Thursday, March 26, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு 6.வாந்தி

இதெல்லாம் இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல லிசி!..என்னோட நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் தீர்மானங்கள் எல்லாமே என்ன சுத்தின ஒரு புள்ளியில இருந்து தான் ஆரம்பிக்குது.எங்கங்கயோ அலைஞ்சு திரிஞ்சு மீண்டும் அதே புள்ளிலதான் வந்து முடியுது.இத்தன அலைவும் சுத்தலும் என்ன என்னிலிருந்து கூட விடுவிக்க தயாரா இல்ல அப்படிங்கிரதுதான் ஆச்சர்யமா இருக்கு.கடந்து வந்த மனிதர்கள், சூழல், வாழ்வு, படிச்சது, நேசிச்சது,சுத்தினது எதுவுமே என்ன என்னிலிருந்து விடுவிக்கல.அப்பப்ப நான் விடுபட்டதா நெனச்சது கூட சூழலின் மிகையோ அப்படின்னுதான் தோணுது. ஏன் தொடர்ச்சியா என்ன பத்தியே பேசிட்டிருக்கேன் என்ன பத்தியே சிந்திச்சிட்டிருக்கேன் என்ன பத்தியே எழுதிட்டிருக்கேன்னு நீ முகம் சுளிக்கிறியா.இந்த ‘நான்’ ‘என்’ இந்த கருமத்தலாம் கடக்க விரும்புறேன் லிசி.அதோட உன்னையும் அதாவது பெண்ணையும் முழுசா கடக்க விரும்புறேன்.அதான் எப்பவும் ஏதாவது ஒரு பெயர்ல வடிவத்துல பெண் இருக்கா. சிரிக்காதே.ஏன் சிரிக்கிற? உன்ன கடக்க முடியாதுன்னா? இல்ல என்ன கடக்க முடியாதுன்னா? இல்ல எதுக்காக கடக்கனும்னா? என்னோட நண்பன் ஒருத்தன் இருந்தான். செத்து போனா என்னாகும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்தான்.என்கிட்டலாம் கூட கேட்டான்.செத்த பிறகு நாமலாம் எங்க போவோம்னு?.எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்.இப்பவும் தெரியாதுதான்.ஆனா அப்ப அந்த கேள்விக்கு இன்னும் கொஞ்சம் நிதானமா பதில் சொல்லி இருக்கலாம்னு இப்ப குற்ற உணர்வா இருக்கு.ஆனாலும் அவன் செத்து போவானு யாருக்கு தெரியும்.அதில இருந்து தாழ்வு மனப்பான்மை இருக்க சக மனிதர்கள் கிட்ட தன்மையா நடந்துப்பேன்.எதாவது சொல்லி/கேட்டு தற்கொலை பண்ணிப்பாங்களோ அப்படிங்கிற பயம் எப்பவும் இருக்கு.ஆனா பாரு இந்த பரிதாபத்தால பயத்தால நான் நிறைய ஏமாந்திருக்கேன். ரொம்ப சுலபமா என்ன நிறைய பேர் ஏமாத்திட்டு பின்னால போய் சத்தமா சிரிச்சிருக்காங்க. சும்மா இப்படி எழுதுறன தவிர எனக்கு ஏமாற்றதுல ஒரு சந்தோசம் இருக்கு. தோற்கிறதுங்கிறது ஒரு பெரிய கலை.எந்த ஒரு விசயத்திலயும் நான் தோல்வியதான் விரும்புறேன்.தோல்வி மட்டும்தான் எப்பத்திக்குமான சாத்தியங்களை நிறைவேற்றிக் காட்டுது.வெற்றி எதுக்காக போராடினமோ அந்த உன்னதத்தை கடந்து போய்டுது.தோல்வி எப்பவும் அதிலயே திளைச்சு இருக்கு.ஆனா வெற்றி தோல்வி இப்படி எந்த ஒரு முடிவுமில்லாத ஆட்டத்த ஆடி தீர்க்கனும்.மய்யம் விளிம்பு ன்னு இரு வேறு நிலையில்லாத சூழல் எத்தன கடினமோ அத்தன கடினம்தான் இந்த வெற்றி தோல்வி அரசியலும்.ஆனா யோசிச்சி பாரேன் இந்த இரு வேறு நிலைகள் இல்லாம இருந்தா வாழ்வு எத்தன கொண்டாட்டமா இருக்கும் இல்ல! சாத்தியமே இல்லதான்.ஆனா சாத்தியமே இல்லாதத நோக்கி பயணிக்கதான் எனக்கு பிடிச்சிருக்கு. தோல்விய விரும்புற நான் எதுக்கு கொண்டாட்டத்த தேடனும்?.சாத்தியமே இல்லாததை சாத்தியப்படுத்த ஏன் மெனக்கெடனும்?அப்போ இணக்கமான ஒரு சூழல நானும் உருவாக்கனுமா?ஏன் சூழல் இணக்கமில்லாம இருக்க கூடாது?எல்லா சிந்தாந்தங்களும்,சிந்தனைகளும்,அரசியலும்,ஆழமும்,தேடலும் இணக்கமான வாழ்வுக்குதான்னா இணக்கம்னு நான் நெனச்சிட்டிருக்க ஒண்ண அடைஞ்சதும் எனக்கு சலிக்க ஆரம்பிக்குமே அப்ப என்ன பண்ணுவேன்? நிச்சயமா வேற ஒண்ண தேடி ஓடுவேன்.அப்ப இந்த ஓட்டத்துக்குலாம் முடிவே கெடயாதா.ஆமா மு டி வே கெ டை யா து.முடிவிலி.அலகிலா.