Saturday, April 18, 2009

7.மலை நதிச்சுழல் ; வ.வெ.தொ.அ.வெ.கு


”என்னோட பால்யம் முழுக்க மலைகளோடதான் சுத்திட்டிருந்தேன்.மலைகளும் காடுகளும் தான் என்னோட முதல் இருபது வருசத்தை நிறைச்சிருக்கு. அதனாலதானோ என்னமோ எப்பவுமே மிருக நினைவுகளை சுமந்துட்டு அலைஞ்சிட்டிருக்கேன்.ஒழுங்குகளுக்கு கட்டுப்படாத, பழக்கத்துக்கு/பயிற்சிக்கு அடிமையாகுற ஒரு விலங்குதான் நான்னு நெனச்சுப்பேன்.எப்பவாச்சிம் எனக்கே எனக்குன்னு சில நாட்கள் கெடைச்சா ஏதாவது ஒரு மலைப் பிரதேசத்துக்கு ஓடிப்போய்டனும்னு தோணும். ஆனா எனக்கே எனக்குன்னு ஒரு நொடி கூட இப்பலாம் கெடைக்கிறதே இல்ல.அப்படி கெடைக்கிற நொடிகள் கூட எனக்கானதுதானான்னு ஒரு சந்தேகம் எப்பவும் இருந்திட்டே இருக்கு்...இவ இன்னிக்கு சொல்ரா ”உனக்குன்னு பிற எதுவுமே இருக்க முடியாது உனக்குன்னு உனக்கு தான் இருக்கமுடியும்”னு...இது தேய்ஞ்ச வார்தைதான் என்னோட இருன்னு நான் அவகிட்ட கேட்டதுக்கு அவ அடிச்ச டைலாக் இது.கொஞ்சம் சிரிப்பு வந்தது.யாரையும் நம்பாதேன்னு வேர ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிரா என்ன கொடும ஏற்கனவே வெறும் அவநம்பிக்கைகளை மட்டும்தான் வச்சிட்டிருக்கேன் இதுல இவ சங்காத்தம் வேற.சமயத்தில எல்லாம் வெறுக்குது.இப்படி வெறுக்குதுன்னு எழுதுறது கூட வெறுக்குது.ஓஷோவும் எங்க அண்ணனும் சொல்றாங்க "போர்டம் ஈஸ் குட்" ஆம்!!.அவங்களுக்கு எல்லாமே குட் தான். சலிக்கிறவனுக்கு இல்ல தெரியும்.சலிக்கிறதோட இல்லாம வெறுக்கிறவனுக்கு இல்ல தெரியும். போர்டம் மோட கஷ்டம் என்னான்னு..”

”என் வட்டத்துல வாழ்க்கைல இருக்க வந்துட்ட மனிதர்கள் மேல எனக்கு எந்த கம்ப்ளைய்ண்ட்ஸ்ம் இல்ல. நெஜமாவே என்னால என் நண்பர்கள்கிட்டயோ, எதிரிகள்கிட்டயோ, நண்பிகள்கிட்டயோ, காதலிகள்கிட்டயோ குறைகளலாம் ஒக்காந்து கண்டுபிடிச்சிட்டு இருக்க முடியாது...ஏதாவது பிரச்சினனா ஒடனே கத்தி தீர்த்துடுறது... இல்லனா பேசி கரெக்ட் பண்ணிக்கிறதுதான் என் வழக்கம். ஆனா பாருங்க என் மேல எல்லாருக்கும் அப்படி ஒரு கோவம்!.ஏன் என்கிட்ட இவ்ளோ எதிர்பாக்கிராங்கன்னு தெரில.நான் அவங்க கிட்ட இருந்து ஒண்ணுமே எதிர்பாக்கிரது இல்லயே.என் காதலி தொடர்ச்சியா ஆறு மாசம் பேசல அப்புறமா வந்து ”எப்படி இருக்கடா”ன்னு கேட்டா நானும் அதே உணர்வுகளோடதான் திரும்ப பேசினேன்.சுயநலம்,அன்பு,பயன்படுத்துதல் இதலாம் சரியா புரிஞ்சிட்டா இந்த மாதிரி அடுத்தவங்கள குற சொல்றது குறையும்னுதான் தோணுது.”நீ என்கிட்ட நடிக்கிறியா ஒனக்கு நெஜமாவே என் மேல கோவம் இல்லையா?”ன்னு கேட்டா.இல்லன்னுதான் சொன்னேன்.நம்ம அன்புங்கிற பேர்ல நம்மோட ஈகோவுக்குதான் தீனி போட்டு வளர்க்கிறோம்.அடுத்தவன் தன்ன மதிக்கிறான் அப்படிங்கிறதே நம்மோட குரூரமான ஈகோ தான்.எனக்கு ஏதாவது ஒரு பாறை மேல ஏறி நின்னு கத்தனும்போல இருக்கு.. ”உறவுகள சரியா புரிஞ்சிக்கோங்க” ”வாழ்க்கைய சரியா அணுகுங்க” ”போலித்தனங்கள களைய பாருங்க” ”முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருக்க பாருங்க” ”எப்பவுமே நடிக்காதீங்க” ”நீங்க எதுலாம் பெரிசுன்னு நெனக்கிறீங்களோ அதுலாம் இந்த ஒலகத்துக்கு முன்னாடி ரொம்ப தூசுங்கோஓஓஓஓஓஓஒ.”

