Saturday, October 11, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,தமிழ் சினிமா மற்றும் புகைநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை..

இரண்டு நாட்களாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.ஏதோ ஒரு வசீகரம் இப்பாடல் முழுக்க நிரம்பி வழிகிறது.எவருமற்ற இத்தனிமையில் திரும்பத் திரும்ப இப்பாடலில் கரைந்து போகிறேன்.திடீரென எல்லாவற்றையும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கியாயிற்று.புதிய சூழல், புதிய வாழ்வென நாட்கள் சிறகுமுளைத்துப் பறக்கின்றன.தொடர்ச்சியாய் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டேயிருக்கிறேன்.இதுவரை பதினைந்து மாதங்களுக்கு மேல் ஒரே விதமான வாழ்வுச் சூழலில் இருந்ததில்லை.பிடித்தோ பிடிக்காமலோ மாறிக்கொண்டேவிருக்கிறது நிகழ்.ஒருவகையில் இது சவாலாக, சுவாரசியமாக நாட்களை நகர்த்த உதவுகிறதுதான் என்றாலும் நிலைத்தன்மையின் மீது, ஒரே விதமான வாழ்வுச் சூழலின் மீது, கவர்ச்சியை, ஏக்கத்தை இப்புதிய, பழகிடாத சூழல்கள் ஏற்படுத்த தவறுவதில்லை.ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்போதைக்குமான ஒன்று என்பது சாத்தியமே இல்லை போல.எல்லாரிடத்தும், எப்போதும், எவராலும், எதுகொண்டும், நிரப்பி விட முடியாத வெற்றிடங்கள் இருக்கிறதுதான் போலும்.வெற்றிடங்கள் இதுவெனத் தெரிந்து அதை நிரப்பிட முனைகையில், எங்கிருந்தாவது வெளிப்படுகிறது இன்னொரு வெற்றிடம்.தேவைகளின் தன்முனைப்பின் பருத்த பெருநிழல் வாழ்வின் மீது மிகச் சாதுவாய் படர்ந்திருக்கிறது.நிழல்களை துரத்திச் சலிக்கும் நாளொன்றிலிருந்து விடுபட இது போன்ற பாடல்கள் மிக உதவியாய் இருக்கின்றன.தமிழனுக்கு தமிழ்சினிமா பாடல்களே மிகப்பெரிய இசை என்பதை தவிர்க்கமுடியாது.பதின்மங்களில் இரவை நிரப்பிய பாடல்கள் இன்னமும் விடாது வாழ்வை நிறைத்துக்கொண்டிருக்கின்றன.இப்பாடலுக்கு பின்புலமான அனைவருக்கும் நன்றி.

ஊருக்கு போய் சுமாரான தமிழ்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்தேன்.திருவண்ணாமலை போன்ற சிறு நகர திரையரங்குகளில் பகல் காட்சிகள் மட்டுமல்லாது மாலைக் காட்சிகளும் காலியாகத்தானிருக்கின்றன.இடை இடையே மின் வெட்டுக்கள் வேறு.திரையரங்குகளின் அந்திமக்காலம் இதுவோ என்கிற எண்ணங்களும் எழுந்தன.ஜெயங்கொண்டான்,பொய் சொல்ல போறோம்,சரோஜா மூன்றுமே ஏமாற்றமில்லாமல் இருந்தன.ராமன் தேடிய சீதை உச்சகட்ட எரிச்சலைத்தான் கிளப்பியது.சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோணிக்கொள்கிறாரா? அல்லது வாய் கோணும்படியான டயலாக்குகளையே வசனகர்த்தாக்கள் எழுதித் தொலைக்கிறார்களா என்கிற சந்தேகமும் எழுந்தது.யதார்த்த நாயகன் சேரன் படங்களில் கதாநாயகி கதாநாயகனை நிராகரித்து விட்டால் அல்லது பிரிந்து சென்றுவிட்டால் அவளது வாழ்வு நாசமாய் போகும்.ஆட்டோகிராபில் கோபிகாவின் கணவரை கொல்லும் நாயகன் இதில் நடிப்பை மட்டும் ஏற்றிருப்பதலோ என்னமோ இவரை நிராகரிக்கும் பெண்ணின் கணவரை ஜெயிலுக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறார்.பொய் சொல்ல போறோம் மிகவும் பிடிந்திருந்தது.மெளலியின் நடிப்பு மிகச்சிறப்பாய் இருந்தது.தமிழில் நகைச்சுவை படங்கள் என்றால் பிரதான கதையின் இடைச்சொருகல் மாத்திரமே என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் நாம் களையத் தயாராய் இல்லை.காமெடியன்கள் என்ற சொல்லையே தகுதி குறைவான அல்லது கதாநாயக நாயகிகளுக்கு அடுத்த பட்ச கடைசி தரத்தைத்தான் நாம் தந்து கொண்டிருக்கிறோம்.சிறந்த நகைச்சுவை படங்கள் தோல்வியைத் தழுவுவது சோகமானது.ஜெயங்கொண்டானில் சம்பத்தின் மனைவியாக வரும் பூங்கோதை கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.கதையம்சத்தோடு படங்கள் வருவது அரிதான சூழலில் ஜெயங்கொண்டான் போன்ற படங்கள் வரவேற்கத் தகுந்தவையே.குறிப்பாய் பெண்களை நடிக்கவும் வைக்கலாம் என்கிற சிந்தனை இயக்குனருக்கு இருந்தது ஆறுதலானது.பூங்கோதை,லேகா,பாவனா என எல்லாரையும் நடிக்கவைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