எல்லையிலா.மீப்பெருவெளி.திரும்ப திரும்ப திரும்பத் திரும்பத் திரும்பத்..லிசி காது பொத்தாதே!.கேள்! நான் பேசுறத கேள்!!.நான் பேசினா சரியாகிடுவேன்.பேசப்பேச ஒற்றைத் தன்மை களையும்.நான் இதே பத்தியில எழுதி இருக்க வரிய கூட கொஞ்ச நேரம் கழிச்சி நிராகரிச்சிடுவேன்.அதுல போலித்தனம் இருக்கிறதா சொல்வேன்.எது பன்மை?எதில பன்முகத் தன்மை இருக்கு?பார்வையிலா?படைப்பிலா?ஏய் உனக்கு இன்னொன்னு சொல்லனும்.இந்த சூழல் இருக்கில்ல இது ரொம்ப ஆபத்தான ஒரு சூழல்.கணக்கு தியரம் மாதிரி எதையாச்சும் கன்னா பின்னான்னு போர்ட்ல கிறுக்கிட்டு எல் எச் இஸிக்கோட்டு ஆர் எச் னு கணக்கு வாத்தி மாதிரி சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.உனக்கு சரியா சொல்லனும்னா சாரு மற்றும் எம்.ஜி.சுரேஷோட சில சினிமா கட்டுரைகளை உதாரணமா சொல்லலாம்.அவங்க திடீர்னு பின் நவீனத்துவ கூறுகள தமிழ் சினிமால கண்டு பிடிக்க ஆரம்பிச்சாங்க.அலைபாயுதே ஆய்த எழுத்து இதையெல்லாம் பின்நவீனப்படம் னு ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சொன்னாங்க.(மணி ரெண்டு பேருக்குமே சான்ஸ் தரலங்கிறது வேற விசயம்)இதெல்லாமே எல் எச் இஸிக்கோட்டு ஆர் எச் தான். இப்ப சக வலைப்பதிவர்களை எடுத்துக்கயேன் கெட்ட வார்த்தை வந்தா அது பின்நவீனம்.புரியலயா உடனே பிநவீனம்.வலைல அதிகமா நாறினது இந்த பின்நவீனம்ங்கிற சொல்.இத பயன்படுத்தின ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி எழுதுவான்.பின்னவீனம் பின்ணவீனம் இன்னும் கொடுமையாலாம் இந்த சொல்ல இவங்க எழுதி நான் படிச்சிருக்கேன்.நான் சமைச்சி நீ சாப்டுருக்க விஜய் சொன்னவர் ப.பு.சாந்தி கிருஷ்ணா படம் நேருக்கு நேர்.இதன் மூலமா என்ன சொல்ல வரேன்னா..ம்ம்ம்.. ஒண்ணும் இல்ல எதையாச்சிம் சொல்ரனா முடிக்கும்போது இதனால் சொல்ல வர்ரது என்னனான்னு எதையாச்சிம் சொல்லியே ஆகனுமா சும்மா பேசிட்ருக்க கூடாதா? பிநவை தெரிஞ்சவங்க மட்டும்தான் பேசனுமா என்ன? அவன் அவன் வாழ்க்கைய அவன் அவனுக்கு புடிச்சா மாதிரி வாழ்ந்துட்டு போறான். நம்ம ஊர்ல அரசியல்வாதிக்கு குத்து டேன்ஸ் ஆடத் தெரிஞ்சிருக்கிற தகுதி மட்டும் எப்படி போதுமோ அதே மாதிரி ஈ கலைப்பை இருந்தா என்ன வேணா எழுதலாம்.நீதான் தலைகீழாக்கல விரும்பறவனாச்சே.எல்லாத்தையும் கவிழ்த்துப்பார் எதையுமே புனிதமாக்காதே ன்னு வாய் கிழியுற கத்துறவனாச்சே.நீ!எதுக்கு இதுக்குலாம் டென்சனாவுற?ஏன் அரசியல்வாதி குத்து டேன்ஸ் ஆடகூடாதா? இல்ல குத்துடேன்ஸ் ஆடுரவன் அரசியல்வாதி ஆக கூடாதா?இந்த பன்மைவாதம்,பன்முகத் தன்மைலாம் பத்தி தொடர்ச்சியா பேசினா சிந்திச்சா மேல எழுதி இருக்க பத்தி மாதிரிதான் குழப்பமா இருக்குமா.எது நான்? எது நீ? எது என்னோட எதிர் குரல்னு தனிதனியா பிரிச்சிக்க முடியல மொத்தமா எல்லாமும் சேர்ந்து ஒண்ணும் புரியாம போய்டுச்சி பார்.பரவால்ல விடு அடுத்தவனுக்கு புரியனும்னு என்ன அவசியம். ஆர்வம் இருக்கவன் தேடி படிச்சிக்கிறான். அப்ப நீ பொதுவெளிக்கு ஏன் வர்ர? அய்யோ மறுபடியும் பல குரல்கள். உள்ள இருந்து பல குரல்கள். அவ குரல் கீச்சுக்குரல்.கந்தலா கிழிக்கும் மனச...ஆமா பலமுக மன்னன் ஜோ.. அய்யகோ ஆள விடு.. கால விடு..வாள எடு..வாழ விடூ..டூஊஊஉ... இப்ப நீ தெளிவா பதில் சொல்.. எது சரி? எது தப்பு? எது போலி? எது நிஜம்? எது உண்மை? எது பொய்?. எல்லாம் பொய்யா? எல்லாம் நிஜமா நீ நெனைக்கிறா மாதிரி எதுவும் இல்ல எல்லாம் சரியாத்தான் இருக்கு.நீதான் சரியில்ல நீதான் நீதான் நீதாண்டி நீதாண்டா நீஈஈஈ நீஈஈ நீ மட்டுமேதான்...........தீயோடு போகும் வரையில் தீராது இந்தத் தனிமை

