Thursday, October 16, 2008

பெண்கள்பசுந்தளிர்களில் விலகிச் சிதறும் நீர்த்திவலைகள்
அவளுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம்
மேகங்களற்ற வானில் தனித்தலையும் பறவை
அவளின் ஆதர்சக் குறியீடாய் இருக்கலாம்
பள்ளத்தாக்கின் மெளனத்தில் புதைந்தபடி
காற்றெழுப்பும அந்தராத்மாவின் இசையில்
கரைந்து போயிருக்கலாம்
நதியின் கரங்களென விரிந்த
எழுச்சிகளை
ஒருபோதும் சொல்லிடாதிருக்க வேண்டும்
சொல்லப்படுபவைகளின் உன்னதங்கள்
நிறமழிந்து போவதின் விந்தைகள்
அவளுக்கும் புரிந்திருக்கலாம்...

*******************************

பயணங்களில் சூழும் பிறழ்வுகள்
அடர்சிவப்பின் பின்புலத்தைக் கொண்டுள்ளன
ஒற்றை முலை கொண்டவளொருத்தியின்
வெடிச்சிரிப்பில் அஞ்சி
காதுகளைப் பொத்திக்கொண்டேன்
உச்சந்தலையில் பள்ளம் விழுந்த இன்னொருத்தி
வாய் ஓயாது சாபங்களைத் தந்துகொண்டிருந்தாள்
அழுத்தம் தாங்காது விலகத் துணிகையில்
இருவரையும் இடக்கையால் புறந்தள்ளி
கனமுலைகளை முன் நிறுத்துகிறாள்
பாஸோலினியின் கிராமத்து அழுக்குப் பெண்
இப்போது பின்புலங்கள்
சிவப்புதிர்த்து சாம்பலுக்குத் தாவுகின்றன..

*****************************************

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

8 comments:

கார்க்கிபவா said...

//மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...//

க்ளாஸ்...

/பேச்சுக்குமிழியின்
முட்டைகளுத்தவனுக்கு//

உடைத்தவனுக்கு என வர வேண்டுமோ?

anujanya said...

என்ன இது தல! தரையிலிருந்து (சினிமா பதிவு), 15 km உயரே தூக்கிக்கொண்டு போகிறீர்கள். ஆக்சிஜன் போதவில்லை. எதோ பிரமாதமாயிருக்கு என்று மட்டும் புரிகிறது. இருங்க மெல்ல ஆற அமர ஒரு பத்து தடவ படித்துவிட்டு வரேன்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"முட்டைகளுத்தவனுக்கு" இது என்ன வார்த்தை..

MSK / Saravana said...

முதல் கவிதை புரிந்தது.. இரண்டாவது மற்றும் மூன்றாவது கவிதைகளை இன்னொரு முறை படித்துவிட்டு புரிந்துகொள்ள பார்க்கிறேன்.. :)

வால்பையன் said...

வழக்கம் போலவே

புரியவில்லை
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

anujanya said...

//சொல்லப்படுபவைகளின் உன்னதங்கள்
நிறமழிந்து போவதின் //

உண்மை. முதல் கவிதை நன்று.

ஆனால் மிகப் பிடித்தது இரண்டாவது. //பின்புலங்கள்
சிவப்புதிர்த்து சாம்பலுக்குத் தாவுகின்றன..//
எரிந்து தீர்த்த கணங்குகள் .. நல்ல கவிதையே வாசகனுக்கும் நிறைய இடம் கொடுப்பதுதான். சிறப்பு.

அனுஜன்யா

Ayyanar Viswanath said...

கார்க்கி மற்றும் கிருத்திகா எழுத்துப்பிழை :)

சுட்டியமைக்கு நன்றி

அனுஜன்யா,சரவணக்குமார் வால்பையன் நன்றி

ஆதவா said...

இம்மூன்று கவிதைகளும் நீங்க எழுதி, எங்கோ படித்திருக்ககறேன்.. (திண்ணையாக இருக்கலாம்)

முதல் கவிதை தெளிவு.... இரண்டு மூன்றும் கொஞ்சம் குழப்படி.. புரிவதற்கு நான் இரவில் படிக்கவேண்டடம்..

அடர் மெளனம்தான் கவிதைகளுக்கு உகந்த நேரரம்ம்ம்..

தொடருங்கள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...