நாகார்சுனன் தொடங்கி லக்கி வரையிலான சினிமா பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும்போது நான் பார்த்த முதல் தமிழ் படம் எதுவென யோசிக்கையில் குறிப்பாய் எதுவும் நினைவில் வரவில்லை.என் தந்தைவழிப் பாட்டி அதிக சினிமா பார்க்கும் பழக்கம் கொண்டவர்.எப்போது சினிமாவிற்கு போனாலும் நானும் உடன் ஒட்டிக்கொள்வேன்.வீட்டிற்கு அருகிலிருக்கும் கீத்து கொட்டாயில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் எல்லா படங்களையும் பார்த்திருந்தேன்.நினைவுகளை விரட்டிப் பார்த்தும் எதுவும் நினைவில் வரவில்லை.என் சொந்த கிராமத்திலிருக்கும்போது பார்த்த நீங்கள் கேட்டவையாய் இருக்கலாம்.பெரும்பாலோனோர் குறிப்பிட்டிருந்தது போல எனக்கும் அவள் அப்படித்தான் மஞ்சு மறக்கமுடியாத கதாபாத்திரம்.இது தவிர்த்து உதிரிப்பூக்கள்,தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை,முள்ளும் மலரும்,அழியாத கோலங்கள்,என் உயிர் தோழன் என மகேந்திரன் பாலுமகேந்திரா,பாலச்சந்தர் பாரதிராஜாக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.இதயத்தை திருடாதே மெளனராகம் என மணிரத்னமும் நினைவில் நிற்பவரே.செல்வராகவனின் புதுப்பேட்டை சமீபத்திய வரவில் மிகவும் பிடித்தது.

சுந்தரின் புகை ஆதங்கங்கள் நியாயமானவையே.புகைக்கு ஆதரவளித்தால் எங்கே அறிவுசீவிப் பட்டம் கிடைக்குமோவென பயந்தே பின்னூட்டத்தை தவிர்த்திருந்தேன்.பொது இடங்கள் எனச் சொல்லப்படுவதில் பேருந்து மற்றும் சினிமா அரங்குகளினுள் புகைப்பது எரிச்சலானது.அருகிலிருப்பவர்களே அதை தடுக்க முடியும்.நான் பயணிக்கும் பேருந்துகளில் என் முன் அமர்ந்திருப்பவர் புகைத்தால் எழுந்துபோய் புகைக்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்வது வழக்கம் திரையரங்கினுள் புகைத்தாலும் அவ்வண்ணமே பிறர் செய்வதை பார்த்துமிருக்கிறேன்.இதற்கு தனியொரு சட்டமும் தண்டனைகளும் தேவையில்லாதது.போக்குவரத்துச் சட்டங்கள் நமது காவலர்களுக்கு இன்னொரு ஆதாயமாக எப்படி வழிவந்ததோ அவ்வண்ணமே இப்புகைச் சட்டங்களும் நமது காவலர்களுக்கு இன்னுமொரு வரும்படியாய் மாறிப்போகலாம்.இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏதாவது ஒரு போதை எப்போதும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது அதை எந்தக் கொம்புச் சட்டங்களாலும் மாற்றவியலாது.புகைத்தால் உடல் கெடும் என்பது புகைப்பவனுக்கு தெரியாததல்ல.இதை உணர்த்த புகுத்த விழிப்புணர்வுகளை வேண்டுமானால் சமூக நல அறக் காவலர்கள் செய்து கொண்டிருக்கட்டும்.அதற்காக அதிரடிச் சட்டங்களை இயற்றுவது வீணானது.துபாய் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் பான்பராக்,தம்பாக்கு இன்னபிற வாய்வழி போதைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் விற்பனை என்னவோ அமோகம்தான்.இப்போது துப்பிய எச்சில் கறைகளை தூய்மையாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