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்

நடப்பவை நாடகமென்று நாமும் இங்கு நடித்திருப்போம் ஓஓஒ

Monday, March 23, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு 5.கண்ணாமூச்சிக்காரியும் ஆம்பள ஜெமோவும்

எனக்கு எல்லாவற்றையும் அந்தந்த கணத்திலேயே சொல்லிவிட வேண்டும்.கோபம்,காதல், அழுகை,காமம்,வெறுப்பு,கசப்பு,வன்மம் எல்லாவற்றையும் அதே வேகத்துடன் அதே உக்கிரத்துடன் வெளித்துப்பி விடவேண்டும் இல்லையெனில் சிக்கல்தான்.மண்டைக்குள் எப்போதும் அந்த தவிப்பு அலைந்துகொண்டே இம்சிக்கும்.உரையாடலினி எனக்கு நேரெதிர் தலையில் இடி விழுந்தாலும் வாய்திறந்து கத்துவது கிடையாது.உள்ளுக்குள்ளேயே 'அம்மெ' என முனகுவாளாம்.அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கண்ணாமூச்சி.எங்காவது, எவராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிந்து கொண்டு எல்லாரையும் தவிக்க விடுவது அவளுக்கு ரகசியமான ஒரு திருப்தியை தருமாம்.தான் ஒளிந்து கொண்டு அடுத்தவர் அலைவதை வேடிக்கைப் பார்ப்பது இன்னமும் அதிக மகிழ்வைத் தருவதாக ஒரு நாள் சொன்னாள்.”தேடுறவங்க சலிச்சி விளையாட்ட விட்டு போய்ட்டா என்ன பண்ணுவ?” என கேட்டேன் சத்தமாய் சிரித்துக் கொள்வாளாம்.எவராலும் தன்னை கண்டுபிடிக்க முடியாத ஒரு இறுமாப்பு படருமாம்.அந்த வெற்றியும் களிப்பும் அவளின் பால்யம் முழுக்க நிரம்பி இருந்ததாய் சொன்னாள்.என்னையும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தவிக்க விடுகிறாள்.நெருங்கவுமில்லாது,விலகியும் தொலையாது சதா என்னை அலைக்கழிப்பதை அவளொரு விளையாட்டைப் போல் ஆடித் தீர்க்கிறாள்.

ஒரு நாள் உச்சகட்ட கசப்பில் அவளின் அலுவலகத்திற்கு போய் ”ஏண்டி படுத்துர எரும்ம மாடு”என கத்தினேன் அவள் அலுவலகத்தில் தமிழ் தெரிந்தவர் எவருமில்லை.ஆனாலும் என் கத்தலுக்கு எல்லாரும் திடுக்கிட்டு இருக்கைகளிலிருந்து எழுந்துவிட்டனர்.இவள் வேகமாய் என்னை நெருங்கி வந்து என்னை இறுக்கமாய் கட்டிப்பிடித்தாள்.இரண்டு பிரான்சு தேசப் பெண்கள் விசிலடித்தனர்.'போ இப்ப சாயந்திரம் வரேன்' என்றாள் நான் முனியடித்தவன் மாதிரி திரும்பினேன்.சாயந்திரம் வந்து கெட்ட வார்த்தையில் திட்டினாள்.அவளின் வாசனையில் நான் காலையிலிருந்தே கரைந்து போயிருந்தேன்.மேலும் அவள் திட்டும்போது உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்ன திட்டினாள் என்பதும் சரியாய் உறைக்கவில்லை.இந்த குறிப்பில் நான் சொல்ல வந்தது எங்கள் காதல் லீலைகளை இல்லை இன்னொரு முக்கியமான விசயம்.முந்தா நாள் இரவு இவள் தொலைபேசி அனல் காற்றை படிக்க சொன்னாள்.நான் ஜெயமோகனைப் படிப்பதில்லை என்றேன். ”எனக்காக படி”என்று தொடர்பைத் துண்டித்தாள்.

ஒவ்வொரு அத்தியாயமாகத் தேடி வேர்டில் காபி செய்து படிக்க ஆரம்பித்தேன்.முதல் அய்ம்பது பக்கம் ராஜேஷ் குமார் நாவலைப் படிக்கிறோமா? என்கிற சந்தேகங்கள் எழுந்தன.அவன் சுசியின் முலைகளை வெறிப்பதும் அதை அவள் ரசிப்பதுமான வரிகளை ஆரம்பத்தில் படித்தது நினைவுக்கு வரவே எழுதினது அண்ணாத்ததான் ரீதியிலான ஆசுவாசம் எழுந்தது.சந்திரா வந்ததும் கதையில் 'சூடு' பிடிக்கிறது.ஜெமோவின் காமத் தாண்டவங்கள் அறிந்ததுதான் என்றாலும் இந்த சந்திரா தாண்டவம்,கோரத் தாண்டவம். கூகுலில் போய் இன்செஸ்ட் என தமிழில் தேடினால் கொட்டும் எல்லா கதைகளும் அண்ணாத்தையின் கை வண்ணம்தானா? என்கிற சந்தேகம் வந்தது.கதையின் பிரதானம் ஆம்பளத்தனம்.அம்மாவின் தோழியுடனான ஆம்பளத்தனம்.பெண்ணை வெற்று உடலாய், சதைப்பிண்டமாய், சதைக்கோளமாய் மட்டுமே பார்க்க தெரிந்த ஜெமோவின் இன்னொரு சுயபுணர்ச்சி.பல இடங்களில் நன்றாய் விறைத்தது.ஜெயமோகன் இனிமேல் இன்செஸ்ட் கதைகளை தாராளமாய் எழுதலாம். கூகுலில் தேடி யூடியூபில் தேடி விறைப்பதை விட ஜெமோ பக்கத்தில் இலக்கியமாய் விறைக்கலாம்.

