

குப்பன்.யாஹூ said...

மிக அருமை, சுவையான பதிவு அய்யனார்.

உண்மையிலேயே வாசித்தல் எழுதுதல் சார்ந்த ஆர்வம் (ஆசை) உடையவர்களுக்கு வலைபதிவு ஒரு மிக சிறந்த வடிகால். இதை கண்டு பிடித்தவரை நாம் தலைமுறை தலைமுறையாக வணங்கலாம்.

13 ஆம் கேள்விக்கு சரியான பதில் அளித்து உள்ளீர்கள்.

அந்த கேள்விக்கு எனது பதில், நிஜ வாழ்க்கையில் சோகம், வருத்தம், அயர்ச்சி இருக்கும் பொது எனக்கு கிடைக்கும் ஊக்க மருந்துகள், ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சிட்டர்த், லேகா, காயத்ரி, சன்னாசி, மாதவராஜ், டோண்டு மற்றும் பலரின் எழுத்துகள்.

ஜ்யோவ்ராமின் பின்னூட்டமும் அருமை.

நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

Karthikeyan G said...

//
சித்தார்த், டிசே தமிழன், நிவேதா, பெயரிலி, ஜ்யோவ்ராம்சுந்தர்,பைத்தியக்காரன்,ஆடுமாடு, சுகுணாதிவாகர், தமிழ்நதி, மோகன்தாஸ், கதிர்,சுரேஷ்கண்ணன்,மதி கந்தசாமி, ஆசிப்மீரான், மணிகண்டன்,லேகா,நதியலை,கென்
//

தொடர்ச்சியாய் வலையுலகில் இருக்கிறீர்கள், புதியவர்களையும் தேடி படிக்கலாம். இந்த நல்ல சந்தர்பத்தில் சொல்லி புதிய படைப்பாளிகளுக்கு பெரும் ஊக்கம் தந்திருக்கலாம்.


Missed a good chance. :(

எம்.எம்.அப்துல்லா said...

அய்யனார் அண்ணே, நீங்கள் இதுவரை வலையில் எழுதிய அனைத்தையும் படித்துவிட்டேன். என்னைபோல் ஒரு மொக்கச்சாமி பின்னூட்டி உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒருமுறைகூட பின்னூட்டம் இட்டதில்லை. இன்று ஏனோ தெரியவில்லை பின்னூட்டமிடத் தோன்றுகின்றது.

MSK / Saravana said...

//எம்.எம்.அப்துல்லா said...
என்னைபோல் ஒரு மொக்கச்சாமி பின்னூட்டி உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒருமுறைகூட பின்னூட்டம் இட்டதில்லை.//

அப்துல்லா அண்ணா.. நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.. இப்படி நீங்கள் சொல்வதை, இதுவரை மூன்று இடங்களில் கண்டிருக்கிறேன்.. இதெல்லாம் ஓவரு..
எல்லாரும் இங்க எழுத வந்திருக்கிறோம்.. எழுதுவோம்..

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அண்ணா.. நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.. இப்படி நீங்கள் சொல்வதை, இதுவரை மூன்று இடங்களில் கண்டிருக்கிறேன்.. இதெல்லாம் ஓவரு..
எல்லாரும் இங்க எழுத வந்திருக்கிறோம்.. எழுதுவோம்..

//


சரவணா அந்த மூன்றில் உன் இடமும் ஒன்று. எல்லாரும் எழுததான் வந்து இருக்கோம்.ஆனாலும் என் மேல் விழுந்த நிழல் என்னால் உங்கள் மூவர் மேலும் விழுவது தவறில்லையா??

:)

☀நான் ஆதவன்☀ said...

வந்தேன்... படித்தேன் அய்யனார். பாராட்டுவதற்கோ கருத்து சொல்வதற்கோ எனக்கு எந்த தகுதியும் எனக்கிருப்பதாக தெரியவில்லை.

Ayyanar Viswanath said...

காமராஜ் இந்த இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது தமிழ்நாட்டில் கிடைக்கும் இடங்களை விசாரித்து மடலிடுகிறேன்.

சரவணக்குமார் கவிதை பற்றிய அந்த தடாலடி ஏதோ ஒரு எரிச்சல்ல எழுதப்பட்டதா இருக்கலாம் இப்ப படிச்சா திக் எனக்கும் வருது :)

நன்றி சென்ஷி

நன்றி குப்பன் யாகூ

Ayyanar Viswanath said...