”இந்த நவீன வாழ்வு எவ்ளோ குரூரமா இருக்கு தெரியுமா?.தெரிஞ்சே தப்பு பண்றதுன்னு சொல்வாங்களே..கான்சியஸா கொல பன்றது...ரொம்ப தெளிவா அடுத்தவன நசுக்குறது ..திருட்டு, வன்மம், காழ்ப்பு, பொறாமை, எரிச்சல், காண்டு ன்னு இந்த வாழ்வு ரொம்ப குரூரமா இருக்கு...சில டைம் என்ன பண்ணலாம்னு யோசிக்க யோசிக்க குழப்பமா ஆகுது...எதையாச்சும் பண்ணனும்.இவ்ளோ நாள் பண்ணதலாம் ”சடார்” னு தூக்கி தூர கடாசிட்டு வேற எதாச்சும் புதுசா பண்ணலாமா? சின்ன வயசுல எனக்கு நாட்கள் லாம் ஏன் பின்நோக்கி நகர்ரதில்லன்னு தோணும். துங்கி எந்திரிச்ச உடனே நாளைக்கு பதிலா நேத்து நமக்கு கெடச்சா எவ்ளோ நல்லாருக்கும்!!.நேத்திக்கு பண்ண தப்பையெல்லாம் நாளையான இன்னிக்கு சரி பண்ணிக்கலாம்.அப்புறம் நேத்திக்கும் எப்பவும் சரியாவே இருக்கும்.எனக்கு அப்பலாம் எல்லாத்துலயும் ரொம்ப சரியா இருக்கனும் இல்லனா பயங்கர குற்ற உணர்வா இருக்கும்.. தப்பே இல்லாத விசயத்தலாம் நானா கற்பன பண்ணிட்டு பெரிய தப்பு பண்ணிட்டாமாதிரி கெடந்து துடிப்பேன்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்வுகளலாம் தூக்கி போட ஆரம்பிச்சேன்.தெளிவா தப்பு பண்ண ஆரம்பிச்சேன்.

கன/கரு தேகத்தில் கருநிற மை கொண்டு எழுதுவது சரியாய் தெரியாது. பாஸ்பரஸ் தேகத்தினுக்கே கருநிற மை.கருநிற உடலுக்கு நீல மைதான்.நீல மை.நீல மைக்குச்சி. அல்லது நீல மையிட்ட எழுதுகோல்.வெற்றுடலின் எப்பகுதியில் இருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்.நீள வாக்கில், குறுக்குவெட்டில்,வட்டம் வட்டமாய், உடலின் வடிவினுக்கேற்ப எழுத தொடங்கலாம்.சந்தியாவின் கன/ரு த்த தேகத்தில் ஓர் இரவு முழுவதும் நீல நிற மையினால் எழுதிக்கொண்டிருந்தேன்.முதுகில் இணுக்கி இணுக்கி ஒன்பது கவிதைகள் எழுதினேன்.பாஸ்பரஸ் தேகத்தவள் போல் இவள் நெளியவோ, கூச்சத்தில் கத்தவோ, சிலிர்க்கவோ இல்லை.அசையாது அமர்ந்திருந்தாள்.நானும் மிக நிதானமாய் எழுதினேன்.சந்தியாவை விட நான் குறைவாகவே குடித்திருந்தேன்.ஆனாலும் ஒவ்வொரு கவிதையை முடிக்கையிலும் நிதானமிழந்தேன்.அவள் என்னை விட இரு மடங்கு குடித்திருந்தாள் எப்போதும் நிதானம் தவறாதிருந்தாள்.முலைகளில் வட்டமாய் என் பெயர் எழுதினேன் .. ”சராசரி இந்திய ஆண் மனோபாவம்” என என் காதில் வழக்கமாய் கத்துகிறவள் கத்தினாள்.'ஆம் ஆண் மனோபாவம்தான்' என முணுமுணுத்தபடி இன்னொன்றிலும் எழுதினேன்.அவள் சிரித்தாள். ”என்ன மொழி இது என்றாள்?.எனக்கு 'திக்' என்றது ”அடிப்பாவி இது தமிழ்” என்றேன்.அவள் 'எனக்கு தமிழ் படிக்க தெரியாது' என்றாள்.”ஆங்கிலத்தில் எழுது அல்லது இந்தியில் எழுது” என்றாள்.நான் அந்த ஒன்பது கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முன் பக்கம் எழுதத் துவங்கினேன்.