தமிழ்சூழலின் பெரும்பான்மைகளின் அசூசைகள் அந்த இரவை கசப்பாக்கத் துவங்கின ஒண்ணரை மணிக்கு அவளை எழுப்பித் திட்டினேன்.
“உனக்கு இந்த கத பிடிச்சிருக்குமே”
”எந்த கதடா?” என்றாள் தூக்க கலக்கத்தில்
”அனல் காற்று”
”யார் எழுதினது?”
”ஜெமோ”
”யார் ஜெமோ?'
”அடியேய் என்ன படிக்க சொன்னது நீதானடி”
”என்ன ஒருத்தங்க படிக்க சொன்னாங்க அத அப்படியே உன்கிட்ட சொன்னேன்.அதுக்காகலாம் படிப்பியாடா? அவ்ளோ நல்லவனா நீ?”என சத்தமாய் சிரித்தாள்.
எனக்கு பற்றிக்கொண்டு வந்தது ”பாவி” என்றேன்
”சரி டென்சனாவாதே என்ன கத அது?”
”மதர் ஃபக்கிங்”
”வாட்”
”இன்செஸ்ட் டி”
”ஓ..நல்லவேள நான் படிக்கல”
”கொல வெறியா இருக்கு”
”நான் இப்டி சொன்னா ஓகே..நீயெல்லாம் பெரிய பொரட்சி எழுத்தாளனாச்சே!? உனக்கு இப்படி எழுதினாலாம் பிடிக்குமே!”
”இல்லடி அப்பட்டமான மேல் சாவனிச எழுத்து படு மட்டமா இருந்தது”
”மேல் சாவனிசத்த பத்தி நீ பேசறியா?.. என்ன நடுராத்திரில சத்தம் போட்டு சிரிக்க வைக்காத..அதுவும் இல்லாம இன்செஸ்ட்லாம் தி.ஜ தொட்ட சப்ஜக்ட்தானடா உன்னோட கோபி எழுதாததா? ஏன் ஆதவன் கூட தொட்டதுதான..”
”நீ அவங்களலாம் இந்த ஆளோட கம்பேர் பண்ணாதே.இத எழுதலாம் இத எழுதக்கூடாது அப்படின்னுலாம் சொல்ர கலாச்சாரக் காவலன் இல்ல நான்..ஆனா பெண்ண வெறும் சதைப்பிண்டமா பாக்குறதலாம் என்னால தாங்கிக்கவே முடியல.. அதுலயும் அந்த எழுத்துத் தொணி.. யூஃப்ப்ப்ப்ப்... அவரோட கிளிக்கூட்டம் னு ஒரு சிறுகதை ரொம்ப வருசத்துக்கு முன்னால படிச்சது.பதின்ம வயசு பசங்களோட கத.. அதுல சில விவரணைகள் வரும்.அத்தைகள்,அக்காக்கள் இவங்களோட உடலை விவரிச்சிப்பார். ஒரு பதின்ம வயசு பையன் பார்வைல இருந்து சொல்லப்படுறதா இருக்கும்.ப்ரா பட்டை, பிதுங்கின முலை, அக்குள் ஈரம், வாசம் னு பயங்கர இன்செஸ்ட் டா இருக்கும் அந்த கத...அதுக்குப் பிறகு அண்ணாத்த சந்திரா மூலமா தன் அரிப்ப லாம் சொறிஞ்சிட்டிருக்கார்.”

