Friday, January 16, 2009

நான் எழுத வந்திருக்காவிட்டால் குடிமுழுகிப் போயிருக்காது.-ஆதவன் தீட்சண்யாகீற்றில் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தபோது ஓசூர் நினைவுகள் ஆக்ரமிக்கத் துவங்கின.கவிதைகள் அழகியல் சார்ந்தவை என்பதான என் நம்பிக்கைகள் உடைந்த கணம் நன்றாய் நினைவிலிருக்கிறது.ஆதவன் தீட்சண்யாவின் சுயவிலக்கம் கவிதையை படித்த கணம்தான் அது.திரும்ப திரும்ப வாசித்து என் கவிதை பிம்பங்களை உடைத்துக்கொண்டிருந்தேன்.
சுய விலக்கம்
நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக ..."
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்
கண்டுபிடிக்கக்கூடும்....

இக்கவிதையை நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டேன்.ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து என்ற வரிகள் மட்டும் என்னை திரும்பத் திரும்ப இம்சித்துக் கொண்டே இருந்ததன.அக்கவிதை படித்த காலகட்டத்தில் நான் ஓசூரில் வாழ்ந்திருந்ததாலும் ஆதவனின் நண்பர்கள் எனக்கும் நண்பர்களாய் இருந்ததாலும் தமுஎச கூட்டங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.ஆதவன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குறிஞ்சி திரைப்பட இயக்கம் என்றொரு இயக்கத்தை துவங்கினார்கள்.உலகத் திரைப்படங்களை நண்பர்கள் அனைவரும் கூடி ஒரு இடத்தில் திரையிடுவது, பின்பு அத்திரைப்படம் முன் வைக்கும் 'மாற்று'க்களை விரிவாய் உரையாடுவதென எனக்கான ஆரம்ப சன்னல் திறப்புகள் அற்புதமானதாய் இருந்தது.

சின்னண்ணன்,பா.வெங்கடேசன்,போப்பு,க.சீ.சிவக்குமார் என பெரும் கூட்டமே அங்கிருந்தது.எல்லாவற்றையும் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். மேலும் நான் அங்கிருந்த காலகட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளாக பலவற்றைக் குறிப்பிடலாம்.குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு கிட்டத் தட்ட இருபது நபர்களுக்கும் மேல் ஒரே அறையில் கூடி நண்பரொருவர் வாங்கிவந்திருந்த ஒரே புட்டி மதுவினை பகிர்ந்துகொண்டோம். பத்து மில்லி அளவிற்கு எனக்கும் வந்தது.அதை கையில் வைத்தபடியே சுயவிலக்கம் கவிதை தந்த உணர்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். டி.அருள்எழிலனின் ஒரு ராஜாங்கத்தின் முடிவில் குறும் படத் திரையிடல், பெயர் மறந்து போன ஒருவரின் கவிதை தொகுப்பு வெளியீடு (அவ்விழாவிற்கு பிரபஞ்சன் வந்திருந்தார்.அவர் சொன்ன ஜென் கதை நினைவிலிருக்கிறது), Children of Heaven பார்த்துக் கசிந்துருகியது என என் ஓசூர் காலங்கள் மறக்க இயலாதவை.மேலும் இங்கு எழுத்து போல் ஒன்றை கிறுக்கிக் கொண்டிருப்பதற்கான நன்றியுடைய துவக்கங்களாகவும் அவை இருக்கின்றன.

எழுத்தோடு மட்டும் நின்றுவிடாது களப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆதவனின் சமூகப் பங்களிப்பு சம காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.விளிம்பிலிருந்து எழும் விசும்பலான குரல்களுக்கிருக்கும் கழிவிரக்கமோ பச்சாதாபமோ ஆதவனின் குரலுக்கில்லை.ஆதவனின் குரல் அதட்டலானது.

வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும்
தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னை விட
ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்
அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத்
தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே
சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.

'மாற்று' அரசியல் மாற்றுச் சமூகமென தங்களுக்கான அடையாளங்களைத் துவக்கியவர்கள் மிகப் பெரும் நிறுவனங்களாக மாறிப் போய்விட்ட/போய்விடும் அபத்தங்கள் தொடர்ந்து நம் சூழலில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணங்கள் அங்கீகாரமின்மை என்கிற புள்ளியில்தான் முடியக் கூடும் அல்லது வாழ்வியல் தேவைகளாகவும் இருக்கலாம். நமது சூழல் எழுத்தாளனுக்கான போதிய அங்கீகாரத்தை தருவதில்லைதான் எனினும் அங்கீகாரமோ,புகழோ தனது நிழல்களைக் கூட தொட அனுமதியாத ஆதவன் தீட்சண்யாக்களும் நம் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் / இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றது.