நெடிய வறண்ட கொடும் பாலையில் பயணிக்கையில் நதியில் மூழ்கி மரணிப்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.நதியில் மூழ்கி மரணிக்க வாய்ப்பு கிடைக்குமெனில் நான் நதிச்சுழலில் சிக்கி உயிர் தொலைய விரும்புகிறேன். சுழல்,நதிச்சுழல்.கடல் அலைச்சுழல்களைப் போலிருக்காது. நதிச்சுழல். ஆம்!! நதிச்சுழல்.அமைதியாய்,வசீகரமாய், சத்தமில்லாது,கிறுகிறுக்க வைக்கும் நதிச்சுழல்.கரையிலிருந்து நதி பார்க்கையில் நான் சுழலில் மய்யம் கொள்வேன். குழிவாய்,வளைவாய்,வேகமாய்,பயமாய்,அழகாய் நதிச்சுழல். சுழலில் சிக்குறும் உடலை கற்பனை செய்ய பயமாகவும் ஆசையாகவுமிருக்கிறது. சுழலில் சிக்கும் உடல்.குழலில் சிக்கும் உடலைப் போலிருக்குமா?குழலில் சிக்கியிருக்கிறதா உடல்?.நான் சிக்கி இருக்கிறேன்.குழலில்.கார்குழலில்.கருநீளக் கூந்தலில் சிக்குண்டிருக்கிறேன்.ஓர் பிற்பகலில் அவள் தன் தொடை தொடும் நீள்முடி கொண்டு என் கழுத்தினை இறுக்கினாள்.என்னுடலை செவ்வகத் துண்டுகளாக்கி அவள் கூந்தலிழைகளின் இடைவெளியில் புதைத்தும்,விடுவித்துமாய் விளையாடினாள்.எனக்கு மூச்சு முட்டியது. அவளின் விளையாட்டிலிருந்து விடுபட முடியாமல் போராடித் துவண்டு மயங்கினேன்.இதழ் ஈரம் கொண்டு அவள் என்னை உயிர்ப்பித்திருக்க வேண்டும்.ஆனால் இந்நதிச்சுழல் மீளமுடியாதது.துவண்டால் மீண்டும் உயிர்த்தெழ முடியாதது.நதிச்சுழலே கடைசி. நதிச்சுழலே சகலத்தின் முடிவு.நதிச்சுழலே டெஸ்டினி.சுழலே எக்ஸ்டசி.சுழல்,சுழல் எல்லாம் கிறுகிறுக்க சுழல்.வான் பூமி எல்லாம் ஒன்றாக்குகும் சுழல்.பிரபஞ்சத்தை என்னை சகலத்தையும் ஒரே புள்ளியில் குவிக்கும் சுழல்.நதிச்சுழல்.

( ..... சி.மணிக்கு)

14 comments:

Anonymous said...

உங்கள் எழுத்து பித்த நிலையின் தெறிப்பாக இருக்கிறது.எப்படி பட்ட மன நிலை யில் இதை எழுதி இருப்பீர்கள் என நினைக்கும்போது நீங்கள் சொல்லியிருப்பது போல பயமும் ஆசையும் ஒருமித்து வருகிறது

- unknown

குப்பன்.யாஹூ said...

அருமை அய்யனார், நல்ல எழுத்து, பால்ய வயதை கிராமத்தில் கழித்த எனக்கு புரிகிறது உங்களின் உணர்வுகள்.

ஆமாம், நாம் நமக்கு என்று பொழுதே ஒடுக்க முடிய வில்லை, பணத்தின் வலையில் சிக்கி கொண்டு தவிக்கும் மீன்களை நாம் இருக்கிறோம்.

அமீரகம் வந்தால் உங்களை சந்திக்க விருப்பம்,

குப்பன்_யாஹூ

ஆயில்யன் said...