”ம்ம்..படிக்க கிக் ஆ இருக்கா என்ன?”
”ஆமா காமம்.. காமம்.. வார்த்தைகள்ள பற்றும் காமம்”
”செக்ஸ் புக் படிக்கிரா மாதிரி இருக்கா?”
”ஏன் நீ படிக்கனுமா?”
”இல்ல கேட்டேன்”
”நீ படிக்கனும்னா ழார் பத்தாய் அனுப்பினனே அத படி”
”அதும் செக்ஸ்தானடா”
”ஆமா ஆனா அதுவும் இதுவும் வேற வேற”
”என்ன வேற வேற எல்லாம் ஒண்ணுதான்”
”ஒண்ணு மாதிரிதான் தெரியும் ஆனா வேற வேற.கலைக்கும் அரிப்புக்கும் நெறய வித்தியாசம் இருக்கு”
”பாக்க எல்லாம் ஒண்ணுமாதிரிதான இருக்கு”
”ம்ம்..மெதுவா புரியும்”
”புரிய என்ன பண்ணனும்?”
”நெறய படிக்கனும்.சொந்தமா யோசிக்கனும்.சக மனுசன் மீதும்,சமூகம் மீதும் கொஞ்சமே கொஞ்சம் அக்கற வேணும்”
”அதுலாம் போர் டா”
”அப்ப சுலபமா ஒண்ணு பண்ணு”
”என்ன?”
”என்ன காதலி”
”இதுக்கு நான் அதயே கஷ்டப்பட்டு பண்ணிடுவேன்”
”தமிழ்சூழல்ல விமர்சகர்கள் லாம் காணாம போய்ட்டாங்கடி.அப்படியே வர்ர விமர்சனங்களும் ஒரு தலைப் பட்சமா,முதுகு சொறிதலாத்தான் இருக்கு.இல்லனா அரைகுறை புரிதலா அபத்தமா இருக்கு.”
”ஏன் இன்னிக்கு இப்படி காது வெடைக்க கத்திட்டிருக்க நீ?”
”பயங்கர கசப்பா இருக்குடி.எங்க பாத்தாலும் போலி.இலக்கியம்,அரசியல்,கலை,வாழ்வு ன்னு நம்ம சமூகம் வெறும் போலித்தனங்களால மட்டும்தான் நிறைஞ்சிருக்கான்னு கத்தனும் போல இருக்கு.”
”நீதான் உண்மை வெளம்பியாச்சே.போய் எல்லாரையும் திட்டு.எல்லாரையும் விமர்சி அப்புரமா ரத்தம் ஒழுக ஒழுக கடிபட்டு வா..யூ ஸ்டார்டட் அகெய்ன் ஐ கெஸ்”
”எல்லாம் உன்னால தாண்டி இவனுங்களலாம் படிக்காம நான் நிம்மதியா இருந்தேன்.”
”ரொம்ப பண்ணிக்காதே உனக்கு பிடிச்சமாதிரிதான் இலக்கிய சூழல் இருக்கனும்னு மொத்தம் மூணு பேர்தான் எழுதனும்”
”மூணு பேரா?”
”ஆமா.கோபி,சன்னாசி அப்புறம் நீ.. அதுல கோபியும் போய் சேர்ந்தாச்சு.நீயும் சன்னாசியும் மாறி மாறி எழுதி நீங்களே மாறி மாறி படிச்சுக்கங்க.தயவு செய்ஞ்சு வேற எதையும் படிச்சி தொலயாதே.”
”ம்ம்”
”இந்த சாரு சாரு ன்னு ஒரு மானஸ்தர்ர்ர்ர் இருந்தார்ர்ர்டி.இப்ப கவர்ச்சி நடிகை கணக்கா ஆயிட்டார்ர்ர்ர்ர்ர்”
”அய்யா சாமி போதும்.போன வை.எனக்கு தூக்கம் வருது.பை.

Friday, March 20, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை


என் நிலப்பரப்பு எனக்கு மட்டுமே சொந்தமானதென்றும் ஒரு ராவேட்டைக்காரனைப் போல் மொழியின் துணையோடு அதன் நீள அகலத்தில் நான் மட்டுமே நடந்து திரிய வேண்டும் என்கிற பேராசையும் எனக்கு உண்டு - பவா

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது பவா.செல்லதுரையினைச் சந்திக்க முடிந்தது. விடைபெறுகையில் அவரது சிறுகதைத் தொகுப்பான நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறையைப் படிக்கத் தந்தார்.எழுத்தாளனை எழுத்தாளன் என்கிற அடையாளங்களோடு இதுவரை எவரையும் சந்திக்கச் சென்றதில்லை.நட்பு அல்லது அன்பு மட்டுமே எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கப் பிரதான காரணமாய் முன் நிற்கிறது. கோபியின் எழுத்துக்களை வாசித்தபின் மிகுந்த நெகிழ்ச்சியோடு அவரை ஒரு எழுத்தாளனின் ஆதர்ச வாசகனாய் சந்திக்க விரும்பினேன்.வாழ்வின் பெரும்பாலான உயிர்ப்புகளை,உன்னதங்களை கடந்து போன பின்னரே அறியும் உண்மத்தனான எனக்கு அவரது பிரிவு வழக்கமான ஏமாற்றத்தைத்தான் தந்தது. பெருமூச்சோடு கலந்த வருத்தத்தை மட்டும் அந்தக் கணத்தில் உதிர்த்திருந்தேன்.தமிழ் இலக்கிய சூழலைப் பொறுத்தவரை பெரும்பாலான எழுத்தாளர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வட்டாரம் சார்ந்த, மொழி சார்ந்த, வாழ்வு சார்ந்த, எழுத்துக்கள் தென் தமிழகத்தை அதிகமாய் பதிவு செய்திருக்கின்றன. வட தமிழகத்திலிருந்து எழுதியவர்கள் / எழுதிக்கொண்டிருப்பவர்கள் குறைவாக இருப்பதாலோ என்னமோ நான் வாழ்ந்த சூழலை,நான் பேசிய மொழியை என்னால் இலக்கியமாக அதிகம் படிக்க முடியாமலேயே போய்விட்டது.

எப்போதுமே புழங்கியிராத திருநெல்வேலியையும், தாமிரபரணியையும் அந்த ஊர்காரர்களை விட என்னால் மிகச்சரியாய் சொல்லிவிடமுடிகிற அளவுக்கு நமது இலக்கியச் சூழல் தெற்கால் நிரம்பியிருக்கிறது. அழகியபெரியவனையும் கண்மணி குணசேகரனையும் படிக்கும்போது பக்கத்து வீட்டில் உலவுவது போன்ற மனநிலை இருந்தது.ஆனால் எப்போதுமே என்னால் சொந்த வீட்டில் புழங்க முடிந்ததில்லை.இந்த நெடுநாள் ஏக்கத்தை, ஏமாற்றத்தை காணாமல் செய்துவிட்ட தொகுப்பு இது. திருவண்ணாமலை, திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்கள், அதன் மனிதர்கள், என் மிகச் சொந்த மொழி, என் மிகச் சொந்த இடம், நான் கேள்விப்பட்ட மனிதர்கள், நான் படித்த நகராட்சிப் பள்ளி, குதித்து மகிழ்ந்த தாமரைக் குளம், விளையாடித் தீர்த்த மைதானம், மண்டித் தெரு கசகசப்புகள்,இன்னமும் நடந்து போகும் சாலை இவற்றையெல்லாம் எழுத்துக்களாய் படிக்கும்போது/பார்க்கும்போது ஏற்பட்ட நெகிழ்வை என்னால் சரியாய் எழுதிவிட முடியவில்லை.