23 comments:

seethag said...

வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும்
தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னை விட
ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்.........


எனக்கு ஆதவன் அளவிற்கு இலக்கியம் தெரியாது.அனல் ஒரு பெண்ணாக இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
எல்லாவித அடையாளங்களும் மொழி உட்பட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தானே? என்னை பொறுத்தவரை பெண்களுக்கு , ஆண்கள் necessary evil.When i know how to cook my meal, clean my toilet, put my furniture together sometimes with a butterknife alone why do i need a man?

Kumky said...

excellent post..

கோபிநாத் said...

அட்டகாசமான கவிதைகள்....ஆதவன் அறிமுகத்திற்க்கு நன்றி அய்ஸ் ;)

Unknown said...

//ஆதவன் தீட்சண்யாவின் சுயவிலக்கம் கவிதையை படித்த கணம்தான் அது.திரும்ப திரும்ப வாசித்து என் கவிதை பிம்பங்களை உடைத்துக்கொண்டிருந்தேன்//
நல்ல நல்ல கவிதைகள். எடுததிட்டமைக்கு நன்றி. நானும் திரும்ப திரும்ப வாசிக்கிறேன். ஆள் மனதிலிருந்து ரத்தமும் சதையும் கவிதையாய் உடைத்துப் பீரிடுவதை உணர முடிகிறது.

MSK / Saravana said...

ஆதவன் தீட்சண்யா அறிமுகத்திற்க்கு நன்றி அய்யனார்.. கவிதைகள் இரண்டுமே அட்டகாசம்..

MSK / Saravana said...

//நமது சூழல் எழுத்தாளனுக்கான போதிய அங்கீகாரத்தை தருவதில்லைதான் எனினும் அங்கீகாரமோ,புகழோ தனது நிழல்களைக் கூட தொட அனுமதியாத ஆதவன் தீட்சண்யாக்களும் நம் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் / இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றது.//

நிச்சயம்..

காமராஜ் said...

வணக்கம் அய்யனார்.
ஆதவன் குறித்த அறிமுகத்திற்கும்,
அதற்கு முந்திய கவிதைக்குமெனது
வணக்கம். ஓ என் தாமச குணமே.
மீறல்களின் சூட்சுமம் அதட்டலாய்
வலையுலகம் அறியத்தந்தமைக்கும்
வணக்கம்.

மாதவராஜ் said...

அய்யனார்!

ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது என்னுடைய நண்பரைப் பற்றி உங்களிடமிருந்து கேட்டறிவது. நானும் ஓசூருக்கு சிலமுறை வந்திருக்கிறேன். போப்பு, சிவகுமார் எல்லோருமே எனக்கு பரிச்சயமான நண்பர்களே! ஆதவனின் கலகக்குரல் இந்தக் காலக்கட்டத்தில் மிக முக்கியமானது என நினக்கிறேன்.

Anonymous said...

//என்னை பொறுத்தவரை பெண்களுக்கு , ஆண்கள் necessary evil.When i know how to cook my meal, clean my toilet, put my furniture together sometimes with a butterknife alone why do i need a man?//
ஆண்களுக்கு, பெண்கள் necessary evil.When i know how to cook my meal, clean my toilet, put my furniture together sometimes with a butterknife alone why do i need a woman?

குப்பன்.யாஹூ said...

ஆதவன் டீத்கான்யா கவிதைகள் மிக அருமை,

படிப்பவர்களின் சிந்தனை போக்கை மாற்றும் வல்லமை கொண்ட வார்த்தை பிரயோகங்கள்.

தமிழச்சி தங்கபாண்டியனிடம் உள்ள வீரம் ஆதவன் கவிதைகளிலும் தெரிகிறது.

பகிர்தலுக்கு நன்றி.

குப்பன்_யாஹூ

seethag said...

following is my answer to the Anonymous MAN who responded to my pinnuttam.Anony, it is best not to use someone else 's blog to settle scores.


"A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man. J.Krishnamurti

Karthikeyan G said...

நல்ல கட்டுரைக்கு நன்றி அய்யனார்!!

// குப்பன்_யாஹூ said...
தமிழச்சி தங்கபாண்டியனிடம் உள்ள வீரம் ஆதவன் கவிதைகளிலும் தெரிகிறது.//
குப்பன்_யாஹூ Sir, தமிழச்சி தங்கபாண்டியனையும் ஆதவனையும் COMPARE பண்ணிட்டிங்களே. :-(

இருவரின் கோபங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலில் பெரும் வித்தியாசம் உள்ளது.
ஆதவன் இன்னும் மிக அதிகமாக மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டியவர்

Karthikeyan G said...