//சுயநலம்,அன்பு,பயன்படுத்துதல் இதலாம் சரியா புரிஞ்சிட்டா இந்த மாதிரி அடுத்தவங்கள குற சொல்றது குறையும்னுதான் தோணுது.”நீ என்கிட்ட நடிக்கிறியா ஒனக்கு நெஜமாவே என் மேல கோவம் இல்லையா?”ன்னு கேட்டா.இல்லன்னுதான் சொன்னேன்.நம்ம அன்புங்கிற பேர்ல நம்மோட ஈகோவுக்குதான் தீனி போட்டு வளர்க்கிறோம்.அடுத்தவன் தன்ன மதிக்கிறான் அப்படிங்கிறதே நம்மோட குரூரமான ஈகோ தான்.எனக்கு ஏதாவது ஒரு பாறை மேல ஏறி நின்னு கத்தனும்போல இருக்கு.. ”உறவுகள சரியா புரிஞ்சிக்கோங்க” ”வாழ்க்கைய சரியா அணுகுங்க” ”போலித்தனங்கள களைய பாருங்க” ”முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருக்க பாருங்க” ”எப்பவுமே நடிக்காதீங்க” ”நீங்க எதுலாம் பெரிசுன்னு நெனக்கிறீங்களோ அதுலாம் இந்த ஒலகத்துக்கு முன்னாடி ரொம்ப தூசுங்கோஓஓஓஓஓஓஒ.”//


தொடர்ச்சியாய் வந்து விழுந்த வரிகள் வாழ்க்கை நன்மை அளிக்கும் விதமாய் நமக்கும் மற்றவர்களுக்குமாக நாம் தொடர்ந்து போக வேண்டிய வரிகள்!

அருமை !

Unknown said...

உரையாடிலினியை நீங்கி சந்தியாவிடம் சரணடைந்துவிட்டாயா? பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது. நீ மலையிலிருந்து வீழ்ந்தாலும், மண்ணில் உருண்டாலும் கானல்நதி உன்னை நனைக்காமல் போய்விட்டதே. உனக்குத் தெரியுமா நதி வெம்மையானது, நதி நிகரற்றது, நதி உன்னை தூக்கி சுழற்றியது, நதியினுன்று மீண்டு வர உனக்கு ஆசை, ஆவேசம், நதியில் மூழ்காமல் அது சாத்தியப்படாது எனத் தெரியும் உனக்கு. உன்னை மூழ்கடிக்கக்காத நதியிடம் நீ விரும்பிக் கேட்பது யாது? நதியை கையில் அடக்கமுடியாது. நதியென்றும் நதி, நாம் என்றும் நாம், அப்படித்தானே அய்யனார்?

குப்பன்.யாஹூ said...

நேத்தும் இன்னிக்குமா உக்காந்து (ஆறு மணி நேரம்) உங்களின் அத்தனை பதிவுகளும் (ஏறக்குறைய முன்னூறு) படித்து ரசித்தேன்.

குப்பன்_யாஹூ

கோபிநாத் said...

அடங்கொக்காமக்கா... அடங்க மாட்டிங்களா!!!?? ;)))

சென்ஷி said...

அன்பின் அய்யனார், சில சமயத்துல உன்னோட பதிவுல பின்னூட்டத்தை படிக்க மாத்திரம் வந்துட்டு போற என்னை மாதிரி எளகிய வாதிகளையும் உமாஷக்தி, குப்பன் யாஹூ ஆகியோருடைய பின்னூட்டம் கதிகலங்க வைக்கிறது. அவங்க உன் பதிவு படிச்சதும் இதை எழுதணும்னு நினைச்சாங்களா இல்லை உன் பதிவை பார்த்ததுமே டைப் அடிக்க ஆரம்பிச்சாங்களான்னு யோசிக்கும்போது தலை இன்னும் வேகமா கிர்ர்ரடிக்குது. குப்பன் யாஹூ உங்களோட ஏறக்குறைய 300 பதிவு படிச்சப்புறம் இப்ப எந்த நிலையில இருக்காருன்னு தெரிஞ்சுக்க விருப்பம். (எல்லாப்பதிவையும் பக்கத்துல எண்ணிப்பார்த்தப்ப 223தான் இருந்துச்சுன்னு சொல்லிக்க விரும்பறேன்).

//உன்னை மூழ்கடிக்கக்காத நதியிடம் நீ விரும்பிக் கேட்பது யாது? நதியை கையில் அடக்கமுடியாது. நதியென்றும் நதி, நாம் என்றும் நாம், அப்படித்தானே அய்யனார்?//

ஆறெல்லாம் வத்திப்போயிட்டு இருக்கற சமயத்துல நனைக்கல, காயலன்னு யோசிக்கக்கூடாது. அதுக்கு அர்த்தம் ஆத்துல தண்ணியில்லை. அம்புட்டுத்தேன் :-)

இந்த ஒரு பின்னூட்டத்துக்கே குசும்பன்கிட்டேர்ந்து பயங்கரமா எதிர்வினை பதிவு வந்துடும் போலருக்குதே :-)

குப்பன்.யாஹூ said...