பவாவின் மொழியில் அதிக சாயம் இல்லை.கவித்துவ மிகைகளோ,பொருள் பொதிந்த அடர் கருத்துக்களோ எதுவுமில்லாத மிகச் சாதாரண மொழி.அதிகம் வாசித்தவர்களால் சாதாரண மொழியில் எழுதிவிட முடிவது சற்றுக் கடினம்தான். சேமித்து வைக்கப்பட்ட அறிவுச் சாத்தான் எளிமைக்குத் திரும்ப ஒருபோதும் அனுமதிப்பதில்லை.பவா அந்த அறிவுச் சாத்தானை துரத்தியடித்துவிட்டு,எளிய கிராமத்து மனிதர்களை மிக எளிய மொழியில் பதிவு செய்திருக்கிறார். வன்மமாய் விரிந்து கிடக்கும் வாழ்வை, சாமான்யர்களுக்குப் பழகிப்போன தின வாழ்வின் கழுத்து நெறிப்பை, இந்த மொழி சன்னமான குரலில் பேசுகிறது.எல்லாக் கதையினூடும் என்னால் ஒன்றிப் பயணிக்க முடிந்தது.வண்ணநிலவனின் எழுத்துக்கள் பிற பகுதி சார்ந்த வாசகனுக்கு தரும் இன்பத்தை விட திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறம் சார்ந்த நகரங்களைப் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு மிக அதிகக் கிளர்வைத் தந்திருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.

இந்தத் தொகுப்பில் முகம்,வெவ்வேறு மனிதர்கள்,மண்டித்தெரு பரோட்டா சால்னா,ஏழுமலை ஜமா, சிங்காரக்குளம்,வேட்டை,பச்சை இருளன்,ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்,சத்ரு,சிதைவு,நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை ஆகிய பதினோருக் கதைகள் இருக்கின்றன.சடுதியில் வண்ணமிழக்கும் வாழ்வின் நிறங்களைத்தான் பவா வெவ்வேறு கதைகளாக எழுதியிருக்கிறார்.மனிதர்களின் மீதிருக்கும் பரிவு, ஏமாற்றங்கள், இயலாமை, வலிய திணிப்பவைகளை எதுவும் செய்ய இயலாது ஏற்றுக்கொள்ளல் என்பது போன்ற பல்வேறு இயல்புத் தோல்விகளை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. பச்சை இருளன்,ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்,சத்ரு ஆகிய மூன்று சிறுகதைகளும் இருளர்கள் பற்றிய வாழ்வை முன் வைக்கின்றன. கோட்பாட்டுப் புரிதல்களோ,பிரச்சார நெடிகளோ இல்லாது அவர்களின் வாழ்வை வாழ்விலிருந்தே பதிவித்திருப்பது ஒன்றி வாசிக்க மிகுந்த ஆசுவாசமாய் இருந்தது.

சிதைவு சிறுகதையில் சொல்லப்பட்டிருக்கும் டில்லி வீடும்,விஜயாவும் நான் படித்த பள்ளிக்கு சமீபமானவர்கள்.அவர்களை கதாபாத்திரங்களாக வாசிக்கமுடியும் என்பதே எனக்கு நிறைவைத் தருவதாய் இருந்தது.சிங்காரக் குளத்தின் முடிவும் துணுக்குறலாகத்தான் இருந்தது. கலைஞர்கள் சமூகத்தின் புறக்கணிக்கப்புக்கு ஆளாகும்போது அடைகிற மன உளைச்சல்களையும் சிதைவுகளையும் சித்தரிக்கிறது ஏழுமலை ஜமா சிறுகதை. ஊர்த்திருவிழாக்களில் கூத்து ஒதுக்கிவைக்கப்பட்டு வீடியோ திரைப்படத்துக்கு முக்கியத்துவம் பெருகிய காலகட்டங்களில் கூத்துக்கலைஞர்கள் பிழைப்பைத் தேடி பெங்களூருக்கு கூலி வேலைக்கு செல்லும் அவலத்தை சித்தரிக்கும் இச்சிறுகதை இத்தொகுப்பில் மிகுந்த வீச்சானது.

ஏழுமலை ஜமா என்கிற இச்சிறுகதையை எஸ்.கருணா குறும்படமாக்கி இருக்கிறார்.கூத்துக் கலையை தெரு வீடியோக்கள் மற்றும் சினிமா நடனங்கள் விழுங்கிய அவலத்தை மிகுந்த வேதனைகளோடு பதிவு செய்த சிறுகதையை சிறப்பாய் படமாக்கி இருக்கிறார்கள்.பின்பொரு சமயம் அக்குறும்படத்தை விரிவாய் பகிர்ந்துகொள்கிறேன்.

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை(சிறுகதைகள்)
ஆசிரியர்: பவா செல்லத்துரை
முதல் பதிப்பு: ஜனவரி 2008
பக். 110
விலை ரூ. 60
வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன் திருவண்ணாமலை-1.