ஜீன்ஸ் அணிந்த யுவதி ஒருத்தர் பொட்டீக்கடையில் புகைக்கும் புகைப்படம் ஒன்றை இரண்டு மூன்று பக்கங்களில் பார்க்க நேரிட்டது.பெண் புகைப்பது என்ன அருங்காட்சியக செயலா?ஏன் இத்தனை முக்கியத்துவம் அப்புகைப்படத்திற்கு எனத் தெரியவில்லை.நமது குறுகிய மனங்களின் இன்னுமொரு வெளிப்பாடெனப் புன்னகைத்து கடக்க வேண்டியதுதான்.சென்னை வாழ்வில் ஒருமுறை கடற்கரைக்கு சென்றிருந்தேன்.புகைக்கு நெருப்பில்லாமல் போகவே எட்டு மணி இருளில் கடற்கரையில் நெருப்பு தேடி அலைந்தேன்.தூரத்தில் கங்குகள் சுடர்விடவே நிம்மதிப் பெருமூச்சோடு அருகில் சென்று நெருப்புக் கேட்டேன்.ஜீன்ஸ் அணிந்த யுவதி புகைத்துக்கொண்டிருந்தார்.அவரிடமும் தீப்பெட்டி இல்லை புகைத்துக் கொண்டிருந்ததையே கொடுத்தார்.முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது. "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நமது புகைகளை மாற்றிக்கொள்ளலாமா" என வாய் வரை வந்த கேள்வி ஏதோ ஒரு தயக்கத்தில் நின்றுபோனது.பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் பெண்களுடன் புகைக்கும்போது மட்டும் காணாமல் போய்விடுவது ஏன்?

16 comments:

கார்க்கிபவா said...

உங்கள் எழுத்தின் அதி தீவிர ரசிகன் நான். இவ்வாறு ஒருவரை உயர்த்தி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை நான்றிவேன். இருந்தும் வாசகன் என்னுமிடத்தில் ரசிகன் என்று எழுதி பார்க்கும் போது என் நெஞ்சுக்குள் மழை பெய்கிறது. தினமும் ஒரு முறையாவது என்னை விட்டு போயிருக்க வேணாம் ஹேமாவை படிக்கிறேன்.

வாணரம் ஆயிரம் படத்தில் அனல் மேல் பாடல் கேட்டீர்களா? தாமரை அழகாய் மலர்ந்திருக்கிறார்.

நான் புகைப்பதில்லை என்பதால் இது குறித்த என் கருத்து ஒரு தலைபட்சமாய் இருக்குமோ என்று எனக்கும் தோண்றியது.

//இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.//
100% சரி..

கோபிநாத் said...

;))

Ayyanar Viswanath said...

கார்க்கி புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றி

அனல்மேல்,முந்தினம்,என எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்தது அதுவும் சுதாரகுநாதன் குரலில் அனல்மேல் மிகச்சிறப்பாய் இருக்கிறது

கோபி :)

MSK / Saravana said...

//கார்க்கி said...

உங்கள் எழுத்தின் அதி தீவிர ரசிகன் நான். இவ்வாறு ஒருவரை உயர்த்தி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை நான்றிவேன். இருந்தும் வாசகன் என்னுமிடத்தில் ரசிகன் என்று எழுதி பார்க்கும் போது என் நெஞ்சுக்குள் மழை பெய்கிறது.//

ரிப்பீட்டு..

MSK / Saravana said...

//இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.//
100% சரி..

நான் புகைப்பதில்லை என்பதால் இது குறித்த என் கருத்து ஒரு தலைபட்சமாய் இருக்குமோ என்று எனக்கும் தோண்றியது.

MSK / Saravana said...

//முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது. "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நமது புகைகளை மாற்றிக்கொள்ளலாமா" என வாய் வரை வந்த கேள்வி ஏதோ ஒரு தயக்கத்தில் நின்றுபோனது.பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் பெண்களுடன் புகைக்கும்போது மட்டும் காணாமல் போய்விடுவது ஏன்?//

ஆனால்.. இதை படித்தவுடன் எனக்கும் இதுமாதிரி புகைக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.. பெண்கள் பெண்கள்தான்..

MSK / Saravana said...

//ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்போதைக்குமான ஒன்று என்பது சாத்தியமே இல்லை போல.எல்லாரிடத்தும், எப்போதும், எவராலும், எதுகொண்டும், நிரப்பி விட முடியாத வெற்றிடங்கள் இருக்கிறதுதான் போலும்.வெற்றிடங்கள் இதுவெனத் தெரிந்து அதை நிரப்பிட முனைகையில், எங்கிருந்தாவது வெளிப்படுகிறது இன்னொரு வெற்றிடம்.தேவைகளின் தன்முனைப்பின் பருத்த பெருநிழல் வாழ்வின் மீது மிகச் சாதுவாய் படர்ந்திருக்கிறது//

உண்மையான உண்மை..

Ayyanar Viswanath said...

சரவணக்குமார்
புகைக்காமல் இருப்பது நல்லது பெண்களின் ஈரத்தை நேரடியாக பருகுவது அதி உன்னதம் :)

Udhayakumar said...

//பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.//

புரியவில்லை. இந்தியாவில் இது அரிதானது என்பதாலா????

KARTHIK said...

// சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோணிக்கொள்கிறாரா? //

என்னாலும் சேரனை நல்ல இயக்குனராகவே பார்க்கமுடிகிறது நடிகனாக அல்ல

// ஜீன்ஸ் அணிந்த யுவதி புகைத்துக்கொண்டிருந்தார்.அவரிடமும் தீப்பெட்டி இல்லை புகைத்துக் கொண்டிருந்ததையே கொடுத்தார்.முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது.//

இதுவரைக்கும் 2 தடவைதான் பெண்கள் தம்மடிப்பதை பார்த்திருக்கேன்.அதனாலையோ என்னமோ எனக்கு பாக்கறதுக்கு ஆசர்யாமாதான் இன்னும் இருக்கும்

// .நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் //

என்னங்க இது ஏறிவந்த ஏணிய மறக்கலாமா நம்ம நடப்புக்கள் கொடுத்த எச்சில் மீதம் இல்லைனா நமக்கெங்கிங்க இந்த பழக்கம் வந்திருக்கப்போகுது.

கெளதம் மேனன் தாமரை ஹரிஸ் இவங்க கூட்டணி இதுவரை ஏமாத்துனதில்லை.

தமிழன்-கறுப்பி... said...

மெதுவாய் மிக மெதுவாய் இழுத்து உள்ளே போய் நினைவுகள் தேடி வெளிவருகிற புகையும் சில நேரங்களில்...
இல்லாமல் போனால் சங்கடமாகத்தான் இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

புகை என்கிற சொல்லுக்கு மாத்திரமான பின்னூட்டம்தான் அது நேரம் முடிந்து விட்டது அதனால பதிவு படிக்க அப்புறமா வாறேன் தல...

வளர்மதி said...

ஜல்லி தாங்கல கண்ணு ... எப்படியோ நல்லா இருந்தா சரி ;)

வால்பையன் said...

சினிமா
சமீபத்தில் வந்த எந்த சினிமாவும் பார்க்கவில்லை

புகை
உடல்நலத்திற்கு கேடு என்பது தெரிந்தே தான் நிறைய பழக்கங்கள் நம்மிடம் இருகின்றன.
இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு கேலிக்குரியது. தம்மை நல்லவர்களாக காட்டி கொள்ள அரசாங்கம் ஊடகம் மூலமாக செய்யும் மூளை சலவையை நிறுத்தினாலே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படும்

ஜியா said...

:)))

Ayyanar Viswanath said...

உதயக்குமார்..நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதுதான்..இந்தியாவில் அரிதானது என்ற நிலை மாறிக்கொண்டே வருகிறதே..

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்..

நன்றி தமிழன்

வளர் நன்றி :)

ஜி ஆள் இருக்கிங்களா :)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...