கார்த்திகேயன்
தவறுதான்.இன்னொரு சந்தர்ப்பத்தில் நிச்சயமாய் பகிர்ந்து கொள்கிறேன்.நினைவூட்டலுக்கு நன்றி.

அப்துல்லா
சரவணக்குமார் சொன்னதுக்கு ரிப்பீட்டே போட்டுக்குரேன்.எழுத்து புரிதல் எல்லாவற்றையும் விட நட்பு பிரதானமானதுன்னுதான் நான் நம்பிட்டு இருக்கேன்.எனக்கு தெரிஞ்சத நானும் உங்களுக்கு தெரிஞ்சத நீங்களும் இங்க கொட்டிட்டு இருக்கோம் இதுல ஏன் பாகுபாடு.இனிமே எத எழுதினாலும் ஒழுங்கா வந்து பின்னூட்டம் போடுங்க :)

நான் ஆதவன் மேல சொன்னது உங்களுக்கும்தான் :)

கோபிநாத் said...

அய்ஸ் பதிவை படிச்சிட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல நா தழுதழுக்கிறது...கண்கள் பணிக்கிறது..அவ்வ்வ்வ்வ் ;-))

\\நிழலின் குளுமையில் தணிந்துபோன வெம்மைகளில் நேசத்திற்கான கரங்கள் நீண்டு சேர்த்துக்கொண்டன நட்பென நாடிவந்த இதயங்களனைத்தையும்.அந்த நட்பே என்னை உங்களோடு நாம் இதழில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.எதிர்பார்ப்புகளற்ற நட்புகளுக்கு வெறும் நன்றியினை மட்டும் தெரிவித்துக் கொள்வது எத்தனை சுயநலமானது!. \\

ரைட்டு..

அப்புறம் புது வடிவம் நல்லாயிருக்கு அய்ஸ் ;)

தமிழன்-கறுப்பி... said...

மொழி உங்களிடம் வசப்படுகிறது அய்யனார், அழகா பதில் சொல்லுறதென்றது இதானா...?

\\
பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு
\\

பதினோராவது கேள்விக்கான
பதில் பிடித்திருக்கிறது !

ஆனா பயமுறுத்துது..!

KARTHIK said...

//உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். சொல்லும் விஷயத்தின் அடர்த்தியை உங்கள் மொழி கூட்டிவிடுகிறது.

பதில்களும் அப்படித்தான் :)//

இதை நான் வழிமொகிறேன்.

அருமையான கேள்விகள் கேட்ட நண்பர் நாம் பாண்டிதுரைக்கு வாழ்துக்கள்.

Unknown said...

நல்ல கேள்விகள். சிறந்த பதில்கள்.

//மேலோட்டமான வாசிப்பிலேயே அந்த பிரதி தனது சாராம்சங்களுடன் வாசகனின் மூளையில் ஏறிப் படுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையெனில் அந்த பிரதி புரியவில்லை என தட்டையாக நிராகரித்துவிடுகிறான்//
முயற்சி செய்தாலும் புரியாததை புரியவில்லை ன்னு சொன்னா தப்பா?
பண்டம் லேது.

எங்களை மாதிரி ஆளுங்களுக்காகவே தட்டி அடைச்சு வேலி போட்டுட்டீங்களா.

மொழி என்பதே சுலபமாக விளங்குவதற்கும் விளக்குவதற்கும் எனும் போது, கடின மொழி நடை அவசியமா என்று என்னுள் வரும் கேள்விக்கென்ன பதில்?

ச.முத்துவேல் said...

அய்யனார்,
பெருமிதமாவும், சந்தோசமாவுமிருக்கு.உங்கப் படைப்புகள்மூலமா உங்களை முழுசா உள்வாங்கிக்கிற அளவுக்கு நான் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ளாத நிலையில், உங்களின் வெற்றிகளையும், பரவலான வரவேற்பையும் வைத்தே அண்மை நாட்களில் உங்களை அறிந்தவன் நான்.ஆனால், இப்பேட்டியின் மூலம் நானே சுயமாக உங்களின் ஆற்றலை உணர்ந்துகொள்ள முடிந்தது.

நல்ல நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். ஏனோ, எனக்கு இலக்கியவாதிகளின் நேர்காணல்கள் என்கிற வடிவம்
மிகவும் பயனுள்ளதாய் தெரிகிறது.

யாத்ரா said...

அழகான மொழியில் தங்கள் எண்ணங்களை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...