Tuesday, March 10, 2009

குளிர் தீக்கங்குஎப்போதாவது தலை காட்டும் கடவுள்
அன்றையப் பொழுதில்
நிரந்தரமாய் தங்கிவிட்டிருந்தார்.
தேவதையின் சாயல்களிலிருந்தவள்
ஒற்றை உள்ளாடையுடுத்தி
என் மீது கால் தூக்கிப் போட்டபடி
உறங்காத தன் மூன்றாவது இரவின் மீது
ஆழமாய் வாள் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

அபூர்வமாய் வந்தக் கடவுளை
மகிழ்வூட்ட
குடித்தபடியும்
சத்தமாய் பாடியபடியுமாய்
அவள் கொன்றுகொண்டிருந்த இரவினுக்கு
உயிரூட்டிக் கொண்டிருந்தேன்.

விடியலில்
மலை அகலும் வெண்புகையின் சாயலில்
துயிலெழுந்த அவள்
கடவுளை எட்டி உதைத்துவிட்டு
என்னை முத்தமிட்டாள்.
அஃது
நதிக்குளிரின் நடுக்கத்தையும்
தீக்கங்கின் வெம்மைகளையும்
ஒருங்கே கொண்டிருந்தது.

Friday, March 6, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு - 4 : அடைப்புக் குறிகளுக்குள் அகம்


சக மனிதர்கள் மீதிருக்கும் நம்பிக்கைகள் பொய்க்கும்போது ஏற்படும் கசப்புணர்வு தாங்க இயலாததாய் இருக்கிறது.இயல்பு நிலை தடுமாறி கோபமும் வன்மமும் மெல்ல ஆக்ரமிப்பதை உணரமுடிகிறது.எந்த ஒன்றையும் மிகை இல்லாது அணுகுவது என்னளவில் மிகக் கடினமாக இருக்கிறது.வெறுப்பையும் அன்பையும் அதன் எல்லை வரைத் தொட்டுவரும் குரூர மனதை இயல்பாய் கொண்டதினால் சிக்கல்களின் நிரந்தர இருப்பிடம் நானாகிப் போகிறேன். புன்னகையும் முறைப்பும் ஒன்றே.அன்பும் வஞ்சமும் ஒன்றே.கொண்டாடுதலும் மிதித்தலும் ஒன்றே.வெளிப்படுபவை மட்டுமே உறுதியானது, நிரந்தரமானது என்றெல்லாம் எதுவும் இருக்க முடியாது.இன்னொரு எல்லை அல்லது இன்னொரு உச்சம் தன் இருப்பை எப்போது வேண்டுமானாலும் வெளிக்காட்டலாம். எதிலும் தேங்கிடாது எப்போதைக்குமான நகர்வுகளை துரிதப்படுத்துவதே எனக்கான சாஸ்வதமாய் இருக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் பலமாய் அறைபட்டுத் திரும்பச் சலிப்பாய் இருக்கிறது.திரும்பத் திரும்ப ஒரே மனநிலைக்கே திரும்பி வருகிறேன்.வாழ்வே இப்படித்தான் போலிருக்கிறது. நம்பிக்கைகள்/அவ நம்பிக்கைகள்,உற்சாக மிகுதி/உற்சாகமின்மை,பொய்/மெய், நிஜம்/போலி,துரோகம்/காதல், மிகை/நிதானம், மிகவதிக அன்பு/அப்பட்டமான பொய், பயன்படுத்திக் கொள்ளல்/எல்லாவற்றையும் தரல், திருடுதல்/திருட்டுக் கொடுத்தல், பொய்பேசுதல்/உறவாடுதல்,களவாடுதல்/களவுபோதல்,நம்பிக்கையைத் துரோகித்தல்/எல்லாமுமாய் இருத்தல்,தூற்றுதல்/ கொண்டாடுதல்,குரூரமாய் பிறரது அடையாளம் அழித்தல்/பிறருக்காய் தன் அடையாளம் இழத்தல்.Fuck all…எல்லா உறவுகளும்,புன்னகைகளும், அறிமுகங்களும், கையசைப்புகளும், புருவ உயர்த்தல்களும் ஏதோ ஒன்றின் தேவைக்கான நிமித்தமாகவே நிகழ்கிறது.எந்த ஒன்றையும் மிகைத்தோ, குறைத்தோ மாய்ந்துக் கொள்ளத் தேவையில்லை.அதனதன் தேவை அதனதன் இயல்பு.

எல்லாம் விட்டு வெளி வந்தபோது என்னைக் காணவில்லை. எதுவோக்களில் தொலைந்து போயிருந்தேன்.பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் பொங்க என்னைத் தேடிக்கொண்டிருந்தேன்.கடைசி வரை என் சாயல்களில் ஒன்றைக் கூடத் திரும்பப் பிடிக்க இயலவில்லை. ஒரு மாயப் பிடியிலிருந்து வெளிவந்த உணர்வைப் பெற முடிந்தது.எனக்கான தளம்/வாழ்வு/இயக்கம் இதுவல்ல என்கிற சமாதானங்களோடு எல்லாவற்றையும் தூக்கி எறியப்போவதாய் கறுவிக் கொண்டேன். நான் ஒரு நகரும் பிராணி அல்லது சுயம் கரைந்த வெளி.