நல்ல கட்டுரைக்கு நன்றி அய்யனார்!!

// குப்பன்_யாஹூ said...
தமிழச்சி தங்கபாண்டியனிடம் உள்ள வீரம் ஆதவன் கவிதைகளிலும் தெரிகிறது.//
குப்பன்_யாஹூ Sir, தமிழச்சி தங்கபாண்டியனையும் ஆதவனையும் COMPARE பண்ணிட்டிங்களே. :-(

இருவரின் கோபங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலில் பெரும் வித்தியாசம் உள்ளது.
ஆதவன் இன்னும் மிக அதிகமாக மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டியவர்

கிருத்திகா ஸ்ரீதர் said...

"குப்பன்_யாஹூ said...
தமிழச்சி தங்கபாண்டியனிடம் உள்ள வீரம் ஆதவன் கவிதைகளிலும் தெரிகிறது.//
குப்பன்_யாஹூ Sir, தமிழச்சி தங்கபாண்டியனையும் ஆதவனையும் COMPARE பண்ணிட்டிங்களே. :-(
"...
வழிமொழிகிறேன்...

Krishnan said...

நான் ஆதவன் தீட்சண்யா-வின் எழுத்துக்களை இதுவரை படித்ததில்லை. அவருடைய எந்த புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பிக்கலாம் ?

Ayyanar Viswanath said...

சீதா
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கவிதை முழுக்கவிதையிலிருந்து சிலவரிகளை மட்டும் எடுத்துப்போட்டிருந்தேன்.அந்த கவிதை சுட்டும் விடயம் பிறப்பு ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள்..நீங்கள் ஆண்/ பெண் ஏற்றத் தாழ்வுகளென வாசித்திருப்பதும் சிறப்பு...

கும்க்கி,கோபிநாத்,சுல்தான்,சரவணக்குமார்
பகிர்வுகளுக்கு நன்றி...

Ayyanar Viswanath said...

காமராஜ் மற்றும் மாதவராஜ் உங்களின் பகிர்வுகளுக்கு நன்றி அச்சு இலக்கியவாதிகள் பதிவுலகின் பக்கங்களுக்கும் வந்தமைக்கு நன்றியும் வரவேற்பும்..

அனானி no comments :)

குப்பன் யாகூ தமிழச்சியின் கவிதைகள் எதையும் வாசித்ததில்லை.எங்கு விழா நடந்தாலும் கலந்து கொள்வார்.பட்டிமன்ற பவர்புல் பேச்சுக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே அவரைப் பற்றி நானறிந்தது..மற்றபடி அவரின் வீரம் குறித்தெல்லாம் எனக்கெதுவும் தெரியாது...

ஜே.கே வின் மேற்கோள்க்கு நன்றி சீதா

Ayyanar Viswanath said...

கார்த்திகேயன் மற்றும் கிருத்திகா நன்றி

கிருஷ்ணன்
பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் என்றொரு தொகுப்பு வந்திருக்கிறது.நீங்களும் பூஜ்ஜியத்திலிருந்தே துவங்கலாம் :)

Krishnan said...

நன்றி அய்யனார்.

ரௌத்ரன் said...

நல்ல அறிமுகம்...தொகுப்பாக ஆதவனை வாசித்ததில்லை...வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்துவிட்டேன்...

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

குப்பன்.யாஹூ said...

ஆதவன் தீட்சண்யா ஜூனியர் விகடன்ல ஏன் இந்த புலம்பல் புலம்பி இருக்கார். சங்கமம் கவிதை விழாவில் (தியாகராய அரங்கம், டி நகரில்) சரியாக கவனிக்க வில்லை என்று.

அவரின் உண்மையான புலம்பலா அல்லது ஜூ வி யின் கற்பனை கதையா தெரிய வில்லை.

நீங்கள் தான் கேட்டு சொல்லவும்
குப்பன்_யாஹூ

Princess said...

நானும் கண்டு காணதது போல் காதல் களியில் உண்மையை மறைக்க/மறக்க விளையும் போல்,..என் முகத்தில் சப்பென்ற அறையாய் உங்கள் தளம் மற்றும் அதன் பதிவுகள்...(இதுவும் மற்றும் இதற்கு முந்தைய கவிதையை மட்டுமே படித்தேன்)

ஆதவன் தீட்சண்யா அறிமுகத்திற்கு நன்றி
ஆச்சரியத்துடன்
காதல், அன்பு, பொறுமை வெல்லும் என்று பகல் கனவு காணும்,...பல பேர்களில் ஒருத்தி

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...