அய்யனாரின் மூன்று வருட பதிவுகளை ஒரு இருத்தலில் படித்தும் , சலிப்பே வர வில்லை.

முதல் பதிவான மனம் பிறழிய உளறல், அப்புறம் கவிதைகள், வேறு மொழி திரைப்படங்கள், விடுமுறை நாட்களை புத்தகம், குரும்டகடு மூலம் அவர் கழித்த நாட்கள் என எல்லாமே படிப்பதற்கு இனிப்பாக இருந்தது.

அய்யனாரும் சிதார்த்தும் இனைந்து இருந்த நாட்களை கற்பனை செய்து பார்க்கிறேன். நானும் கூட அருகில் இல்லையே என்ற ஏக்கம் பெருமளவில் உள்ளது. என் பார்வையில் கமல் பாலு மஹேந்திர, மணிரத்தினம் இளையராஜா, சங்கர் ரஹ்மான், கவிதாயினி தாமரை கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர் ஞாபகம் வருகிறது

பல நாட்களுக்கு முன்னாலேயே அய்யனார் தீர்க்கமாக சொல்லி இருக்கிறார், வலைபதிவு விருதுகள், ஒப்பீடுகள் , வரிசை படுத்துதலக்ல் வேண்டாம் என்று. எவ்வளவு உண்மை அது. மிக சமீபத்தில் தமிழ்மணம் அதை நடத்தி தனக்கிருந்த சந்தையை தமிழிச் க்கு விட்டு கொடுத்தது எனலாம்.

நான் இதற்கு முன்பு டுபுக்கு, லேகா, காயத்ரி, மாமி, NRI மாமி , எழுத்தாளர் ராமகிருஷ்ணன் போன்றோர் பதிவுகளை இப்படித்தான் ஒரே நாளில் உக்காந்து வாசித்திருக்கிறேன். அது ஒரு வகையான சுவை தான்.

ஜெயமோகன், மாதவராஜ் பதிவுகளை கூட ஒரே நாளில் உக்காந்து படிக்க ஆசை.

குப்பன்_யாஹூ

வனம் said...

வணக்கம் அய்யனார்

மனசுக்குள்ள இருக்கின்றதை தெளிவா செல்லத்தெரியுது உங்களுக்கு.

கடந்த 3 மாதமாக துபாயி-ல் தான் இருந்தேன், அப்போதே உங்களை பார்க்க வேண்டும் என நிணைத்திருந்தேன்- முடியாமல் போய்விட்டது.

வருவேன்

நன்றி
இராஜராஜன்

Ayyanar Viswanath said...

நன்றி அனானி

விரிவான பகிவுகளுக்கு நன்றி..அமீரகம் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் விரிவாக பேசலாம்..

நன்றி ஆயில்யன்

அப்படியே ஆகட்டும் உமா :)

சென்ஷி : அடங்கமாட்டியா நீ :)

கோபி: மாட்டோம்யா :))

ராஜராஜன் அடுத்த முறை தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி..

குசும்பன் said...

//என்னோட பால்யம் முழுக்க மலைகளோடதான் சுத்திட்டிருந்தேன்.மலைகளும் காடுகளும் தான் என்னோட முதல் இருபது வருசத்தை நிறைச்சிருக்கு//

ஆனா போட்டு இருக்கும் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லையே ஏதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

குசும்பன் said...

//முலைகளில் வட்டமாய் என் பெயர் எழுதினேன் .. //

பேனாவை எலம் விடமுடியுமா?

குசும்பன் said...

//நான் அந்த ஒன்பது கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முன் பக்கம் எழுதத் துவங்கினேன்.//

ஒரே ஆளா எவ்வளோவுதான்யா நீ எழுதுவ சொல்லி இருந்தா உதவிக்கு வந்து இருப்பேன்ல!

MSK / Saravana said...

//Anonymous said...

உங்கள் எழுத்து பித்த நிலையின் தெறிப்பாக இருக்கிறது.எப்படி பட்ட மன நிலை யில் இதை எழுதி இருப்பீர்கள் என நினைக்கும்போது நீங்கள் சொல்லியிருப்பது போல பயமும் ஆசையும் ஒருமித்து வருகிறது //

அதே.. அதே.. எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதறீங்களோ.. மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு.. படிச்சவுடன் மனசுவிட்டு கத்தனும் போல இருக்கு..

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...