(இந்த சுயம் கரைந்த வெளியை எழுதும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.என் தோழி ஒருத்தி இந்த வார்த்தையைச் சொல்லிக் கிண்டலடிப்பாள்.”நீங்கலாம் சுயம் கரைந்த வெளியாச்சே.”
இப்படி திடீர் தத்துவ ஞானியாகி மேற்கண்ட மூன்று பத்திகளில் தத்துவ விசாரத்தைப் பிழிய காரணம் உங்களுக்கு வெகு சாதாரணமானதுதான். உரையாடலினி காறித் துப்பிவிட்டுப் போய்விட்டாள் அவ்வளவுதான். இது எங்களுக்குள் வழக்கமாய் நிகழும் ஒன்றுதான்.ஆனால் இந்த முறை சற்று உக்கிரமாக நிகழ்ந்துவிட்டதோ என்கிற சந்தேகம் அவள் சென்ற பிறகு எனக்குள் எழுந்தது.அவள் ஒரு சண்டைக்கோழி எதற்கெடுத்தாலும் கீச் கீச் என்பாள்.தகர டப்பாவை தார் ரோட்டில் தேய்த்தால் எழும் சப்தத்திற்கும் அவளது குரலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.அவள் சென்ற பத்து நிமிடம் கழித்தும் அந்தக் குரலில் என்னைத் திட்டித் தீர்த்தது என் உள்ளத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. அவள் பழைய காதலனை சற்றுக் கிண்டலடித்ததே இந்த பெரிய சண்டைக்கு காரணம்.அவளின் பழைய காதலன் பார்ப்பதற்கு தாமஸ் ஆல்வா எடிசனைப் போலிருப்பான்.விட்டால் எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே இருப்பானோ என்கிற பயத்தை வரவழைக்கும் அசாதாரண விஞ்ஞான முகம் அவனுக்கு.அவள் தன் பழைய காதலை ”இடர்னல் லவ்” என்றும் அவனை ”சோல் மேட்” என்றும் என்னிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது (மிதக்கிர போஸில் நின்றபடி) சொல்லி உயிரை எடுக்கிறாள்.இதை அவள் சொல்லும்போது என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் போகிறது. நான் சத்தமாய் சிரித்துவிடுவது மட்டுமே அவளின் பெருங்கோபத்திற்கு காரணமாகிவிடுகிறது. ”இன்றோடு இப்படம் கடேசி” என சொல்லிவிட்டுப் போய்விட்டாள். நான் இப்போது துக்கமாக இருக்க வேண்டும் சும்மா வாயைக் கிளறி எதையாவது கேட்டு சிரிப்பை மூட்டாதீர்கள்! சொல்வதை மட்டும் கேளுங்கள் here it goes….)

(வலிந்து வரவழைத்துக் கொள்ளும்) விரக்தி மனநிலையை விரட்ட பாடல்கள் கேட்பது ஆசுவாசமாய் இருக்கும்.இதுபோன்ற மனநிலையில் Enrique Iglesias பாடல்களைக் கேட்பதுப் பொருத்தமானது.என்ரிக்கின் குரலில் வழியும் தவிப்பு, துடிப்பு, உச்சம் எனக்குப் பிடித்தமானது.காதலின் மிக அதிகபட்ச வேதனையை வெளித்துப்புவதாய் இருக்கும் பாடல்கள் (உருகி உருகிப் பாடுவதாய் நினைத்துக் கொண்டு பெருங்குரலில் கத்துவது) இந்த மனநிலைக்கு சரியாய் இருக்கும். சமீபமாய் தேய்த்துக்கொண்டிருப்பது இவரின் insomniac தொகுப்புதான். தலைப்பைப் போலவே உள்ளிருக்கும் பாடல்களும் நிதானமின்மையை, தூக்கமின்மையை படபடப்பை முன்னிறுத்தும் பாடல்கள். கீழ்கண்ட பாடல்களை ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் கேட்டுவிடுகிறேன்.எதையாவது எழுதியே தீர வேண்டும், எதையாவது செய்தே முடிக்க வேண்டும், எதையாவது, எதையாவது, எதையாவது, எனப் படபடத்துக்கொண்டே இருக்கும் மனதை/இருப்பை லேசாய் மண்டையில் தட்டி, ஓரமாய் உட்கார வைத்து விட்டு, இந்த பாடல்களை வரிசையாகவோ வரிசை மாற்றியோ கேட்டு இன்புறலாம்.

1.அனல் மேலே பனித்துளி
2.கை வீசி நடக்குர காத்தே
3.அழகாக சிரித்தது அந்த நிலவு
4.கண்ணில் பார்வை போன போதும்
5.Tired of being sorry – Enrique iglasis
6.உனக்குள் நானே உருகும் இரவில்
7.Zindagi Zindagi - Yuvaraj
8.உனக்காகத்தானே இந்த உயிருள்ளது
9.Oul Tani Eyh – Nancy Ajram
10.Somebody’s me - Enrique iglasis
12.Ishq ada hai – Ada
13.உன்னைக் கண்டேனே முதன்முறை
14.இது என்ன புது உணர்வோ மனதில் பாயுதே
15.மருதாணி விழியில் ஏன்?
16.Kaise Mujhe – Kajini
17.ஒரு காற்றில் அலையும் சிறகு
18.நீயின்றி நானில்லை என் காதல் பொய்யுமில்லை
19.நான் வரைந்து வைத்த சூரியன்
20.என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லட்டர்
21.Paper Planes –M.I.A
22.பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
23.தேன் சிந்துதே வானம்
24.Sunshowers - M.I.A
25.பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

எங்க பாடுங்க அல்லது கத்துங்க
Somebody wants you
Somebody needs you
Somebody dreams about you
every single night
Somebody can't breath
without you, it's lonely
Somebody hopes that someday you will see
That Somebody's Me
Ohh ya

புகைப்படத்திலிருக்கும் தேவதை:மாதங்கி மாயா அருள்பிரகாசம்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...